Goloka for Surabhi! | Anusasana-Parva-Section-83 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)
பதிவின் சுருக்கம் : சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் கொடுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்...
பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)
