Tuesday, September 08, 2015

கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 026

The Summary of Doctrines! | Bhishma-Parva-Section-026 | Mahabharata In Tamil

 (பகவத்கீதா பர்வம் - 14) {பகவத் கீதை - பகுதி 2}

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் உதவியை அர்ஜுனன் கேட்பது; ஆத்மாவின் அழியா இயல்பு, ஞான யோகம், சாங்கிய யோகம், கர்மயோகம், பக்தி யோகம், மன உறுதி மற்றும் மனை அமைதி போன்ற சித்தாந்தங்களின் சுருக்கத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி இரக்கம் கொண்டவனாக, கண்ணீரால் நிறைந்து ஒடுக்கப்பட்ட கண்களுடனும் மனத்தளர்ச்சியுடனும் இருந்தவனிடம் {அர்ஜுனனிடம்}, மதுசூதனன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். 2:1

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} [1], "ஓ! அர்ஜுனா, இத்தகைய நெருக்கடியில், உன்னதப் பிறவிகளுக்குத் தகாததும் [2], ஒருவனைச் சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்துவதும், புகழ்க்கேட்டை உண்டாக்குவதுமான இந்த மனத்தளர்ச்சி உனக்கு எங்கிருந்து வந்தது? 2:2

[1] சம்ஸ்க்ருத மூலத்தில் ஸ்ரீ பகவான் உவாச {śrībhagavān uvāca} என்றே உள்ளது. ஆனால் கங்குலி இங்கே The Holy One என்று பயன்படுத்துவதால், நாமும் புனிதமானவன் என்றே தொடர்கிறோம்.

[2] இங்கே "அனார்ய" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆரியமல்லாத, அஃதாவது "உயர்ந்தோருக்குத் {சான்றோருக்குத்} தகாத" என்று பொருள் கொள்ளலாம். பாரதியார் "அரியருக்குத் தகாத" என்று சொல்கிறார். கோயந்தகர் "சான்றோர் கடைப்பிடிக்காத" என்று சொல்கிறார். பிரபுபாதர் "வாழ்வின் நோக்கமறியாதோரால் பயிலப்படும்" என்று சொல்கிறார்.


ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எந்தப் பெண்தன்மையும் {அலித்தன்மையும்} உனதாக வேண்டாம். இஃது உனக்குப் பொருந்தவில்லை. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {பரந்தபா, அர்ஜுனா}, இதயத்தின் இந்த அற்ப பலவீனத்தை {இரக்கத்தை} உதறிவிட்டு எழுவாயாக" என்றான் {கிருஷ்ணன்}. 2:3

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வழிபாட்டுக்குத் தகுந்தவர்களான பீஷ்மர் மற்றும் துரோணருக்கு எதிராக எப்படி நான் கணைகளைக் கொண்டு போரில் போராடுவேன் {பதிலடி கொடுப்பேன்}? [3] 2:4

[3] விளக்கவுரை செய்பவர்கள் ishubhis {இக்ஷூபி} "கணைகள்" என்ற சொல்லை விளக்கிச் சொல்வதன் மூலம் தங்கள் புத்திக்கூர்மையைக் காட்டுகின்றனர். அவர்கள், "யாவரிடம் கடும்வார்த்தைகளால் கூட என்னால் மோத முடியாதோ, அவர்களிடம் கணைகளால் எப்படி மோதுவேன்?" என்று அர்ஜுனன் சொல்வதாக விளக்குகிறார்கள். இது மூலத்திற்கு நெருக்கமானது அல்ல" என்று சொல்கிறார் கங்குலி.

(ஒருவன் தனது) புகழ்மிக்க ஆசான்களைக் கொல்லாமல், இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே (அவனுக்கு) நன்று. செல்வத்தில் பேராசை கொண்டவர்களாக ஆசான்கள் இருந்தாலும், அவர்களைக் கொல்வதால், இரத்தக்கறை படிந்த இன்பத்தையே என்னால் அனுபவிக்க முடியும். 2:5

{ஒன்று} நாம் அவர்களை வெல்வது, அல்லது, அவர்கள் நம்மை வெல்வது ஆகிய இரண்டில் எது சிறந்த தருணம் என்பதை நாம் அறியவில்லை. யாரைக் கொன்று நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ, அந்தத் திருதராஷ்டிர மகன்கள் (நம்) முன் நிற்கிறார்கள். 2:6.

