The swayamvara of Bhanumati! | Shanti-Parva-Section-04 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ! பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)