Showing posts with label சுபத்திரை. Show all posts
Showing posts with label சுபத்திரை. Show all posts

Tuesday, June 14, 2016

சுபத்திரையின் புலம்பல்! - துரோண பர்வம் பகுதி – 078

The lament of Subhadra! | Drona-Parva-Section-078 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் புலம்பத் தொடங்கிய சுபத்திரை; சுபத்திரை, திரௌபதி, உத்தரை ஆகியோர் அழுது புலம்பி மயங்கி விழுந்தது; நீர் தெளித்து அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்த கிருஷ்ணன் மீண்டும் அர்ஜுனனிடம் வந்தது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரை, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினாள்: “ஓ! பேறற்றவளான என் மகனே, ஓ! உன் தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} இணையான ஆற்றல் கொண்டவனே, ஓ! குழந்தாய் {அபிமன்யு}, போருக்குச் சென்ற நீ எவ்வாறு அழிந்தாய்? ஓ! குழந்தாய் {அபிமன்யு}, அழகான பற்கள் மற்றும் சிறந்த கண்களால் அருளப்பட்டதும், நீலத் தாமரைக்கு {கருநெய்தலுக்கு} [1] ஒப்பானதுமான உன் முகம், ஐயோ, போர்க்களத்தின் புழுதியால் மறைக்கப்பட்டு இப்போது எவ்வாறு காணப்படும்?


[1] அபிமன்யுவும் கரிய நிறம் கொண்டவனாக இருந்திருக்கலாம். வேறொரு பதிப்பில் இவ்வரி, "கருநெய்தல் போலக் கறுப்பு நிறமுள்ள அழகான முகம்” என்று இருக்கிறது.

ஐயமில்லாத துணிவுடன் புறமுதுகிடாத உன்னை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தலை, கழுத்து, கரங்கள், மார்பு, அடிவயிறு மற்றும் அங்கங்களுடன் களத்தில் விழுந்த உன்னை, அழகிய கண்களைக் கொண்ட உன்னை, ஆயுதக் காயங்களுடன் சிதைந்து போயிருக்கும் உன்னை உதிக்கும் சந்திரனைப் போலவே அனைத்து உயிரினங்களும் காண்கின்றன. ஐயோ, விலையுயர்ந்த மிக வெண்மையான படுக்கையில் கிடப்பவனான நீ, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவனான நீ, ஐயோ, கணைகளால் துளைக்கப்பட்ட உன் உடலுடன் வெறும் பூமியில் {தரையில்} எவ்வாறு இன்று உறங்குகிறாய்?

முன்னர், அழகிகளில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {அபிமன்யு}, ஐயோ, போர்க்களத்தில் விழுந்து, நரிகளின் துணையுடன் தன் காலத்தை எவ்வாறு கழிக்கிறான்? முன்னர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோரால் பாடிப் புகழப்பட்டவன், ஐயோ, கோரமாக ஊளையிடும் ஊனுண்ணும் விலங்குகளால் இன்று வரவேற்கப்படுவானே. ஓ! தலைவா {அபிமன்யு}, பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் உன் பாதுகாவலர்களாகக் கொண்டும், ஐயோ, ஆதரவற்ற நிலையில் நீ யாரால் கொல்லப்பட்டாய்?

ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே {அபிமன்யு}, உன்னைக் கண்டு நான் இன்னும் நிறைவு கொள்ளவில்லையே. பேறற்றவளான நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்வேன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பெரிய கண்கள் மற்றும் அழகிய குழல்களைக் கொண்டதும், இனிய வார்த்தைகள், களிப்புமிக்க நறுமணம் ஆகியவற்றை வெளியிடுவதுமான பருக்களற்ற உன் மிருதுவான முகத்தை என் கண்களால் மீண்டும் எப்போது நான் காணப் போகிறேன்? பீமசேனரின் பலத்திற்கும், பார்த்தரின் {அர்ஜுனரின்} வில்வித்தகத்திற்கும், விருஷ்ணி வீரர்களின் ஆற்றலுக்கும், பாஞ்சாலர்களின் பலத்திற்கும் ஜயோ {இஃது இழிவே}! ஓ! வீரா {அபிமன்யு}, போரில் ஈடுபடுகையில் உன்னைப் பாதுகாக்க இயலாத கைகேயர்கள், சேதிகள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும் ஐயோ {இஃது இழிவே}!

நான் இந்தப் பூமியை வெறுமையானதாகவும், உற்சாகமற்றதாகவும் இன்று காண்கிறேன். என் அபிமன்யுவைக் காணாது என் கண்கள் துயரால் அல்லலுறுகின்றன. நீ வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரையின்} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனும், வீரனும், அதிரதனும் ஆவாய். ஐயோ, கொல்லப்பட்ட உன்னை நான் எவ்வாறு காண்பேன்? ஐயோ ஓ! வீரா {அபிமன்யு}, கனவில் காணப்பட்ட பொக்கிஷமாகத் தோன்றி மறைந்தாயே. மனிதரைச் சேர்ந்த அனைத்தும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றனவே.

