Religion by Attaining the Supreme - Purusottama yoga! | Bhishma-Parva-Section-039 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 27) {பகவத் கீதை - பகுதி 15}
பதிவின் சுருக்கம் : வேர்களை வானில் கொண்டு கிளைகளை மண்ணில் கொண்ட மரத்தின் உருவகத்தைக் கிருஷ்ணன் விளக்குவது; பற்று விலக்கல் என்ற கோடரியைக் கொண்டு அந்த மரத்தை வெட்டினால்தான் ஒருவன் இவ்வுலகத்தைக் கடந்து பரமடைய முடியும் என்று கிருஷ்ணன் விளக்குவது; எல்லாம் வல்ல தன்மை, அனைத்தும் அறிந்த தன்மை, எங்கும் நிறைந்த தன்மை ஆகியவையே கடவுளின் ஆழ்நிலை பண்புகள் எனக் கிருஷ்ணன் குறிப்பிடுவது....
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "வேர்களை மேலே கொண்டு, அதன் கிளைகளைக் கீழே கொண்ட நித்தியமான அஸ்வத்தம் {அரச மரம்} என்று ஆத்ம அறிவைச் சொல்கிறார்கள். அதன் இலைகள் சந்தங்களாகும். அதை அறிந்தவன் எவனோ, அவனே வேதங்களை அறிந்தவனாவான் [1]. 15:1
[1] "அஸ்வத்தம் Aswattha" என்பது இவ்வுலக வாழ்வின் பாதையை உருவகமாகக் காட்டும் ஒரு புனிதமான அரசமரமாகும். அதன் வேர்கள் மேலே இருக்கின்றன; ஏனெனில் அந்த வேர்களே பரமாத்மாவாகும். அதன் கிளைகள் கீழே இருக்கின்றன. அவை சிறு தெய்வங்களாகும். அதன் இலைகள் வேதங்களின் புனிதப் பாடல்களாகும் {சந்தங்களாகும்}. இலைகள் அந்த மரத்தை உயிருடன் நிலைக்கச் செய்து அதன் பழங்களையும் உண்டாக்குவது போலவே, வேதங்கள், பரமாத்மாவை வேராகக் கொண்ட அந்த மரத்தை ஆதரித்து முக்திக்கு வழிவகுக்கின்றன என்பதே இங்குப் பொருள் என்கிறார் கங்குலி.
கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் நீண்டிருக்கும் அதன் கிளைகள், குணங்களால் வளர்கின்றன; அதன் முளைகளே {தளிர்களே} புலன்நுகர் பொருட்களாகும். அதன் வேருக்குக் கீழே {கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள்}, செயல்களுக்கு வழிவகுக்கும் மனிதர்களின் உலகம் {நரவுலகம்} வரை நீடித்திருக்கிறது [2]. 15:2
[2] "கீழ்நோக்கியும், மேல்நோக்கியும்" என்பது படைக்கப்பட்ட பொருட்களில் உயர்ந்ததில் இருந்து தாழ்ந்தது வரை என்பதாகும். "குணங்களால் பெருகுவது" என்பது உடலாகவும், புலன்களாகவும், இன்னும் பலவாகவும் தோன்றும் குணங்களாகும். முளைகள் என்பன புலன்நுகர் பொருட்களாகும். கிளைகளில் முளைகள் எப்படிப் பற்றியிருக்கின்றனவோ அப்படி அவை {புலன்நுகர் பொருட்கள்} புலன்களைப் பற்றியிருக்கின்றன என்பது இங்கே பொருள். கீழ்நோக்கி நீண்டிருக்கும் வேர்கள் என்பன பல்வேறு விதமான கேளிக்கைகளில் கொண்ட ஆசைகளாகும் என்று டெலங்க் சொல்வதாக இங்கே விளக்குகிறார் கங்குலி.