இரக்கம் எனும் களங்கத்தால் பீடிக்கப்பட்ட எனது இயல்புடன், என் மனம் (என்) கடமையில் உறுதியற்றிருப்பதால், நான் உன்னைக் கேட்கிறேன். (எனக்கு) எது நல்லது என்பதை உறுதியாகச் சொல்வாயாக. நான் உனது சீடன். ஓ!, உனது உதவியை நாடுகிறேன் {உன்னைச் சரணடைந்தேன்}. எனக்குக் கற்பிப்பாயாக. 2:7

பூமியில், எதிரியற்ற ஒரு வளமான நாட்டையோ, தேவர்களின் அரசு உரிமையையோ நான் அடைந்தாலும் கூட, என்னுடைய புலன்களை வெடிக்கச் செய்யும் எனது துயரை அகற்றவல்லது எது என்பதை நான் காணவில்லை" என்றான் {அர்ஜுனன்}" 2:8

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, (மீண்டுமொருமுறை) கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, "நான் போரிடமாட்டேன்" என்று சொல்லி விட்டு அமைதியடைந்தான். 2:9

{இப்படி} மனச்சோர்வால் பீடிக்கப்பட்டவனிடம் {அர்ஜுனனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இரு படைகளுக்கு மத்தியில் {வைத்து பின்வருமாறு} சொன்னான். 2:10

வாழ்வோருக்கும் இறந்தோருக்கும்
வருந்தாத நிலை
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ அறிவுடையவர்களின் (அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின்) வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், (உண்மையில்) அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை. 2:11

நானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லை என்பதும், அல்லது, நாம் அனைவரும் இதன்பிறகு என்றும் இருக்க மாட்டோம் என்பதும் கிடையாது. {நாம் இல்லாதிருந்த காலமும் கிடையாது. எதிர்காலத்திலும் நாம் இல்லாமல் இருக்க மாட்டோம்}. 2:12

ஆடைகளை மாற்றிக் கொள்வது போல
உடல்களை மாற்றிக் கொள்ளும் ஆன்மா
பண்புருவத்தின் {உருவம் ஏற்ற ஆத்மாவின்} உடலுக்கு, பிள்ளைப்பருவம், இளமை, முதுமை ஆகியன இருக்கின்றன. மறு உடலை அடைவதும் அதுபோன்றதே (ஆகும்). அறிவுள்ள மனிதன், இதில் எப்போதும் மயங்குவதில்லை {ஏமாறுவதில்லை}. 2:13

புலன்கள், தங்கள் (தங்களுக்குரிய) {புலன்நுகர்} பொருட்களால் உற்பத்தி செய்யப்படும் வெம்மை மற்றும் குளுமை, இன்பம் மற்றும் வலி {துன்பம்}, ஆகியவற்றுடன் கொள்ளும் தொடர்புகள் {உணர்வுகள்}, ஒரு தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருப்பதால், அவை நிரந்தரமானவையல்ல. ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ அவற்றைப் {இன்ப துன்பங்கள் என்ற உணர்வுகளைப்} பொறுத்துக் கொள்வாயாக. 2:14

உடல்மாறினாலும் மாறாத ஆன்மா!
ஓ! மனிதர்களில் காளையே {புருஷரிஷபா, அர்ஜுனா}, இதே போன்ற வலி {துன்பம்} மற்றும் இன்பத்தைக் கொண்டவனும், மனதில் உறுதியுடையவனும், இவற்றால் பாதிக்கப்படாதவனுமான மனிதனே விடுதலைபெறத் {முக்திக்குத்} தகுந்தவனாவான் [4]. 2:15

[4] "Amritatwa "அம்ருதத்வாய" என்பது உண்மையில் "விடுதலை" அல்லது, "மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டாத நிலையைக்" குறிப்பதே ஆகும். "இறவாமை" என அதை வழங்குவது அந்த நிலைக்குச் சிறு களங்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவும் "இறவா" நிலை கொண்டதே ஆகும். அதிலும் குறிப்பிட்ட இந்தப் பகுதி இக்கருத்தையே மனதில் பதிய வைக்கிறது" என்கிறார் கங்குலி. இங்கே பாரதியார், "சாகாதிருக்கத் தகுவான்" என்று மொழிபெயர்க்கிறார். கோயந்தகர், "மோக்ஷத்திற்குத் தகுதி பெறுகிறான்" என்கிறார். பிரபுபாதர், கங்குலியை ஒட்டியே, "விடுதலைக்குத் தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்" என்கிறார்.

