The friendship begot by Rama and Sita! | Vana Parva - Section 278 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
சுக்ரீவனோடு நட்பு கொண்ட ராமன் வாலியைக் கொன்றது; கிஷ்கிந்தையில் ராமன் நான்கு மாதங்கள் இருந்தது; அசோகவனத்தில் ராட்சசிகள் பாதுகாப்புடன் சீதையை வைத்த ராவணன்; திரிஜடை சீதையைத் தோழி என்று அழைத்தது; அவிந்தியன் சொன்னது; சீதைக்குத் திரிஜடை நம்பிக்கையூட்டியது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சீதை கடத்தப்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராமன், பல்வேறு வகையான தாமரைகள் நிறைந்திருந்த பம்பை என்ற தடாகத்தை வெகு தூரம் செல்வதற்கு முன்னரே அடைந்தான். காட்டிலிருந்து வீசிய இனிய, நறுமணமிக்க, குளிர்ந்த காற்றால், திடீரென ராமன் தனது அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைவுகூர்ந்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, தன் அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைத்துப் பார்த்த அவன் {ராமன்}, அவளது பிரிவின் நினைவால் மிகவும் துன்பப்பட்டுப் புலம்பி அழுதான். பிறகு சுமித்திரையின் மகன் {லட்சுமணன்} அவனிடம் {ராமனிடம்}, “ஓ! தகுந்தவர்களுக்கு முறையான மரியாதையளிப்பவரே, முறையான வாழ்வு வாழும் முதிர்ந்த மனிதனை நோய் அண்டுவதில்லை. எனவே, இது போன்ற {நோய் போன்ற} மனத்தளர்ச்சி உம்மை அண்டுவதற்கு விடாதீர். ராவணன் குறித்தும், விதேக இளவரசி {வைதேகி, சீதை} குறித்தும் நீர் தகவலைப் பெற்றீர்! இனி உமது முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் அவளை விடுவியும்! இப்போது, நாம் மலையின் மேல் இருக்கும் குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனை அணுகலாம்! உமது சீடனும், அடிமையும், கூட்டாளியுமான நான் உம் அருகில் இருக்கிறேன் {என்பதை மறவாதீர்}. எனவே உம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும்" என்றான் {லட்சுமணன்}.