Showing posts with label அகஸ்தியர். Show all posts
Showing posts with label அகஸ்தியர். Show all posts

Monday, January 19, 2015

நகுஷனின் வீழ்ச்சி! - உத்யோக பர்வம் பகுதி 17

Nahusha’s fall! | Udyoga Parva - Section 17 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 17)

பதிவின் சுருக்கம் : திக்பாலர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்த இந்திரனிடம் அகத்தியர் வந்தது; அகத்தியர் இந்திரனை வாழ்த்துவது; நகுஷன் சொர்க்கத்தில் இருந்து விழுந்ததை அகத்தியர் சொன்னது; இந்திரன் அக்கதையை விரிவாகக் கேட்டது; அகத்தியர் நடந்ததைச் சொன்னது; நகுஷன் வீழ்ந்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைவது ...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “தேவர்கள் தலைவனான புத்திக்கூர்மையுள்ள பெரும் இந்திரன் லோகபாலர்களுடனும், பிற தேவர்களுடனும் நகுஷனைக் கொல்லும் வழிமுறைகளைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பெரிதும் மதிக்கப்படும் தவசியான அகத்தியர் {அகஸ்தியர்} அங்கே அவ்விடத்தில் தோன்றினார். தேவர்கள் தலைவனால் மதிக்கப்பட்ட அகத்தியர், “அண்ட வடிவம் கொண்டவன் {திரிசிரன்} மற்றும் விருத்திரன் ஆகியோரின் அழிவுக்குப் பின்னரும் மலர்ச்சியுடன் இருப்பதற்கு நீ எப்படிப்பட்ட நற்பேறைப் பெற்றிருக்க வேண்டும். ஓ! புரந்தரா {இந்திரா}, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நகுஷன் தூக்கியெறியப்பட்டது எவ்வளவு பெரிய நற்பேறு? ஓ! வலனைக் கொன்றவனே {இந்திரா}, உனது எதிரிகள் அனைவரையும் கொன்ற உன்னைக் காண நான் என்ன நற்பேறு செய்திருக்க வேண்டும்?” என்று கேட்டார் {அகத்தியர்}.


இந்திரன் {அகத்தியரிடம்}, “ஓ! பெருந்துறவியே, இங்கே வந்த உமது பயணம் இனிமையாக இருந்ததா? உம்மைக் காண்பதில் நான் மகிழ்கிறேன். பாதம் மற்றும் முகத்தைக் கழுவி கொள்ள நீரும், ஆர்க்கியாவும், பசுவையும் என்னிடம் இருந்து ஏற்றுக் கொள்ளும்” என்றான்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மிகவும் மகிழ்ந்த இந்திரன், உரிய மரியாதையைப் பெற்று, இருக்கையில் அமர்ந்திருந்த அந்தத் துறவியரில் சிறந்தவரும், அந்தணர்களில் பெரியவரிடம் {அகத்தியரிடம்}, “ஓ! மதிப்புமிக்கத் துறவியே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தீய ஆன்மா கொண்ட நகுஷன் சொர்க்கத்தில் இருந்து எப்படி வீசப்பட்டான், என்பது உம்மால் உரைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றான்.

அகஸ்தியர் {இந்திரனிடம்} சொன்னார், “ஓ! இந்திரா, பலத்தில் கர்வம் கொண்ட தீயவனான நகுஷன் சொர்க்கத்தில் இருந்து எப்படி வீசப்பட்டான் என்ற இனிய உரையைக் கேள். தூய எண்ணம் கொண்ட அந்தணர்களும், தெய்வீகத் துறவிகளும், அவனைச் சுமந்து சென்றதால் களைப்படைந்திருந்த போது, ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே {இந்திரா}, அவர்கள் அத்தீயவனிடம் {நகுஷனிடம்}, “ஓ! இந்திரா {நகுஷா}, மாடுகள் மீது தெளிக்கும்போது ஓத வேண்டிய வேதங்களின் குறிப்பிட்ட சில பாடல்கள் இருக்கின்றன. அவை நம்பத்தக்கவையா? இல்லையா?” என்று கேட்டனர். தமஸ் செயல்பாடுகளால் {தமோ குணத்தால்} உணர்வுகளை இழந்திருந்த {அறிவு மழுங்கிய} நகுஷன் அவர்களிடம் அவை நம்பத்தக்கவை அல்ல என்று சொன்னான். பிறகு அந்தத் துறவிகள் {நகுஷனிடம்}, “அநீதியே உனக்கு உகந்ததாய் இருக்கிறது; நீ நீதியின் வழியைப் பின்பற்றவில்லை. ஓ! இந்திரா {நகுஷா}, அவை நம்பத்தக்கவை என்று பெரும் முனிவர்கள் முன்பு சொல்லியிருக்கின்றனர்” என்றனர்.

பொய்மையால் உந்தப்பட்ட அவன் {நகுஷன்}, தனது காலால் எனது தலையைத் தொட்டான். ஓ! சச்சியின் தலைவா {இந்திரா}, இதனால் அவன் {நகுஷன்} பலத்தையும், நல்ல பார்வையையும் இழந்தான். பிறகு அச்சத்தால் பீடிக்கப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த அவனிடம் {நகுஷனிடம்} நான், “பிரம்ம முனிவர்களால் (அந்தணத் துறவிகளால்) உரைக்கப்பட்ட குற்றங்குறையற்ற வேதப் பாடல்கள் போலித்தனமானவை என்று நீ சொன்னதாலும், உனது காலால் எனது தலையைத் தொட்டதாலும், ஓ! இழிந்த மூடா {நகுஷா} பிரம்மனுக்கு நிகரான அணுக முடியாத இந்தத் துறவிகளை, உன்னைச் சுமப்பதற்காக விலங்குகளைப் போல மாற்றியதாலும், ஓ! இழிந்தவனே {நகுஷா}, நீ உனது காந்தியை இழந்து, உனது நற்செயல்கள் {நற்செயல்களின் பலன்கள்} அனைத்தும் தீர்ந்து போய்ச் சொர்க்கத்தில் இருந்து தலைகுப்புற விழுவாயாக. பெரும் பாம்பின் வடிவத்தில் நீ பத்தாயிரம் வருடங்கள் பூமியில் அலைவாயாக. அக்காலம் நிறைவடைந்ததும் நீ சொர்க்கத்திற்குத் திரும்பலாம்” என்று சொன்னேன். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {இந்திரா}, இப்படியே அந்த இழிந்தவன் {நகுஷன்} சொர்க்கத்தின் அரியணையில் இருந்து தூக்கி வீசப்பட்டான். ஓ! இந்திரா, இப்போது மலர்ச்சியுடன் இருக்கும் நாம் பேறு பெற்றவர்களே. அந்தணர்களுக்கு முள்ளாக இருந்தவனும் கொல்லப்பட்டான். ஓ! சச்சியின் தலைவா {இந்திரா}, சொர்க்கத்திற்குத் திரும்பி, உலகங்களைக் காத்து, புலன்களைக் கட்டுப்படுத்தி, உனது எதிரிகளை அடக்கி, பெரும் துறவிகளால் துதிக்கப்பட்டு இருப்பாயாக” என்றார் {அகத்தியர்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, தேவர்களும், பெரும் முனிவர்கள் கூட்டங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர். பித்ருக்களும், யக்ஷர்களும், பாம்புகளும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், தேவ கன்னியர் கூட்டங்களும் அப்படியே {மகிழ்ச்சியாக} இருந்தனர். குளங்களும், நதிகளும், மலைகளும், கடல்களும் கூட மகிழ்ந்தன. அவை அனைத்தும் {இந்திரனிடம்} வந்து, “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரா}, நீ மலர்ச்சியுடன் செழித்து இருப்பது பெரும்பேறேயாகும். புத்திக்கூர்மையுள்ள அகத்தியர் தீயவனான நகுஷனைக் கொன்றதும் பெரும்பேறேயாகும். அத்தீயவன் {நகுஷன்} பாம்பாக மாறி உலகத்தில் திரிய வைக்கப்பட்டதும் பெரும்பேறேயாகும்” என்றன.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, April 29, 2014

குபேரனின் கோபம் தணிந்தது! - வனபர்வம் பகுதி 160

The wrath of Kuvera appeased! | Vana Parva - Section 160 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமனைக் காணாது மனம் வருந்திய பாண்டவர்கள் மலைச்சிகரத்தில் ஏறியது; பீமனையும், பீமனால் கொல்லப்பட்ட ராட்சசர்களையும் காண்பது; குபேரன் பீமனிடம் போருக்கு வந்தது; வந்த இடத்தில் யுதிஷ்டிரனைக் கண்டு கோபம் தணிந்து, தனக்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தைச் சொன்னது; பீமசேனன் செயலால் சாபவிமோசனம் பெற்றதாகக் குபேரன் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "மலையின் குகைகளில் இருந்து பலதரப்பட்ட ஒலிகள் வருவதையும், பீமசேனனைக் காணாததையும் கண்ட, குந்தியின் மகனான அஜாதசத்ருவும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மகன்களான இரட்டையர்களும், தௌமியரும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, அனைத்து அந்தணர்களும், (பாண்டவர்களின்) நண்பர்களும் துயரத்தில் நிறைந்தனர். அதன்பிறகு திரௌபதியை ஆரிஷ்டஷேணரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்த வீரமிக்க, வலிமைமிக்க ரதவீரர்கள் {பாண்டவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து அந்த மலையின் சிகரத்தில் ஏறினர். எதிரிகளை ஒடுக்குபவர்களான வலிமையான வில்லாளிகளும், பலம் வாய்ந்த தேரோட்டிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்} அந்த மலைச்சிகரத்தை அடைந்ததும் பீமனையும், பீமனால் அடிக்கப்பட்டுச் சுயநினைவற்ற நிலையில் கிடக்கும் பெரும் பலம்வாய்ந்த ராட்சசர்களையும் கண்டனர். அந்தத் தானவப் படையைக் கொன்ற பிறகு, தனது கதாயுதத்தையும், வாளையும், வில்லையும் பிடித்தவாறு இருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, மகவானைப் {இந்திரனைப்} போலத் தெரிந்தான்.


