Showing posts with label விகர்ணன். Show all posts
Showing posts with label விகர்ணன். Show all posts

Tuesday, August 30, 2016

விகர்ணனுக்காக மிகவும் வருந்திய பீமன்! - துரோண பர்வம் பகுதி – 136

Bhima grieved bitterly for Vikarna! | Drona-Parva-Section-136 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 52)

பதிவின் சுருக்கம் : கடுமையாகப் போரிட்ட பீமனும், கர்ணனும்; பீமனின் ஆற்றலைக் கண்டு கௌரவர்களும், பாண்டவர்களும் மெச்சியது; கர்ணனைக் காக்க தன் தம்பிகளில் எழுவரை அனுப்பிய துரியோதனன்; அந்த எழுவரையும் கொன்ற பீமன், விகர்ணனுக்காக வருந்தியது; பீமனின் முழக்கத்தைக் கேட்டு செய்தியை அறிந்து மகிழ்ந்த யுதிஷ்டிரன்; விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த துரியோதனன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனனுடைய வில்லின் நாணொலியையும், அவனது உள்ளங்கையொலிகளையும் கேட்டு, மதங்கொண்ட எதிராளியின் முழக்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு மதங்கொண்ட யானையைப்போல ராதையின் மகனால் {கர்ணனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(1) பீமசேனனின் முன்னிலையில் இருந்து ஒரு கணம் அகன்ற கர்ணன், பீமசேனனால் கொல்லப்பட்ட உமது மகன்களின் மீது கண்களைச் செலுத்தினான்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே} அவர்களைக் கண்ட கர்ணன் உற்சாகத்தை இழந்து துயரில் மூழ்கினான். நெடிய  பெரும் அனல் மூச்சுகளைவிட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான்.(3)


தாமிரம் போன்ற சிவந்த கண்களுடன், வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தில் பெருமூச்சுவிட்ட கர்ணன் தன் கணைகளை ஏவிய போது, கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(4) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியனில் இருந்து பரவும் கதிர்களுக்கு ஒப்பாகக் கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விருகோதரன் {பீமன்} மறைக்கப்பட்டான்.(5) மயிலின் இறகுகளைக் கொண்ட அந்த அழகிய கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, உறங்குவதற்காக மரத்திற்குள் நுழையும் பறவைகளைப் போல, பீமனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவின.(6)

உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, நாரைகளின் தொடர்ச்சியான வரிசைகளுக்கு ஒப்பாக இடையறாமல் பாய்ந்தன.(7) அதிரதன் மகனால் ஏவப்பட்ட கணைகள் ஒரு வில்லில் இருந்து மட்டும் வெளியேறுவதாகத் தெரியாமல், கொடிமரம், குடை, ஏர்க்கால், நுகத்தடி மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றில் இருந்தும் பாய்வதைப் போலத் தெரியும் அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருந்தன.(8) உண்மையில், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மூர்க்கமான சக்தி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமானத் தன் வானுலாவும் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும் வகையில் அவற்றை ஏவினான்.(9)

(இப்படி) வெறியால் தூண்டப்பட்டு, காலனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அவனை {கர்ணனைக்} கண்ட விருகோதரன் {பீமன்}, தன் உயிரைக் குறித்து முற்றிலும் கவலைப்படாமல், தன் எதிரியிலும் மேன்மையடைந்து ஒன்பது கணைகளால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(10) கர்ணனின் தடுக்கப்பட முடியாத மூர்க்கத்தையும், அந்த அடர்த்தியான கணைமழையையும் கண்ட பீமன், பெரும் ஆற்றலைக் கொண்டவனாதலால், அச்சத்தால் நடுங்கவில்லை.(11)

பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைப்பொழிவுக்கு எதிர்வினையாக, இருபது கூரிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(12) உண்மையில், பிருதையின் மகன் {பீமன்} முன்னர்ச் சூதனின் மகனால் {கர்ணனால்} எப்படி மறைக்கப்பட்டானோ, அதே போலவே பின்னவன் {கர்ணன்} இப்போது அந்தப் போரில் முன்னவனால் {பீமனால்} மறைக்கப்பட்டான்.(13) போரில் பீமசேனனின் ஆற்றலைக் கண்ட உமது போர்வீரர்களும், சாரணர்களும் கூட மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் புகழ்ந்தனர்.(14) கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும், பூரிஸ்ரவஸ், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஜெயத்ரதன், உத்தமௌஜஸ், யுதாமன்யு, சாத்யகி, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன்(15) ஆகிய இந்தப் பெரும் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்று சொல்லி சிங்க முழக்கம் செய்தனர்.(16)

மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் அந்தக் கடுமுழுக்கம் எழுந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனான துரியோதனன், மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரிடமும், குறிப்பாகத் தன்னுடன் பிறந்த தம்பிகளிடம் இவ்வார்த்தைகளை விரைவாகச் சொன்னான். “அருளப்பட்டிருப்பீராக, விருகோதரனிடம் {பீமனிடமிருந்து} இருந்து கர்ணனைக் காப்பதற்காக அவனிடம் {கர்ணனிடம்} விரைவீராக, இல்லையெனில், பீமனின் வில்லில் இருந்து ஏவப்படும் கணைகளே ராதையின் மகனை {கர்ணனைக்} கொன்றுவிடும். வலிமைமிக்க வில்லாளிகளே சூதனின் மகனை {கர்ணனைக்} காக்க முயல்வீராக” {என்றான் துரியோதனன்}.(17-19).

இப்படித் துரியோதனனால் கட்டளையிடப்பட்டதும், அவனது {துரியோதனனின்} தம்பியரில் எழுவர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் பீமசேனனை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(20) குந்தியின் மகனை அணுகிய அவர்கள், மழைக்காலங்களில் மலையின் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் அவனை {பீமனை} மறைத்தனர்.(21) கோபத்தில் தூண்டப்பட்டவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் எழுவரும், ஓ! மன்னா, பிரளயத்தின் போது சந்திரனைப் பீடிக்கும் ஏழு கோள்களைப் போலப் பீமசேனனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22)

அப்போது குந்தியின் மகன் {பீமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் அழகிய வில்லைப் பெரும்பலத்துடன் வளைத்து, அதை உறுதியாகப் பிடித்து,(23) தன் எதிரிகளும் மனிதர்கள்தான் என்பதை அறிந்து, ஏழு கணைகளைக் குறி பார்த்தான். பெருஞ்சினத்துடன் கூடிய அந்தத் தலைவன் பீமன், சூரியக் கதிர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(24) உண்மையில், முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்த பீமசேனன், உமது மகன்களான அவர்களின் உடல்களில் இருந்து உயிரைப் பிரித்தெடுக்கும் வகையில் அந்தக் கணைகளை ஏவினான்.(25)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், பீமசேனனால் ஏவப்பட்டு, அந்தப் பாரத இளவரசர்களின் உடல்களைத் துளைத்து வானத்தில் பறந்து சென்றன.(26) உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், உமது மகன்களின் இதயங்களைத் துளைத்து ஆகாயத்தில் சென்ற போது, சிறந்த இறகுகளைக் கொண்ட பறவைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குருதியால் எங்கும் நனைந்திருந்த அக்கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குருதியைக் குடித்த பிறகு, அவர்களின் உடலைக் கடந்து சென்றன.(28) அந்தக் கணைகளால் முக்கிய உறுப்புகள் துளைக்கப்பட்ட அவர்கள், மலைகளின் செங்குத்துப் பாறைகளில் வளரும் நெடிய மரங்கள் யானைகளால் முறிக்கப்பட்டதைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர்.(29) இப்படிக் கொல்லப்பட்ட உமது ஏழு மகன்கள், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகியோராவர் [1].(30)

[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும்,  துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை துரோண பர்வம் பகுதி 134ல் அதே 14ம் நாள் போரிலும், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 135ல் அதே 14ம் நாள் போரிலும், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகிய எழுவரை இப்போது இந்தத் துரோண பர்வம் பகுதி 136ல் அதே 14ம் நாள் போரில் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 56 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் இதுவரை 32 பேரைக் கொன்றிருக்கிறான்

பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள் அனைவரிலும், தன் அன்புக்குரிய விகர்ணனுக்காக வருந்தி, கடும் துக்கத்தை அடைந்தான்.(31) அந்தப் பீமன், “போரில் என்னால் நீங்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று இப்படியே என்னால் சபதமேற்கப்பட்டது. ஓ! விகர்ணா, அதற்காகவே, நீயும் கொல்லப்படலாயிற்று. {இங்கே} என் சபதமே நிறைவேற்றப்பட்டதாயிற்று.(32) ஓ! வீரா {விகர்ணா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை மனதில் தாங்கியே நீ போரிட வந்தாய். எங்களுக்கு, அதிலும் குறிப்பாக மன்னனுக்கு (எங்கள் அண்ணனுக்கு) {யுதிஷ்டிரனுக்கு} நன்மை செய்வதில் நீ எப்போதும் ஈடுபட்டு வந்தாய்.(33) எனவே, ஒப்பற்றவனான உனக்காக நான் வருந்துவது முறையாதல் அரிதே {முறையாகாது}” என்றான் {பீமன்} [2].

