Showing posts with label தர்மவியாதர். Show all posts
Showing posts with label தர்மவியாதர். Show all posts

Sunday, July 27, 2014

வேடனிடம் விடைபெற்ற கௌசிகர்! - வனபர்வம் பகுதி 215

Kausika departed from the fowler!  | Vana Parva - Section 215 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…

வேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், "இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். "ஓ! முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ! வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்" என்றேன். அதற்கு அந்த முனிவர், "நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்" என்றார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்" என்றான் {தர்மவியாதன்}.

Saturday, July 26, 2014

பெற்றோரை மதிப்பதே உயரறம்! - வனபர்வம் பகுதி 214

Honouring the parents is the highest virtue!  | Vana Parva - Section 214 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் கௌசிகரைத் தந்தை தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்லி அறிவுறுத்தியது; அவன் ஏன் சூத்திர வர்க்கத்தில் பிறந்தான் என்ற காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தன் பெற்றோரை (இருவரையும்) தான் நினைக்கும் உயர்ந்த குருக்கள் என அந்த அந்தணரிடம் அறிமுகப்படுத்திய அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, "எனது அக ஆன்மப் பார்வையை விரிவடையச் செய்யும், இந்த அறத்தின் சக்தியைக் குறித்துக் கொள்ளும். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த, சுயக்கட்டுப்பாடுடைய, சத்தியவதியான அந்தப் பெண்ணால், "மிதிலைக்குச் செல்லும்; அங்கே அறத்தின் புதிர்களை உமக்கு விளக்கவல்ல ஒரு வேடன் வாழ்ந்து வருகிறான்" என்று இதற்காகவே உமக்குச் சொல்லப்பட்டது" என்றான்.

Friday, July 25, 2014

இல்லறத்தான் கடமை! - வனபர்வம் பகுதி 213

Duty of a House holder!  | Vana Parva - Section 213 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் கௌசிகரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி, தன் பெற்றோருக்குத் தான் செய்யும் பணிவிடைகளைச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, முக்தி சம்பந்தமான இந்தப் புதிர்கள் அந்தணருக்கு விளக்கப்பட்ட போது, அவர் {அந்தணர் - கௌசிகர்}, பெரிதும் திருப்தியடைந்து, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "நீ விளக்கிய யாவையும் பகுத்தறிவு கொண்டதாக இருக்கிறது. அறப்புதிர்கள் சம்பந்தமாக உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குப் படுகிறது" என்றார். வேடன் {தர்மவியாதன்}, "ஓ! நல்ல பெரும் அந்தணரே {கௌசிகரே}, நான் கோரும் அனைத்து அறத்தையும், இந்த அருள்நிலையை நான் அடைந்ததற்கான காரணத்தையும் உமது கண்களால் நீர் காண்பீர். வழிபடத்தகுந்த ஐயா, எழுந்து விரைவாக இந்த உள் அறைக்குள் நுழையும். ஓ! அறம் சார்ந்த மனிதரே {கௌசிகரே}, நீர் எனது தந்தையையும், தாயையும் காண வேண்டியது முறையாகும்" என்று சொன்னான் {வேடன் தர்மவியாதன்}.

துயரத்தைக் கடக்கும் வழி! - வனபர்வம் பகுதி 212

A way to cross grief  | Vana Parva - Section 212 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...

அந்தணர் {கௌசிகர்}, "நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது? மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது?" என்று விசாரித்தார்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.


Thursday, July 24, 2014

சூத்திரன் பிராமணனாகலாம்! - வனபர்வம் பகுதி 211

A Sudra may become a Brahmana  | Vana Parva - Section 211 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் இயல்புகளையும், அக்குணங்கள் கொண்டவர்களின் தன்மைகளையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த வேடன் {தர்மவியாதன்} இந்த மறைபொருள்களை விவரமாக எடுத்துக்கூறிய பிறகு, பெரும் கவனத்துடன் இருந்த அந்த அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அவனிடம் நுட்பமானவை குறித்து விசாரித்தார். அந்த அந்தணர் {கௌசிகர்}, "சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களுக்கு உரிய ஒழுக்கங்களை உள்ளது உள்ளபடி கேட்கும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். அதற்கு வேடன் {தர்மவியாதன்}, "நன்றி. நீர் கேட்பதை நான் உமக்குச் சொல்கிறேன். அது அதற்கு உரிய ஒழுக்கங்களை நான் விவரிக்கிறேன், கேளும். அவற்றில் தமஸ் குணம் (ஆன்ம) மாயையால் வகைப்படுத்தப்படுகிறது. ரஜஸ் குணம் (மனிதர்களைச் செயல்படத்) தூண்டுகிறது. சத்வ குணம் பெரும் கம்பீரத்துடன் இருக்கிறது. அதனால் அதுவே அவற்றில் {சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களில்} பெரியது என்று சொல்லப்படுகிறது.