அற்புதமான நிலையை அடைந்த அந்தப் பாண்டவர்கள் தங்கள் சகோதரனை {பீமனைக்} கண்டதும், அவனை அணைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் இருந்த அந்தச் சிகரம், தேவர்களில் முதன்மையான, உயர்ந்த நற்பேறைக் கொண்ட லோகபாலர்கள் இருக்கும் சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது. குபேரனின் வசிப்பிடத்தையும், கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் ராட்சசர்களையும் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அங்கே அமர்ந்திருந்த தனது தம்பியிடம் {பீமனிடம்}, "முரட்டுத்தனத்தாலோ, அறியாமையாலோ, ஓ! பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ! வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ! பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ! பார்த்தா {பீமா}, அந்தப் பாவகரச் செயல்களுக்கான கனியை அறுவடை செய்கிறான். எனினும், நீ எனது நன்மையை விரும்பினால், மீண்டும் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யாதே" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "தனது தம்பியான விருகோதரனிடம் {பீமனிடம்} இதைச் சொன்ன உயர்ந்த சக்தியும் உறுதியான மனமும், பொருள் குறித்த அறிவியலையும் அறிந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பேச்சை நிறுத்தி, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கலானான்.

மறுபுறம், பீமானால் கொல்லப்பட்டவர்கள் தவிர மீந்திருந்த ராட்சசர்கள் ஒன்று சேர்ந்து குபேரனின் வசிப்பிடத்திற்கு ஓடினார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை விரைவாக அடைந்து, பீமனின் மீது ஏற்பட்ட பயத்தால் துன்பக்குரலுடன் கதறத் தொடங்கினர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், "ஓ! தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ! கருவூலத்தின் தலைவா, மலையில் ஊடுருவி வந்த ஒரு மனிதன், தனி ஒருவனாக உமது குரோதவாச ராட்சசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். மேலும், செல்வத்தின் தலைவா, யக்ஷர்களிலும் ராட்சசர்களின் முதன்மையானவர்கள் அங்கே அடிபட்டு, உணர்வற்று விழுந்து, இறந்து கிடக்கின்றனர். அவனது {பீமனது} கருணையால் நாங்கள் விடப்பட்டோம். மேலும், உமது நண்பரான மணிமானும் கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் ஒரு மனிதன் செய்தான். இதன்பிறகு எது சரியோ அதைச் செய்யும்" என்றனர்.

இதைக் கேட்ட யக்ஷப் படைகளின் தலைவன் {குபேரன்}, கோபம் மிகுந்து, சினத்தால் கண்கள் சிவக்க, "என்ன?" என்று கேட்டான். பீமனின் இரண்டாவது தாக்குதலைக் கேட்ட பொக்கிஷங்களின் தலைவனான, யக்ஷர்கள் மன்னன், கோபத்தால் நிறைந்து, "(குதிரைகளைப்) பூட்டுங்கள்" என்றான். அதன்பேரில், கரு மேக வண்ணத்தில் மலைச்சிகரம் போல உயரமாக இருந்த தேரில் தங்க ஆபரணங்கள் பூண்ட குதிரைகள் பூட்டப்பட்டன. தேரில் பூட்டப்பட்ட அனைத்து நற்குணங்களும், பத்து மங்களகரமான சுழிகளும் கொண்ட அந்தச் சக்திமிக்க, பலமிக்க அற்புதமான குதிரைகள், பலதரப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காண்பதற்கு அருமையாக இருந்தன. காற்றைப் போல வேகமாகச் செல்ல விரும்பிய அவை வெற்றித்தருணத்தில் கனைக்கும் கனைப்பொலியை, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு அப்போது கனைத்தன.

அந்தத் தெய்வீகமான பிரகாசமிக்க யக்ஷர்கள் மன்னன் {குபேரன்}, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் துதிபாடப்பட்டுக் கிளம்பினான். கண்கள் சிவந்து, தங்க நிறத்தில், பெரும் உடல் படைத்த, பெரும் பலமிக்க யக்ஷர்களின் முதன்மையான ஆயிரம் பேர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டு, அந்த உயர் ஆன்ம பொக்கிஷத் தலைவனை {குபேரனைத்} தொடர்ந்து சென்றனர். வானத்தின் ஊடே பறந்து வந்த அக்குதிரைகள், தங்கள் வேகத்தால் வானத்தை இழுப்பதைப் போல ஓடி விரைவாகக் கந்தமாதனத்தை அடைந்தன. செல்வத்தின் தலைவனால் {குபேரனால்} பராமரிக்கப்படும் அந்தப் பெரும் கூட்டத்தையும், யக்ஷப்படைகளால் சூழப்பட்ட அருள் நிறைந்த உயர் ஆன்ம குபேரனையும் கண்ட பாண்டவர்களுக்கு மயிர் சிலிர்த்தது.

விற்களும், வாள்களும் தாங்கிக் கொண்டு நின்ற பெரும்பலம்வாய்ந்த ரதவீரர்களான பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கண்ட குபேரன் மகிழ்ந்தான். தேவர்களின் காரியத்தை மனதில் கொண்ட அவன் இதயத்தால் திருப்தியடைந்தான். பெரும் வேகத்தைக் கொடையாகக் கொண்ட யக்ஷர்கள் பறவைகளைப் போல அந்த மலைச்சிகரத்தில் ஏறி, கருவூலங்களின் தலைவனைத் {குபேரனைத்} தலைமையாகக் கொண்டு அவர்கள் {பாண்டவர்கள்} முன்பாக நின்றனர். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவன் {குபேரன்} பாண்டவர்களிடம் திருப்தியடைந்து நிற்பதைக் கண்ட யக்ஷர்களும், கந்தர்வர்களும் கலக்கமில்லாமல் அங்கே நின்றனர். பிறகு தாங்களே ஊடுருவி வந்ததாகக் கருதிய அந்த உயர் ஆன்ம ரத வீரர்களான பாண்டவர்கள், செல்வங்களைத் தரும் அத்தலைவனை {குபேரனை} வணங்கி, குவிந்த கரங்களுடன் கருவூலங்களின் தலைவனைச் {குபேரனைச்} சூழ்ந்து நின்றனர்.

பல வண்ணங்கள் பூசப்பட்டு விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட அழகான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்}, ஓர் அற்புதமான இருக்கையில் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்} அமர்ந்தான். பெரும் உடல் படைத்தவர்கள் சிலரும், முளை {அல்லது தாழ்ப்பாள்} போன்ற காதுகளைக் கொண்ட சிலருமான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், ராட்சசர்களும், நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரசுக் கூட்டங்களுங்களும் அமர்ந்திருந்த அவன் {குபேரனின்} முன்னால், நூறு வேள்விகளைச் செய்தவனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல அமர்ந்தனர். தலையில் அழகான தங்க மாலை அணிந்துகொண்டு, கரங்களில் சுருக்குக் கயிற்றையும், வாளையும், வில்லையும் கொண்டிருந்த செல்வத் தலைவனைக் {குபேரனைக்} ஏறிட்டுப் பார்த்தபடி பீமன் நின்றான். ராட்சசர்களால் பலத்த காயமடைந்திருந்த பீமசேனன் எந்தக் கவலையும் அடையாமல், குபேரனின் வருகையால் பயத்தையும் அடையாமல் இருந்தான்.

