Religion by Discernment - Gnaana–Vignaana yoga! | Bhishma-Parva-Section-031 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 19) {பகவத் கீதை - பகுதி 7}
பதிவின் சுருக்கம் : முழுமையான உண்மை மற்றும் அதன் மறைபொருளான மாயையின் சக்தி ஆகியவற்றை அர்ஜுனனுக்கு விளக்கும் கிருஷ்ணன்...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பைப் {யோகத்தைப்} பயின்று, மனத்தை என்னில் நிலைக்கச் செய்து, என்னில் அடைக்கலம் கொண்டு, முழுமையாக என்னை நீ அறிவது எப்படி என்பதை ஐயத்திற்கிடமில்லாமல் கேட்பாயாக. 7:1
எவற்றை அறிந்தால், இவ்வுலகில் அறியத்தக்கதென எஞ்சுவது (உனக்கு) ஏதுமில்லையோ, அந்த அறிவு {ஞானம்} மற்றும் அனுபவம் {விஞ்ஞானம் = நடைமுறை அறிவு} ஆகிய அவற்றைக் குறித்து எதையும் விட்டுவிடாமல் {முழுமையாக} இப்போது நான் உனக்குச் சொல்கிறேன். 7:2
ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவனே [1] முழுமைக்காக {சித்தி பெற} உழைக்கிறான். ஊக்கமுள்ளவர்களும், முழுமையை அடைந்தவர்களுமான அப்படிப்பட்டவர்களிலும், சிலரே என்னை உண்மையாக {உள்ள படியே} அறிகின்றனர். 7:3
[1] "ஒருவனே என்பது மிகச் சிலர் என்ற பொருளைத் தரும். முழுமையை அடைந்தவர்கள் என்பது ஆத்ம அறிவை அடைந்தவர்கள் என்ற பொருளைத் தரும்". இப்படியே அனைத்து உரையாசிரியர்களும் சொல்வதாகக் கூறுகிறார் கங்குலி.
படவிளக்கம்: பூமி, நீர், நெருப்பு ஆகிய அண்டத்தின் பொருட்களை கொண்டதே (உடல் எனக்குறிப்பிடப்படும்) ஆத்மா ஆகும். நுட்பமான மனோவுடல், அறிவு, அகந்தை ஆகியன நெற்றியில் உள்ள சிவப்பு புள்ளியால் குறிக்கப்படுகிறது. ஆன்மாவானது பருஉடலின் இதயத்தில் அமர்ந்திருக்கிறது.
பூமி {மண்}, நீர், நெருப்பு, காற்று, வெளி {வானம்}, மனம், அறிவு, உணர்வு என்று இப்படியே எனது இயல்பு {இயற்கை} எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது. 7:4
(எனது வடிவத்தில்) இது தாழ்ந்த இயல்பு ஆகும். இஃதில் இருந்து வேறுபட்டு, உயிராக இருப்பதும், இந்த அண்டத்தையே தாங்குவதுமான (எனது வடிவத்தின்) உயர்ந்த இயல்பும் உண்டு என்பதை அறிவாயாக. 7:5
அனைத்து உயிரினங்களும் இவற்றையே தங்கள் மூலமாகக் கொண்டுள்ளன என்பதை அறிவாயாக. பரிணாம வளர்ச்சியின் {தோற்றத்தின்} மூலம் நானே; இந்த முழு அண்டத்தையும் அழிப்பவனும் நானே {அண்டம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் நானே}. 7:6
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, என்னை விட உயர்ந்தது வேறு எதுவுமில்லை. சரத்தில் {நூலில்} கோர்க்கப்பட்ட முத்துக்களின் வரிசையைப் போல இவை அனைத்தும் {இந்த அண்டமனைத்தும்} என்னிலேயே இருக்கின்றன. 7:7
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீரில் சுவையாக இருப்பவன் நானே. சந்திரன், சூரியன் ஆகிய இரண்டின் ஒளியாக இருப்பவன் நானே. வேதங்கள் அனைத்திலும் ஓம் ஆக {ஓம் என்ற ஒலியாக} இருப்பவன் நானே. வெளியில் {வானத்தில்} ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருப்பவன் நானே. 7:8
மண்ணில் நல்ல மணமும், நெருப்பில் பிரகாசமும், (வாழும்) உயிரினங்கள் அனைத்திலும் அவற்றின் உயிராகவும், தவம் செய்வோரில் தவமாகவும் இருப்பவன் நானே. 7:9
