A Sudra possessed of the status of a Brahmana! | Anusasana-Parva-Section-143 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 143)
பதிவின் சுருக்கம் : ஒருவன் தன் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மேன்மையுறவோ, தாழ்ந்த நிலைக்கு வீழ்வதோ நேரும் சூழ்நிலைகளை உமைக்குச் சொன்ன சிவன்...
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! பகனின் கண்களையும், பூஷனின் பற்களையும் கிழித்தெறிந்தவரே, ஓ! தக்ஷனின் வேள்வியை அழித்தவரே, ஓ! முக்கண் தேவா, எனக்கோர் ஐயம் இருக்கிறது.(1) பழங்காலத்தில் சிறப்புமிக்கச் சுயம்புவே நான்கு வகைகளை {வர்ணங்களைப்} படைத்தார். ஒரு வைசியன் செய்யும் எந்தச் செயல்களின் தீய விளைவால் அவன் ஒரு சூத்திரனாகிறான்?(2) எந்தச் செயல்களினால் ஒரு க்ஷத்திரியன் வைசியானாகவும், ஒரு மறுபிறப்பாளன் (பிராமணன்) க்ஷத்திரியனாகவும் ஆகின்றனர்? வகைகளின் தரம் குறைவதை எவ்வழிமுறைகளினால் தடுக்க வேண்டும்?(3) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் மறுபிறவியில் சூத்திர வகையில் பிறக்கிறான்? ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்தன் மூலம் ஒரு க்ஷத்திரியன் சூத்திர நிலையை அடைகிறான்?(4) ஓ! பாவமற்றவரே, ஓ! அனைத்து உயிரினங்களில் தலைவரே, ஓ! சிறப்புமிக்கவரே, எனக்கிருக்கும் இந்த ஐயத்தை விலக்குவீராக. மேலும் மற்ற மூன்று வகையினரும் இயல்பாகவே பிராமணத்தன்மையை அடைவது எவ்வாறு என்பதையும் சொல்வீராக?" என்று கேட்டாள்.(5)