மனிதர்களின் தோள்களில் சவாரி செய்யும் அவன் {குபேரன்}, கூரிய கணைகளுடன் போரிடும் விருப்பத்துடன் நின்று கொண்டிருக்கும் பீமனைக் கண்டு தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பீமனிடம் கோபம் கொள்ளாதே. இந்த யக்ஷர்களும், ராட்சசர்களும் விதியால் ஏற்கனவே கொல்லப்பட்டனர். உன் தம்பி அதற்கு ஒரு கருவியாக இருந்திருக்கிறான். செய்யப்பட்ட இந்தக் கெட்ட செயலுக்காக வெட்கப்பட வேண்டியது அவசியமில்லை. ராட்சசர்களின் இந்த அழிவு, தேவர்களால் முன்பே கணிக்கப்பட்டதுதான். பீமசேனன் மீதான கோபத்தை நான் ஊக்குவிக்கமாட்டேன். மாறாக, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நான் அவனிடம் {பீமனிடம்} திருப்தியாக இருக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே, பீமனின் இச்செயலால் திருப்தியடைந்தேன்" என்றான் {குபேரன் யுதிஷ்டிரனிடம்}.

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசியவன் {குபேரன்}, பீமனிடம், "ஓ! குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ! பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ! விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ! பாண்டவா {பீமா}, எக்குற்றமும் உன்னைச் சாராது" என்றான் {குபேரன்}.

யுதிஷ்டிரன் {குபேரனிடம்}, "ஓ! தெய்வீகமானவனே, உயர் ஆன்ம அகஸ்தியரால், நீ ஏன் சபிக்கப்பட்டாய்? ஓ! தேவனே, இந்தச் சாபம் ஏற்பட்ட விதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். சிறந்த புத்தியுள்ளவரான அகஸ்தியரின் கோபத்தால், அச்சமயத்திலேயே உன்னைத் தொடர்ந்து வந்த சேனைகளுடனும், பரிவாரங்களுடனும் நீ எரிக்கப்படாமல் இருந்தாய் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது" என்றான்.

அதன்பேரில் கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நெருப்பு போன்ற பிரகாசத்துடனும், உயர்த்திப் பிடித்த கரங்களுடன் அமர்ந்து, சூரியனை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சக்தியின் குவியலைக் {அகஸ்தியரைக்} கண்ட உடனேயே, எனது நண்பனும், ராட்சசர்களின் அருள்நிறைந்த தலைவனுமான மணிமான், முட்டாள்தனத்தாலும், செருக்காலும், அறியாமையாலும், அந்தப் பெரும் முனிவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்தான்.

அதன் காரணமாக, அனைத்து திக்குகளையும் எரித்துவிடக்கூடிய கோபம் கொண்ட அவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஓ! கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ! தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ! பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது நான் உனது தம்பியான பீமனால் விடுவிக்கப்பட்டேன்" என்றான் {குபேரன்}.
http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

Thursday, March 20, 2014

மறைந்து தோன்றிய சரஸ்வதி நதி! - வனபர்வம் பகுதி 130

Saraswati disappeared and became visible! | Vana Parva - Section 130 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சரஸ்வதி நதி, சமசோபேசம், பிரபாசம், விபாசம், காஷ்மீரம், மானசசரோவரம், வாதிகண்டம், உஜ்ஜனகம், கௌசவம், பிருகுதுங்கம், விதஸ்தம், ஜலா, உபஜலா நதிகள், ஆகிவற்றின் பெருமைகளை லோமசர் யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; உசீநரன் கதையைச் சொல்லத் துவங்குவது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் மகனே! மனிதர்கள் தங்கள் கடைசி மூச்சை இங்கே விடும்போது, அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}! ஆயிரமாயிரம் மனிதர்கள் இந்த இடத்திற்கு இறப்பதற்காக வருகின்றனர். தக்ஷன் இங்கே வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனால் {தக்ஷனால்}, "இந்த இடத்தில் இறக்கும் மனிதர்கள் சொர்க்கத்தில் ஒரு இடத்தை வெல்வார்கள் {பெறுவார்கள்}" என்ற ஒரு அருள்வாக்குச் சொல்லப்பட்டது. நீர் நிறைந்த, அழகான, புனிதமான நதியான சரஸ்வதி இங்கேதான் இருக்கிறது; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இங்கேதான் சரஸ்வதி மறைந்த விநசனம் என்ற இடம் இருக்கிறது. இங்கேதான் நிஷாதர்களின் நாட்டு வாயில் இருக்கிறது. அவர்கள் மீதுள்ள வெறுப்பால்தான் சரஸ்வதி, நிஷாதர்கள் தன்னைக் காணாதவாறு பூமிக்குள் நுழைந்தாள்.


சரஸ்வதி மீண்டும் அவர்களுக்குக் {நிஷாதர்களுக்கு} காட்சி தந்த சமசோபேசம் என்ற புனிதமான இடமும் இங்குதான் இருக்கிறது. இங்கேதான் அவள் {சரஸ்வதி} கடலை நோக்கி ஓடும் புனிதமான நதிகளுடன் இணைகிறாள். ஓ! எதிரிகளை வீழ்த்துபவனே {யுதிஷ்டிரா}, இங்கேதான் பெருமுனிவரான அகஸ்தியரை லோபமுத்திரை தனது தலைவனாக ஏற்றுக் கொண்ட புனிதமான இடமான சிந்து இருக்கிறது. ஓ! சூரியனைப் போன்று பிரகாசிப்பவனே {யுதிஷ்டிரா}, இந்திரனுக்குப் பிடித்தமானதும், அனைத்துப் பாவங்களையும் விலக்கவல்லதுமான பிரபாசம் எனும் புனிதத் தீர்த்தம் இங்கே தான் இருக்கிறது. இதோ இங்குதான் விஷ்ணுபதம் என்ற பகுதி இருக்கிறது.

இங்குதான் காண்பதற்கினிய புண்ணிய நதியான விபாசம் இருக்கிறது. இந்த ஓடையில்தான் {விபாசத்தில்தான்} தனது மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தின் காரணமாகப் பெருமுனிவரான வசிஷ்டர் தனது உறுப்புகளைக் கட்டிக் கொண்டு விழுந்தார். அவர் அந்நீரில் இருந்து கட்டுகளற்றவராக எழுந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தவசிகளால் அடிக்கடி தரிசிக்கப்படும் காஷ்மீரம் என்ற பகுதியை இதோ உனது தம்பிகளுடன் பார். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இங்கேதான் அக்னிக்கும் பெருமுனிவரான காசியபருக்கும், நகுஷனுக்கும், வடக்கு திசையின் தவசிகளுக்கு விவாதம் நடந்தது. ஓ! பெரும் இளவரசே {யுதிஷ்டிரா}, இதோ இங்கேதான் மானசசரோவரத்தின் வாசல் இருக்கிறது. இந்த மலையின் மத்தியில்தான், ராமர் {பரசுராமர்} ஒரு இடைவெளியைத் திறந்தார். ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்ட இளவரசே, இங்கேதான் நன்கறியப்பட்ட பகுதியான வாதிகண்டம் இருக்கிறது. இது விதேகத்திற்கு வடக்கில் இருக்கிறது. விதேகத்தின் வாயில் இதற்கு {வாதிகண்டத்திற்கு} அருகிலேயே இருக்கிறது.

ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடம் தொடர்பாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க செய்தி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், விரும்பும் உரு கொள்ளும் தெய்வமான சிவன், உமையுடனும் தன்னைத் தொடர்பவர்களுடனும் காணப்படுகிறான். இந்தத் தடாகத்தில்தான், தங்கள் குடும்பத்தின் நன்மையை விரும்பும் மக்கள், பிநாகபாணிக்கு {பிநாகம் என்ற வில்லைத் தாங்கிய சிவனுக்கு} சித்திரை மாதத்தில் வேள்விகள் நடத்துவர். அர்ப்பணிப்புமிக்க மனிதர்கள், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, இந்தத் தடாகத்தில் நீராடி, பாவங்களில் இருந்து விடுபட்டு, சந்தேகமர புனிதமான இடங்களை அடைகின்றனர். புனிதத்தவசியான வசிஷ்டரும் அவரது மனைவி அருந்ததியும், தவசியான யவக்கிரியும் மன அமைதி அடைந்த உஜ்ஜனகம் என்ற புண்ணியத் தீர்த்தம் இங்கேதான் இருக்கிறது. இங்கே இருக்கும் கௌசவம் என்ற தடாகத்தில் கௌசேசயம் {நூறு இதழ் கொண்ட தாமரை} என்ற பெயர்கொண்ட தாமரைகள் வளர்கின்றன. இங்கேதான் ருக்மிணியின் புனிதமான ஆசிரமம் இருக்கிறது. இங்கே தான் அவள் {ருக்மிணி} கோபம் என்ற தீய ஆர்வத்தை {குணத்தை} வென்று அமைதியை அடைந்தாள்.

ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}! பிருகுதுங்கத்தில் இருக்கும் தியானங்களின் மனிதனைப் பற்றி நீ ஏதாவது கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே ஒரு உயர்ந்த சிகரம் இருக்கிறது. ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அங்கேதான் மனிதர்களின் பாவங்களைக் கரைக்கும் புனிதமான ஓடையான விதஸ்தம் இருக்கிறது. அந்த ஓடை மிகுந்த குளுமையுடன் தெளிந்த நீரை உடையது. அது பெரும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓ இளவரசே {யுதிஷ்டிரா}, யமுனையின் இருமருங்கிலும் பாயும் ஜலா மற்றும் உபஜலா என்ற புனிதமான நதிகளைப் பார். இங்கே வேள்வி செய்ததன் மூலம் மன்னன் உசீநரன் {உசீநரனின் மகன் சிபி என்று நினைக்கிறேன்} இந்திரனின் பெருமைகளைக் கடந்தான். ஓ! பாரதக் குல வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, உசீநரனின் தகுதியைச் சோதிப்பதற்காகவும் அவனுக்கு வரங்களை அளிப்பதற்காகவும் இந்திரனும் அக்னியும் சேர்ந்து, அந்த வேள்விக்களதில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்திரன் பருந்தின் உருவத்தையும், அக்னி புறாவின் உருவத்தை எடுத்து அந்த மன்னனிடம் வந்தனர். பருந்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகப் புறா, பாதுகாப்பு கோரி அம்மன்னனின் தொடையில் அமர்ந்தது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, February 22, 2014

கடலைக் குடித்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 105

Agastya drank up the ocean! | Vana Parva - Section 105| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அகஸ்தியர் கடலைக் குடித்தது; தேவர்கள் காலகேயர்களை மிச்சமில்லாமல் கொன்றது; மறுபடி கடலை நிரைக்க அகஸ்தியரை தேவர்கள் வேண்டிக் கொண்டது; அது தன்னால் இயலாது என்று அகஸ்தியர் மறுத்ததும் அதற்கான வழிகளைக் குறித்துத் தேவர்கள் ஆலோசித்தது...


லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த அருளப்பட்ட புனிதரான வருணனின் மகன் {அகஸ்தியர்} கடலை அடைந்தவுடன் அங்கே கூடியிருந்த தேவர்களிடமும் தவசிகளிடமும், "நான் நிச்சயம் நீர்க்கடவுளின் வசிப்பிடமான இந்தக் கடலைக் குடிக்கப் போகிறேன். நீங்கள் உங்கள் மீது உறைந்துள்ள தயாரிப்புகளை விரைவாகச் செய்யுங்கள்" என்றார்.
இப்படிச் சொன்ன அந்த மித்ராவருண மைந்தன் {அகஸ்தியர்} முழுக் கோபத்துடன், அனைத்து உலகங்களும் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தக் கடலைக் குடிக்க ஆரம்பித்தார். பிறகு இந்திரனுடன் கூடிய தேவர்கள் கடல் குடிக்கப்படுவதைக் கண்டு வியந்து புகழ்ந்து பேசும் வார்த்தைகளால் அவரிடம், "நீரே எங்கள் காப்பாளரும், மனிதர்களைப் பராமரிப்பவரும், உலகங்களை உண்டாக்குபவராகவும் இருக்கிறீர். உமது உதவியால், தேவர்களுடன் கூடிய இந்த அண்ட ம் முழுநாசத்தில் இருந்து தப்பியது" என்று துதித்தனர்.

இப்படித் தெய்வீக கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துச் சூழ்ந்திருக்க தேவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தன்மை கொண்டவர் {அகஸ்தியர்}, தன் மீது தெய்வீக மலர் மாரி பொழிந்த போது அந்த அகன்ற கடலை நீரற்றதாக ஆக்கினார். அந்த அகன்ற கடல் நீரற்றதானதைக் கண்ட தேவர்ப்படை மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் விரும்பிய தெய்வீக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீரமிகுந்த இதயங்களுடன் அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} மேல் பாய்ந்தனர். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பெரும் கர்ஜனை செய்து கொண்டு பலமும் வேகமும் கொண்ட தேவர்களால் தாக்கப்பட்ட அவர்கள் {காலகேய அசுரர்கள்}, தேவ லோக வசிப்பாளர்களின் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் தலைப்பட்டனர்.

தேவர்களால் தாக்கப்பட்டு எருதுகள் போலச் சத்தமாக முக்காரமிட்ட {ம்ம்ம்ம்ம் என்ற ஒலியாக இருக்கலாம்} அந்தப் பேய்கள் {காலகேயர்கள்}, அந்தப் பயங்கரத் தாக்குதலை ஒரு கணம் {முகூர்த்தம்} தான் தாங்கினர். மனதை அடக்கி தங்களை முதிர்ச்சியடையச் செய்து கொண்ட முனிவர்களின் தவச் சக்தியால் முதலிலேயே எரிக்கப்பட்ட அந்த முயற்சியுடைய பேய்கள் தேவர்களால் அழிக்கப்பட்டனர். தங்கப் பதக்கங்களும், காதுகுண்டலங்களும், தோள்வளைகளையும் அணிந்திருந்த அந்தப் பேய்கள் கொல்லப்பட்டபோது கூடப் பூத்துக் குலுங்கும் பலாச மரத்தைப் போல அழகாக இருந்தனர்.

ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, காலகேய குலத்தில் பூமி தேவதையின் பிளவுகளில் பதுங்கி, பாதாளத்தைப் புகலிடமாகக் கொண்டிருந்த மீந்திருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் வித்தியாசமான பேச்சுகளால் அந்தப் பலம்வாய்ந்த புனிதரை {அகஸ்தியரை} இந்த வார்த்தைகளால் துதித்தனர், "ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அகஸ்தியரே}, உயிரினங்களைப் படைப்பவரே, உமது உதவியால் மனிதர்கள் பலம்வாய்ந்த அருளைப் பெற்றிருக்கின்றனர். இரக்கமற்ற பலம் கொண்ட காலகேயர்கள் உமது பலத்தாலேயே கொல்லப்பட்டனர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே (இப்போது) கடலை நிரப்பும். நீர் அருந்திய நீரை விட்டுவிடும்" என்றனர்.

இப்படிச் சொல்லப்பட்ட அருளும் பலமும் நிறைந்த தவசி {அகஸ்தியர்}, "உண்மையில் அந்த நீர் என்னால் செரிக்கப்பட்டது. ஆகையால், கடலை நிரப்ப நீங்கள் விரும்பினால் சூழ்நிலைக்கேற்ற வேறு வழிகள் உங்களால் எண்ணப்பட வேண்டும்" என்று சொன்னார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதிர்ந்த ஆன்மா கொண்ட அந்தப் புனிதரின் பேச்சைக் கேட்ட தேவர்கள் வியப்பாலும், சோகத்தாலும் தாக்கப்பட்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிறந்த பிறவிகளில் பெரும் புனிதரை வணங்கி, தாங்கள் வந்த வழியே திரும்பினர். பிறகு விஷ்ணுவுடன் கூடிய தேவர்கள் பிரம்மனிடம் வந்தனர். பிறகு கூப்பிய கரங்களுடைய அவர்கள் கடலை நிரப்பும் நோக்கத்துடன் திரும்பத் திரும்ப ஆலோசித்துப் பேசிக் கொண்டிருந்தனர். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 104

Agastya stopped the growth of Vindhya! | Vana Parva - Section 104| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சூரியனோடு போட்டியிட்டு உயர்ந்த விந்தியம்; விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர்; கடலைக் குடிக்க வேண்டும் என்று தேவர்கள் அகஸ்தியரை வேண்டுவது; அனைவரும் சேர்ந்து பெருங்கடலிடம் செல்லல்...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ பெரும் தவசியே, கோபத்தால் மதியிழந்த விந்தியன் {விந்திய மலை}, ஏன் திடீரெனத் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டான் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்"

அதற்கு லோமசர், "சூரியன், தனது உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தங்கமாக மின்னும் மலைகளின் ஏகாதிபதியான பெரும் மேருவை வலம் வந்தான். இதைக் கண்ட மலையான விந்தியன் சூரியனிடம், "நீ தினமும் மேருவைச் சுற்றி வலம் வந்து அவனை மதிக்கிறாய். ஓ ஒளியை உண்டாக்குபவனே, என்னையும் அதே போல் நீ வலம் வர வேண்டும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட சூரியன் அந்தப் பெரும் மலையிடம் {விந்தியனிடம்}, "நான் எனது சுய விருப்பத்தின் பேரில் இந்த மலையை வலம் வந்து மதிக்கவில்லை. இந்த அண்டத்தைக் கட்டியவர்களால் எனது பாதை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது" என்றான் {சூரியன்}.இதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.


