Indrajit caused Rama to fall! | Vana Parva - Section 286 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
தன் மகன் இந்திரஜித்தை ராவணன் போருக்கு அனுப்பியது; இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையில் நடந்த போர்; அங்கதன் அவர்களுக்கிடையே குறுக்கிட்டது; அங்கதனைக் கொல்ல இருந்த இந்திரஜித்தை லட்சுமணன் தடுத்தது; அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்வது; மாயசக்திகளைப் பயன்படுத்தி இந்திரஜித் மறைந்திருந்து போர் தொடுப்பது; இதைக் கண்ட ராமன் தனது படையைக் காக்க அங்கே விரைவது; மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித் ராமனையும் லட்சுமணனையும் தரையில் விழச்செய்தது ...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ !எதிரிகளை அடிப்பவனே! உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன்? ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ! மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக" என்றான் {ராவணன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.