உனக்கு நேர்ந்த தீங்கால் இந்த உன் இளம் மனைவி {உத்தரை} துயரில் மூழ்கியிருக்கிறாள். ஐயோ, கன்றில்லா பசுவைப் போல இருக்கும் அவளை நான் எவ்வாறு தேற்றுவேன்? ஐயோ, ஓ! மகனே {அபிமன்யு}, உன்னைக் காண ஏங்கி, பெருமையின் கனியைத் தாங்கப் போகும் சமயத்தில், குறித்த காலத்திற்கு முன்பே என்னிடம் இருந்து சென்றுவிட்டாயே. கேசவரை {கிருஷ்ணரை} உன் பாதுகாவலராகக் கொண்டும், ஆதரவற்றவனைப் போல நீ கொல்லப்பட்டதால், ஞானியராலும் யமனின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை.

ஓ! மகனே {அபிமன்யு}, வேள்விகள் செய்வோர், தூய்மையடைந்த ஆன்மா கொண்ட பிராமணர்கள், பிரம்மச்சரியம் பயின்றோர், புனித நீர்நிலைகளில் நீராடியோர், நன்றிமிக்கோர், தொண்டாற்றுவோர், தங்கள் ஆசான்களுக்குச் சேவை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர், அபரிமிதமான வேள்விக் கொடை அளித்தோர் ஆகியோரின் உலகங்கள் உனதாகட்டும்.

போரிடுகையில் துணிச்சலுடன் புறமுதுகிடாதவர்கள், தங்கள் எதிரிகளைக் கொன்றுவிட்டுப் போரில் வீழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

ஆயிரம் பசுக்களைத் தானமளித்தவர்கள், வேள்விகளில் தானமளித்தவர்கள், தகுந்தோருக்கு வீடுகள் மற்றும் மாளிகைகளைத் தானமளித்தவர்கள் ஆகியோர் எந்த மங்கல முடிவை அடைவார்களோ, ரத்தினங்களையும், நகைகளையும் தகுந்த பிராமணர்களுக்குத் தானமளித்தோர், குற்றவாளிகளைத் தண்டிப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

பிரம்மச்சரியத்துடன் கடும் நோன்புகளை நோற்ற முனிவர்கள், ஒரே கணவனுடன் வாழ்ந்த பெண்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நன்னடத்தைக் கொண்ட மன்னர்கள், கடமைகளை முறையாக நோற்று, ஒன்றன்பின் ஒன்றாக வாழ்வின் நான்கு நிலைகளையும் வாழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, ஏழைகளிடமும், துயருற்றோரிடமும் கருணை கொண்டோர், தங்களிடமும், தங்களை அண்டியிருப்போரிடமும் எந்தப் பாகுபாடுமின்றிச் சமமாக இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வோர், வஞ்சகம் மற்றும் கொடுமை ஆகியவற்றை எப்போதும் செய்யாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நோன்புகள் நோற்பவர்கள், அறம் சார்ந்தோர், ஆசான்களின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், விருந்தோம்பாமல் எவ்விருந்தினரையும் அனுப்பாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, துன்பத்திலும், மிகக் கடுமையான இக்கட்டான சூழல்களிலும் துன்பத்தீயில் எவ்வளவு அதிகமாக எரிக்கப்பட்டாலும், தங்கள் ஆன்மாக்களின் சமநிலையை {மன அமைதியை} இழக்காதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ மகனே {அபிமன்யு}, தங்கள் தந்தைமார், தாய்மார் மற்றும் பிறரின் சேவைக்கு எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், தங்கள் மனைவியரிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, பிறர் மனைவியரிடம் தங்களைத் தாங்களே தடுத்துக் கொள்வோர், பருவ காலங்களில் தங்கள் மனைவியரிடம் மட்டும் தோழமையை நாடுவோர் ஆகிய ஞானியர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, அனைத்து உயிரினங்களையும் சமாதானக் கண்ணுடன் நோக்குவோர், பிறருக்கு எப்போதும் துன்பத்தை அளிக்காதோர், எப்போதும் மன்னிப்போர் {பொறுமையுடன் இருப்போர்} ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, தேன், இறைச்சி, மது, செருக்கு, பொய்மை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்போர், பிறருக்குத் துன்பம் தருவதைத் தவிர்ப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

அடக்கமுடையோர், அனைத்து சாத்திரங்களின் அறிவு கொண்டோர், அறிவில் நிறைவு கொண்டோர், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தோர் ஆகியோர் அடையும் இலக்கை நீயும் அடைவாயாக” என்றாள் {சுபத்திரை}.

