The Karma Theory! | Shanti-Parva-Section-202 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 29)
பதிவின் சுருக்கம் : பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு...

மனு {பரத்வாஜரிடம்}, "அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)