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அனைத்து உயிர்களின் நிலைத்த விதை நானே என்பதை அறிவாயாக. அறிவுடைய அனைத்து உயிர்களின் அறிவாகவும், புகழ்பெற்ற பொருட்கள் அனைத்தின் புகழாகவும் இருப்பவன் நானே. 7:10
பலம் கொண்டோர் அனைவரின் பலமாக இருப்பவன் நானே. ஆசை, தாகம் {ஏக்கம்} ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அனைத்து உயிர்களிடத்திலும், கடமை தவறாத ஆசையாக இருப்பவன் நானே [2]. 7:11
[2] மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசை மற்றும் தாகம் ஆகியன மூலத்தில் காமம் மற்றும் ராகமாகச் சொல்லப்பட்டுள்ளன. "காமம் என்பது அடையப்படாத பொருளின் மீது கொண்ட ஆசை என்று ஸ்ரீதரர் சொல்கிறார். ராகம் என்பது ஏக்கம் அல்லது இன்னும் வேண்டும் என்ற தாகம் என்றும் சொல்கிறார்" என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
நன்மையின் தன்மை {சத்வ குணம்}, ஆசையின் தன்மை {ரஜஸ் குணம்}, இருளின் தன்மை {தமோ குணம்} ஆகியவற்றைக் கொண்ட இருப்புகள் {பொருட்கள்} அனைத்தும், உண்மையில், என்னில் இருந்து வந்தவையே என்பதை அறிவாயாக. எனினும், நான் அவற்றினிடத்தில் இல்லை, ஆனால், அவைகளே என்னில் இருக்கின்றன. 7:12
(இந்த) மூன்று தன்மைகளை {முக்குணங்களைக்} கொண்ட, இந்த மூன்று உட்பொருள்களால் மயங்கும் இந்த அண்டம் முழுவதும், நான் அவற்றை {முக்குணங்களைக்} கடந்தவன், அழிவில்லாதவன் என்பதை அறியாதிருக்கிறது. 7:13
ஏனெனில், இந்தத் தன்மைகளை {முக்குணங்களைச்} சார்ந்திருக்கும் எனது இந்த மாயை, மிக அற்புதமானதாகவும் [3], கடப்பதற்கு மிகக் கடினமானதாகவும் இருக்கிறது. 7:14
[3] மூலத்தில் உள்ள தைவீ Daivi என்ற சொல்லை சங்கரர் "தெய்வீகமானது" என்றும், ஸ்ரீதரர் "அற்புதமானது" என்றும் விளக்குகின்றனர்" என்று இங்கு விளக்கமளிக்கிறார் கங்குலி.
அறியாமை கொண்ட மனிதர்கள் {மூடர்கள்}, தங்கள் இனத்தில் இழிந்தவர்கள் {மனிதர்களில் இழிந்தோர்}, (எனது) மாயையால் அறிவு மயங்கியோர், அசுரத் தன்மையை அடைந்தவர்கள் ஆகிய {நால்வகை} தீயோர் என்னை நாடுவது இல்லை. 7:15
ஓ! அர்ஜுனா நற்செயல் புரிவோரில் நான்கு வகையினர் என்னை வழிபடுகிறார்கள். அவர்கள், துயருற்றோர், அறிவுடையோர், [4] எப்போதும் அர்ப்பணிப்புடையோர் மற்றும் ஒன்றில் மட்டுமே நம்பிக்கை கொண்டோர் ஆகியோராவர். அறிவாளி ஒருவனுக்கு அனைத்தையும் விட அன்புக்குரியவன் நானே ஆவேன். அவனும் எனது அன்புக்குரியவன் ஆவான் என்பதால் எஞ்சியோர் அனைவரிலும் மேன்மையானவன் அவனே {அறிவாளியே}. 7:16-17
[4] மூலத்தை நோக்குகையில் கங்குலி சொல்லும் நான்கு வகையினரில் சற்றுக் குழப்பம் ஏற்படுவதால், மேற்கண்ட 16 மற்றும் 17 சுலோகங்களுக்கான பாரதியாரின் உரையைக் காண்பது சிறப்பெனக் கருதுகிறேன். அது பின்வருமாறு "நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையினர் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே! {அர்ஜுனரே!}, துன்புற்றோர், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் ஆகியோரே அவர்கள். அவர்களில் நித்திய யோகம் பூண்டு, ஒரே பக்தியைச் செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்.; அவன் எனக்கும் மிகவும் இனியன்" என்று பாரதியார் விளக்குகிறார். இஸ்கானின் பிரபுபாதரும் அப்படியே சொல்கிறார்.