{இப்படி சுபத்திரை} துயரத்தில் பீடிக்கப்பட்டு இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாஞ்சால இளவரசி (திரௌபதி), விராடன் மகளுடன் {உத்தரையுடன்} உற்சாகமற்ற  அந்தச் சுபத்திரையிடம் வந்தாள். பெரும் துன்பத்தால் அவர்கள் அனைவரும், இதயத்தைப் பிளக்கும் புலம்பல்களில் ஈடுபட்டு அதிகமாக அழுதனர். சோகத்தால் நினைவிழந்த மனிதர்களைப் போல, அவர்கள் அனைவரும் மயங்கிப் பூமியில் விழுந்தனர்.

நீருடன் தயாராக நின்ற கிருஷ்ணன், இதயம் துளைக்கப்பட்டவளும், அழுது, சுயநினைவை இழந்து, நடுங்கிக் கொண்டிருந்தவளுமான தன் தங்கையின் {சுபத்திரையின்} மேல் நீரைத் தெளித்து, ஆழமாகத் துன்புற்று, அத்தகு சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான். அந்தத் தாமரைக் கண்ணன் {கிருஷ்ணன்}, "ஓ! சுபத்திரையே, துன்புறாதே! ஓ! பாஞ்சாலி {திரௌபதியே}, உத்தரையைத் தேற்றுவாயாக! க்ஷத்திரியரில் காளையான அபிமன்யு மெச்சத்தகுந்த இலக்கையே அடைந்திருக்கிறான்.

ஓ! அழகிய முகம் கொண்டவளே {சுபத்திரையே}, பெரும்புகழ் கொண்ட அபிமன்யு அடைந்த இலக்கையே நம் குலத்தில் உயிருடன் இருப்போர் அனைவரும் அடையட்டும். ஓ! பெண்ணே {சுபத்திரையே}, எவருடைய உதவியுமில்லாமல் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு} அடைந்த சாதனையையே, எங்கள் நண்பர்களுடன் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்தப் போரில் அடைய விரும்புகிறோம்” என்றான் {கிருஷ்ணன்}.

தன் தங்கையையும் {சுபத்திரையையும்}, திரௌபதியையும், உத்தரையையும் இப்படித் தேற்றிய பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வலிமைமிக்கக் கரத்தைக் கொண்டோன் (கிருஷ்ணன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான். அப்போது, கிருஷ்ணன், அங்கிருந்த மன்னர்கள், நண்பர்கள் மற்றும் அர்ஜுனனை வணங்கியபடியே (பின்னவனின் {அர்ஜுனனின்}) அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

சுபத்திரைக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 077

Krishna consoled Subhadra! | Drona-Parva-Section-077 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனும், கிருஷ்ணனும் கோபமாக இருப்பதை நினைத்துக் கவலையடைந்த தேவர்கள்; கௌரவர்களுக்குத் தெரிந்த தீய சகுனங்கள்; சுபத்திரைக்கு ஆறுதலளிக்கக் கிருஷ்ணனை அனுப்பிய அர்ஜுனன்; கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகள்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும், கவலை மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டு, இரு பாம்புகளென அடிக்கடி பெருமூச்சைவிட்டுக் கொண்டே இரவில் தூங்காதிருந்தனர். நரன் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இருவரும் சினத்தில் இருப்பதை அறிந்த தேவர்களும், வாசவனும் {இந்திரனும்} “என்ன ஆகப்போகிறதோ?” என்றெண்ணி மிகவும் கவலையடைந்தனர்.


வறண்ட காற்று ஆபத்தை முன்னறிவித்தபடியே கடுமையாக வீசத் தொடங்கியது. சூரிய வட்டிலில் தலையற்ற முண்டமும், கதாயுதமும் {பரிகமும்} தோன்றின. மேகமற்றிருந்தாலும், மின்னலின் கீற்றுகளோடு கலந்த உரத்த இடிமுழக்கங்கள் அடிக்கடி கேட்கப்பட்டன. மலைகள், நீர்நிலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய பூமாதேவி குலுங்கினாள். மகரங்களின் வசிப்பிடமான கடல்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கொந்தளித்துப் பெருகியது. வழக்கமாக ஓடும் திசைக்கு எதிராக ஆறுகள் பாய்ந்தன. தேர்வீரர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் கீழ் உதடுகளும், மேல் உதடுகளும் துடிக்கத் தொடங்கின. மனித ஊனுண்ணிகளை மகிழ்ச்சிப்படுத்தும்படியும், யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் பெருமளவில் அதிகரிக்கப் போவதை முன்னறிவித்தபடியும், விலங்குகள் (போர்க்களத்தில்) மலமும் சிறுநீரும் கழித்தவாறே துன்பத்துடன் உரக்கக் கதறின. மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த செய்யும் இந்தக் கடும் சகுனங்களைக் கண்டும், வலிமைமிக்க அர்ஜுனனின் கடும் சபதத்தைக் கேட்டும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது வீரர்கள் அனைவரும் மிகவும் கலக்கமடைந்தனர்.