தேவர்கள் {அகஸ்தியரிடம்}, "மலைகளின் மன்னனான இந்த விந்தியன் கோபம் கொண்டு சூரிய சந்திர பாதைகளையும், நட்சத்திரங்களின் வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {அகஸ்தியரே}, ஓ கொடைகளில் சிறந்தவரே, உம்மைத்தவிர வேறு யாராலும் அவனை {விந்தியனைத்} தடுக்க முடியாது. ஆகையால், அவனை அக்காரியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும்" என்று கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {அகஸ்தியர்}, அந்த {விந்திய} மலையிடம் சென்றார். அவர் தனது மனைவியுடன் {லோபமுத்ராவுடன்} அந்த இடத்திற்கு வந்து விந்தியன் அருகே சென்று, அவனிடம், :ஓ! மலைகளில் சிறந்தவனே {விந்தியனே}, "ஒரு காரியத்திற்காக நான் தென்னகம் செல்ல விரும்புகிறேன், ஆகையால் நீ எனக்கு ஒரு பாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், நான் திரும்பி வரும்வரை எனக்காக நீ காத்திருக்க வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு, ஓ மலைகளின் மன்னா, நீ உனது உருவத்தை உனக்கு விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்" என்றார். ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, கச்சிதமான இந்த ஒப்பந்தத்தை விந்தியனிடம் ஏற்படுத்திக் கொண்ட வருணனின் மகன் {அகஸ்தியர்) இதுநாள் வரை தென்னகத்தில் இருந்து திரும்பவில்லை. அகஸ்தியரின் சக்தியால் விந்தியன் மேலும் வளர முடியவில்லை என்ற இக்கதையை நீ கேட்டுக் கொண்டபடி சொல்லிவிட்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள் எப்படிக் காலகேயர்களைக் கொன்றார்கள் என்பதைக் கேள்.

தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா வருண மைந்தன் அகஸ்தியர், "எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், அந்தப் புனிதரிடம் {அகஸ்தியரிடம்}, "ஓ பெருமைவாய்ந்தவரே, பெருங்கடலைக் குடிக்கும் பெரும் சாதனையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், பிறகு தேவர்களுக்கு எதிரிகளான காலகேயர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் எங்களால் கொல்ல முடியும்" தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தவசி "அப்படியே ஆகட்டும், மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியவாறே செய்கிறேன்" என்றார்.

ஓ அற்புதமான வாழ்வு வாழ்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படிச் சொன்ன அவர் {அகஸ்தியர்}, தவப் பயிற்சியில் பழுத்த முனிவர்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து ஆறுகளின் தலைவனான கடலை நோக்கி சென்றார். மனிதர்கள், பாம்புகள், தெய்வீக கலைஞர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பெரும் தவசிகள் ஆகியோர் அந்த அற்புதமான நிகழ்வைக் காண விரும்பி அவரைத் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பரிதாபமாகக் கர்ஜித்துக் கொண்டும் அலைகளை அசைத்து ஆடிக் கொண்டும், தென்றல் நிறைந்தும், நுரை தள்ளிச் சிரித்தும், குகைகளின் அருகே நீரால் அடித்தும், வித்தியாசமான வகைகளான சுறாக்களாலும், அடிக்கடி வந்து போகும் பல்வேறு பறவைகளாலும் நிறைந்திருந்த அந்தப் பெரும் கடலின் அருகில் வந்தனர். அகஸ்தியர், தெய்வீகக் கலைஞர்கள், பெரும் பாம்புகள், பெரும் கொடைகள் கொண்ட தவசிகள் ஆகியோருடன் தேவர்கள் அந்த மகத்தான நீர்க்கழிவை {கடலை} அடைந்தனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


அகஸ்தியரைத் துதித்த தேவர்கள் - வனபர்வம் பகுதி 103

Gods glorified Agastya! | Vana Parva - Section 103| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

முனிவர்கள் எப்படி இறக்கின்றனர் என்பதைத் தேவர்களுக்கு விஷ்ணு சொல்லல்; கடலை வற்ற செய்ய அகஸ்தியரை அணுகும்படி விஷ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தல்; அகஸ்தியரிடம் சென்ற தேவர்கள் அவரைத் துதிபாடல்….

தேவர்கள் {விஷ்ணுவிடம்}, "உனது கருணையாலேயே நான்வகைப் பிறவிகளும் வளர்கின்றன. அப்படிப் படைக்கப்பட்டவர்கள், தேவர்களுக்கும், இறந்து போன தங்களது முப்பாட்டன்களுக்கும் காணிக்கைகள் {படையல்கள்} கொடுப்பதன் மூலம் சொர்க்கத்தில் வசிப்பவர்களைச் சாந்தப்படுத்துகின்றனர். உன்னால் காக்கப்பட்ட மக்கள், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து, பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வளர்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட பயம் மக்களைப் பாதிப்படைய வைக்கிறது. இரவு நேரங்களில் அந்தணர்கள் யாரால் எதற்காகக் கொல்லப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
அந்தணர்கள் அழிக்கப்பட்டால், இந்தப் பூமி அழிவைச் சந்திக்கும். இப்பூமிக்கு ஒரு முடிவு ஏற்பட்டால், சொர்க்கமும் அழியும். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே, ஓ அண்டத்தின் தலைவா, உன்னால் காக்கப்படும் உலகங்களுக்கு ஒரு முடிவு வரக்கூடாது என்று உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்" என்றனர் {தேவர்கள்}.

அதற்கு விஷ்ணு, "தேவர்களே! பிறந்த பிறவிகள் அழிவைச் சந்திக்கும் காரணத்தை நான்றிவேன். அது குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன். சலனமற்ற மனதுடன் நான் சொல்வதைக் கேளுங்கள். காலகேயர்கள் என்ற பெயரில் கடுமை நிறைந்த ஒரு படை இருக்கிறது. அவர்களே விருத்திரனின் தலைமையில் முழு அண்டத்தையும் பாழாக்கிக் கொண்டிருந்தனர். அறிவுநுட்பமும், ஆயிரம் கண்களும் கொண்ட இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைக் கொண்ட அவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வருணனின் உறைவிடமான கடலுக்குள் புகுந்தனர்.

சுறாக்களும், முதலைகளும் நிரம்பிய கடலுக்குள் இறங்கிய அவர்கள், இரவு வேளையில் வெளியே வந்து, தவசிகளைக் காணும் இடத்திலேயே கொன்று போடுகின்றனர். அவர்கள் கடலுக்குள் தஞ்சம் அடைந்திருப்பதால், அவர்களைக் கொல்ல இயலாது. ஆகையால், கடலை வற்ற செய்ய ஏதாவது ஒரு உபாயத்தை நீங்கள் கைக்கொள்ள வேண்டும். அகஸ்தியரை விட வேறு யாரால் கடலை வற்ற செய்ய முடியும். கடலை வற்ற செய்யாமல், வேறு வழிகளில் அவர்களைத் (அந்தப் பேய்களைத்) தாக்க முடியாது" என்றான் {விஷ்ணு}.

விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் பிரம்மனின் அனுமதியைப் பெற்று, பகுதிகளிலேயே சிறந்த பகுதியில் இருக்கும் அகஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவர்கள் வருணனின் மகனான உயரான்ம அகஸ்தியர் அங்கே பிரகாசித்துக் கொண்டிருப்பதையும், அவருக்காகப் பிரம்மனுக்காகக் காத்திருக்கும் தேவர்கள் போலப் தவசிகள் காத்து நிற்பதையும் கண்டனர். அவர்கள் மித்ரா வருண மைந்தனான அவரை {அகஸ்தியரை}அந்த ஆசிரமத்தில் அணுகி அவரது பெருமை நிறைந்த, நேரான சாதனைகளைச் சொல்லி துதித்தனர்.

அந்தத் தேவர்கள் {அகஸ்தியரிடம்}, "பழங்காலத்தில் நகுஷனால் {நஹுஷன்} ஒடுக்கப்பட்ட போது தேவர்களுக்கு நீரே புகலிடமாக இருந்தீர். உலகத்தின் முள்ளாக இருந்த அவன் தேவலோக அரியணையில் இருந்து தூக்கியெறியப்பட்டும் தேவலோகத்தில் இருந்து கீழே விழுந்தான். சூரியனிடம் கோபம் நிறைந்த போட்டியில் இருந்த மலைகளில் முதன்மையான விந்தியன் {விந்திய மலை} (சூரியனைவிட உயரம் பெற வேண்டும் என்று) திடீரெனத் தனது உயரத்தில் வளர்ந்து கொண்டிருந்தான். ஆனால் உமது உத்தரவை மீற முடியாததால் அவன் தனது வளர்ச்சியை நிறுத்தினான். உலகத்தை இருள் சூழ்ந்த போது, பிறந்த பிறவிகள் மரணத்தால் துன்புற்றன. ஆனால் உம்மைக் காப்பாளராகப் பெற்ற அவர்கள் போதுமான பாதுகாப்பை அடைந்தார்கள். நாங்கள் எப்போதெல்லாம் துயரத்திற்கு ஆட்படுகிறோமோ அப்போதெல்லாம் நீரே எங்களுக்கு மதிப்புக்குரிய புகலிடமாக இருந்திருக்கிறீர். அதன் காரணமாகவே நங்கள் உம்மிடம் ஒரு வரத்தைப் பெற வந்திருக்கிறோம். நீர் எப்போதும் நாங்கள் கேட்கும் வரங்களை அருளியிருக்கிறீர்" என்றனர் {தேவர்கள்}" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, February 16, 2014