இங்கே (கீழே {இந்த உலகத்தில்}) அதன் {அந்த மரத்தின்} வடிவமோ, (அதன்) முடிவோ, (அதன்) தொடக்கமோ, (அதன்) ஆதரவோ இப்படி அறியப்படுவதில்லை. உறுதியாக நிலைத்திருக்கும் இந்த அஸ்வத்தா {அரச மரத்தின்} வேர்களை, "எவனில் இருந்து இந்தப் பழைமையான வழியின் (உலகியல்) வாழ்வு தொடர்கிறதோ, அந்தப் பழங்காலத் தந்தையின் {ஆதி புருஷனின்} பாதுகாப்பை நான் நாடுவேன்" என்று நினைத்து, கடும் ஆயுதம் கொண்டு, கவலையில்லாமல் அதை வெட்டி, எங்குச் சென்றால், ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டாமோ அந்த இடத்திற்குச் செல்ல அவன் முயல வேண்டும். 15:3-4
செருக்கு மற்றும் மயக்கத்தில் இருந்து விடுபட்டோர், தீய பற்றுகளை அடக்கியோர், தனிப்பட்ட தனக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை தியானிப்பதில் உறுதியாக இருப்போர், ஆசை விலகியோர், இன்பம் மற்றும் துன்பம் (போன்ற) முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டு, மயக்கமில்லாதிருப்போரே அந்த நிலைத்த நிலையை {பரமபதத்தை} அடைகின்றனர். 15:5
அதை {பரமபதத்தை} சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளியூட்டுவதில்லை. எங்கே சென்றால் எவரும் திரும்புவதில்லையோ, அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 15:6
என்னில் நித்திய பகுதி ஒன்றே இவ்வுலக வாழ்வில் தனிப்பட்ட ஆத்மாவாகி, இயற்கையைச் சார்ந்திருக்கும் (ஐந்து) புலன்களும், ஆறாவதாக மனத்தையும் சேர்த்து தன்னுள் கவர்கிறது. 15:7
காற்றானது தங்கள் நிலைகளில் இருந்து நறுமணங்களை எடுத்துச் செல்வது போல, (இந்த உடல் எனும் சட்டகத்தின்) ஆட்சியாளன் {ஆத்மா} (ஓர்) உடலை அடைந்தாலோ, துறந்தாலோ இவற்றையெல்லாம் {புலன்களை} எடுத்துச் செல்கிறான் {செல்கிறது}. 15:8
காது, கண், தீண்டல் - சுவை - மணம் ஆகியவற்றின் உறுப்புகள், மற்றும் மனம் ஆகியவற்றில் ஆளுமை செலுத்தி அவன் {ஆத்மா}, புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான் {அனுபவிக்கிறது}. 15:9
(உடலை) விட்டு வெளியேறும்போதோ, அதைத் தரிக்கும்போதோ, அனுபவிக்கும்போதோ, குணங்களில் ஒன்றியிருக்கும்போதோ மயக்கமுற்றிருப்போர் (அவனைக்) {ஆத்மாவைக்} காண்பதில்லை. (எனினும்) அறிவுக்கண் கொண்டோரே அவனைக் காண்கின்றனர் [3]. 15:10
[3] குணங்களில் ஒன்றியிருப்பது என்பது புலன்நுகர் பொருட்களை உணர்வதோ அல்லது இன்ப துன்பங்களை அனுபவிப்பதோ ஆகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
(அந்த எல்லை நோக்கி) முயலும் அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்}, அவன் {ஆத்மா} தங்களில் வசிப்பதைக் காண்கின்றனர். (எனினும்), அறிவற்றவர்கள், தங்கள் மனதைக் கட்டுப்படுத்தாதோர் ஆகியோர் (தாங்களே) முயன்றாலும் அவனைக் {ஆத்மாவைக்} காண்பதில்லை. 15:11
சூரியனில் குடிகொண்டிருக்கும் எந்த ஒளியானது இந்தப் பரந்த அண்டத்துக்கே ஒளியூட்டுகிறதோ, (எது) சந்திரனிலும், (எது) நெருப்பிலும் உள்ளதோ, அந்த ஒளி எனதே என்பதை அறிவாயாக. 15:12
பூமிக்குள் நுழைந்து எனது சக்தியால் நான் உயிரினங்களைத் தாங்குகிறேன்; சாறு நிறைந்த நிலவாகி நானே அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கிறேன் [4]. 15:13
[4] இங்கே சொல்லப்படும் சோமா என்பது சந்திரனையே குறிக்கும், வேள்விகளில் குடிக்கப்படும் சோமச்சாற்றைக் குறிக்காது என்பதில் கேள்வியே எழ முடியாது. நிலவே அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கிறது. இந்து புனித இலக்கியத்தில் இருந்து எண்ணற்ற வாக்கியங்களை இதற்கு ஆதரவாகக் காட்ட முடியும். எனவே, திரு.டேவீஸ் சோமனை சோமச்சாறு என்று விளக்குவது தவறென்பது தெளிவு என இங்கே விளக்குகிறார் கங்குலி.