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாகசாசனனின் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “தன் மருமகளோடு {உத்தரையோடு} இருக்கும் உன் தங்கை சுபத்திரையைத் தேற்றச் செல்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா} மருமகளையும் {உத்தரையையும்}, அவளது தோழிகளையும் தேற்றுவாயாக. ஓ! தலைவா {கிருஷ்ணா}, உண்மை நிறைந்த ஆறுதல் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} உற்சாகமற்ற இதயத்தோடு அர்ஜுனன் வசிப்பிடத்திற்குச் சென்று, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் ஏற்பட்ட துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையில் இருந்த தன் தங்கையைத் {சுபத்திரையைத்} தேற்றத் தொடங்கினான்.

வாசுதேவன் {கிருஷ்ணன் சுபத்திரையிடம்}, ”ஓ! விருஷ்ணி குலத்துப் பெண்ணே {சுபத்திரையே}, உனது மருமகளுடன் {உத்தரையுடன்} சேர்ந்து உன் மகனுக்காகத் {அபிமன்யுவிற்காகத்} துயரப்படாதே. ஓ! மருண்டவளே, அனைத்து உயிரினங்களுக்கும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு. பெருமைமிக்கப் பரம்பரையில் பிறந்த வீரனுக்கு, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனுக்கு உரிய முடிவையே உன் மகன் அடைந்திருக்கிறான். எனவே நீ வருந்தாதே. பெரும் விவேகமும், தன் தந்தைக்கு இணையான ஆற்றலையும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, க்ஷத்திரிய வழக்கத்தின்படியே, வீரர்கள் ஆசைப்படும் ஒரு முடிவை அடைந்திருப்பது நற்பேறாலேயே.

எண்ணற்ற எதிரிகளை வீழ்த்தி, அவர்களை யமனின் முன்னிலைக்கு அனுப்பி வைத்த அவன் {அபிமன்யு}, அனைத்து விருப்பங்களையும் அருள்பவையும், அறவோருக்கு உரியவையுமான நித்தியமான உலகங்களை அடைந்திருக்கிறான். தவம், பிரம்மச்சரியம், சாத்திர அறிவு, ஞானம் ஆகியவற்றால் அறவோர் அடையும் முடிவையே உன் மகனும் அடைந்திருக்கிறான். வீரனின் தாயும், வீரனின் மனைவியும், வீரனின் மகளும், வீரர்களுக்கு உறவினருமான நீ, ஓ! இனியவளே {சுபத்திரையே}, உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் உன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} வருந்தலாகாது.

ஓ! அழகான பெண்ணே, ஒரு குழந்தையைக் கொன்றவனும், பாவகரக் காரியத்தைச் செய்தவனுமான அந்தச் சிந்துக்களின் இழிந்த ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, இந்த இரவு கடந்ததும், தன் நண்பர்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து தன் வெறியின் கனியை அடையப்போகிறான். அவன் {ஜெயத்ரதன்}, இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாலும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களில் இருந்து தப்ப மாட்டான். அந்தச் சிந்துவின் {சைந்தவனின்} தலை அவனது உடலில் இருந்து வெட்டப்பட்டுச் சமந்தபஞ்சகத்திற்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே உருண்டது என்பதை நாளை நீ கேட்பாய்! உன் கவலையை விடுவாயாக; வருந்தாதே.

க்ஷத்திரியன் ஒருவனின் கடமைகளைத் தன் முன் கொண்ட உன் வீர மகன் {அபிமன்யு}, ஆயுதம் தாங்குவதைத் தொழிலாகக் கொண்ட பிறரும், அறவோரும் அடையும் முடிவையே {கதியையே} அடைந்திருக்கிறான். ஓ! அழகான பெண்ணே, அகன்ற மார்பு மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பின்வாங்காதவனும், தேர்வீரர்களை நசுக்குபவனுமான உன் மகன் {அபிமன்யு} சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான். (உன் இதயத்திலிருந்து) இந்நோயை விரட்டுவாயாக.

தன் தந்தைமார், தாய்வழி உறவினர், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோருக்கு கீழ்ப்படிந்த அந்த வீரன் {அபிமன்யு}, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்ற பிறகே மரணத்துக்கு இரையானான். ஓ! ராணி {சுபத்திரையே}, உன் மருமகளை {உத்தரையைத்} தேற்றுவாயாக. ஓ! க்ஷத்திரியப் பெண்ணே, அதிகமாக வருந்தாதே. ஓ! மகளே {தங்கை சுபத்திரையே}, நாளை நீ இனிய செய்தியைக் கேட்கவிருப்பதால் உன் துயரை விரட்டுவாயாக.