[2] வேறொரு பதிப்பில், “விகர்ணா, என்னால் இந்தப் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது யுத்தத்தில் நீங்கள் கொல்லப்படத் தக்கவர்களல்லரோ? ஆதலால், நீ கொல்லப்பட்டாய். என்னால் பிரதிஜ்ஞை காக்கப்பட்டது. வீரனே, க்ஷத்திரிய தர்மத்தை நினைத்துக் கொண்டு நீ யுத்தத்திற்கு வந்தாய். ஆதலால், யுத்தகளத்தில் நீ கொல்லப்பட்டாய். யுத்தமுறையானது கொடியதன்றோ? எங்களுடைய நன்மையிலும், விசேஷமாக (எங்கள்) அரசருடைய நன்மையிலும் பற்றுள்ளவனும், அதிகத் தேஜஸையுடையவனுமான விகர்ணன் நியாயத்தினாலோ அநியாயத்தினாலோ அடிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான். ஆழ்ந்த புத்தியுள்ளவரும் பூமியில் பிருகஸ்பதிக்குச் சமமானவரும், காங்காபுத்ரருமான பீஷ்மரும் யுத்தத்தில் பிராணனையிழக்கும்படி செய்விக்கப்பட்டார். ஆதலால் யுத்தமானது கொடியதன்றோ?” என்று கூறினான்” என இருக்கிறது.

அவ்விளவரசர்களைக் கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} பயங்கரமான சிங்கமுழக்கம் ஒன்றைச் செய்தான்.(34) வீரப் பீமனின் அந்தப் பெருங்கூச்சலானது, ஓ! பாரதரே, அந்தப் போரில் அவனது வெற்றியை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தது. உண்மையில், வில் தரித்த அந்தப் பீமனின் மகத்தான கூச்சலைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போருக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(35, 36) மகிழ்ச்சியடைந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} பிறகு, ஓ! மன்னா, தன் தம்பியின் சிங்க முழக்கத்தை, துந்துபிகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளோடு வரவேற்றான். ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீட்டடின்படி விருகோதரன் {பீமன்} அந்தச் செய்தியை அனுப்பிய பிறகு, ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையான அந்த யுதிஷ்டிரன், மகிழ்ச்சியால் நிறைந்து போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் முப்பத்தொருவர் [3] கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், “விதுரர் பேசிய நன்மையான வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன” என்று விதுரரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(37-40) இப்படி நினைத்த மன்னன் துரியோதனனால் தான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முடியவில்லை. பகடையாட்டத்தின் போது, மூடனும், தீயவனுமான உமது மகன் {துரியோதனன்}, (தன் பக்கத்தில் இருந்த) கர்ணனுடன் சேர்ந்து, பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்கு அழைத்துவரச் செய்து, அவளிடம் பேசியதும், அதே இடத்தில் உமது முன்னிலையில்(41, 42) கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் தொலைந்தனர், அவர்கள் நிலையான நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். எனவே நீ வேறு கணவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக” என்ற அளவுக்குக் கர்ணனால் பேசப்பட்ட கடும் வார்த்தைகளும், ஐயோ, அவை அனைத்தின் கனியும் {பலனும்} இப்போது வெளிப்படுகின்றன.(43, 44)

[3] 14ம் நாள் போரில் மட்டும் பீமசேனனால் கொல்லப்பட்டவர்கள் 32 பேராவர். மேலே முப்பத்தொன்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. துர்முகன், துர்ஜயன் இருவரும் ஒருவராக இருப்பின் கணக்குச் சரியாகவே வரும். கொல்லப்பட்டோரின் பெயர் விபரங்களை அறிய இதே பதிவின் அடிக்குறிப்பு [1] ஐ காணவும்.

