Krishna spoke to Gandhari! | Shalya-Parva-Section-63 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் : காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்து அவனுக்கு ஆறுதலளித்த கிருஷ்ணன்; காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்; காந்தாரியின் மறுமொழி; திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியிடம் இருந்து விரைவாக விடைபெற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அஸ்வத்தாமனிடமிருந்து பாண்டவர்களைப் பாதுகாக்குமாறு கிருஷ்ணனிடம் சொன்ன திருதராஷ்டிரனும், காந்தாரியும்; பாண்டவர்களிடம் திரும்பி வந்த கிருஷ்ணன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "மன்னர்களில் புலியும், நீதிமானுமான யுதிஷ்டிரன், எதிரிகளை எரிப்பவனான வாசுதேவனை {கிருஷ்ணனைக்} காந்தாரியிடம் அனுப்பிய காரணமென்ன?(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்றதான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன?(4) ஓ! பிராமணரே, அளவிலா ஆன்மா கொண்ட ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} அப்படிப் பயணம் செய்யப் போகிறவன் எனும்போது அதன் காரணம் எளிமையானதாக இருக்காது.(5) அத்யர்யுக்கள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இத்தகைய தூதுக்கான காரணம் என்ன என்பதை எனக்கு விவரமாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், நீ கேட்கும் இந்தக் கேள்வி உனக்குத் தகுந்ததே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, உண்மையில் நேர்ந்தவாறே அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(7) திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகனான துரியோதனன், நேர்மையான போர் விதிகளுக்கு முரண்பட்டுப் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டவனும்,(8) உண்மையில், அந்தக் குரு மன்னன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டவனுமான யுதிஷ்டிரன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, தவத்தகுதி கொண்டவளான உயர் ஆன்ம காந்தாரியின் நினைப்பால் பேரச்சத்தில் நிறைந்தான். "அவள் கடுந்தவங்களைச் செய்திருக்கிறாள், எனவே மூவுலகங்களையும் அவளால் {காந்தாரியால்} எரித்து விட முடியும்"(9,10) என்றே அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} நினைத்தான்.
கிருஷ்ணனை அனுப்புவதால், கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரி, யுதிஷ்டிரன் அங்குச் செல்வதற்கு முன்பே ஆறுதலை அடையக்கூடும்.(11) "நம்மால் இத்தகு அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்ட அவளது மகனின் {துரியோதனனின்} மரணத்தைக் கேட்டுக் கோபமடையும் அவளால், தன் மனத்தில் உள்ள நெருப்பைக் கொண்டு நம்மைச் சாம்பலாகக் குறைத்துவிட முடியும்.(12) எப்போதும் நியாயமாகப் போரிட்டவனான அவளது மகன் {காந்தாரியின் மகன் துரியோதனன்}, நியாயமற்ற முறையில் நம்மால் கொல்லப்பட்டான் என்று அவள் கேள்விப்பட்ட பிறகு, எரிச்சலையூட்டும் இத்தகு துயரத்தைக் காந்தாரியால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்?" {என்று நினைத்தான்".(13) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நீண்டநேரமாக இவ்வாறே சிந்தித்து, அச்சத்தாலும், துயராலும் நிறைந்தவனாக, வாசுதேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(14)
{யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, "ஓ! கோவிந்தா, உன் அருளால் என் நாடு முட்களற்றதானது. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, கற்பனையாலும் நாங்கள் அடைய முடியாத ஒன்று இப்போது எங்களுடையதாகியிருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, போரில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான தாக்குதல்களை நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(15,16) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுடைய எதிரிகளின் அழிவுக்கு நீ உதவினாய், அவ்வெதிரிகளும் கொல்லப்பட்டனர்.(17) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவேனே, ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அதே வழியிலேயே நீ எங்களுக்கும் உன் உதவியைத் தந்திருக்கிறாய். ஓ! விருஷ்ணி குலத்தோனே, எங்கள் சாரதியாக இருக்கச் சம்மதித்து, காலமெல்லாம் நீ எங்களைப் பாதுகாத்திருக்கிறாய்.(18) இந்தப் பயங்கரப் போரில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} பாதுகாவலனாக இல்லாவிடில், கடலெனும் இத்துருப்புகளை எவ்வாறு {நாங்கள்} வென்றிருக்க இயலும்?(19) மேலும், கதாயுத வீச்சுகள் பலவற்றையும், பரிகங்கள், ஈட்டிகள் {சக்திகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, வேல்கள் {தோமரங்கள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் பலவற்றையும் {இப்போரில்} நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(20) ஓ! கிருஷ்ணா, போராயுதங்களில் வஜ்ரத்திற்கு ஒப்பான கடுஞ்சொற்கள் பலவற்றை எங்களின் நிமித்தமாக நீ கேட்கவேண்டியிருந்தது; அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.(21) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவையனைத்தும், துரியோதனனின் படுகொலையின் விளைவால் கனியற்றதாகிவிடவில்லை {துரியோதனனின் படுகொலையால் இவ்வாறு நீ பட்ட துன்பமெல்லாம் வீணாகிவிடவில்லை}. அந்தச் செயல்கள் அனைத்தின் கனிகளும் {பலன்களும்} அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் நீ மீண்டும் செயல்படுவாயாக.(22)
ஓ! கிருஷ்ணா, வெற்றி நமதானாலும், நமது இதயம் இன்னும் ஐயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஓ! மாதவா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, காந்தாரியின் கோபம் தூண்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயாக.(23) உயர்ந்த அருளைக் கொண்ட அம்மங்கை {காந்தாரி}, கடுந்தவங்களால் தன்னை எப்போதும் மெலியச் செய்து வருகிறாள். அவள், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் படுகொலையைக் கேட்டு, நம்மை எரித்துவிடுவாள் என்பதில் ஐயமில்லை. ஓ! வீரா {கிருஷ்ணா}, அவளை அமைதிப்படுத்துவதற்கான நேரமிது என்று நான் நினைகிகறேன்.(24) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தாமிரம் போல் கண்கள் சிவந்தவளும், தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த தீங்கால் மிகவும் பீடிக்கப்பட்டிருப்பவளுமான அம்மங்கையைக் காண இயன்றவன் இங்கே உன்னைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(25) ஓ! மாதவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரியை அமைதிப்படுத்துவதற்கு நீ அங்கே செல்வதே முறையானது என நான் நினைக்கிறேன். நீயே அழிவற்றவனானதால், உலகங்கள் அனைத்தின் முதல் காரணமாக நீயே இருக்கிறாய்.(26) காலத்தின் விளைவுகளான, புலப்படும் மற்றும் புலப்படாத[1] அனைத்துக் காரணங்களும் நிறைந்த வார்த்தைகளால் உன்னாலேயே விரைவில் காந்தாரியை அமைதிப்படுத்த இயலும்.(27) எங்கள் பாட்டனும், புனிதருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, அங்கே இருப்பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் சக்திக்கு அடங்கிய அனைத்து வழிகளிலும் காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதே உன் கடமையாகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(28)