இவர்கள் அனைவரும் உன்னதமானவர்களே. ஆனால், நுண்மத்தில் ஆத்மாவை நிலைக்கச் செய்து, என்னையே உயர்ந்த இலக்காகக் கொண்டு, என்னில் அடைக்கலமாகும் அறிவாளி ஒருவன் (என்னால்) நானாகவே கருதப்படுகிறான். 7:18
பல பிறவிகளின் முடிவில், அந்த அறிவாளி {ஞானி}, இவை அனைத்தும் வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று (நினைத்து) என்னையே அடைகிறான். எனினும், இத்தகு உயர் ஆன்மா கொண்டவன் அரிதிலும் அரிதானவன் ஆவான். 7:19
ஆசையால் களவாடப்பட்ட {கவரப்பட்ட} அறிவைக் கொண்டவர்கள், அவர்களின் {அந்நிய} தெய்வங்களை [5அ] நாடி, தங்கள் இயல்பில் கட்டுண்டு பல்வேறு சடங்குகளை நோற்கின்றனர் [5ஆ]. 7:20
[5அ] மூலத்தில் அந்ய தேவதா: ப்ரபத்யந்தே என்றே இருக்கிறது. ஆனால் கங்குலி இங்கே their godheads என்ற சொற்களைப் பயன்படுத்தி "அவர்களின் தெய்வங்கள்" என்கிறார். ஆனால் இங்கே அந்நிய தெய்வங்கள் என்பதே மூலம். இதற்குப் பாரதியாரின் உரை பின்வருமாறு. அது "வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினை உடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்போராய் அந்நிய தேவதைகளை வழிபடுகின்றனர்" என்பதாகும்.[5ஆ] "தெய்வீக ஆசைகள் என்பன மகன்கள், புகழ், எதிரிகள் மீதான வெற்றி மற்றும் இதரவை ஆகும். சடங்குகள் என்பன உண்ணா நோன்புகள் போன்றனவாகும். அவர்கள் இயல்பு என்பது தங்கள் முற்பிறவியின் செயல்களைச் சார்ந்த மனநிலை என்பதாகும்" என்றே அனைத்து உரையாசிரியர்களும் இதை விளக்குகின்றனர் என்கிறார் கங்குலி.
வழிபடுபவன் எவனும், நம்பிக்கையுடன் எந்த (தெய்வத்தின் அல்லது எனது) வடிவத்தை வழிபட விரும்புகிறானோ, அதன் (அந்த வடிவத்தின்) மேல் அவன் கொண்ட நம்பிக்கையை நான் உறுதியடையவே செய்கிறேன். 7:21
அந்த நம்பிக்கையுடனே அவன், தனது வழிபாடுகளை அதற்குச் (அந்த வடிவத்திற்கு) செலுத்துகிறான். அவன் தனது விருப்பம் அனைத்தையும் அடைகிறான். ஏனெனில், அவை அனைத்தும் என்னால் விதிக்கப்பட்டதே [6]. 7:22
[6] தான் வழிபடும் {அந்நிய} தெய்வத்திடம் இருந்தே தனது விருப்பங்களை அடைந்ததாக வழிபடும் ஒருவன் நினைக்கிறான். எனினும், அவற்றை அவனுக்குக் கொடுப்பது நானே ஆவேன்" என்று இங்கே விளக்கமளிக்கிறார் கங்குலி.