மேலும், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த உமது மகன்கள், அந்த உயர் ஆன்மா கொண்டோரான பாண்டுவின் மகன்களிடம் எள்ளுப்பதர்கள் போன்ற பல்வேறு கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினர். (இப்படி விளைந்த) கோப நெருப்பைப் பதிமூன்று {13} வருடங்கள் தடுத்திருந்த பீமசேனன் இப்போது அதை {கோப நெருப்பைக்} கக்கியபடியே, உமது மகன்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறான்.(45-46) ஏராளமாகப் புலம்பிய விதுரர், சமாதானத்தை நோக்கி உம்மை இட்டுச் செல்வதில் தவறினார். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தின் கனியையும் உமது மகன்களுடன் சேர்ந்து அனுபவிப்பீராக.(47) நீர் முதியவராகவும், பொறுமையுள்ளவராகவும், அனைத்துச் செயல்களின் விளைவுகளை முன்னறியவல்லவராகவும் இருக்கிறீர். அப்படியிருந்தும், நீர் உமது நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைப் பின்பற்ற மறுத்ததால், இவையாவும் விதியின் பயன் என்றே தெரிகிறது.(48) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே} வருந்தாதீர். இவையாவும் உமது பெரும் தவறால் விளைந்தவையே. உமது மகன்களின் அழிவுக்கு நீரே காரணமாவீர் என்பதே எனது கருத்தாகும்.(49)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விகர்ணனும், பெரும் ஆற்றலைக் கொண்ட சித்திரசேனனும் வீழ்ந்துவிட்டனர். உமது மகன்களில் முதன்மையான பல வலிமைமிக்கத் தேர்வீரர்களும் கூட வீழ்ந்துவிட்டனர்.(50) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பீமன், தன் பார்வை செல்லும் தொலைவில் வந்த உமது பிற மகன்களையும் விரைவாகக் கொன்றான்.(51) பாண்டுவின் மகனான பீமனாலும், விருஷனாலும் (கர்ணனாலும்) ஏவப்பட்ட கணைகளால் நமது படையில் ஆயிரக்கணக்கானோர் எரிக்கப்படுவதை உம்மால் மட்டுமே நான் காண நேர்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(52)
-----------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 136ல்  வரும் மொத்த சுலோகங்கள் 52


ஆங்கிலத்தில் | In English

Monday, January 11, 2016

பிற்பகலில் நடந்த பயங்கரப் போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 079

The dreadful battle on afternoon! | Bhishma-Parva-Section-079 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 37)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் தம்பிகளுடன் போரிட்ட பீமனும், அபிமன்யுவும்; விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; சித்திரசேனனையும், விகர்ணனையும் தாக்கிய அபிமன்யு; துரியோதனனுடன் மோதிய திரௌபதியின் மகன்கள்; பீஷ்மரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; போர் வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது மகன்களைத் தொடர்ந்து சென்ற பீமசேனனுடன் சேர்ந்த அபிமன்யு, அவர்கள் {உமது மகன்கள்} அனைவரையும் பீடித்தான். துரியோதனனுடன் சேர்த்து, உமது படையைச் சார்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பிறரும், (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பிருஷதன் மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} அபிமன்யுவும், பீமசேனனும் சேர்ந்ததைக் கண்டு, தங்கள் விற்களை எடுத்து, அந்த வீரர்கள் இருந்த இடத்திற்கு வேகமான தங்கள் குதிரைகளில் சென்றனர். அந்தப் பிற்பகலில் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் எதிரியின் படையைச் சார்ந்த வலிமைமிக்கப் போராளிகளுக்கிடையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பயங்கரம் நிறைந்த ஒரு மோதல் நடைபெற்றது.


[1] வேறு பதிப்புகளில் இஃது அபராண்ணகாலம் என்று குறிக்கப்படுகிறது. 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள்ளான 6 நாழிகைக் காலமே அபராண்ணகாலமாகும். 1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்றால், 18 நாழிகை என்பது 7 மணிநேரம் 12 நிமிடங்களாகும். 24 நாழிகை என்பது 9 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். 60 நாழிகையைக் கொண்டது ஒரு நாள். காலை 6 மணியில் இருந்து நாள் தொடங்குவதாக இருந்தால் 18வது நாழிகை என்பது மதியம் 1 மணி 12 நிமிடத்தையும், 24 நாழிகை என்பது மாலை 3 மணி 36 நிமிடத்தையும் குறிக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்திலேயே மேற்கண்ட போர் நடைபெற்றது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் கடும்போரில் விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு, அவனை {விகர்ணனை} இருபத்தைந்து {25} குறுங்கணைகளால் துளைத்தான். குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைக் கைவிட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விகர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் ஒளிமிக்கத் தேரில் ஏறினான். இப்படி ஒரே தேரில் இருந்த அந்தக் குருகுலத்தின் சகோதரர்கள் {சித்திரசேனனும், விகர்ணனும்} இருவரையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} கணை மழையால் மறைத்தான். அப்போது துர்ஜெயனும் {சித்திரசேனனும்} [2], விகர்ணனும் அபிமன்யுவை முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் துளைத்தனர். எனினும் மேரு மலையைப் போல உறுதியாக நின்ற அபிமன்யு கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன் கேகயச் சகோதரர்கள் ஐவருடன் போரிட்டான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தது.

[2] வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் சித்திரசேனன் என்றே இருக்கிறது.