வாதாபியைச் செரித்த அகஸ்தியர்! - வனபர்வம் பகுதி 99அ

Agastya digested Vatapi! | Vana Parva - Section 99a| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியருக்கு வாதாபியின் இறைச்சியை இல்வலன் படைப்பது; வாதாபியை உண்ட அகஸ்தியர் அவனைச் செரித்தது; அகஸ்தியருக்கும், மூன்று மன்னர்களுக்கும் இல்வலன் செல்வங்களைக் கொடுத்து அனுப்பியது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த மன்னர்களும், பெரும் முனிவரும் {அகஸ்தியரும்} அவனது ஆட்சிப் பகுதிக்குள் வந்ததை அறிந்து இல்வலன் தனது அமைச்சர்களுடன் சென்று அவர்களை முறைப்படி வழிபட்டான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} அந்த அசுரர்களின் இளவரசன் {இல்வலன்} அவர்களை விருந்தோம்பலுடன் வரவேற்று உற்சாகப்படுத்தி, (ஆடாக மாறிய) தனது தம்பியின் {வாதாபியின்} சுத்திகரிக்கப்பட்ட இறைச்சியைக் கொடுத்தான். பெரும் பலம் வாய்ந்த அசுரனான வாதாபி ஆட்டிறைச்சியாகி சமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அரச முனிகள் துயரமடைந்து உற்சாகமிழந்து, தங்களை இழந்தனர். ஆனால் முனிவர்களில் சிறந்த அகஸ்தியர் அந்த அரச முனிகளிடம், "வருத்தத்தை வளர்க்காதீர்கள். நான் அந்தப் பெரும் அசுரனை உண்பேன்" என்றார்.


பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த முனிவர் {அகஸ்தியர்} அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். அசுரர்களின் இளவரசனான இல்வலன் உணவைப் புன்னகையுடன் பரிமாறினான். அகஸ்தியர் (ஆடாக மாறிய) வாதாபியின் அந்த முழு இறைச்சியையும் உண்டார். இரவு உணவு முடிந்ததும் இல்வலன் தனது தம்பியை அழைத்தான். ஆனால், ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த முனிவரின் வயிற்றில் இருந்து ஓரளவு காற்று மட்டுமே மேகத்தின் கர்ஜனையைப் போன்ற உரத்த சத்தத்துடன் வெளி வந்தது. இல்வலன் திரும்பத் திரும்ப "ஓ! வாதாபியே, வெளியே வா" என்று சொன்னான். பிறகு முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியர் வெடித்துச் சிரித்து, "அவனால் எப்படி வெளிவர முடியும்? நான் ஏற்கனவே அந்தப் பெரும் அசுரனைச் செரித்து விட்டேன்" என்றார்.

தனது தம்பி செரிக்கப்பட்டதைக் கண்ட இல்வலன் துயரமடைந்து, உற்சாகமிழந்து, தனது அமைச்சர்களுடன் கரங்கள் கூப்பி அந்த முனிவரிடம், "நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். புன்னகையுடன் அகஸ்தியர் இல்வலனிடம், "ஓ! அசுரா, நீ பெரும் பலசாலி என்றும், அபரிமிதமான செல்வம் படைத்தவன் என்றும் நாங்கள் அறிவோம். இந்த மன்னர்கள் அவ்வளவு செழிப்பாக இல்லை. எனக்கும் செல்வத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு" என்றார். இப்படிக் கேட்கப்பட்ட இல்வலன் முனிவரை வணங்கி, "நான் கொடுக்க எண்ணியிருப்பதை நீர் சொன்னால், பிறகு நான் உமக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்" என்றான்.

இதைக் கேட்ட அகஸ்தியர், "ஓ! பெரும் அசுரா, நீ இம்மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பசுக்களையும், பல பொற்காசுகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். எனக்கு அதைவிட இரு மடங்கையும், ஒரு தங்கத் தேரையும், நினைவைப் போல வேகமாகச் செல்லும் இரு குதிரைகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். நீ இப்போது விசாரித்தாயானால், உனது தேர் தங்கத்தாலானது என்பதை அறிவாய்" என்றார். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு இல்வலன் சில விசாரணைகளைச் செய்து, தான் கொடுக்க எண்ணிய தேர் தங்கத்தாலானதே என்பதை உறுதி செய்தான். பிறகு அந்தத் தைத்தியன் இதயத்தில் சோகத்துடன், நிறைந்த செல்வத்தையும், அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த விரவா, சுரவா என்ற இரு புரவிகளையும் {குதிரைகளையும்} கொடுத்தான். ஓ !பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புரவிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மன்னர்களையும் அகஸ்தியரையும் அனைத்துச் செல்வங்களுடன் அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றன. பிறகு அந்த அரச முனிகள் அகத்தியரிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த நகரங்களுக்குத் திரும்பினர்.

அகஸ்தியர் (அந்தச் செல்வத்தை வைத்து) தனது மனைவி லோபாமுத்திரை விரும்பிய அனைத்தையும் செய்தார். பிறகு லோபாமுத்திரை, "ஓ! சிறப்புமிக்கவரே, நீர் எனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டீர். நீர் என்னிடம் பெரும் சக்திபடைத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்" என்றாள். அதற்கு அகஸ்தியர், "ஓ! அருளப்பட்ட அழகானவளே, உனது நடத்தையால் நான் மிகவும் திருப்தி கொண்டேன். உனது வாரிசைக் குறித்து நான் சொல்லப்போவதைக் கேள். நீ ஆயிரம் மகன்களை விரும்புகிறாயா? அல்லது பத்து மகன்ளுக்குச் சமமான நூறு மகன்களை விரும்புகிறாயா? அல்லது நூறு மகன்களுக்குச் சமமான பத்து மகன்களை விரும்புகிறாயா? அல்லது ஆயிரம் பேரை வீழ்த்தும் ஒரு மகனை விரும்புகிறாயா?" என்று கேட்டார். அதற்கு லோபாமுத்திரை, "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே ஆயிரம் பேருக்குச் சமமான ஒரு பிள்ளை பெற என்னை அனுமதியும். பல தீயவர்களைவிட ஒரு நல்ல கற்ற மகனே விரும்பத்தகுந்தவன்" என்றாள்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்தப் பக்திமானான முனிவர் தனக்குச் சமமான நடத்தையும், தனக்கு அர்ப்பணிப்புள்ளவளுமான தனது மனைவியை அறிந்தார். அவள் கருவுற்றதும், அவர் கானகத்திற்குச் சென்றார். அந்த முனிவர் சென்றதும், அந்தக்கரு ஏழு வருடங்களாக வளர ஆரம்பித்தது. ஏழாம் ஆண்டு முடிந்ததும், பெரும் கல்வி கற்றவரான திரிதஸ்யு தன்னொளிப் பிரகாசத்துடன் கருவறையில் இருந்து வெளியே வந்தார். அந்தப் பெரும் அந்தணர், பெரும் சக்தி கொண்ட சிறப்புமிக்கத் துறவி ஒரு முனிவரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்து, கருவறையில் இருந்து வெளியே வந்ததும் வேதங்களையும், உபநிஷத்துகளையும், அங்கங்களையும் உரைக்க ஆரம்பித்தார். குழந்தையாக இருக்கும்போதே பெரும் சக்தி பெற்ற அவர் வேள்விக்கான எரிபொருளைத் தனது தந்தையின் ஆசிரமத்திற்குச் சுமந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் இத்மவாஹன் (வேள்வி விறகைச் சும்பபவர்) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தனது மகனை இத்தகு அறங்களுடன் கண்ட முனிவர் {அகஸ்தியர்} பெரிதும் மகிழ்ந்தார்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படியே அகஸ்தியர் தனது மூதாதையர்கள் நிமித்தமாக அற்புதமான மகனைப் பெற்றெடுத்து அவர்கள் {மூதாதையர்கள்} விரும்பிய அற்புதமான உலகங்களை அடைய வைத்தார். அந்தக் காலத்தில் இருந்தே இந்த இடம் அகஸ்தியரின் ஆசிரமமாக அறியப்படுகிறது. ஓ! மன்னா, உண்மையில் இது பிரஹ்ரதக் குலத்தைச் சார்ந்த வாதாபியைக் கொன்ற அகஸ்தியரின் பல அழகுகளைக் கொண்ட அருளப்பட்ட ஆசிரமமே.