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழி {சபதம்} சாதிக்கப்பட வேண்டும். அது வேறுவகையிலாகாது. உன் கணவன் {அர்ஜுனன்} செய்ய முயன்றது எதுவும் சாதிக்கப்படாமல் நீண்டதில்லை. மனிதர்கள் அனைவரும், பாம்புகள், பிசாசங்கள், இரவுலாவிகள் அனைவரும், பறவைகள், தேவர்கள் அனைவரும், அசுரர்கள் ஆகியோரும் போர்க்களத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு {ஜெயத்ரதனுக்கு} உதவினாலும் கூட, அவன் {ஜெயத்ரதன்} நாளை இருக்கமாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.


ஆங்கிலத்தில் | In English

Monday, September 02, 2013

மதுவும் பெண்களும் - திரௌபதியும் சுபத்திரையும் - ஆதிபர்வம் பகுதி 224

Wine and women - Draupadi and Subhadra | Adi Parva - Section 224 | Mahabharata In Tamil

(காண்டவ தகா பர்வம்)

இந்திரப்பிரஸ்தத்தை யுதிஷ்டிரன் முறையாக ஆண்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, கேளிக்கைக்காக கானகத்திற்குச் சென்றது; அங்கே மங்கையரிடம் இன்பமாக இருந்தது; மதுவின் மயக்கத்தில் இருந்த திரௌபதியும் சுபத்திரையும், போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு ஆடைகளையும் ஆபரணங்களையும் பரிசாகத் தந்தது; அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்திற்கு அர்ஜுனனும் கிருஷ்ணனும் சென்றது; அங்கே ஒரு அந்தணனைக் கண்டது;

வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் உத்தரவின் பேரில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்ட பிறகு, மற்ற மன்னர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்தனர். நற்குறிகளும், மேன்மையான சாதனைகளையும் செய்யும் உடலுக்குள் இருக்கும் ஆன்மா மகிழ்ச்சியாக வாழ்வது போல இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும், நீதிமானான யுதிஷ்டிரனின் ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், அறம், இன்பம், பொருள் ஆகியவற்றை தகுந்த அளவுகளில் ஏதோ அனைத்தும் தனக்கு விருப்பமானவை போல மரியாதை செய்தான். அறம், இன்பம், பொருள் ஆகிய மூன்று நிலைகளுடன், நான்காவது நிலையாகத் தானும் இருந்து பிரகாசித்தான். யுதிஷ்டிரனைத் தங்கள் மன்னனாகக் கொண்ட குடிமக்கள், தங்கள் மன்னனிடம், வேதங்களைக் கற்பதில் ஆர்வம் கொண்ட ஏகாதிபதியையும், பெரும் வேள்விகள் செய்பவனையும், நன்மக்களைக் காப்பாற்றுபவனையும் கண்டனர். யுதிஷ்டிரனின் செல்வாக்கால், பூமியின் அனைத்து ஏகாதிபதிகளின் நற்பேறும் அவனிடம் நிலைத்ததால், மக்களின் இதயம் பரமாத்மாவுடன் தியானத்தில் நிலைத்திருந்தது. ஆகையால், சுற்றி சுற்றி எங்கிலும் அறம் வளர ஆரம்பித்தது. தனது தம்பிகளின் துணையுடனும் அவர்களுக்கு மத்தியிலும், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நான்கு வேதங்களால் தாங்கப்பட்ட வேள்வி போல பிரகாசித்தான்.

பிருஹஸ்பதியைப் போன்று இருந்த கற்ற அந்தணர்கள், தனஞ்செயனின் {அர்ஜுனன்} தலைமையில், அந்த ஏகாதிபதிக்காக {யுதிஷ்டிரனுக்காக}, படைப்புத் தலைவனுக்காகக் {பிரம்மனுக்காக} காத்திருக்கும் தேவர்களைப் போலக் காத்திருந்தனர். பாச மிகுதியால், அனைத்து மக்களின் கண்களும் இதயங்களும் கறையற்ற முழு நிலவைப் போல இருந்த யுதிஷ்டிரனைக் கண்டு சமமாகப் பெரு மகிழ்வு கொண்டன. அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} எப்போதும் தனது குடிகளுக்கு ஏற்புடையதையே செய்தான். இன்சொல்லும் பெரும் புத்திசாலித்தனமும் கொண்ட யுதிஷ்டிரன், சரியற்றதையோ, உண்மையற்றதையோ, தாங்கமுடியாததையோ, ஏற்கத்தகாததையோ ஒரு போதும் செய்ததில்லை. பெரும் சக்தி கொண்டு அந்த பாரத குலத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, மற்றவர்களின் நலனைத் தனது நலன் போலக் கருதி மகிழ்ச்சியுடன் தனது நாட்களைக் கடத்தினான். அவனது {யுதிஷ்டிரனது} தம்பிகளும் தங்களது சக்தியால் மற்ற மன்னர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து, அமைதியைக் கெடுக்க எந்த எதிரியும் இல்லாது இருந்தார்கள்.

