The Birth of Skanda! | Vana Parva - Section 224 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சுவாகா, ஏழு முனிவர்களின் மனைவியரில் அருந்ததியைத் தவிர மற்றவர்களுடைய உருவங்களில் சென்று அக்னியுடன் கூடியது; அக்னியின் உயிரணுக்களை வெள்ளை மலையில் உள்ள தங்கத் தடாகத்தில் சுவாகா வீசியது; அதிலிருந்து ஸ்கந்தன் உண்டானது; ஸ்கந்தன் கணைகளால் கிரௌஞ்ச மலையைப் பிளந்தது; ஸ்கந்தன், வேல் கொண்டு வெள்ளை மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பெரும் நற்பண்புகளும், எந்தக் களங்கமும் அற்ற தன்மை கொண்ட அழகான சிவை {Siva} (ஏழு முனிவர்களில் ஒருவரான) அங்கிரசின் மனைவியாவாள். அந்த அற்புதமான மங்கை (சுவாகா}, முதலில் சிவையின் உருவம் கொண்டு, அக்னியின் முன்னிலையை அடைந்து, அவனிடம் {அக்னியிடம்} அவள், "ஓ! அக்னி, நான் உன் மீது கொண்ட காதலால் துன்புறுகிறேன். நீ என்னுடன் ஊடாடுவதே உனக்குப் பொருந்தும் என நான் நினைக்கிறேன். முனிவர்களின் மனைவியர் உரிய கவனத்திற்குப் பிறகு என்னை இங்கே அனுப்பினார்கள். நான் அவர்களின் ஆலோசனைப் படியே இங்கே வந்திருக்கிறேன்" என்றாள் {சுவாகா}.