ஆன்ம அறியாமை, மூடத்தனம், அறிவற்ற தன்மை, கனவிலேயே லயிப்பு, செயலற்ற தன்மை, சுறுசுறுப்பற்ற தன்மை, கோபம் மற்றும் கர்வத்தால் இயக்கம் ஆகியவற்றில் ஆதிக்கத்தில் பெரிதும் மூழ்கியவன், தமஸ் குண ஆதிக்கத்தில் இருப்பவனாகச் சொல்லப்படுகிறது. ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, ஏற்புடைய பேச்சு, சிந்தனாசக்தி, பொறாமையற்ற தன்மை, ஊக்கமான செயல்பாடுகளால் பலன்களை அடைய விருப்பம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட அற்புதமான மனிதன், ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உறுதி, அமைதி, கோபமடையாமை, துர்க்குணத்தில் இருந்து விடுதலை, தன்னல விருப்பத்தால் கனிகளை {பலன்களை} அறுப்பதற்காக {பெறுவதற்காக} செயல்படுவதில் நிபுணத்துவம் இல்லாமை {லாபம் அடைவதில் விருப்பமில்லாமை}, ஞானம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டவன் சத்வ குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சத்வ குணத்தைக் கொண்ட மனிதன், உலகப்பற்றால் ஆட்கொள்ளப்படும்போது, அவன் துயரால் பாதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அதன் {உலகப்பற்றின்} முழு விளைவையும் அறியும்போது, அவன் உலகப்பற்றை வெறுக்கிறான். பிறகு உலக விவகாரங்களில் அலட்சிய உணர்வு அவனை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. பிறகு அவனது கர்வம் குறைகிறது, நீதியே அதிக முக்கியமாகிறது, அவனது முரண்பட்ட அறநெறி உணர்வுகள் ஒப்புரவாகின்றன {சமரசம் ஆகின்றன}. பிறகு, எந்தக் காரியத்திலும் சுயக்கட்டுப்பாடு தேவையற்றதாகிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம். இந்தக் குணங்களை நான் உமக்கு விவரித்துவிட்டேன். நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?" என்று கேட்டான் {தர்மவியாதன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, July 23, 2014

புலன்களை ஏன் அடக்க வேண்டும்? - வனபர்வம் பகுதி 210

Why should be senses subdued?  | Vana Parva - Section 210 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஐம்பூதங்களின் குணங்களையும், புலன்களை அடக்குவது, அடக்காமல் இருப்பது, மகிழ்ச்சி மற்றும் துயரங்களுக்கான காரணங்களைத் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷிட்ரனிடம்}தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி அறம்சார்ந்த வேடனால் {தர்மவியாதனால்} விசாரிக்கப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, மனதிற்கு மிகவும் திருப்தியைத் தரும் இந்தச் சொல்பொழிவை மீண்டும் தொடங்கினார். அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவனே, ஐந்து பெரும் அடிப்படைக் கூறுகள் {ஐம்பூதங்கள்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது; அந்த ஐந்தில் ஒன்றின் பண்புகளை {ஒவ்வொன்றையும் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கங்குலி any one of the five என்று தான் சொல்கிறார்} முழுமையாக எனக்கு விபரித்துச் சொல்" என்று கேட்டார். வேடன், "பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் {ஆகிய ஐந்தும்} ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புகள் கொண்டவை. நான் அவற்றை உமக்கு விவரிக்கிறேன்.


ஓ! அந்தணரே {கௌசிகரே}, பூமிக்கு ஐந்து பண்புகள் இருக்கின்றன. நீர் நான்கும்,, நெருப்பு மூன்றும், காற்றும் ஆகாயமும் சேர்ந்து மூன்றும் {மூன்று பண்புகளையும்} கொண்டிருக்கின்றன. ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகிய ஐந்து பண்புகளும் பூமியிடம் இருக்கின்றன. ஓ! எளிய அந்தணரே {கௌசிகரே} ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை ஆகியவை {ஆகிய நான்கும்} நீரின் பண்புகள் என உமக்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒலி, தொடு உணர்ச்சி, உருவம் ஆகிய மூன்று பண்புகளும் நெருப்புக்கு இருக்கின்றன. காற்றுக்கு ஒலி, தொடு உணர்ச்சி என்ற இருந்து பண்புகள் இருக்கின்றன. ஆகாயத்துக்கு ஒலி என்ற பண்பு இருக்கிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஐம்பூதங்களில் உள்ளார்ந்து இருக்கும் இந்தப் பதினைந்து பண்புகளும், இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; ஓ அந்தணரே {கௌசிகரே} அவை சரியான கலவையில் இருக்கின்றன.

இந்த முழு அண்ட மும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்படும்போது, அந்தக் கால நிறைவில் ஒவ்வொரு உடலும், மற்றொரு உடலை எடுத்துக் கொள்கிறது. சரியான வரிசையில் அது எழுகிறது, சரியான வரிசையில் அது விழுகிறது {அழிகிறது}. அனைத்து அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் நிறைந்த உலகம், தற்போது உள்ள இந்த ஐந்து அடிப்படை பொருட்களால் {ஐம்பூதங்களால்} இயற்றப்பட்டுள்ளது. புலனுணர்வால் உணரக்கூடிய எதுவும் வியக்தம் (அறியத்தக்கது அல்லது புரிந்து கொள்ளக் கூடியது) என்று அழைக்கப்படுகிறது. புலன்களுக்கு எட்டாதவையும், அனுமானத்தின் மூலமாக மட்டும் காணக்கூடியவைகள் அவியக்தம் (வியக்தம் அல்லாதது) என்று அறியப்படுகிறது.