தேவர்களாலும் கந்தர்வர்களாலும் வழிபடப்படும் இந்தப் புனிதமான பாகீரதி நதி, ஆகாயத்தில் காற்றால் ஆட்டம்போடும் நீண்ட முக்கோண வடிவக் கொடியைப் போல விரைவாக ஓடுகிறது. அங்கே பாறைகள் நிறைந்த மலை உச்சிகளில் ஓடி, கீழ்நோக்கி இறங்கி, பயந்த பெண்பாம்பு போல மலைகளின் இறக்கத்தில் ஓடி, மகாதேவனின் சடாமுடியில் இருந்து வெளியேறும் அவள், தென்னாட்டிற்குள் பிரவாகமாக ஓடி, தாயைப் போல நன்மை செய்து, விருப்பமான மனைவியைப் போலக் கடலுக்கு விரைந்தோடி அதனுடன் கலக்கிறாள். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விரும்பிவாறு அந்தப் புனித நதியில் நீராடு. ஓ! யுதிஷ்டிரா, அங்கே முனிவர்களால் வழிபடப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் பிருகு தீர்த்தத்தைப் பார். அங்கே நீராடிய (பிருகு குல) ராமன் {பரசுராமன்} (தசரதனின் மகனான) ராமனால் இழந்த சக்தியை மீண்டும் பெற்றான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இங்கே உனது தம்பிகளுடனும் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடனும்} நீராடினால், தசரதனின் மகனுடன் பகை கொண்ட நடந்த போரில் ராமனின் {பரசுராமனின்} சக்தி இழந்து போய் மீண்டும் இங்கே அடைந்ததைப் போலத் துரியோதனனால் எடுக்கப்பட்ட உனது சக்தியை நீ மீண்டும் அடைவாய்." என்றார் {லோமசர்}.இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


அகஸ்தியர் லோபாமுத்திரை திருமணம்! - வனபர்வம் பகுதி 97

The Marriage of Lopamudra with Agastya! | Vana Parva - Section 97| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விதரப்ப்ப நாட்டரசன் லோபாமுத்திரையை அகஸ்தியருக்கு அளித்தது; அகஸ்தியர் லோபாமுத்திரையை விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடச் சொன்னது; பருவ காலத்தில் மனைவியை அணுகிய அகஸ்தியரிடம் விலையுயர்ந்த படுக்கை கோரிய லோபாமுத்திரை...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்தப் பெண் {லோபாமுத்திரை} குடும்பக் கடமைகளை ஆற்றத் தகுந்த பருவத்தை அடைந்துவிட்டாள் என்று அகஸ்தியர் கருதியபோது, அவர் பூமியின் தலைவனான விதரப்ப்ப ஆட்சியாளனிடம் சென்று அவனிடம், "ஓ! மன்னா, உனது மகளான லோபாமுத்திரையை எனக்கு அளிக்குமாறு கோருகிறேன்" என்றார். இப்படி அந்த முனிவரால் சொல்லப்பட்ட விதரப்ப்ப நாட்டு மன்னன் நினைவிழந்தான். அவனது மகளை அந்த முனிவருக்கு {அகஸ்தியருக்கு) கொடுக்க விருப்பமில்லையென்றாலும், மறுப்பதற்கு அவன் துணியவில்லை. பிறகு அந்தப் பூமியின் தலைவன் தனது ராணியிடம் சென்று, "இந்த முனிவர் {அகஸ்தியர்} பெரும் சக்தியுள்ளவராக இருக்கிறார். அவர் கோபப்பட்டால், அவரது சாபமெனும் நெருப்பால் என்னை உட்கொண்டுவிடுவார். ஓ! இனிய முகம் கொண்டவளே, உனது விருப்பம் என்னவென்று என்னிடம் சொல்" என்றான்.


மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவள் எவ்வார்த்தையையும் சொல்லவில்லை. துன்பத்துடன் ராணியுடன் இருக்கும் மன்னனைக் கண்ட லோபாமுத்திரை அவர்களைக் குறித்த நேரத்தில் அணுகி, "ஓ! ஏகாதிபதி, என்னைக் குறித்து நீர் வருத்தப்படலாகாது. ஓ! தந்தையே, என்னை அகஸ்தியருக்கு அளியும். அப்படி என்னை அளிப்பதால் உம்மைக் காத்துக் கொள்ளும்" என்றாள். தனது மகளின் இவ்வார்த்தைகளினால், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {விதரப்ப்ப மன்னன்}, லோபாமுத்திரையைச் சிறப்புமிக்க அகஸ்தியருக்கு உரிய சடங்குகளுடன் கொடுத்தான்.

அவளை மனைவியாக அடைந்த அகஸ்தியர் லோபாமுத்திரையிடம், "இந்த விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடு" என்றார். தனது தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட பெரிய கண்களையும், வாழைத்தண்டு போலச் சிறுத்துச் செல்லும் தொடைகளையும் கொண்ட அந்த மங்கை தனது அழகான விலையுயர்ந்த நுண்ணிய அமைப்புக் கொண்ட ஆடைகளைக் கைவிட்டாள். அவற்றைக் கைவிட்டு, கந்தலும் மரவுரியும், மான் தோலும் உடுத்தி நோன்பிலும் செயலிலும் தனது கணவனுக்கு இணையானவளாக ஆனாள். பிறகு கங்காத்துவாரத்தை {கங்கோத்ரியை} அடைந்த முனிவர்களில் சிறந்த ஒப்பற்றவர் {அகஸ்தியர்}, உதவிகரமாக இருந்த தனது மனைவியின் துணையுடன் கடும் தவம் இருந்தார். மிகவும் திருப்தியடைந்த லோபாமுத்திரையும், தனது கணவன் {அகஸ்தியர்} மீதிருந்து பெரும் மரியாதையால் அவருக்குச் சேவை செய்யத் தொடங்கினாள். மேன்மைமிக்க அகஸ்தியரும் தனது மனைவி மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கணிசமாகக் காலம் கடந்ததும், ஒரு நாள் அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்}, பருவகாலத்தில் நீராடி தவப் பிரகாசத்துடன் ஒளிர்ந்த லோபாமுத்திரையைக் கண்டார். அந்தப் பெண்ணின் சேவைகளையும், சுத்தத்தையும், சுயக்கட்டுப்பாட்டையும், அருளையும், அழகையும் கண்டு மிகவும் திருப்தி கொண்ட அவர் அவளை மண உறவு கொள்ள அழைத்தார். இருப்பினும் அந்தப் பெண் {லோபாமுத்திரை}, தனது கரங்களைக் கூப்பி, நாணத்துடனும் அன்புடனும், "ஒரு கணவன், சந்தேகமற வாரிசுக்காகவே ஒரு மனைவியை மணக்கிறான். ஆனால் ஓ! முனிவரே, நான் உம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல, நீர் என் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதே உமக்குத் தகும். ஓ மறுபிறப்பாளரே {அந்தணரே}, எனது தந்தையின் அரண்மனையில் நான் வைத்திருந்ததைப் போன்ற படுக்கையில் நீர் என்னை அணுகுவதே உமக்குத் தகும். நீர் மலர்மாலை மற்றும் பிற ஆபரணங்களின் அலங்காரத்துடனும் இருக்க வேண்டும் என்றும், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு கொண்டு நான் உம்மை அணுக வேண்டும் என்றும் விரும்புகிறேன். இல்லையெனில், சிவப்புக்கறைகூடிய இந்தக் கந்தலுடையுடன் நான் உம்மை அணுக முடியாது. ஓ மறுபிறப்பாள முனிவரே, (அத்தகு சமயத்தில்) ஆபரணங்கள் பூணுவது பாவமுமாகாது" என்றாள்.

தனது மனைவியின் {லோபமுத்திரையின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அகஸ்தியர் "ஓ! அருளப்பட்டவளே, ஓ! கொடியிடையாளே, ஓ! லோபாமுத்திரையே, உனது தந்தையிடம் இருப்பது போல என்னிடம் செல்வம் இல்லை" என்றார். அதற்கு அவள், "தவத்தைச் செல்வமாகக் கொண்ட நீர், உமது தவச் சக்தியால், மனிதர்களின் உலகில் கிடைக்கும் அத்தனையையும் நிச்சயம் ஒருக்கணத்தில் கொண்டவரக்கூடியவர்" என்றாள். அகஸ்தியர், "நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இருப்பினும் அஃது எனது தவப்பலனை வீணடித்துவிடும். எனது தவப்பலன்கள் தளராத வகையிலுள்ள காரியத்தை எனக்குச் சொல்" என்றார். பிறகு லோபாமுத்திரை, "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எனது பருவ காலம் நீண்ட காலத்திற்கு நிலைக்காது. இருப்பினும், மற்றபடி {நான் கோரியது இல்லாமல்} நான் உம்மை அணுக விரும்பவில்லை. உமது (தவப்) பலன்களையும் எவ்வகையிலும் அழிக்க நான் விரும்பவில்லை. இருப்பினும், உமது அறத்திற்குப் பழுதேற்படாமல் நான் விரும்பியதைச் செய்வதே உமக்குத் தகும்" என்றாள்.