ஆன்மாவுக்கு வேறுபட்ட எதுவும் (எந்தப் புறநிலையும்) {நிலைப்பவையும்}; அதேபோல, ஆன்மாவின் குணங்களற்ற எதுவும் {நிலையாதவையும்} இருப்பில் இல்லை; இந்த இரண்டு நிலையைக் குறித்த தீர்மானங்களும் (பொருட்களின்) உண்மைகளை அறிந்தோரால் அடையப்பட்டவையாகும் [5]. 2:16

[5] "சத்" மற்றும் "அசத்" ஆகிய இரு வார்த்தைளும், இந்து தத்துவங்களில் அடிக்கடி சொல்லப்படுவதால் அச்சொற்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். "சத்" என்பது "உண்மையானது" என்று விளக்கப்படுகிறது. அஃதாவது, ஆன்மா, அல்லது ஆன்மாவைப் போல உண்மையான, நிலையான எதுவும் "சத்" ஆகும். "அசத்" இதற்கு நேர்மாறானது ஆகும். அஃதாவது உண்மையற்ற அல்லது ஆன்மாவற்றதாகும். இங்கே கிருஷ்ணன், "உண்மையற்ற எதற்கும் இருப்புக் கிடையாது; அதே போல உண்மையானவற்றுக்கு, இருப்பற்ற நிலை கிடையாது {அதாவது இருப்பு உண்டு}" என்று சொல்கிறான். இது புற உலகை ஏற்கும் கருத்தியலைக் கொண்ட உதாரணம் இல்லையா?" என்கிறார் கங்குலி. நிலையற்றவை நிலைப்பதும்; நிலையானவை நிலையற்றுப் போவதும் கிடையாது என்பதே இங்குப் பொருளாக இருக்க வேண்டும்.

எதனால் இவை அனைத்தும் (இந்த அண்டம்) படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளதோ {வியாபிக்கப்பட்டிருக்கிறதோ}, அஃது (ஆன்மா) "அழிவற்றது" என்பதை அறிவாயாக. அழிவற்ற அதற்கு {ஆன்மாவிற்கு} யாராலும் அழிவை ஏற்படுத்த முடியாது. 2:17

நிலைத்ததும் {எப்போதும் இருப்பதும்}, அழிவற்றதும், முடிவிலியுமாக இருக்கும் பண்புருவத்தின் (ஆத்மாவின்) இந்த உடல், முடிவை உடையதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ போரிடுவாயாக. 2:18

அது (ஆத்மா) கொல்வதாக நினைப்பவன், அல்லது அது {ஆத்மா} கொல்லப்படுவதாக நினைப்பவன் ஆகிய இருவரும் எதையும் அறியாதவர்களாவர்; ஏனெனில், {ஆத்மா} எதுவும் கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை. 2:19

அது {ஆத்மா} எப்போதும் பிறப்பதும் இல்லை, எப்போதும் இறப்பதுமில்லை; இருப்பில் இருக்கும் அஃது, இல்லாமல் போவதில்லை. பிறப்பற்றதும், மாற்றமில்லாததும், நிலைத்ததும், பழைமையானதுமான அதன் {ஆத்மா ஏற்ற உடல்}, உடல் அழிவை அடைவதால் அது {ஆத்மா} கொல்லப்படுவதில்லை. 2:20

{ஓ! பார்த்தா [அர்ஜுனா]}, அழிவற்றத்தாக, மாற்றமில்லாததாக, சிதைவில்லாததாக அஃதை {ஆத்மாவை} அறியும் மனிதன், {யாரையும்} கொல்வது எவ்வாறு? அல்லது கொல்லச் செய்வது எவ்வாறு? 2:21

சிதைந்த ஆடைகளைக் களைந்து, புதியவை பிறவற்றை அணிந்து கொள்ளும் ஒரு மனிதனைப் போல, பண்புருவம் கொண்ட அது (ஜீவாத்மா) சிதைந்த உடல்களைக் கைவிட்டு, புதிதான பிற உடல்களுக்குள் நுழைகிறது. 2:22

அதை {ஆத்மாவை} ஆயுதங்கள் பிளப்பதில்லை, அதை நெருப்பு எரிப்பதில்லை; நீர் அதை நனைப்பதில்லை, அதே போலக் காற்றும் அதை உலர்த்துவதில்லை. 2:23