[1] "கண்ணுக்குத் தெரியும் பொருட்களில் இருந்து பெறப்படும் கற்பனைகள் மற்றும், நம்பிக்கை சார்ந்த, புலன்களுக்குத் தெரியாத பொருள்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்த யதுகுலத்தைத் தழைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தாருகனை அழைத்து, "என் தேர் ஆயத்தம் செய்யப்படட்டும்" என்றான்.(29) கேசவனின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட தாருகன், மிக விரைவாகத் திரும்பி, தன் உயர் ஆன்மத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} தயாராக இருக்கும் தேரைக் காட்டினான்.(30) எதிரிகளை எரிப்பவனும், யதுகுலத்தின் தலைவனுமான தலைவன் கேவசன், அந்தத் தேரில் ஏறி, குருக்களின் நகரத்திற்கு மிக விரைவாகச் சென்றான்.(31) அப்போது போற்றுதலுக்குரியவனான அந்த மாதவன், தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்து, அதனுள் நுழைந்தான்.(32) அதற்குள் நுழைகையிலேயே தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் அந்நகரை எதிரொலிக்கச் செய்த அவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனுக்கு ஒரு வார்த்தையைச் சொல்லியனுப்பி, தன் வாகனத்தில் இருந்து இறங்கி, அந்த முதிர்ந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(33)
அங்கே அவன் {கிருஷ்ணன்}, தனக்கு முன்பே வந்திருந்த முனிவர்களில் சிறந்தவரை (துவைபாயனரைக்) கண்டான். வியாசர் மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரின் பாதங்களையும் தழுவிக் கொண்ட ஜனார்த்தனன்,(34) அமைதியாகக் காந்தாரியையும் வணங்கினான். பிறகு யாதவர்களில் முதன்மையானவனான அந்த விஷ்ணு {அதோக்ஷஜன்} {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் கரங்களைப் பற்றிக் கொண்டு, இனிமையாக அழத் தொடங்கினான்.(35) கவலையால் சிறிது நேரம் கண்ணீர் சிந்திய அவன்,(36) நீரைக் கொண்டு விதிப்படி தன் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், மென்மையாக வெளிவந்த இவ்வார்த்தைகளைத் திருதராஷ்டிரனிடம் சொன்னான்.(37)
{கிருஷ்ணன்}, "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடந்த காலம், எதிர்காலம் என நீர் அறியாதது எதுவுமில்லை. ஓ! தலைவா, காலத்தின் வழியைக் குறித்து நீர் நன்கறிந்தவராவீர்.(38) ஓ! பாரதரே, பாண்டவர்கள் உம்மீது கொண்டிருந்த மதிப்பால், தங்கள் குலத்தின் அழிவையும், க்ஷத்திரியர்களின் முற்றான அழிவையும் தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.(39) தன் தம்பிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட அறவோனான யுதிஷ்டிரர் அமைதியாகவே வாழ்ந்துவந்தார். அவர் {யுதிஷ்டிரர்}, நியாமற்ற வகையில் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடந்தும் {வனவாசம்} சென்றார்.(40) பல்வேறு மாறுவேடங்களில் ஆடைகளை உடுத்திக் கொண்டு, தமது தம்பியரோடு தலைமறைவு வாழ்வையும் வாழ்ந்தார். அவர்கள் தினமும் சந்தித்த தங்கள் பல்வேறு இன்னல்களைக் கிட்டத்தட்ட ஆதரவற்றவர்களாகவே பொறுத்துக் கொண்டனர்.(41) போர் தொடங்குவதற்கு முன், அனைத்து மனிதர்களுக்கும் முன்னிலையில் நானே வந்து, ஐந்து கிராமங்களை மட்டுமே {உங்களிடம்} இரந்து கேட்டேன்.(42) காலத்தால் பீடிக்கப்பட்டும், பேராசையால் உந்தப்பட்டும், என் வேண்டுகோளை நீர் அருளவில்லை. ஓ! மன்னா, உமது குற்றத்தாலேயே, அனைத்து க்ஷத்திரிய குலங்களும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.(43)