பிறகு அகஸ்தியர், "ஓ! அருளப்பட்டவளே {லோபமுத்திரையே}, இதுவே நீ உன் இதயத்தில் தீர்மானித்திருக்கும் உறுதியென்றால், நான் செல்வத்தைத் தேடி வெளியே செல்வேன். அதுவரை, நீ இவ்விடத்தில் உனது விருப்பப்படி இருந்துகொள்" என்றார்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


லோபாமுத்திரையை உருவாக்கிய அகஸ்தியர்! - வனபர்வம் பகுதி 96

Agastya created Lopamudra! | Vana Parva - Section 96| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

இல்வலன், வாதாபி அறிமுகம்; அகஸ்தியர் தனது மூதாதையர்கள் குழிக்குள் தொங்குவதைக் காண்பது; அகஸ்தியர் லோபாமுத்திரையை உருவாக்கி விதரப்ப்ப மன்னனுக்குக் கொடுப்பது; லோபாமுத்திரை விதரப்ப்ப அரச பரம்பரையில் பிறப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன் பிறகு, அந்தணர்களுக்குப் பெரும் பரிசுகளைக் கொடுத்து எப்போதும் தனித்துத் தெரியும் குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்து, துர்ஜயத்தில் {வாதாபியின் மணிமதி நகரம்} வசித்தான். இங்கேதான், பேசுபவர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், லோமசரிடம், அகஸ்தியர் வாதாபியை ஏன் கொன்றார் என்று கேட்டான். மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களை அழிக்கும் தைத்திய {வாதாபி} பராக்கிரமத்தையும், அந்த அசுரன் {வாதாபி} மீது அகஸ்தியருக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணத்தையும் கேட்டான்.

இப்படிக் கேட்கப்பட்ட லோமசர், "ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மணிமதி என்று ஒரு நகரம் இருந்தது. அந்நகரத்தில் இல்வலன் என்ற ஒரு தைத்தியன் {அசுரன்} இருந்தான். அவனுக்கு வாதாபி என்ற ஒரு தம்பி இருந்தான். ஒரு நாள் அந்தத் திதியின் மகன் {இல்வலன்}, தவப்பலன் மிக்க ஓர் அந்தணனிடம் "ஓ புனிதமானவரே, எனக்கு இந்திரனுக்கு நிகரான மகனை அருளும்" என்று கேட்டான். இருப்பினும், அந்த அந்தணன் அவ்வசுரனுக்கு இந்திரனைப் போன்ற மகனை அருளவில்லை. இதனால் அவ்வசுரன் அந்தணன் மீது பெரும் கோபம் கொண்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்நாளில் இருந்து, அசுரன் இல்வலன் அந்தணர்களை அழிப்பவனானான். மாயச்சக்தி கொண்ட கோபம் நிறைந்த அவ்வசுரன் {இல்வலன்}, தனது தம்பியை செம்மறி ஆட்டுக்கடாவாக மாற்றினான். நினைத்த உரு அடையக்கூடிய வாதாபியும் உடனடியாக ஆட்டுக்கடாவின் உருவத்தை அடைந்தான். சரியாகச் சுத்தம் செய்யப்பட்ட அந்த ஆட்டின் இறைச்சி அந்தணர்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. அதை உண்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்டனர். இல்வலன், தனது குரலால் யாரொருவனைக் கட்டளையிட்டு அழைத்தாலும், அவன் யமனின் வசிப்பிடத்தில் இருந்தாலும், மீண்டும் உயிருடன் கூடிய தனது உடலை அடைந்து இல்வலனிடம் வந்து விடுவான்.

இப்படிச் செம்மறி ஆட்டுக்கடாவாக அசுரன் வாதாபியை மாற்றி, அவனது இறைச்சியை முறைப்படி சமைத்து, அந்தணர்களுக்கு ஊட்டிய பிறகு, அவன் வாதாபியை கட்டளையிட்டு அழைப்பான் {இல்வலன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பூமியின் தலைவா, அந்தணர்களின் எதிரியான பெரிய உருவமும், பெரும் பலமும், மாயச்சக்தியும் கொண்ட அசுரன் வாதாபி, இல்வனின் உரத்தக் குரலைக் கேட்டு, {தனது இறைச்சியை உண்ட} அந்த அந்தணனின் விலாவைக் கிழித்துத் திறந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படியாக அந்தத் தீய இதயம் கொண்ட தைத்தியன் இல்வலன், அந்தணர்களுக்கு உணவு படைத்து, தொடர்ச்சியாக அவர்களது உயிரை எடுத்து வந்தான்.

அதேவேளையில், சிறப்புமிக்க அகஸ்தியர், இறந்து போன தனது மூதாதையர்கள், தலைகீழாக ஒரு குழிக்குள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்தவர்களிடம் அவர், "உங்களது காரியம் என்ன?" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மனை உச்சரிப்பவர்கள் {மூதாதையர்கள்}, "வாரிசுக்காக" என்றனர். மேலும் அவர்கள், "நாங்கள் உனது மூதாதையர்கள். வாரிசுக்காகவே நாங்கள் இப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ! அகஸ்தியா, நீ எங்களுக்காக ஒரு நல்ல மகனைப் பெற்றால், நாங்கள் இந்த நரகத்தில் இருந்து காக்கப்படுவோம். நீயும் அந்த வாரிசினால் உனது உன்னத நிலையை அடையலாம்" என்றர்.

பெரும் சக்தியும், உண்மையும், அறநெறியும் கொண்ட அகஸ்தியர், "பித்ருக்களே, நான் உங்கள் விருப்பதை நிறைவேற்றுவேன். இந்தத் துயரம் உங்களை விட்டு அகலட்டும்" என்றார். பிறகு அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்} தனது குலத்தைத் தழைக்க வைப்பது குறித்துச் சிந்தித்தார். ஆனால் தானே தனது மகனாகப் பிறக்க, தனக்குத் தகுதியான மனைவியை அவர் காணவில்லை. ஆகையால் அந்த முனிவர் {அகஸ்தியர்}, ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் மிக அழகான அங்கங்களை எடுத்து ஓர் அற்புதமான பெண்ணைப் படைத்தார். பிறகு அந்த முனிவர், வாரிசுக்காகத் தவநோன்புகளில் இருந்த விதரப்ப்ப நாட்டு மன்னனிடம் தனக்காகப் படைத்த அந்தப் பெண்ணைக் கொடுத்தார்.

(இப்படிக் கொடுக்கப்பட்ட) இனிமையான முகம் கொண்ட அந்த அருளப்பட்ட மங்கை (விதரப்ப்ப அரச பரம்பரையில்) தனது பிறப்பை அடைந்தாள். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் அவளது அங்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தன. ஓ பூமியின் தலைவா, விதரப்ப்பத்தின் ஆட்சியாளனான அந்தப் பூமியின் தலைவனின் வாழ்வில் அவள் நுழைந்தவுடன், அவன் {விதரப்ப்ப அரசன்} இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் அந்தணர்களுக்குச் சொல்லி அனுப்பினான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களும் அந்த அருளப்பட்ட பெண்ணுக்கு லோபாமுத்திரை (லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள்} என்ற பெயரை அளித்தனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீருக்கு மத்தியில் இருக்கும் தாமரை போல அல்லது நெருப்பில் இருக்கும் சுடரைப் போல அவள் பெரும் அழகுடன் விரைவாக வளர்ந்தாள்.

அந்தப் பெண் {லோபமுத்திரை} வளர்ந்து, பருவமடைந்தவுடன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு கன்னிகளும், நூறு பணிப்பெண்களும் அவளுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யக் காத்திருந்தனர். அந்த நூறு பணிப்பெண்கள் மற்றும் கன்னியர்களால் சூழப்பட்ட அவள், பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் ரோகிணியைப் போலப் பிரகாசித்தாள். அவள் {லோபமுத்திரை} பருவம் அடைந்த பின்னரும், அவளது நன்னடத்தைகளையும், அற்புதமான குணங்களையும் கண்ட எவரும், அவளது தந்தையான விதரப்ப்ப மன்னனின் மீதிருந்த பயத்தால், அவளது கரத்தைக் கேட்கத் துணியவில்லை. உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த லோபாமுத்திரை, அழகில் அப்சரசுகளையும் விஞ்சி, தனது நடத்தையால், தன் தந்தையையும், தனது உறவினர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். விதரப்ப்ப இளவரசியான தனது மகள் பருவமடைந்ததைக் கண்ட தந்தை {விதரப்ப்ப மன்னன்}, தனது மனதிற்குள், "இந்த எனது மகளை நான் யாருக்குக் கொடுக்க வேண்டும்?" என்று நினைத்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top