சில நாள் கழித்து, கிருஷ்ணனிடம் பேசிய பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, "வெப்ப நாட்கள் வந்துவிட்டன ஓ கிருஷ்ணா, ஆகையால், யமுனையின் கரைகளுக்கு நாம் செல்வோம். ஓ மதுவைக் கொன்றவனே, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நண்பர்களுடன் அங்கு விளையாடிவிட்டு, மாலையில் இங்கு திரும்பி வருவோம்" என்றான். அதன் பேரில் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, அதுதான் எனது விருப்பமும். ஓ பார்த்தா, நண்பர்கள் சூழ நாம் திருப்தியாக நீர்விளையாடித் திரும்புவோம்" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, பிறகு, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்}, யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றனர். உயர்ந்த மரங்களுடன் கூடிய {யமுனையின் கரையில் இருக்கும்} ஒரு அற்புதமான இடத்தை அடைந்தனர். பல உயர்ந்த மாளிகைகளுடன் கூடிய அந்த இடம் தேவர்களின் நகரைப் போல இருந்தது. அந்த இடத்தில் கிருஷ்ணனும் பார்த்தனும் {அர்ஜுனனும்}, எண்ணற்ற விலை உயர்ந்த உணவு வகைகளையும், மது வகைகளையும், மற்றும் இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும், மலர்வளையங்களையும், நறுமணப் பொருட்களையும் குவித்தனர். தூய கதிர்கள் கொண்ட ரத்தினங்களால் அதன் உள் அறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த அறைகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் தங்கள் இன்பத்திற்குத் தகுந்தபடி விளையாடினர். அந்த விருந்தில் கலந்த கொண்ட பெண்கள் பருத்த உருண்டையான இடைகளுடனும், பருத்து ஆழமாக இருக்கும் மார்புகளையும், அழகான கண்களையும், மதுவுண்டதால் தளர்ந்த தடுமாற்றம் கொண்ட நடையுடனும் இருந்த பெண்கள் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} கட்டளைப்படி அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். சிலப் பெண்கள் தங்கள் விருப்படி கானகத்திலும், சிலர் நீரிலும், சிலர் அறைகளிலும் பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} வழிகாட்டியபடி விளையாடினர். திரௌபதியும், சுபத்திரையும் மதுவின் மயக்கம் அதிகமாகி, அங்கே விளையாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்படி வாங்கிய மங்கையரில் சிலர் ஆனந்தக் கூத்தாடினர், சிலர் பாட ஆரம்பித்தனர், சிலர் சிரித்துக் கொண்டு கேலி பேச ஆரம்பித்தனர். சிலர் இன்னும் அருமையான மதுவகைகளை குடிக்க ஆரம்பித்தனர். சிலர் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் தடுத்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிட ஆரம்பித்தனர். சிலர் ஒருவரோடு ஒருவர் ரகசியம் பேசினர். அந்த மாளிகைகளும், கானகமும், புல்லாங்குழல் இசையாலும், வீணை மற்றும் மிருதங்க இசையாலும் நிறைந்து வளமையான காட்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அர்ஜுனனும் வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அனைவரும் இருக்கும் அந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, எதிரி நகரங்களை அடக்குபவனான அர்ஜுனனும் அந்த உயர் ஆன்ம கிருஷ்ணனும் இரு விலை உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர். அப்படி அமர்ந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்செயனும் {அர்ஜுனனும்} மகிழ்ச்சியுடன் கடந்த கால சாதனைகளைக் குறித்தும் தங்கள் வீரத்தைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர். அப்படி மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வாசுதேவனையும், தனஞ்செயனையும் நோக்கி வானுலகில் இருந்து அசுவினிகள் வந்தது போல ஒரு குறிப்பிட்ட அந்தணன் அங்கே வந்தான். அப்படி அங்கே வந்த அந்தணன் சால {ஆச்சா} மரத்தைப் போல உயரமாக வளர்ந்தவனாக இருந்தான். அவனது நிறம் உருக்கிய தங்கத்தைப் போல இருந்தது. அவனுடைய தாடி வெளிர் மஞ்சள் நிறத்துடன் முனைகளில் பச்சை நிறத்துடன் இருந்தது. அவன் உயரத்திற்கேற்ற அகலம் கொண்ட உடலைப் பெற்றிருந்தான். சடா முடியும் மரவுரியும் தரித்து, காலைச் சூரியனைப் போல அவன் பிரகாசமாக இருந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிவந்த நிறத்தையும், கொண்டு எரியும் நெருப்பைப் போல இருந்தான். பிரகாசத்துடன் இருக்கும் அந்த அந்தணர்களில் முதன்மையானவனைக் கண்ட அர்ஜுனனும் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து, அவனை அணுகி, அவனது உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.