எனினும், சிற்றறிவு படைத்த அத்தகையோரின் பலன்கள் அழிவடையும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களிடமே செல்கின்றனர், (அதே வேளையில்) என்னை வழிபடுவோர் என்னையே அடைகிறார்கள் [7]. 7:23
[7] "தேவர்கள் அழிவுள்ளவர்களாக இருக்கிறார்கள், அழிவில்லாதவன் நானே. எனவே, அவர்கள் அடைவது எதுவும் அழியத்தக்கதாக இருக்கிறது, என்னை வழிபடுபவர்கள் அடைவது எதுவும் அழிவில்லாததாக இருக்கிறது" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
எதைவிட உயர்ந்தது எதுவும் இல்லையோ, அந்த எனது அழிவற்ற எல்லையற்ற நிலையை அறியாததால், (உண்மையில்) வெளிப்படாமல் இருக்கும் என்னை வெளிப்பட்டதாக [8] பகுத்தறிவற்ற அவர்கள் கருதுகின்றனர். 7:24
[8] "எல்லையற்ற என் தன்மையைத் தெரிந்து கொள்ளாத மூடர்கள், மனித மற்றும் எனது பிற அவதார வெளிப்பாடுகள் சுட்டிக்காட்டுவதைவிட நான் உயர்ந்தவன் இல்லை என்று எடுத்துக் கொள்கின்றனர். இப்படியே ஸ்ரீதரர் சொல்கிறார்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
நினைத்துப் பார்க்க முடியாத எனது மாயசக்தியால் மூடப்பட்ட நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை [9]. நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை {மாயையால்} மயங்கும் இந்த உலகம் அறிவதில்லை. 7:25
[9] என்னை அடைய உழைக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே வெளிப்படுவேன் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்.
ஓ! அர்ஜுனா, சென்றன அனைத்தையும் {கடந்த காலத்தையும்}, இருப்பவை அனைத்தையும் {நிகழ்காலத்தையும்}, வருவன அனைத்தையும் {எதிர்காலத்தையும்} நான் அறிவேன். ஆனால் என்னை அறிந்தவர் எவருமில்லை. 7:26
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ! பாரதா {அர்ஜுனா}, உயிரினங்கள் அனைத்தும் தாங்கள் பிறக்கும் நேரத்திலேயே, ஆசை மற்றும் வெறுப்பில் இருந்து எழும் முரண்பட்ட இரட்டைகளின் மாயையால் மயக்கப்படுகின்றன. 7:27
ஆனால், நற்செயல்கள் {புண்ணியங்கள்} செய்து தங்கள் பாவங்களின் முடிவை அடைந்த மனிதர்கள், அந்த முரண்பட்ட இரட்டைகளின் மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உறுதியான நோன்புடன் (அந்த வழிபாட்டில்) என்னையே வழிபடுகின்றனர். 7:28
என்னில் அடைக்கலம் கொண்டோர், சிதைவு {மூப்பு} மற்றும் மரணத்தில் இருந்து விடுபட உழைத்து, பிரம்மத்தையும், அத்யாத்மம் {ஆத்ம அறிவு} மற்றும் செயல்கள் முழுமையையும் அறிகிறார்கள் [10]. 7:29
[10] "அத்யாத்மம் Adhyatman" என்பது "பிரமத்தை அடைவதற்கு மூலமான அனைத்தும்" என்றும், "கர்ம ச அகிலம் karma cakhilam - All actions" என்பது "பிரம்ம அறிவுக்கு வழிவகுக்கும் கடமைகள் மற்றும் நடைமுறை வழிகள் அனைத்தும்" என்றும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
நுண்மத்தில் மனதை நிலைக்கச் செய்து, அதிபூதம் {பூத அறிவு}, அதிதெய்வம் {தேவ அறிவு}, அதியக்ஞம் {வேள்வி அறிவு} ஆகியவற்றைக் கொண்டு என்னை அறிபவர்கள், (இந்த உலகத்தில் இருந்து) புறப்படும் நேரத்திலும் என்னை அறிவார்கள்" என்றான் {கிருஷ்ணன்} [11]. 7:30
[11] "இந்தச் சுலோகத்தில் தோன்றும் மூன்று வார்த்தைகளும் அர்ஜுனனின் {அடுத்த} கேள்விப் பொருளின் வடிவாகி அடுத்தப் பகுதியில் விளக்கப்படுகிறது" என்று இங்கே சொல்கிறார் கங்குலி. மேலும் விளக்கமாக அறிய வேண்டுமென்றால், மேற்கண்ட சுலோகத்தைக் கீழ்க்கண்டவாறு பொருள் கொள்ளலாம், "பொருள்களின் தோற்றத்தை {வெளிப்பாட்டை} ஆளும் கோட்பாடான பரமாத்மாவாகவும், தேவர்கள் அனைவருக்கும் அடித்தளமான ஒருவனாகவும், அனைத்து வேள்விகளிலும் நிலைத்து நிற்கும் ஒருவனாகவும் என்னை அறிந்தவர்களால், மரண நேரத்திலும் கூட உறுதியான மனத்துடன் என்னை அறிந்து புரிந்து கொள்ள முடியும்"
ஆங்கிலத்தில் | In English |