சினம் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் அந்தப் போரில் துரியோதனனைத் தடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் உமது மகனைத் துளைத்தார்கள். போரில் ஒப்பற்றவனான உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திரௌபதியின் மகன்களைக் கூரிய கணைகளால் துளைத்தான். (பதிலுக்கு) அவர்களால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அவன் {துரியோதனன்}, (தன் சாரலில் வழுக்கிச் செல்லும்) பாண்டரங் {சிவப்பு சுண்ணாம்பு} கலந்த நீர் அருவியுடன் கூடிய ஒரு மலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

வலிமைமிக்கப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் மந்தையை நையப்புடைக்கும் மந்தையாளனை {இடையனைப்} போல, அந்தப் போரில் பாண்டவப் படையைப் பீடித்தார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படையின் வலப்புறத்தில் [3] எதிரிகளைக் கொன்று கொண்டிருந்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி கேட்டது. களத்தின் அந்தப் பகுதியில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளிலும் ஆயிரக்கணக்கில் தலையில்லா முண்டங்கள் எழுந்தன.

[3] வேறு ஒரு பதிப்பில் தென்புறத்தில் என்று இருக்கிறது.

குருதியே நீராக, (போராளிகளால் ஏவப்பட்ட) கணைகளே எதிர்ச்சுழிகளாக அந்தப் போர்க்களமே ஒரு கடலைப் போல இருந்தது. அந்தக் கடலில் யானைகள் தீவுகளாகவும், குதிரைகள் அலைகளாகவும் இருந்தன. துணிச்சல் மிக்க வீரர்கள் அதை {அந்தக் கடலைக்} கடக்கத் தேர்களே படகுகளாக இருந்தன. கரங்கள் வெட்டப்பட்டு, கவசம் இழந்து, அருவருக்கத்தக்க வகையில் சிதைக்கப்பட்டிருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலர், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அங்கே கிடப்பது தெரிந்தது. இரத்தத்தில் குளித்திருந்த உயிரிழந்த மதங்கொண்ட யானைகளின் உடல்களுடன் கூடிய அந்தப் போர்க்களத்தைக் காண, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் போரிட விரும்பாத ஒரு மனிதனும் இல்லாத அந்த அற்புதக் காட்சியை அந்தப் போரில் நாங்கள் கண்டோம்.

இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} உமது படை மற்றும் பாண்டவர்களின் படை ஆகிய இரண்டையும் சார்ந்த அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் புகழ் வேண்டியும், வெற்றியை விரும்பியும் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.



ஆங்கிலத்தில் | In English

Thursday, December 25, 2014

ஆராயாமல் தப்பி ஓடிய துரியோதனன்! - விராட பர்வம் பகுதி 64

Duryodhana precipitately fled! | Virata Parva - Section 64 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 39)






பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; துரியோதனன் அர்ஜுனனைத் தாக்கியது; விகர்ணன் துரியோதனனின் உதவிக்கு வந்து புறமுதுக்கிட்டு ஓடியது; அவனைக் கண்ட மற்ற படைவீரர்களும் களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடுவது; துரியோதனனும் புறமுதுகிடுவது; அர்ஜுனன் துரியோதனனை நிந்திப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “களத்தின் முன்னணியை விட்டு பீஷ்மர் ஓடியதும், திருதராஷ்டிரனின் சிறப்புமிக்க மகன் {துரியோதனன்}, தனது கொடியை உயர்த்தியபடி, கையில் வில்லுடனும், உரத்த கர்ஜனையுடனும் அர்ஜுனனை அணுகினான். தனது வில்லைக் காது வரை இழுத்து ஈட்டி முனை கொண்ட கணையை அடித்து, எதிரிகளுக்கு மத்தியில் உலாவி கொண்டிருந்த கடும் பராக்கிரமமிக்கப் பயங்கர வில்லாளியான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நெற்றியைத் துளைத்தான். தனது புகழ்பெற்ற செயல்களின் காரணமாகப் பிரகாசமாக இருந்தவனான அந்த வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா} கூரிய தங்க முனை கொண்ட அந்தக் கணையால் நெற்றியில் துளைக்கப்பட்டு, ஒற்றைச் சிகரமுடைய அழகிய மலை போல இருந்தான். அந்தக் கணையால் வெட்டப்பட்டு உண்டான புண்ணிலிருந்து உயிரோட்டமான சூடான இரத்தம் அதிகமாகப் பாய்ந்தது. அப்படி அவனது {அர்ஜுனனின்} உடலில் சொட்டிய இரத்தம், தங்க மலர்களால் ஆன மாலை போல அழகாக ஒளிர்ந்தது.

Wednesday, August 13, 2014

தன்னைக் காத்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 239

Karna saving himself!  | Vana Parva - Section 239  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், "அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்களும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.