Sunday, September 01, 2013

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222

Arjuna Kidnapped Subhadra | Adi Parva - Section 222 | Mahabharata In Tamil

(சுபத்திரா ஹரண பர்வத் தொடர்ச்சி)

ரைவதக மலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சுபத்திரை அர்ஜுனன் கடத்திக் கொண்டு செல்வது; இதை அறிந்த யாதவர்கள் கோபம் கொள்வது; பலராமன் கிருஷ்ணனைக் கேட்பது; அர்ஜுனன் குறித்த தனது எண்ணத்தை பலராமன் சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, யுதிஷ்டிரனின் சம்மதத்தைக் கேள்விப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த மங்கை ரைவதக மலைக்குச் சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டு, வாசுதேவனின் சம்மதத்தையும், அனைத்து ஆலோசனைகளையும் செய்து ஒரு தீர்மானத்திற்கு வந்தான். பிறகு அந்த பாரத குலத்தின் காளை {அர்ஜுனன்}, அந்த மனிதர்களில் முதன்மையானவன், கிருஷ்ணனின் சம்மதத்துடன், நன்றாக உருவாக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் பயணித்தான். 

அந்த ரததில் சிறு மணிகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. அனைத்து வித ஆயுதங்களும் அதற்குள் இருந்தன. அந்த ரதத்தின் சக்கரங்களின் ஓசை மேகத்தின் உறுமலை ஒத்திருந்தது. அந்த ரதம் சுடர்விட்டு எரியும் நெருப்பு போல பிரகாசமாக இருந்தது. பகைவர்கள் கண்டால் அஞ்சி நடுங்கும் அந்த ரதத்தில் சைவியம் மற்றும் சுக்ரீவம் என்ற இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அர்ஜுனன் கவசம் பூண்டு, கையில் வாள் தாங்கி, விரல்களுக்கு தோல் கையுறை அணிந்து, வேட்டைக்குக் கிளம்புவது போல சென்று கொண்டிருந்தான். அதே வேளையில் சுபத்திரை, மலைகளின் இளவரசனான ரைவதகத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்த தெய்வங்களை வணங்கி, அந்தணர்கள் வாழ்த்துகளைப் பெற்று, மலையைச் சுற்றி நடந்து, துவாரவதியை {துவாரகையை} நோக்கிச் செல்லும் பாதையில் வந்து கொண்டிருந்தாள். காமனின் கணைகளால் தாக்குண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, திடீரென அந்தக் குற்றங்குறையற்ற யாதவப் பெண் மேல் பாய்ந்து, அவளை {சுபத்திரையை} வலுக்கட்டாயமாகத் தனது ரதத்தில் ஏற்றினான். இனிமையான புன்னகை கொண்ட அந்த மங்கையைக் கைப்பற்றிய பிறகு, அந்த மனிதர்களில் புலியானவன், அந்தத் தங்க ரதத்தை தனது நகரத்தை (இந்திரப்பிரஸ்தத்தை) நோக்கிச் செலுத்தினான்.

அதேவேளையில் ஆயுதம் தரித்த சுபத்திரையின் பணியாட்கள், அவள் இப்படி அபகரித்து செல்லப்பட்டதைக் கண்டு, துவாரகை நகரத்தை நோக்கி அழுது கொண்டே ஓடினர். சுதர்மா என்று அழைக்கப்பட்ட அந்த யாதவ சபைக்கு அனைவரும் சென்று, பார்த்தனின் {அர்ஜுனனின்} வீரம் குறித்து அந்த சபையின் தலைவனிடம் தெரிவித்தனர். பணியாட்களிடம் இருந்து இவை அனைத்தையும் கேட்ட சபைத்தலைவன், தனது தங்கத்தாலான எக்காளத்தை {trumpet} எடுத்து உரத்து முழக்கமிட்டு படைகளை அழைத்தான். அந்த ஒலியால் உந்தப்பட்ட போஜர்களும், விருஷ்ணிகளும், அந்தகர்களும் எல்லா புறங்களிலிருந்து ஓடி வந்தனர். உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் அதை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தனர். குடித்துக் கொண்டிருந்தவர்கள் குடியை விட்டு ஓடி வந்தனர். மனிதர்களில் புலிகளான அந்த விருஷ்ணி மற்றும் அந்தக குல வீரர்கள், அற்புதமான விரிப்புகளால் மூடப்பட்டு, பலவண்ண ரத்தினங்கள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டு எரியும் நெருப்பு போல பிரகாசமாய் இருந்த ஆயிரம் தங்க அரியணைகளில் ஏறி அமர்ந்தனர். உண்மையில் எரியும் நெருப்பின் மேல், மேலும் அதன் பிரகாசத்தினை அதிகரிக்க அவர்கள் ஏறி அமர்ந்தது போல இருந்தது. அப்படி அவர்கள் அனைவரும் வந்த அந்த சபையில் தங்கள் அரியணைகளில் தேவர்களைப் போல அமர்ந்த பிறகு, சபைத்தலைவன், அவனது பின் இருந்தவர்களின் துணை கொண்டு, ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} நடத்தையைக் குறித்துப் பேசினான்.