ஒலி, உருவம் முதலிய வெளிநிலைகளை முறையான இலக்கின்படி செய்து புலன்களைக் கட்டுப்படுத்திச் சுயபரிசோதனை எனும் ஒழுக்கத்தில் ஒரு படி ஈடுபடும் ஒருவன், {அப்படிச் சுயபரிசோதனை செய்யும்போது}, அண்டத்தில் வியாபித்துள்ள தனது சொந்த ஆவியையும் {ஆன்மாவையும்} மற்றும் தன்னைப் பிரதிபலிக்கும் அண்டத்தையும் காண்கிறான். தனது முந்தைய கர்மத்துடன் {வினையுடன்} தொடர்புடைய ஒருவன், எவ்வளவுதான் ஆன்ம ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவனது ஆன்மாவின் புறநிலை இருப்பை மட்டுமே அறிகிறான். ஆனால் சுற்றியிருக்கும் புற நிலைமைகளால் பாதிக்கப்படாத ஆன்மா கொண்ட மனிதன், அடிப்படை ஆவியான பிரம்மம் அதைக் {கர்மங்களின் தொடர்பை} கிரகிப்பதன் காரணமாக {அம்மனிதன்} தீமைகளுக்கு ஆட்படுவதில்லை.

மாயையின் ஆதிக்கத்தில் ஒரு மனிதன் மூழ்கிப் போகும்போது, ஆன்மிக ஞானத்தின் சாரம் கொண்ட அவனது ஆண்மை நிறைந்த அறங்கள், ஆன்ம ஞானத்தின் பக்கம் திரும்பி, புலனறிவும் ஆற்றலுமுள்ள புத்திசாலியாக அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது. அத்தகைய மனிதன், தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} இல்லாத, தானே இருப்பதான {சுயம்புவான}, மாற்றம் இல்லாத, உடல் வடிவம் இல்லாத, ஒப்பிடமுடியாத எல்லாம் வல்ல அறிவார்ந்த ஆவியால், உருவம் கொடுக்கப்படுகிறான். ஓ! அந்தணரே {கௌசிகரே}, நீர் இப்படி என்னை விசாரிப்பதே தன்னொழுக்கத்தினால் {சுய ஒழுக்கத்தினால்} மட்டுமே பெறக்கூடிய விளைவாகும். இந்தத் தன்னொழுக்கம், புலன்களை அடக்குவதால் மட்டுமே அடையப்படுகிறது. இதற்கு வேறு வழியில்லை. சொர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் நமது புலன்களைச் சார்ந்தே இருக்கிறது. கட்டுக்குள் வைக்கப்படும்போது அவை சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்; பழக்கப்படுத்தினால் {கட்டுப்படுத்தாவிட்டால்}, அவை நரகத்திற்கு வழிவகுக்கும். இந்தப் புலனடக்கமே ஆன்ம ஒளியை அடைவதற்கான உயர்ந்த வழிமுறையாகும். நமது புலன்களே, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கான வேராகவும் (காரணமாகவும்), ஆன்ம அழிவுக்கான வேராகவும் இருக்கிறது. அவற்றைப் பழக்கப்படுத்துவதால் {கட்டுப்படுத்தாமல் செயல்படவிட்டால்}, ஒரு மனிதன் சந்தேகமற தீயவற்றோடு தொடர்பு கொள்கிறான். அவற்றை அடக்கினால் அவன் முக்தியை அடைகிறான். சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், தன் இயல்பில் உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்களின் {அறிவுகளாக இருக்க வேண்டும்} மீது ஆதிக்கத்தை அடைந்தால், அவன் பாவத்தால் களங்கப்படுவதில்லை. மேலும் அதன் காரணமாகத் தீமைக்கு அவன் மீது எந்த அதிகாரமும் ஏற்படுவதில்லை. மனிதனின் உடல் தேராகவும், அவனது ஆன்மா தேரோட்டியாகவும், அவனது புலன்கள் குதிரைகளாகவும் ஒப்பிடப்படுகிறது. திறமையான கரங்கள் கொண்ட மனிதன், அமைதியான தேரோட்டியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட குதிரைகளைக் குழப்பமில்லாமல் செலுத்துகிறான்.

இயற்கையாக உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்கள் எனும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களைப் பொறுமையாக பற்றி ஓட்டுபவன் அற்புதமான தேரோட்டியாகக் கருதப்படுகிறான். நெடுஞ்சாலையில் செல்லும் ஆளுமைக்குட்படாத குதிரைகளைப் போல நமது புலன்கள் ஆகும்போது, நாம் அதன் கடிவாளத்தைப் பொறுமையாகப் பற்ற வேண்டும். பொறுமையால் மட்டுமே நாம் நிச்சயம் சிறந்ததைச் செய்ய முடியும். ஒரு மனிதனின் மனது, எந்த ஒரு புலனின் முரட்டு ஓட்டத்திலாவது மூழ்கினால், புயலின் போது உயர்ந்த சமுத்திரத்தில் தூக்கி வீசப்படும் கப்பல் போல ஆகி, அவன் தனது புத்தியை இழக்கிறான். மனிதர்கள், அந்த ஆறு பொருட்களால் கனிகளை அறுக்கலாம் {பலன்களை அனுபவிக்கலாம்} என்ற நம்பிக்கையில் மாயையால் ஏமாற்றப்படுகின்றனர். தங்கள் தெளிவான கருத்துகளால் கனிகளை அறுக்கும் ஆன்ம உள்பார்வை கொண்ட மனிதர்களால் அதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன" என்றான் {தர்மவியாதன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, July 22, 2014