அது {ஆத்மா} வெட்டவோ, எரிக்கவோ, நனைக்கவோ, உலர்த்தவோ தகுந்ததில்லை. அது {ஆத்மா} மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி {எங்கும் நிறைந்து} இருப்பதும், அசைக்க முடியாததும், உறுதியானதும், நிலையாக நிலைத்திருப்பதும் {நித்தியமானதும்} ஆகும். 2:24

அது {ஆத்மா} {புலன்களுக்கு} புலப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது; மாற்றமுடியாதது என்று கூறப்படுகிறது. எனவே, இப்படி அஃதை {ஆத்மாவை} அறிந்த நீ, (அதற்காக) வருந்துவது தகாது. 2:25

மேலும், அது {ஆத்மா} தொடர்ந்து பிறந்து, தொடர்ந்து இறக்கிறது என்றே நீ கருதினாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (அதற்காக) இப்படி வருந்துவது உனக்குத் தகாது. 2:26

ஏனெனில், பிறந்த ஒருவன் இறப்பது உறுதி; அதே போல இறந்த ஒருவன் பிறப்பதும் உறுதி. எனவே, தவிர்க்கப்பட முடியாத ஒரு காரியத்தில் நீ வருந்துவது உனக்குத் தகாது. 2:27

(பிறப்புக்கு முன்னால்) அனைத்து உயிரினங்களும் தோன்றாமல் இருந்தன. ஓ! பாரதா {அர்ஜூனா}, ஓர் இடைவெளியின் போது (பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்) மட்டுமே அவை தோன்றுகின்றன; மேலும், மரணம் வரும்போது, அவை (மீண்டுமொருமுறை) தோன்றாமல் போகின்றன. இதில் என்ன துயரம் இருக்கிறது? 2:28

ஒருவன் அஃதை ஆச்சரியமாகக் காண்கிறான்; மற்றொருவன் அதை ஆச்சரியமானதாகப் பேசுகிறான். இவற்றைக் கேட்ட பிறகும், ஒருவரும் உண்மையில் அது குறித்து அறிவதில்லை. 2:29

ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைவரின் உடல்களிலும் உறைந்த அஃது (ஆத்மா), எப்போதும் அழிவற்றதாகும். எனவே, (அந்த) உயிரினங்கள் அனைத்திற்காகவும் வருந்துவது உனக்குத் தகாது. 2:30

உனது வகைக்குரிய {க்ஷத்திரியனுக்குரிய} (நிர்ணயிக்கப்பட்ட) கடமைகளில் கண்களை வீசும் {கருத்தில் கொள்ளும்} நீ, கலங்குவது தகாது. ஏனெனில், நல்ல முறையில் போரிடுவதைக் காட்டிலும் ஒரு க்ஷத்திரியனுக்குச் சிறந்தது {சிறந்த கடமை} வேறு எதுவும் கிடையாது. 2:31

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொர்க்கத்தின் திறந்த கதவு ஒன்றைப் போலத் தானாக வந்த இத்தகு போரைப் பெறுபவர்களான அந்த க்ஷத்திரியர்கள் மகிழ்கின்றனர். 2:32

ஆனால், இதுபோன்ற ஓர் அறப்போரில் {தர்ம்யம் ஸங்க்ராமம்} நீ போரிடவில்லையெனில், உனது வகைக்கான கடமைகளைக் {ஸ்வதர்மத்தைக்} கைவிடுவது, {வீரன் என்ற} புகழைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் பாவத்தையே நீ ஈட்டுவாய். 2:33

பிறகு மக்கள் உனது நிலைத்த புகழ்க்கேட்டைப்  {இகழ்வைப்} பிரகடனப்படுத்துவார்கள் {உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்}, மதிப்புமிக்கவனாக இருப்பவனுக்கு (தீமையான) புகழ்க்கேடு {அபகீர்த்தி} என்பது, மரணத்தைவிடப் பெரியதாகும் {மோசமானதாகும்}. 2:34

பெரும் தேர்வீரர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாக நீ போரிலிருந்து விலகியதாகக் கருதுவார்கள். (இதுவரை) உன்னை மிக உயர்வாக மதித்தவர்களால் நீ சிறுமையாக {முக்கியமற்றவனாக} எண்ணப்படுவாய். 2:35

உனது எதிரிகள், உன் ஆற்றலை அவதூறாகப் பேசி, சொல்லக்கூடாத வார்த்தைகள் பலவற்றைச் சொல்வார்கள். அதைவிட வலி மிகுந்தது வேறு என்ன இருக்க முடியும்? 2:36

கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய்; வென்றாலோ பூமியை அனுபவிப்பாய். எனவே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, போரிடத் தீர்மானித்து எழுவாயாக. 2:37

இன்பம், வலி {துன்பம்}, ஆதாயம் {இலாபம்}, இழப்பு {நஷ்டம்}, வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகக் கருதி போரின் காரணமாகப் போரிட்டால் பாவம் உனதாகாது. 2:38

உனக்குச் சொல்லப்பட்ட இந்த அறிவு {ஞானம்}, சாங்கியத்தில் [6] {சாங்கிய தத்துவத்தில்} உள்ளது (கற்பிக்கப்படுகிறது). யோகத்தை ({கர்ம} யோக தத்துவத்தில்) (கற்பிக்கப்பட்ட அறிவை) இப்போது கேட்பாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த அறிவை அடைந்தால், செயல்களின் கட்டுகளில் {கர்மபந்தங்களில்} இருந்து நீ விடுபடுவாய். 2:39

[6] அறிவை அறிவால் அறியும் ஆத்மஞானம். இந்தப் பகுதியின் இந்தச் சுலோகம் வரை சாங்கிய யோகமே விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு 40 மற்றும் 48ம் சுலோகத்தில் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. 48 முதல் 53 வரை பக்தி யோகம் விளக்கப்படுகிறது. 55 முதல் 72 வரை தியான யோகம் விளக்கப்படுகிறது.

இதில் (இந்த யோக தத்துவத்தில் {கர்மயோகத்தில்) ஆரம்ப முயற்சி கூட வீணாகாது. இதில் எந்தக் குற்றங்களும் இல்லை. இந்த {கர்மயோக} பக்தியின் சிறியது (வடிவம்) {சிறு முன்னேற்றம்} கூடப் பெரும் அச்சத்தில் இருந்து {ஒருவனை} விடுவிக்கும். 2:40

ஓ! குருவின் மகனே {அர்ஜுனா}, இவ்வழியில், (ஒரு பொருளிடம், அதாவது விடுதலை {முக்தி} பெறுவதில்) உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரே ஒரு மனநிலையே உண்டு. எனினும், (அதில் {முக்தியில்}) அர்ப்பணிப்பில்லாதவர்களின் மனங்கள், (உறுதியற்ற) பல பிரிவுகளாகவும், முடிவற்ற நாட்டங்களில் இணைக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. 2:41

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர் {சிற்றறிவு படைத்தோர்}, வேதங்களின் வார்த்தைகளில் மகிழ்ச்சி கொள்வோர், உலகளாவிய இன்பங்களில் பிணைப்புடைய மனங்களைக் கொண்டோர், இன்பங்களையும், சக்தியையும் பெறுவதற்காக, குறிப்பிட்ட குணங்களைக் கொண்ட பல அடுக்குச் சடங்குகளில் தங்களை இணைத்துக் கொள்வோர், இன்பங்கள் மற்றும் பலத்தில் பற்று கொண்டோர் ஆகிய மனிதர்கள், {வேதத்தின் அந்த வார்த்தைகளைத் தவிர} வேறு ஏதும் இல்லை என்றும், செயலின் கனியே பிறப்பென்றும், (இன்பங்களையும், செழிப்புகளையும் கொண்ட) சொர்க்கமே அடையத்தக்க உயர்ந்த பொருள் என்றும் உறுதிகூறுவோரின் மலர் போன்ற சொற்களில் ஏமாறும் இதயங்களையும் மனங்களையும் கொண்டு, முக்திக்கான ஒரே வழியாக அதையே {சொர்க்கத்தையே} கருதி (தெய்வீகத்தை, முக்தி நிலையைச்) சிந்திப்பதில்லை [7]. 2:42-44

[7] "வேதங்களையும், இன்பங்கள் மற்றும் சக்தியைத் தரும் சொர்க்கத்தை அடைவதற்காக, குறிப்பிட்ட செயல்களை வகுத்திருக்கும் வேதங்களின் விதிகளையும் நம்புவோர், அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் உயர்ந்த அருள் நிலையான இறுதி முக்தியை அடைய முடியாது என்றும் ஓர் எளிய உண்மையையே இங்கே கிருஷ்ணன் கற்பிக்க முற்படுகிறான். வேதச் சடங்குகளைச் செய்வதன் மூலம் இன்பங்களும், பலமும் கூடிய சொர்க்கம் கிட்டலாம். ஆனால் அந்தச் சொர்க்கம் எதற்குத் தகுந்தது? உண்மையான விடுதலை {முக்தி} என்பது அர்ப்பணிப்பு, தூய தியானம் ஆகியவற்றின் மூலம் அடையத்தக்க வேறொன்று ஆகும். {அந்த வேறொன்று சொர்க்கமல்ல}" என்கிறார் கங்குலி.

அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்று தன்மைகளின் தொடர்புடையவையே வேதங்களாகும். எப்போதும் புதியவற்றை அடைவதிலோ அல்லது ஏற்கனவே அடைந்ததைப் பாதுகாப்பதிலோ கவலையில்லாமல், எப்போதும் பொறுமையைக் கடைப்பிடித்து, கவலையற்றவனாக இருந்து, (இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளுமை போன்ற) முரண்பட்ட இரட்டைகளால் பாதிக்கப்படாமல், அவற்றில் இருந்து விடுபட்டிருப்பாயாக. 2:45

குளம் அல்லது கிணற்றால் பரிமாறப்படும் நோக்கங்கள் {தேவைகள்} அனைத்தும், விரிந்து, சுற்றிலும் படர்ந்திருக்கும் ஒரு பெரும் நீர்பரப்பாலும் செய்யப்படும்; அதேபோல, வேதங்கள் அனைத்தாலும் பரிமாறப்படும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் (தன்னைப் பற்றி அல்லது பிரம்மத்தைப் பற்றிய) அறிவைக் கொண்ட அந்தணனால் அடையப்படும் [8]. 2:46

[8] "பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் இந்த ஸ்லோகம் பலவிதங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. உத்யோக பர்வம் சனத்சுஜாதீயத்தில் (உத்யோக பர்வம், பகுதி 45) தோன்றுவதே இது. ஸ்ரீதரர், சங்கரர் (இவர்களுடன் ஆனந்தகிரியையும் குறிப்பிடுவேன்) ஆகியோர் இவ்வழியிலேயே இதை விளக்குகின்றனர். சுருக்கமாகச் சொல்வதென்றால் இதன் பொருள், குளிக்கவோ, குடிக்கவோ {தாகம் தணிக்கவோ} விரும்பும் மனிதன் ஒருவன், விரிவான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் பயனை குளத்திலோ, கிணற்றிலோ, காண்பது போலவே, அறிவுபெற்ற பிராமணன் ஒருவனுக்கு (பிறப்பால் பிராமணன் என்றில்லாமல் பிரம்மத்தை அறிந்தவனான அவனுக்கு), வேதங்கள் அனைத்தாலும் கிடைக்கக்கூடியவற்றை {கல்வியை}, (தன்னையோ, பிரம்மத்தையோ குறித்த) அவனது அறிவே கற்பித்துவிடும். {அறிவு பெற்ற பிராமணன் ஒருவனுக்கு, வேதங்கள் அனைத்தாலும் கிடைக்கக்கூடியவற்றை, அவனது அறிவே கற்பித்துவிடும்}. நீலகண்டர் இதை வேறு வழியில் விளக்குகிறார்" என்கிறார் கங்குலி. பாரதியார் "எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது; அன்ன பொருளே ஞானமுடைய பிராமணனுக்கு வேதங்களுமுடையன" என்று சொல்கிறார்.

கோயந்தகர், "பெரிய நீர்நிலைகளை அடைந்தவனுக்கு சிறிய நீர்நிலைகள் தேவையற்றுப் போவது போல் பிரம்மானந்தத்தைப் பெற்ற பிறகு, ஆனந்தத்தைப் பெறுவதற்காக வேதங்கள் தேவைப்படுவதில்லை." என்கிறார்.

பிரபுபாதர், "சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்" என்கிறார்.

