Passage work started | Adi Parva - Section 149 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த விதுரனின் நண்பன் கனகன்; சுரங்கத்தைத் தோண்டி, அதன் வாயிலை வீட்டின் மத்தியில் அமைத்த கனகன்...
 |
Passage work started
Adi Parva - Section 149 | Mahabharata In Tamil |
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுரங்கம் தோண்டுவதில் நிபுணரான விதுரனின் நண்பர் {கனகன் என்ற}
[1] ஒருவர் பாண்டவர்களைக் கமுக்கமாகச் சந்தித்து,(1) "நான் விதுரரால் அனுப்பப்பட்டவன். சுரங்கம் தோண்டுவதில் நான் நிபுணன். பாண்டவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.(2) என்னிடம் இருக்கும் நம்பிக்கையால் விதுரர் என்னிடம், "நீ பாண்டவர்களிடம் சென்று அவர்களுக்கு நன்மை செய்வாயாக" என்றார். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?(3) தேய்பிறையின் பதினான்காவது நாள் இரவில் {கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி} புரோசனன் இந்த வீட்டின் கதவுகளுக்குத் தீ வைப்பான்.(4) மனிதர்களில் புலியான பாண்டவர்களை அவர்களது தாயுடன் எரித்துக் கொல்ல வேண்டும் என்பது தீய மனம் படைத்த திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனன்} விருப்பமாகும்.(5) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, விதுரர் மிலேச்ச மொழியில் உம்மிடம் ஏதோ சொல்ல, நீரும் அதே மொழியில் மறுமொழி கூறியிருக்கிறீர். இக்குறிப்புகளை நீர் என்னை நம்புவதற்காகவே தெரிவிக்கிறேன்" என்றார்.(6)
[1] கும்பகோணம் பதிப்பில் "கனகன்" என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. கனகன் என்றால் சுரங்கம் செய்பவன் என்பது பொருள்.