"பிராமணீயம் கல்!" என்ற வேடன்! - வனபர்வம் பகுதி 209

"Learn Brahmanic Philosophy!'" said the fowler  | Vana Parva - Section 209 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

நற்செயல் தீச்செயல் ஆகியவற்றின் தன்மை மற்றும் பிராமணத் தத்துவம் ஆகியவற்றைக் கௌசிகருக்கு தர்மவியாதன் உரைத்தல்...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, அந்த அந்தணரால் இப்படி விசாரிக்கப்பட்ட அந்த அறம்சார்ந்த வேடன், அவருக்கு என்ன மறுமொழி கூறினான் என்பதைக் கேள். வேடன் {தர்மவியாதன்}, "மனிதர்களின் மனங்கள் முதலில் அறிவை அடைவதில் முனைகின்றன. அதை அடைந்ததும், ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்கள் தங்கள் ஆசைகளிலும், விருப்பங்களிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரிய அளவில் இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறார்கள். அழகு, சுவை போன்ற அவர்கள் மிகவும் விரும்பும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக விருப்பம் {பாசம்}, பொறாமை, பின்னர்ப் பேராசையும் வருகின்றன. அதன் பின்னர் அவர்களது ஆன்ம ஒளி அழிகிறது.மனிதர்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் பொறாமையிலும் பாசத்திலும் மூழ்குகிறார்கள். அவர்களது அறிவு, நீதியின் வழிகாட்டுதல் படி நடப்பதில் இருந்து விலகுகிறது. அவர்களது அறப் பயிற்சி கேலிக்குரியதாகிறது. பாசாங்குத்தனத்தோடு அறம் பயில்வதால், கௌரவமற்ற வழிகளில் செல்வத்தைப் பெற்று மனநிறைவு அடைகிறார்கள். இப்படி அடையப்பட்ட செல்வத்தால், அவர்களில் இருந்த புத்திசாலித்தனம் தீய வழிகளில் மயங்குகிறது. மேலும், அவர்கள் பாவமிழைக்கும் விருப்பத்தால் நிரம்புகிறார்கள்.

ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்களது நண்பர்களும், ஞானம் கொண்டவர்களும் அவர்களை எச்சரிக்கும்போது, கண்துடைப்பான {போலியான} பதில்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அந்தப் பதில்கள் வலுவானதாகவோ {ஆரோக்கியமானதாகவோ}, சமாதானம் ஏற்படுத்துவதாகவோ இருக்காது. தீய வழிகளுக்கு அடிமைப் பட்டிருப்பதால், அவர்கள் மூன்று வித பாவங்கள் செய்த குற்றவாளியாகிறார்கள். அவர்கள், எண்ணம், சொல், செயல்களில் {என்ற மூன்று விதங்களில்} பாவமிழைக்கிறார்கள். பொல்லாத வழிகளுக்கு அடிமைப்பட்டிருப்பதால், அவர்களது அனைத்த நல்ல குணங்களும் சாகின்றன {அழிகின்றன}. இது போன்ற தீச்செயல் செய்யும் மனிதர்கள், தன்னைப் போன்ற தன்மை கொண்ட மனிதர்களிடமே நட்பை வளர்ப்பார்கள். அதன் விளைவாக அவர்கள் இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.

பாவம் நிறைந்த மனிதன் {மேற்சொன்ன} இந்த இயல்பிலேயே இருக்கிறான். இப்போது அறம்சார்ந்த மனிதனைப் பற்றிக் கேளும். அவன் {அறம்சார்ந்தவன்}, இத்தீமைகளைத் தனது ஆன்ம உட்பார்வையால் {Spiritual Insight - ஆன்மிகப் பார்வையால்} கண்டுகொண்டு, இன்பம் மற்றும் துயரம் ஆகியவற்றுக்கிடையே உள்ள பாகுபாட்டை அறியும் ஆற்றல் பெறுகிறான். அறம்சார்ந்தவர்களை மரியாதையுடன் கவனிப்பதாலும், அறங்கள் பயில்வதாலும், அவனது மனம் நீதியை நோக்கி உயர்கிறது" என்றான் வேடன் {தர்மவியாதன்}. அந்தணர் {கௌசிகர்}, "எவரும் விளக்க முடியாத அறத்தின் உண்மை நிலையை விளக்கியிருக்கிறாய். உனது ஆன்ம சக்தி பெரிதானது. நீ எனக்குப் பெரும் முனிவரைப் போலத் தெரிகிறாய்" என்று மறுமொழி கூறினார்.