கடமை {செயல்} குறித்த காரியத்தில் மட்டுமே உனக்குக் கவலை {அக்கறை} இருக்கலாம், ஆனால் அது {உனது கவலை}, அதன் (அந்தச் செயலின்} கனியில் {பலனில்} இருக்கக்கூடாது. கடமைக்கான {செயலுக்கான} நோக்கமாகப் பலன் இருக்க வேண்டாம்; அதே போல, செயலின்மையிலும் பற்றுதல் வேண்டாம். 2:47

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்சமநிலையே (பக்தியே) யோகம் ஆகும். 2:48

ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். 2:49

அர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. 2:50

செயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். 2:51

மாயை என்ற புதிரை உனது மனம் எப்போது கடக்குமோ, அப்போது, கேட்கத்தக்கது, கேட்டது ஆகியவற்றில் ஒரு கருத்தும் இல்லாத சமநிலையை நீ அடைவாய். 2:52

(வாழ்வின் பல்வேறு பொருட்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து) நீ (இப்பொழுது) கேட்டவற்றால், கவனந்திரும்பும் உனது மனம் எப்போது உறுதியானதாகவும், அசைவற்றதாகவும் {சஞ்சலமற்றதாகவும்} தியானத்தில் நிலைக்கிறதோ, அப்போது நீ அர்ப்பணிப்பை {பக்தி என்ற யோகத்தை} அடைவாய்" என்றான் {கிருஷ்ணன்}. 2:53

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, தியானத்தில் நிலைத்த மனதுடைய ஒருவனின் அறிகுறிகள் யாவை? உறுதியான மனமுடைய ஒருவன் எப்படிப் பேச வேண்டும்? அமர வேண்டும்? நகர {நடக்க} வேண்டும்?" என்று கேட்டான். 2:54

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஒருவன் தனது இதயத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, எப்போது (தனது) சுயத்தால் {ஆத்மாவால்} சுயத்திலேயே {ஆத்மாவிலேயே} நிறைவு கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனத்தை உடையவனாகச் சொல்லப்படுகிறான். 2:55

அழிவுகளுக்கு {தோல்விகளுக்கு} மத்தியிலும், எவனுடைய மனம் கலங்காமல் இருக்கிறதோ, எவனுடைய இன்ப ஏக்கம் {இன்பத்தில் உள்ள பற்று} அகன்றதோ, (உலகப் பொருள்களில் தான் கொண்ட) ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து எவன் விடுபடுகிறானோ, அவன் உறுதியான மனம் கொண்ட முனிவனாகச் {தியான யோகியாகச்} சொல்லப்படுகிறான். 2:56

எங்கும் பற்றில்லாதவனாக எவன் இருக்கிறானோ, ஏற்கத்தக்க மற்றும் ஏற்க இயலாத பல்வேறு பொருட்களை அடைவதால், பெருமகிழ்ச்சி எதையுமோ வெறுப்பு எதையுமோ உணராமல் எவன் இருக்கிறானோ, அவன் உறுதியான மனம் படைத்தவனாவான். 2:57

அனைத்துப் புறங்களில் இருந்தும் தனது உறுப்புகளைப் உள்வாங்கிக் கொள்ளும் ஆமையைப் போல, எப்போது ஒருவன் தனது புலன்களை, (அதற்குரிய) புலன்நுகர் பொருட்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனம் படைத்தவன் ஆகிறான். 2:58

புலன்நுகர் பொருட்கள், அவற்றைத் தவிர்க்கும் மனிதனிடம் இருந்து விலகுகின்றன. ஆனால் (அந்தப் பொருட்களின் மீதுள்ள) ஆசை விலகுதில்லை. {அப்படிப்பட்ட} அந்த ஆசையே கூட, பரமாத்மாவைக் கண்ட ஒருவனிடம் இருந்து விலகுகிறது [9]. 2:59

[9] "விரும்பியோ அல்லது இன்ப நுகர் பொருட்களை அடைவதில் உள்ள தனது இயலாமையாலோ ஒருவன், இன்பநுகர் பொருட்களில் இருந்து விலகலாம். எனினும், இன்பம் நுகர்வதில் உள்ள ஆசை அடங்கும் வரை, ஒருவன் உறுதியான மனத்தை அடைந்து விட்டான் என்று சொல்ல முடியாது" என்கிறார் கங்குலி.

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, புலன்களில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ளக் கடினமாக முயற்சி செய்யும் அறிவுடைய மனிதன் ஒருவனின் மனத்தைக் கூட, கிளர்ச்சியடையக் கூடிய அந்தப் புலன்கள், தங்களை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துவிடுகின்றன. 2:60

அவை {புலன்கள்} அனைத்தையும் கட்டுப்படுத்தி, என்னையே {பரமாத்மாவையை} ஒரே புகலிடமாக {அடைக்கலமாகக்} கொண்டு, ஒருவன் தியானத்தில் நிலைக்க வேண்டும். ஏனெனில், எவனுடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ, அவனுடைய மனமே உறுதியானதாகும். 2:61