Sunday, October 20, 2013

மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ

Krishna prevented from humiliation | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனின் கரங்களை எரித்துவிடுவதாக பீமன் சொல்வது; அர்ஜுனன் பீமனைக் கண்டிப்பது; திரௌபதிக்கு ஆதரவாக திருதராஷ்டிரனின் மகன் விகர்ணன் நீதி கேட்பது; கர்ணன் விகர்ணனைக் கண்டிப்பது; கர்ணன் துச்சாசனனிடம் திரௌபதியின் ஆடையைக் களையச் சொல்வது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் திரௌபதியின் மானம் காக்க விரைந்து வருவது...

பீமன் சொன்னான் "யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள். காசி மன்னன் கொடுத்த அத்தனை அற்புதப் பொருட்களையும், செல்வங்களையும், விலங்குகளையும் மற்ற செல்வங்களையும், கவசங்களையும், மற்ற மன்னர்கள் கொடுத்த ஆயுதங்களையும், நமது நாட்டையும், உம்மையும், எங்களையும் எதிரிகள் வென்று விட்டார்கள். நீர் எங்கள் தலைவராக இருப்பதால் நான் இதில் எல்லாம் கோபம் கொள்ளவிலை. 

இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன். இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுதியானவள் கிடையாது. பாண்டவர்களைத் தலைவர்களாக அடைந்து, இந்த தாழ்ந்த, இழிவான, கொடும் தீய மனம் கொண்ட கௌரவர்களால் உம்மால் தானே இப்படித் தண்டிக்கப்படுகிறாள். அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. **நான் அந்த உமது கரங்களை எரித்துவிடுகிறேன். சகாதேவா, கொஞ்சம் நெருப்பைக் கொண்டு வா**" என்றான். {இந்த வரிகளை பாரதியாரின் வார்த்தைகளில் Footnoteல் பாருங்கள்}


இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ பீமசேனா, இதற்கு முன் நீ இதுபோன்ற வார்த்தைகளை உச்சரித்தது கிடையாது. நிச்சயமாக உனது உயர்ந்த அறம் இந்தத் தீய எதிரிகளால் அழிக்கப்பட்டது. நீ எதிரிகளின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடாது. உயர்ந்த அறத்தைப் பயில். அறம் சார்ந்த மூத்த அண்ணனை {யுதிஷ்டிரனை} மீறிப் பேசுவது எவனுக்குத் தகும்? மன்னர் எதிரியால் அழைக்கப்பட்டார், க்ஷத்திரிய ஒழுக்கத்தை நினைவில் கொண்டு, தனது விருப்பத்திற்கு மாறாக பகடை விளையாடினார். அது நிச்சயமாக நமது புகழுக்கு உகந்ததே" என்றான் {அர்ஜுனன்}.

பீமன், "ஓ தனஞ்செயா {அர்ஜுனா}, க்ஷத்திரிய ஒழுக்கத்தை ஏற்று மன்னர் நடந்து கொண்டார் என்பதை நான் அறியாமல் இருந்திருந்தால், அவரது {யுதிஷ்டிரரது} கரங்களை வலுக்கட்டாயமாகப் பற்றி எரியும் நெருப்பில் எரித்திருப்பேன்" என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துயரத்தில் இருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} நிலையையும் கண்ட திருதராஷ்டிரனின் மகனான விகர்ணன், "மன்னர்களே, யக்ஞசேனியால் {திரௌபதியால்} கேட்கப்படும் கேள்விக்கு பதிலளியுங்கள். நமக்குப் பரிந்துரைக்கப்பட்ட விஷயத்தில் நாம் நீதியைத் தீர்மானிக்காமல் இருப்போமானால், நம் அனைவருக்கும் தாமதமில்லாத நரகம் நிச்சயம். குருக்களில் மூத்தவர்களான பீஷ்மரும், திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்று சொல்லாமல் இருப்பது எவ்வாறு? 

எங்களுக்கெல்லாம் குருவான பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, கிருபரும் இங்கே இருக்கின்றனர். ஏன் இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்கள் பதிலளிக்கவில்லை? எல்லாபுறத்தில் இருந்தும் வந்து இங்கு கூடியிருக்கும் மன்னர்கள், லாப மற்றும் கோப நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கி, இந்த கேள்விக்கு பதில் அளிக்கட்டும். மன்னர்களே, மன்னன் துருபதனின் அருளப்பட்ட மகள் {திரௌபதி} கேட்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளியுங்கள். அதன் பிறகு சற்று சிந்தித்து எந்தப் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள்" என்றான்.