பீஷ்மர், சோமதத்தர், பாஹ்லீகர், கிருபர், துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ஞானியான விதுரர் ஆகியோர் உம்மிடம் எப்போதும் அமைதியையே வேண்டினர். எனினும் நீர் அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.(44) ஓ! பாரதரே, நீரே கூட இக்காரியத்தில் மடமையுடன் செயல்பட்டதால், ஓ! மன்னா, காலத்தால் பீடிக்கப்படும்போது அனைவரும் மலைப்பையே அடைகின்றனர் என்றே தெரிகிறது.(45) காலத்தின் விளைவைத் தவிர இது வேறென்னவாக இருக்க முடியும்? உண்மையில், விதியே உயர்ந்தது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பாண்டவர்கள் மீது எக்குற்றத்தையும் சுமத்தாதீர்.(46) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறநெறிவிதிகளின்படியோ, காரணத்தின்படியோ {அறிவின்படியோ}, பாசத்தின்படியோ, உயர் ஆன்ம பாண்டவர்களின் மிகச் சிறு மீறலையும் கூடத் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.(47) இவையாவும் உமது குற்றத்தின் கனியே என்பதை அறிந்து, பாண்டவர்கள் மீது எந்தத் தீய உணர்வையும் வளர்ப்பது உமக்குத் தகாது.(48)
குலம், பரம்பரை, ஈமப்பிண்டம் மற்றும் எவையெல்லாம் வாரிசைச் சார்ந்திருக்கின்றனவோ, அவையெல்லாம் உமக்கும் காந்தாரிக்கும் இப்போது பாண்டவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(49) ஓ! குருக்களில் புலியே, நீரும், புகழ்பெற்ற காந்தாரியும் பாண்டவர்களிடம் எந்தக் கெடுநோக்கமும் கொள்ள வேண்டாம்.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவையனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, உமது சொந்த மீறல்களையும் நினைத்துப் பார்த்து, பாண்டவர்களிடம் நல்லுணர்வுகளையே வளர்க்க வேண்டும் என்று உம்மை நான் வணங்கிக் கேட்கிறேன்.(51) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! மன்னர்களில் புலியே, மன்னர் யுதிஷ்டிரர் உம்மிடம் கொண்ட பாசத்தையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நீர் அறிவீர்.(52) தமக்குத் தீங்கிழைத்த எதிரிகளைக் கொன்ற அவர், மன அமைதியை அடைவதில் வெல்லாமல் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறார்.(53) அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரர்}, உமக்காகவும், காந்தாரிக்காகவும் துயரமடைந்து எந்த மகிழ்ச்சியையும் அடைவதில் தவறுகிறார்.(54) உமது பிள்ளைகளின் நிமித்தமாகத் துயரில் எரிந்து கொண்டிருப்பவரும், அந்தத் துன்பத்தால் அறிவும், புலன்களும் கலக்கப்பட்டிருப்பவருமான உம்மைக் காண வெட்கமடைந்தே அவர் உம் முன்னிலைக்கு வராமல் இருக்கிறார்" என்றான் {கிருஷ்ணன்}.(55)
திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த யது குலத்தின் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம் இந்த உன்னதமான வார்த்தைகளைச் சொன்னான்:(56) "ஓ! சுபலரின் மகளே {காந்தாரியே}, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மங்கலக் காரிகையே, இப்போது இவ்வுலகில் உன்னைப் போன்ற ஒரு பெண் கிடையாது.(57) ஓ! ராணி, என் முன்னிலையில் வைத்து நீ சபையில் பேசியவையும், நீதி நிறைந்தவையும், இருதரப்புக்கும் நன்மை செய்பவையுமான, உமது மகன்கள் கீழ்ப்படியாதவையுமான உனது அந்த வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(58,59) வெற்றியில் பேராசை கொண்ட துரியோதனனிடம் நீ இந்தக் கசந்த வார்த்தைகளைச் சொன்னாய். அப்போது நீ அவனிடம், "ஓ! மூடா {துரியோதனனிடம்}, எங்கே அறமிருக்கிறதோ {நீதியிருக்கிறதோ} அங்கே வெற்றியிருக்கும் என்ற என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக" என்றாய்.(60) ஓ! இளவரசி, அந்த உன் வார்த்தையே இப்போது நிறைவேறியிருக்கிறது. ஓ! மங்கலமான பெண்ணே, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, உன் இதயத்தைக் கவலையில் நிலை கொள்ளச் செய்யாதே.