புலன்நுகர் பொருட்களுக்கு
அடிமையாகும் மனிதன்
புலன்நுகர் பொருட்களை நினைப்பதால், அவற்றில் ஒருவனுக்குப் பற்று ஏற்படுகிறது. 
பற்றுதலில் இருந்து {ஆசை, ஆசையில் இருந்து} கோபம் முளைக்கிறது; 
கோபத்தில் இருந்து பாகுபாடு {மயக்கம்} எழுகிறது;
பாகுபாட்டினால் {மயக்கத்தினால்} நினைவு இழப்பு ஏற்படுகிறது; 
நினைவு இழப்பால் அறிவு இழப்பும் ஏற்படுகிறது;
அறிவு இழப்பால் (அவன்) முற்றிலுமாகவும் அழிகிறான். 2:62-63

ஆனால், புலனடக்கத்தின் மூலம் பற்று மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டவனான சுயக்கட்டுப்பாடு கொண்ட மனிதன், தனது புலன்களால், (புலன்நுகர்) பொருட்களை அனுபவித்துக் கொண்டே (மன) அமைதியை அடைகிறான். 2:64

(மனம்) அமைதியை அடைவதால், அவனது துன்பங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன. அதனால், அமைதியான இதயம் கொண்ட அவனது மனம் விரைவில் உறுதியடைகிறது. 2:65

எவன் சுயக்கட்டுப்பாடு இல்லாதவனோ, அவன் (சுயத்தைக் {ஆத்மாவைக்} குறித்த) சிந்தனையை அடைவதில்லை {தியானிப்பதில்லை}. எவன் சிந்திப்பதில்லையோ {தியானிப்பதில்லையோ}, அவன் (மன) அமைதி கொள்வதில்லை. (மன) அமைதி இல்லாதவனுக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்? 2:66

(புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில்) அலைபாயும் {ஒரு} புலனைத் தொடர்ந்து செல்லும் இதயம் {மனம்}, நீர்நிலையில் உள்ள படகை அழிக்கும் காற்றைப் போல, அவனது அறிவை {புத்தியை} அழித்துவிடும். 2:67

எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, புலன் நுகர் பொருட்களில் இருந்து அனைத்துப்புறங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்டவனின் மனமே உறுதியானதாகும். 2:68

எப்போது அனைத்து உயிர்களுக்கும் இரவாக இருக்கிறதோ, அப்போது சுயக்கட்டுப்பாடுடைய {புலனடக்கமுடைய} ஒரு மனிதன் விழிப்புடன் இருக்கிறான்; எப்போது பிற உயிரினங்கள் விழித்திருக்கின்றவோ, அப்போது பகுத்தறிவு உள்ள ஒரு முனிவனுக்கு அஃது இரவாக இருக்கிறது [10]. 2:69

[10] "ஆன்ம இருளில் உள்ள மோசமானவர்கள் உலக நாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆன்ம வெளிச்சத்தில் உள்ள ஒரு முனிவன் அவர்களுக்கு இறந்தவனாகத் தெரிவான் என்று மேற்கண்ட ஸ்லோகத்தை அடிக்குறிப்பில் விளக்குகிறார் கங்குலி.

தொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டேயிருந்தாலும், நீரின் அளவில் மாற்றமில்லாத கடலுக்குள் புகும் {ஆறுகளின்} நீரைப் போல, எவனிடம் ஆசைக்குகந்த பொருட்கள் நுழைகின்றனவோ, அவன் அமைதியான (மனத்தை) அடைகிறானேயன்றி, ஆசைப் பொருட்களுக்காக ஏங்குபவன் {அந்த மன அமைதியை} அடைவதில்லை. 2:70

ஆசைப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, (இன்பங்களை அடையும்) ஏக்கத்தில் {ஆசை} இருந்து விடுபட்டு, பற்றோ, செருக்கோ இல்லாமல் திரியும் மனிதனே அமைதியை அடைகிறான். 2:71

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இதுவே தெய்வீக நிலையாகும். அதை {அந்நிலையை அடைந்தவன்} மயக்கத்தை {குழப்பத்தை} எப்போதும் அடைவதில்லை. அதில் நிலைத்திருக்கும் ஒருவன் மரணிக்கும்போது, பிரம்மத்தால் கவரப்படுகிறான் {உறிஞ்சப்படுகிறான் / உடல் அற்ற ஆன்மாவாக நிர்வாணமடைகிறான்}. 2:72


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்