Abstention from killing! | Aswamedha-Parva-Section-29 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)