(61) பாண்டவர்களின் அழிவை உன் இதயம் நாடாதிருக்கட்டும். உன் தவவலிமையின் விளைவால், ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, சினத்தால் தூண்டப்பட்ட உன் கண்களைக் கொண்டே, அசையும், அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகத்தையும் நீ எரித்துவிட இயன்றவளாவாய்" என்றான் {கிருஷ்ணன்}.(62)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, "ஓ! கேசவா, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது.(63) எனினும், ஓ! ஜனார்த்தனா, உன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த இதயம் ஒரு நிலையை அடைந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, முதிந்தவரும், பார்வையற்றவருமான இந்த மன்னனைப் {திருதராஷ்டிரனைப்} பொறுத்தவரையில், பிள்ளைகளற்றவரான இவருக்கு, பாண்டுவின் மகன்களான அவ்வீரர்களுடன் கூடிய நீயே புகலிடமாக இருக்கிறாய் {அவருக்கு நீயே கதி}" என்றாள்.(65)
இவ்வளவும் சொன்ன காந்தாரி, தன் மகன்களின் மரணத்தால் உண்டான துயரில் எரிந்து, துணியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, உரக்க அழத் தொடங்கினாள்.(66) பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தலைவன் கேசவன், புலப்பட்ட மற்றும் புலப்படாத நிகழ்வுகளில் இருந்து பெறப்பட்ட காரணங்கள் நிறைந்த வார்த்தைகளால், துயரால் பீடிக்கப்பட்ட அவ்விளவரசிக்கு ஆறுதலை அளித்தான்.(67) காந்தாரியையும், திருதராஷ்டிரனையும் தேற்றிய அந்த மதுகுலத்துக் கேசவன், துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்) தியானிக்கப்படும் தீமையை (தன் உள்ளுணர்வால்) அறியவந்தான்.(68)
அந்தக் கேசவன், தலைவணங்கி வியாசரின் பாதத்தை வழிபட்ட பிறகு, விரைவாக எழுந்து, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திருதராஷ்டிரனிடம்,(69) "ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, நான் உம்மிடம் இருந்து விடைபெறுகிறேன். உமது இதயத்தைத் துயரத்தில் நிலைகொள்ளச் செய்யாதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, ஒரு தீய நோக்கத்தைக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நான் இவ்வளவு விரைவாக எழுந்தேன்.(70) அவர் இரவு வேளையில் பாண்டவர்களை அழிக்கும் திட்டத்தை அமைத்திருப்பதாகத் தெரிகிறது" என்றான்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோர் இருவரும், கேசியைக் கொன்றவனான அந்தக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளில், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காப்பாயாக.(71,72) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் உன்னைச் சந்திக்க வேண்டும்" என்றனர்.
பிறகு, மங்கா மகிமை கொண்டவனான அந்தக் கேசவன், தாருகனுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றான்.(73) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாசுதேவன் புறப்பட்டுச் சென்றதும், மொத்த உலகத்தாலும் போற்றப்படுபவரும், கற்பனைக்கெட்டா ஆன்மாவைக் கொண்டவருமான வியாசர், மன்னன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளிக்கத் தொடங்கினார்.(74) அற ஆன்மா கொண்டவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தூதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டு, முகாமையும், பாண்டவர்களையும் காண்பதற்காக ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.(75) அவன் முகாமை அடைந்து, பாண்டவர்களின் முன்னிலைக்குச் சென்றான். அவன், (நகரத்திற்குத் தூது சென்ற போது நடந்த) அனைத்தையும் அவர்களிடம் சொல்லி அவர்களோடு அமர்ந்து கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(76)
சல்லிய பர்வம் பகுதி – 63 ல் உள்ள சுலோகங்கள் : 76
ஆங்கிலத்தில் | In English |