துவாரகை
மதுவால் சிவந்த கண்களுடன் இருந்த அந்த கர்வம் கொண்ட விருஷ்ணி வீரர்கள், இதைக் கேட்டதும், அர்ஜுனன் செய்கையைத் தாங்க முடியாமல் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். அவர்களில் சிலர், "ரதங்களைத் தயார் செய்யுங்கள் {Yoke our cars = எங்கள் ரதங்களில் நுகத்தடி பூட்டுங்கள்} என்றனர். சிலர், "ஆயுதங்களை எடுங்கள்" என்றனர். சிலர் "நமது விலை உயர்ந்த வில்லையும், உறுதியான கவசங்களையும் கொண்டு வாருங்கள்" என்றனர். சிலர் சத்தமாக தங்கள் சாரதிகளை ரதத்தை எடுக்கச் சொல்லினர். சிலர் பொறுமையிழந்து, அவர்களாகவே தங்கள் குதிரைகளுக்கு நுகத்தடி பூட்டி, அவற்றைத் தங்கள் தங்க ரதங்களில் பூட்டினர். அவர்களது ரதங்களும், ஆயுதங்களும், மற்ற பொருட்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வீரர்களிடம் பெரும் கர்ஜனைகள் எழுந்தன. பிறகு வெண்மையாகவும் கைலாச மலையைப் போல உயரமாகவும் இருந்த பலதேவன் {பலராமன்}, காட்டுப் பூக்களாலும், நீல ஆடைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, மது கொடுத்த போதையுடன், "புத்தியற்றவர்களே, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அமைதியாக அமர்ந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் வீணாக கோபத்தில் கர்ஜிக்காதீர்கள்! சொல்ல வேண்டியதை இந்த உயர் ஆன்ம கிருஷ்ணன் சொல்லட்டும். அவன் செய்ய விரும்புவதை உடனடியாக நிறைவேற்றுங்கள்" என்றான். ஹலாயுதனின் {பலராமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு, "அற்புதம்! அற்புதம்!" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் அமைதி அடைந்தனர். புத்திசாலியான பலதேவனின் {பலராமனின்} வார்த்தைகளால் அங்கு அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. பிறகு அவர்கள் அனைவரும் சபையில் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர்.

பிறகு, எதிரிகளை ஒடுக்கும் ராமன் {பலராமன்} வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இங்கே அமர்ந்து கொண்டு, நீ ஏன் அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? ஓ அச்யுதா {கிருஷ்ணா}, உன் நிமித்தமாகவே, பிருதையின் மகன் {அர்ஜுனன்} இங்கு அழைக்கப்பட்டு நம்மால் கௌரவிக்கப்பட்டான். இருப்பினும், நமது மரியாதைக்கு அந்தப் பாவி {அர்ஜுனன்} உகந்தவனல்ல என்று படுகிறது. மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த எந்த மனிதன், தான் உணவு உண்ட தட்டை உடைத்துப் போடுவான்? முன்பு ஒரு சம்மந்தத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று, பிறகும் அதில் விருப்பம் கொண்டிருப்பவன் எவன்தான் இப்படிப்பட்ட கொடுஞ்செயலைச் செய்வான்? அவன் {அர்ஜுனன்} நம்மை எல்லாம் அவமதித்து, இன்று சுபத்திரையைத் தூக்கிச் சென்றதால் அவன் தனது மரணத்தை விரும்புகிறான் என்றே படுகிறது. அவன் {அர்ஜுனன்} அவனது காலை எனது முடி தரித்த தலையில் வைத்துவிட்டான். ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, நான் இதை எப்படிப் பழக்கப்பட்டதைப் போலப் பொறுத்துக் கொள்வது? மிதிக்கப்பட்ட பாம்பு அதைத் தாங்கிக் கொள்ளாது சீறுவது போல நானும் சீற வேண்டாமா? இன்று நான் தனியாக சென்று உலகத்திலிருந்து கௌரவர்களை அழித்து ஒழிக்கிறேன்! நான் அர்ஜுனனின் இந்த வரம்பு மீறிய செயலை என்னால் பொறுக்க முடியாது" என்றான். பிறகு அங்கிருந்த அனைத்து போஜர்களும், விருஷ்ணிகளும், அந்தகர்களும், பலதேவன் {பலராமன்} சொன்னது அனைத்தையும் ஏற்று மேக முழக்கம் போலவும் துந்துபி வாத்தியம் போலவும் கர்ஜனை செய்தனர்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top