அதற்கு மறுமொழியாக வேடன் {தர்மவியாதன்}, "எங்களது மூதாதையர்களைப் போல, பெரும் அந்தணர்கள் {எங்களால்} வணங்கப்படுகிறார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு முன் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு {எங்களால்} திருப்தி செய்யப்படுகிறார்கள். இவ்வுலகத்தில் ஞானியாக இருப்பவர்கள், அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} திருப்தியானதை முழு இதயத்துடன் செய்கிறார்கள். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே, கௌசிகரே}, ஒரு வர்க்கமாக அந்தணர்களுக்கு அடிபணிந்த பின் {அவர்களை வணங்கிய பின்}, அவர்களுக்கு {அந்தணர்களுக்கு} எது திருப்தியானது என்பதை நான் உமக்கு விவரிக்கிறேன். பிராமணத் தத்துவத்தை நீர் என்னிடம் கற்றுக் {அறிந்து} கொள்ளும் {learn from me tha Brahmanic philosophy}. பெரும் கூறுகள் {ஐம்பூதங்கள்} நிறைந்த வெல்ல முடியாத முழு அண்ட மே பிரம்மம். இதை {பிரம்மத்தை} விட உயர்ந்தது எதுவும் இல்லை. பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பெரும் கூறுகள் {பெரும் பூதங்கள் - பெரிய அடிப்படைக் கூறுகள்} ஆகும். உருவம், மணம், ஒலி, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவையே அவற்றின் குணப் பண்புகளாகும். பிந்தையதின் {குணப் பண்புகளின்} தன்மைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கிறது. முன்னுரிமை வரிசையில் {முதலில்} இருக்கும் மனம் என்று அழைக்கப்படும் விழிப்புணர்வால், {அவை = குணப்பண்புகள்} படிப்படியாக ஒவ்வொன்றாக {அவை} மூன்று குணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. {And of the three qualities, which are gradually characterised by each, in order of priority is consciousness which is called the mind} {இங்கு, பிரம்மத்தின் குணங்கள் உலகத்திலும், உலகத்தின் குணங்கள் பிரம்மத்திலும் காணப்படுகின்றன என்ற பொருள் வரும் என்று சொல்லப்படுகிறது}. ஏழாவதாக நுண்ணறிவு {புத்தி} வருகிறது. இதற்கடுத்தே சுயநலம் {அகங்காரம்} வருகிறது. அதன்பிறகு ஐம்புலன்கள் {ஐந்து இந்திரியங்கள்}, அதன் பிறகு ஆன்மா, அதன்பிறகு தார்மீகப் பண்புகளான சத்வ, ரஜஷ், தமஸ் வருகின்றன. இவை பதினேழும் அறியப்படாத அல்லது புரிந்து கொள்ள முடியாத குணங்கள் என்று {அவியக்தம் என்ற பெயரில்} சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் உமக்கு விவரித்துவிட்டேன். மேலும் நீர் அறிய விரும்புவது என்ன?" என்று கேட்டான் {தர்மவியாதன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


சுக துக்கத்திற்கான காரணங்கள்! - வனபர்வம் பகுதி 208

Reasons for joy and sorrow!  | Vana Parva - Section 208 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மகிழ்ச்சி மற்றும் துக்கங்களுக்குக் காரணம் அறம் மற்றும் பாவமே என்று கௌசிகருக்குச் சொன்ன வேடன்...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, கருணையில் {இரக்கத்தில்} மேம்பட்ட அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, மீண்டும் நிபுணத்துவத்துடன் அந்த அந்தணர்களில் முதன்மையானவரிடம் {கௌசிகரிடம்}, "நேர்மையின் வழிகள் நுட்பமானவை, பல்முகப்பட்டவை, எல்லையற்றவை என்று முதிர்ந்தவர்கள் கருதுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையிலும், திருமணக் காரியத்திலும் பொய் சொல்லத் தக்கதே. சில நேரங்களில் பொய்மை உண்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும்; உண்மை பொய்மையாய் தேய்ந்து போகும். எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விளைவிக்குமோ அதுவே உண்மை {சத்தியம்} என்று கருதப்படுகிறது. அறம் இப்படி நெறிதவறுவதிலும் இருக்கிறது; நீர் அதன் நுட்பமான வழிகளைக் குறித்துக் கொள்ளும்.

Saturday, July 19, 2014

நல்லவர்கள் நல்லவர்களை மெச்சுவதில்லையே! - வனபர்வம் பகுதி 207

Good men are not commended by good men | Vana Parva - Section 207 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஊண் உணவு குறித்தும், முற்பிறவி கர்மங்கள் குறித்தும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை குறித்தும் வேடன் கௌசிகருக்கு உரைத்தது...

மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, பக்திமானான வேடன் {தர்மவியாதன்} அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "எனது செயல்கள் அனைத்தும் சந்தேகமற கொடுமையானவையே. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, விதி மிக வலிமையானது. மேலும், நமது பழைய செயல்களின் {முற்பிறப்பில் செய்த வினைகளின்} விளைவால் அதைத் தவிர்ப்பது கடினமாகும். அஃது, முந்தைய பிறவியில் இழைத்த பாவத்தால் எழும் கர்மம் சார்ந்த தீமையாகும் {தோஷமாகும்}. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் எப்போதும் தீமையை ஒழிப்பதில் ஊக்கமுடன் இருக்கிறேன். ஓர் உயிர் தெய்வத்தாலேயே கொல்லப்படுகிறது. அதைக் கொல்பவன், இரண்டாம் நிலை முகவராக மட்டுமே {கருவியாக மட்டுமே} செயல்படுகிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எங்கள் கர்மத்தின் காரணமாக நாங்கள் அத்தகு முகவர்களாக {கொல்லும் கருவியாக} மட்டுமே இருக்கிறோம். என்னால் கொல்லப்படும் விலங்குகளும், நான் விற்கும் அதன் இறைச்சியும் கர்ம பலனை அடைகின்றன. ஏனெனில், (அவற்றின் இறைச்சியை), தேவர்களும், விருந்தினர்களும், பணியாட்களும் சுவைமிகுந்த உணவை விருந்தாக உண்பதால், இறந்தவர்களின் ஆவி சாந்தமடைகிறது. மூலிகைகள், காய்கறிகள், மான்கள், பறவைகள், காட்டு விலங்குகள் ஆகியவை அனைத்து உயிர்களின் உணவாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

Thursday, July 17, 2014

வேடன் ஞானம்! - வனபர்வம் பகுதி 206ஆ

The knowledge of the fowler | Vana Parva - Section 206b | Mahabharata in Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அறம் சார்ந்தவர்களின் நடத்தை குறித்து வேடன் கௌசிகருக்குச் சொன்னது...