நானே உயிர்வெப்பமாகி (வைசுவாநரனாகி), சுவாசிக்கும் உயிரினங்களின் உடல்களில் வசித்து, (மேலும்) மேல்நோக்கு {பிராணன்}, கீழ்நோக்கு {அபானன்} உயிர்மூச்சுகளில் {வாயுக்களுடன்} கலந்து, நால் வகை உணவுகளையும் நானே செரிக்கிறேன் [5]. 15:14
[5] இங்கே நால்வகை உணவுகள் என்பன: மென்று உண்பன, உறிஞ்சி உண்பன, நக்கி உண்பன, விழுங்கிக் குடிப்பன என்பனவாகும்.
நான் அனைத்தின் இதயங்களிலும் அமர்ந்திருக்கிறேன். நினைவு, அறிவு, இவை இரண்டையும் இழந்த நிலை ஆகியவை என்னிடம் இருந்தே உண்டாகின்றன. வேதங்கள் அனைத்தாலும் (அவற்றின் துணை கொண்டு) அறியப்படும் அறிவின் பொருள்கள் நானே. வேதாந்தங்களின் ஆசிரியன் நானே, நான் மட்டுமே வேதங்களை அறிவேன் [6]. 15:15
[6] "அபோஹநம் Apohanam" என்பது இழத்தல் அல்லது நீக்கல் என்ற பொருளைத் தரும். இது நன்கு அறியப்பட்ட வார்த்தையாகும். இங்கே அதன் பயன்பாடும் மிக இயல்பாக இருக்கிறது. "நானே நினைவும் அறிவும் ஆவேன்" என்பது அவற்றை நற்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். "இவற்றை இழக்கும் நிலையும் நானே" என்பது அவற்றைத் தீச்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். திரு.டேவீஸ் இதைத் தவறான முறையில் "அறிவின் சக்தி" என்று சொல்கிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
மாறக்கூடியன {க்ஷர புருஷன்}, மாற்றமுடியாதன {அக்ஷர புருஷன்} என்ற இரண்டு {உயிர்} பொருட்கள் இவ்வுலகில் இருக்கின்றன. மாறக்கூடியன {க்ஷர புருஷன்} என்பன (இந்த) உயிரினங்கள் அனைத்துமாகும். மாறாத ஒன்றே {கூடஸ்த} மாற்ற முடியாதது {அக்ஷர புருஷன்} என்று அழைக்கப்படுகிறது {அழைக்கப்படுகிறான்} [7]. 15:16
[7] "கூடஸ்த Kutashtha" என்பது K.T.டெலங்கால் "கவலையற்றவன்" என்று உரைக்கப்படுகிறது. திரு.டேவீஸ் "உயர்ந்த தலைவன்" என்று கொள்கிறார். தானோ "சமமானவன், மாற்றமில்லாதவன்" என்று அறிஞர்களால் சொல்லப்படுவதை ஏற்பதாக இங்கே சொல்கிறார் கங்குலி.
ஆனால், நித்தியமானவனும், மூன்று உலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், (அவற்றைத்) தாங்குபவனும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனுமான இன்னுமொரு சிறந்தவன் இருக்கிறான். (மேலும்) மாறக்கூடியனவற்றுக்கு {க்ஷர புருஷனுக்கு} மேம்பட்டவனாகவும், மாற்றமுடியாதவனை {அக்ஷர புருஷனை} விட உயர்ந்தவனாகவும் நான் இருக்கிறேன்; இதன் காரணமாகவே, (மனிதர்களின்) உலகிலும், வேதத்திலும் புருஷோத்தமன் (உயர்ந்தவன்) என்று நான் கொண்டாடப்படுகிறேன். 15:17-18
மயக்கமடையாமல் எவன் என்னை இந்த உயர்ந்தவனாக {புருஷோத்தமனாக} அறிகிறானோ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்தையும் அறிந்த அவன், {என்னையே அனைத்தின் ஆன்மாவாக நினைத்து} என்னையே அனைத்து வழியிலும் வழிபடுகிறான். 15:19
ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இப்படியே, பெரும் புதிர்களைக் கொண்ட இந்த அறிவானது என்னால் (உனக்கு) அறிவிக்கப்படுகிறது. ஓ! பாரதா {அர்ஜுனா}, இதையறிந்து, அறிவைக் கொடையாகக் கொள்ளும் ஒருவன், செய்யப்பட வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்திருப்பான்" என்றான் {கிருஷ்ணன்}. 15:20
ஆங்கிலத்தில் | In English |