இப்படியே விகர்ணன் அந்த சபையின் முன்பு தொடர்ச்சியாகத் தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மன்னர்கள் அவனுக்கு நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. அனைத்து மன்னர்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த விகர்ணன், தனது கரங்களைப் பிசைய ஆரம்பித்து, பாம்பு போல பெருமூச்சுவிட்டான். பிறகு கடைசியாக அந்த இளவரசன் {விகர்ணன்}, "பூமியின் மன்னர்களே, கௌரவர்களே, நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களோ இல்லையோ, நான் நீதி என்றும் சரி என்றும் கருதுவதைச் சொல்வேன். மனிதர்களில் முதன்மையானவர்களே, வேட்டை, குடி, சூது, அதிகப்படியான மாதர் இன்பம் ஆகிய நான்கும் மன்னர்களுக்கான நான்கு தீமைகளாகும். இவற்றுக்கு அடிமையாக இருக்கும் மன்னன் அறத்தை ஏமாற்றி வாழ்கிறான். இப்படி சரியில்லாத நடத்தைகளில் ஈடுபடும் மனிதர்களை எந்த அதிகாரமும் இல்லாதவனாகவே கருதுவார்கள். இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, இந்தத் தீமைகளில் ஒன்றில் ஆழ்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்த ஏமாற்றுக்கார சூதாடிகளால் தூண்டப்பட்டு, திரௌபதியைப் பந்தயமாக வைத்தார். மறுபுறம், இந்த அப்பாவி திரௌபதி பாண்டுவின் அனைத்து மகன்களின் பொது மனைவி. மேலும், மன்னர் {யுதிஷ்டிரர்} முதலில் தன்னை இழந்த பிறகு, இவளை {திரௌபதியை} பந்தயமாக வைத்தார். இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சுபலனே {சகுனியே}, மன்னனை {யுதிஷ்டிரனை} இந்தக் கிருஷ்ணையை {திரௌபதியைப்} பந்தயமாக வைக்கத் தூண்டினான். இச்சூழ்நிலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்த நான், திரௌபதி வெல்லப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறேன்" என்றான் {விகர்ணன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தச் சபையில் இருந்தவர்களால் பெரும் கூச்சல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விகர்ணனைப் பாராட்டி, சுபலனின் மகனைக் {சகுனியைக்} கண்டித்தனர். அந்தச் சத்தத்தால், கோபம் கொண்டு உணர்வுகளை இழந்த ராதையின் மகன் {கர்ணன்}, நல்ல வடிவம் கொண்ட தனது கரங்களை அசைத்து "ஓ விகர்ணா, எதிர் மற்றும் சீரற்ற பல நிலைகளை இந்தச் சபையில் காண முடிகிறது. விறகில் உண்டாகும் நெருப்பு, அந்த விறகையே உட்கொள்வது போல, இந்த உனது சினம் உன்னையே உட்கொள்ளும். திரௌபதியால் தூண்டப்பட்ட பிறகும் இங்கிருக்கும் பிரமுகர்கள் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அவர்கள் அனைவரும், துருபதனின் மகள் {திரௌபதி} சரியாக வெல்லப்பட்டதாகவே கருதுகிறார்கள். ஓ திருதராஷ்டிரர் மகனே {விகர்ணா}, நீ மட்டுமே, வயது முதிராததால், கோபத்தில் வெடிக்கிறாய். சிறுவனாக இருக்கும் நீ முதியவன் போல சபைக்கு மத்தியில் நின்று பேசுகிறாய். ஓ துரியோதனன் தம்பியே {விகர்ணா}, (நீதியாக) வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியை}, அவள் வெல்லப்படவில்லை என்று முட்டாளைப் போல சொல்வதால், உண்மையான அறநெறி எது என்பதை நீ அறிய மாட்டாய் என்று தெரிகிறது. ஓ திருதராஷ்டிரன் மகனே {விகர்ணா}, பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்} இந்தச் சபையின் முன்னால் தனது அனைத்து உடைமைகளையும் பந்தயமாக வைத்த போது, கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ எப்படிச் சொல்கிறாய்? ஓ பாரத குலத்தின் காளையே {விகர்ணா}, {யுதிஷ்டிரனின்} அனைத்து உடைமைகளில் திரௌபதியும் ஒருத்திதான். ஆகையால், நியாயமாக வெல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} எப்படி வெல்லப்படவில்லை என்று சொல்கிறாய்? 