கௌசிகரும் வேடனும்
வேடன் {தர்மவியாதன் கௌசிகரிடம்}, "தனக்குச் செய்யப்பட்ட தீங்குக்குப் பதிலாக மற்றுமொரு தீங்கையே செய்யாமல், ஒருவன், தனக்குத் தீங்கிழைத்தவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பாவகரமான காரியத்தைச் செய்ய விரும்பும் இழிந்த மனிதன் தன்னைத் தானே கொல்கிறான். பாவம் செய்து, "அறம் என்பதே இல்லை" என்று சொல்லி, நல்லவர்களையும், சுத்தர்களையும் கேலி செய்து, தீயப் பாவியைப் போல நடந்து கொள்பவன், சந்தேகமற அழிவையே சந்திக்கிறான். காற்றடைத்த தோல் பையைப் {துருத்தியைப்} போல ஒரு பாவி வீங்குகிறான் {பருக்கிறான்}. கர்வமும் மூடத்தனமும் நிறைந்த இந்தப் பாவிகளின் எண்ணங்கள் பலவீனமானவையும் லாபமற்றதாகவும் இருக்கும். இதயம், உள்ளுறைந்திருக்கும் ஆன்மா {உள்ளுணர்வு} ஆகியவையே, பகலில் சூரியன் உருவங்களைக் கண்டுபிடிப்பதைப் போல முட்டாளைக் கண்டுபிடிப்பவை.


கர்வத்தினால் ஒரு மூடன் இவ்வுலகில் எப்போதும் பிரகாசிப்பதில்லை. கற்றவன், அழகற்றவனாக இருப்பினும், பிறரைப் பழித்துப் பேசுவது, தன்னைப் புகழ்ந்து பேசுவது ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதால் காந்தியுடன் {பிரகாசத்துடன்} இருப்பான். தங்கள் நற்பெயரைப் பறைசாற்றும் நடவடிக்கைகளைக் கொண்ட மனிதர்கள், குணம் நிறைந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இவ்வுலகில் பிரகாசித்ததற்கான ஓர் உதாரணமும் கிடைக்காது. தான் செய்த தீங்கிற்காக ஒருவன் வருந்தவானேயானால், அந்த வருத்தமே அவனது பாவத்தைக் கழுவிவிடும். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, சாத்திரங்களால் சொல்லப்படும் சில பரிகாரங்களைச் செய்து பாவத்தில் இருந்து விடுபடுவதைப் போலவே, மீண்டும் அத்தீங்கைச் செய்வதில்லை என்று அவன் எடுக்கும் தீர்மானம் அவனை எதிர்காலப் பாவத்திலிருந்து காக்கும்.

ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே-கௌசிகரே}, இதுவும் அறம் சம்பந்தமாகக் காணப்படும் ஸ்ருதி என்று ஆகிறது. முன்பு அறம்சார்ந்து இருந்தவன், பாவமிழைத்தாலோ, அல்லது அதைத் தெரியாமல் செய்தாலோ, {அவன் கடைப்பிடித்த அறம்} அந்தப் பாவங்களை அழிக்கும். ஓ அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அறியாமையில் செய்யும் பாவங்களை அறம் விரட்டியடிக்கும். ஒரு பாவத்தை இழைத்த மனிதன், அதற்கு மேலும் தன்னை மனிதன் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். எந்த மனிதனும் அவனது பாவங்களை மறைக்க முடியாது. ஒருவன் என்ன செய்கிறான் என்பதை அவனுக்குள் இருப்பவனும் {பரமாத்மாவும்}, தேவர்களும் காண்கின்றனர். பக்தி கொண்ட கறையில்லா மனிதன், தனது ஆடையில் இருக்கும் ஓட்டைகளை மறைப்பதைப் போல, நேர்மையானவர்களின் குறைகளை மறைக்க வேண்டும். அப்படிப்பட்டவன் நிச்சயம் முக்தியை அடைவான். பாவம் செய்த ஒரு மனிதன், அதிலிருந்து மீள நினைத்தால், சந்தேகமற அவனது பாவங்கள் எல்லாம் அழிந்து போகும். அவன் மேகங்களில் இருந்து விடுபட்டு, உதிக்கும் சந்திரனைப் போலப் பிரகாசமாகவ்வும் சுத்தமானவனாகவும் இருப்பான். இருளை விலக்கும் உதயசூரியன் போல, தனது பாவங்களில் இருந்து மீள நினைக்கும் மனிதன் அவற்றைக் கழுவிக் கொள்கிறான். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மோகமே பாவங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. அறியாமையில் இருக்கும் மனிதர்கள் மோகத்தின் பயனால் மட்டுமே பாவமிழைக்கின்றனர். புற்களால் மறைக்கப்பட்டுள்ள கிணறுகளின் வாய் போல, பொதுவாக, பாவிகள் தங்களை அறம் சார்ந்தவர்களாக வெளியில் காட்டிக் கொள்வார்கள். வெளிப்பார்வைக்கு அவர்கள் தன்னடக்கம் கொண்டவர்களாகவும், புனிதமானவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டு தங்கள் வாயினால் அறம் சார்ந்த பேச்சுகளைத் அர்த்தமில்லாமல் உதிர்க்கிறார்கள். உண்மையில் அவர்களிடம் அனைத்துமே காணப்படும், ஆனால் உண்மையான அறம் மட்டும் காணப்படாது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, வேடனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பெரும் ஞானம் கொண்ட அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "அறம்சார்ந்த நடத்தையை நான் எப்படி அறிவது?  ஓ! அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனே, நீ அருளப்பட்டிரு. நான் இதை உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ மேன்மையான ஆன்மா கொண்டவனே, அது குறித்த உண்மைகள் அனைத்தும் எனக்குச் சொல்" என்று கேட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட வேடன், "ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேள்விகள், தானம், துறவு, வேதங்கள், சத்தியம் ஆகிய ஐந்தும் புனிதமானவை, இவை அறம் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் என்றும் இருக்கும். காமம், கோபம், பேராசை, குறுக்குபுத்தி ஆகியவற்றை வென்று, அறம் சார்ந்த ஒன்று என்பதாலேயே அந்த அறத்தில் இன்புறுபவர்களே உண்மையில் அறம்சார்ந்தவர்களின் புகழ்ச்சிக்குத் தகுதியானவர்களும், அறம்சார்ந்தவர்களும் ஆவர். வேள்விகளுக்கும், வேத கல்விக்கும் தங்களை அர்ப்பணிக்கும் இம்மனிதர்கள் சுதந்திரமான நடத்தையற்றவர்களாவர். அவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் ஆகியோரின் நடத்தைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். இதுவே {நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்களைப் பின்பற்றுவதே} உண்மையில் அறம்சார்ந்தவர்களின் இரண்டாவது பண்பு ஆகும்.

பெரியவர்களுக்காகக் காத்திருத்தல், சத்தியம், கோபத்தில் இருந்து விடுதலை, தானம் ஆகிய நான்கும், ஓ! அந்தணரே {கௌசிகரே}, அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதாகும். நற்பெயர் பெறுவதற்காக ஒரு மனிதன், அறம் சார்ந்த நடத்தையில் தனது இதயத்தை நிலைநிறுத்துகிறான். அப்படி அதை உறுதியாகப் பற்றுவது கடினமானதும் அடைவதற்கு அரிதுமாகும். ஆனால் மேற்சொன்ன நான்கு அறங்களையும் செய்தால் அதை {நற்பெயரை} அடையலாம். வேதங்களின் சாரம் சத்தியமாகும். சத்தியத்தின் சாரம் தன்னடக்கமாகும். தன்னடக்கத்தின் சாரம் உலக இன்பங்களைத் துறப்பதாகும். இவை அனைத்தையும் அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் காணலாம். மனிதர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையின் வடிவங்களைக் கேலி செய்யும் ஏமாற்றுகர முட்டாள்களைப் பின்பற்றுபவர்கள், அந்தப் பாவ வழியில் நடந்ததற்காக அழிவுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். எனினும், நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் அறம்சார்ந்தவர்களும், சுருதிகளுக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், உலக இன்பங்களைத் தவிர்த்து அறத்தைப் பின்பற்றுபவர்களும் {நல்லொழுக்கத்துடன் இருப்பவர்களும்}, உண்மையில் அறத்தின் சுவடுகளில் நடந்து உண்மையான தர்மத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். தங்கள் குருக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களும், சாத்திரங்களின் உணர்வுகளைப் பொறுமையுடனும் கவனத்துடனும் சிந்தித்துப் பார்ப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இவையே உயர்ந்த நுண்ணறிவை அடையச் சரியாக வழிகாட்டுபவையாகும்.

நாத்திகர்கள், அறத்தின் வரம்புகளை மீறுபவர்கள், தீய ஆன்மாக்கள், பாவகர வாழ்வு வாழ்பவர்கள் ஆகியோரைக் கைவிட்டு, அறம்சார்ந்தவர்களை மதித்து ஞானம் அடைய முயற்சி செய்வீராக. காமம் மற்றும் மோகம் ஆகியவை, வாழ்வு என்ற நதியில் இருக்கும் சுறாக்கள் போன்றவை; ஐம்புலன்களே {அங்கு} நீராக இருக்கின்றன. நீர் பொறுமை என்ற படகைக் கொண்டு, திரளான உடல் இருப்பைத் (இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறத்தலைத்} தவிர்த்து, அந்த {பிறவி} நதியின் அடுத்தக் கரைக்கு கடந்து செல்வீராக. அறிவார்ந்த கொள்கை மற்றும் {நல்லதைப்} பிரித்தெடுத்தலைப் பயிலும் தலைமை அறமானது, படிப்படியாக {நம்மிடம்} சேர்க்கப்படும்போது, வெள்ளைத் துணியில் இருக்கும் சாயம் போல அழகாக இருக்கிறது. சத்தியம், எவருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் உயர்ந்த நன்மைகளைச் செய்யும் அறங்களாகும். இவ்விரண்டில் கடைசியானது {அஹிம்சை}, உண்மையை {சத்தியத்தை} அடிப்படையாகக் கொண்ட முக்கியமான அறமாகும். நமது உளவியல், உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போதே, சரியாக இயங்குகிறது. அறம்பயில்வதில், உண்மையே உயர்ந்த மதிப்புடையதாகும்.