திரௌபதி (சுபலனால்) குறிப்பிடப்பட்டு, பாண்டவர்களால் பந்தயப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டவள். என்ன காரணத்திற்காக நீ அவள் {திரௌபதி} வெல்லப்பட வில்லை என்று கருதுகிறாய்? அல்லது, அவள் {திரௌபதி} ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் குறிப்பிட்ட அற்புதமான காரணங்களைக் கேள். ஓ குரு குலத்தின் மகனே {விகர்ணா}, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே தேவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்தத் திரௌபதி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், இவள் {திரௌபதி} கற்பற்ற பெண் என்பது நிச்சயம். ஆகையால், இவளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ ஆச்சரியப்பட வேண்டிய செயல் அல்ல. பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், அவளும், பாண்டவர்கள் அனைவரும் சுபலனின் மகனால் {சகுனியால்} நீதியுடன் வெல்லப்பட்டனர். ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைந்து விடு" என்றான் {கர்ணன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து, கீழே தூக்கி எறிந்து அந்தச் சபையில் அமர்ந்தார்கள். பிறகு துச்சாசனன், ஓ மன்னா {ஜனமேஜயா}, அனைவர் முன்னிலையிலும் திரௌபதியின் ஆடைகளை வலுக்கட்டாயமாகப் பற்றி களைய ஆரம்பித்தான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "திரௌபதியின் உடை அப்படி களையப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரியின் நினைப்பால் அவள் { திரௌபதி சத்தம்போட்டு அழுது}, "ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, துவாரகையில் வசிப்பவனே, ஓ கிருஷ்ணா, ஓ (பிருந்தாவனத்தின்) இடையர் குலப் பெண்களை விரும்புபவனே, ஓ கேசவா, கௌரவர்கள் என்னை அவமானப்படுத்துவதை பார். ஓ தலைவா, ஓ லட்சுமியின் கணவனே, ஓ விராஜத்தின் (பிருந்தாவனத்தின்) தலைவனே, அனைத்துத் துன்பங்களையும் அழிப்பவனே, ஓ ஜனார்த்தனா, இந்தக் கௌரவ சமுத்திரத்தில் மூழ்கும் என்னைக் காப்பாற்று. ஓ கிருஷ்ணா, ஓ கிருஷ்ணா, ஓ பெரும் யோகியே, அண்டத்தின் ஆன்மாவே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவனே, ஓ கோவிந்தா, குருக்களுக்கு மத்தியில் எனது உணர்வுகளை இழந்து துன்பத்தில் இருக்கும் என்னைக் காப்பாற்று" என்று அழுதாள். 

துயரத்தில் இருந்த அந்த அழகான பெண்மணி {திரௌபதி}, தனது முகத்தை மூடி, மூவுலகத்தின் தலைவனான ஹரியான கிருஷ்ணனை நினைத்து சத்தமாக அழுதாள். திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் ஆழமாக உணர்ச்சிக்கு ஆட்பட்டு, இரக்கமுள்ள அவன் {கிருஷ்ணன்} இரக்கத்துடன் தனது ஆசனத்தைவிட்டு எழுந்து, கால்நடையாக அங்கு வந்தான். விஷ்ணு என்றும், ஹரி என்றும் சிறப்பு வாய்ந்த அறத்தின் காப்பாளனான நரன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனிடம், யக்ஞசேனி {திரௌபதி} சத்தமாக அழுது கொண்டிருந்தபோது, யாராலும் கவனிக்கப்படாமல் இருந்து, அவளை {திரௌபதியை} பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் மூடினான். 

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, திரௌபதியின் ஆடை இழுக்கப்பட்டு, ஒரு ஆடை எடுக்கப்பட்ட போது, அதே வகையைச் சார்ந்த மற்றொரு ஆடை அவளை மறைப்பது போலத் தோன்றியது. இப்படியே பல துணிகள் காணப்படும் வரை இது தொடர்ந்து கொண்டு இருந்தது. ஓ மேன்மையானவனே, அறத்தைக் காக்க, பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான ஆடைகள் திரௌபதியின் மேனியில் இருந்து வந்தன. அங்கே பல குரல்களின் ஆழ்ந்த கர்ஜனை அங்கே எழுந்தது. அந்தச் சபையில் இருந்த மன்னர்கள், உலகத்தின் காட்சிகளில் இயல்புக்கு மிக்க காட்சியைக் கண்டு, திரௌபதியைப் பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனைக்} கண்டிக்கத் தொடங்கினர். மேலும், பீமன் தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, கோபத்தில் உதடுகள் நடுங்க, பெருத்த குரலில் மன்னர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரமான சபதத்தை ஏற்றான்.

---------------------------------------------------
மகாகவி பாரதியார்
**கீழ்வருவது பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பீமன் பேச்சு ....

‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.     69


‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே

வாய்ந்த வடிவழகை.     70

‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்

சண்டனப் பாஞ்சாலன்.     71

‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.     72


‘சோரத்திற் கொண்டதில்லை; -- அண்ணே
, சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்;     73

பாரதியாரும் அவரது
மனைவி செல்லம்மாவும்

‘சக்கரவர்த்தி யென்றே -- மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய்.     74

‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்.     75

‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!     76

‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’     77



 மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக!
 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top