நடத்தையில் சுத்தம் என்பது, நல்ல மனிதர்கள் அனைவரின் குணமாகும். புனிதமான வாழ்வுக்காக {மற்றவரிலிருந்து} வேறுபட்டிருப்பவர்கள், நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் ஆவர். அனைத்து உயிரினங்களும் தங்கள் தன்மைக்குகந்த உள்ளார்ந்த நடத்தை கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. தன்னடக்கம் இல்லாத பாவிகள் காமத்தையும், கோபத்தையும், பிற தீங்குகளையும் அடைகிறார்கள். அறச்செயல்கள் அனைத்தும் நீதியில் இருந்தே தோன்றுகின்றன என்பது தொன்றுதொட்டு வரும் விதியாகும். அநீதியான நடத்தைகள் அனைத்தும் பாவமே என்று புனிதமானவர்களால் சொல்லப்பட்டுள்ளது. கோபம், கர்வம், இறுமாப்பு, பகைமை ஆகியவற்றால் இயக்கப்படாமல், அமைதியாக, வெளிப்படையாக {நேர்முகமாக} இருப்பவர்கள் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்கள். மூன்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளை ஊக்கமுடன் செய்பவர்களும், ஞானம் கொண்டவர்களும், சுத்தமான நல்லொழுக்கம் கொண்டவர்களும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களும், பெரியவர்களைக் கவனிப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாவார்கள். பெரும் சக்தி கொண்ட அத்தகைய மனிதர்களின் செயல்களையும், நடத்தைகளையும் {நாம்} அடைவது மிகக் கடினமாகும். தாங்கள் செய்யும் {நற்}செயல்களின் மூலமாகவே ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான். அதன் தொடர்ச்சியாகப் பாவம் தானாக அழிகிறது. நன்னடத்தை எனும் அறம் அற்புதமானது, பழமையானது, மாற்றமுடியாதது, நித்தியமானது; இவ்வறத்தைப் புனிதமாக நோற்கும் ஞானிகள் சொர்க்கத்தை அடைகிறார்கள். தெய்வத்தின் இருப்பை நம்பும் மனிதர்கள், போலிப்பெருமைகளில் இருந்து விடுபட்டவர்கள், புனிதமான சாத்திரங்களை அறிந்தவர்கள், மறுபிறப்பாளரை (இரு பிறப்பாளரை = பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகியோரை} மதிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைகிறார்கள்.

புனிதமான மனிதர்களில் வேதங்கள் கற்பிக்கும் உயர்ந்த அறம், தர்மசாத்திரங்கள் கற்பிக்கும் அறம், அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} நடத்தை {கற்பிக்கும் அறம்} என மூன்று வழிகளில் அறம் வேறுபட்டிருக்கிறது. ஞானம் அடைதல், புண்ணிய இடங்களுக்குப் புனிதப் பயணம், சத்தியம், பொறுமை, சுத்தம், வெளிப்படையான தன்மை {கபடமின்மை} ஆகியவை அறம் சார்ந்த நடத்தையைக் குறிக்கின்றன. அறம் சார்ந்த ,அனைத்து உயிர்களிடமும் எப்போதும் அன்புடனும், மறுபிறப்பாளர்களிடம் நன்றாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் எந்த உயிருக்கும் தீங்கை விளைவிக்கமாட்டார்கள் {அஹிம்சையை மேற்கொள்வார்கள்}, முரட்டுத்தனமாகப் {கொடுஞ்சொல்} எப்போதுமே பேசமாட்டார்கள். செய்யும் நல்ல மற்றும் தீய காரியங்கள் தரும் பலன்களின் விளைவுகளை நன்கு அறிந்த நல்ல மனிதர்கள், அறம் சார்ந்தவர்களால் பாராட்டப்படுகின்றனர். நீதிமானாக, நன்னடைத்துக் கொண்டவனாக, அறம் கொண்டவனாக, அனைத்து உயிருக்கும் நன்மை விரும்புபவனாக, அறத்தின் பாதையில் உறுதியாக இருப்பவனாக, சொர்க்கத்தை வென்றவனாக, தானம் செய்பவனாக, தன்னலமில்லாதவனாக, அப்பழுக்கற்ற குணம் கொண்டவனாக, துன்புறுபவர்களுக்கு உதவுபவனாக, கற்றவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாக, துறவை மேற்கொள்பவனாக, அனைத்து உயிர்களிடமும் அன்புள்ளவனாக இருப்பவர்களை அறம்சார்ந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

தானம் செய்பவர்கள் இவ்வுலகிலும், (இதற்குப் பின் வரும்) அருள் உலகங்களிலும் செழிப்புடன் இருப்பார்கள். நல்ல மனிதர்களால் உதவிக்கு அழைக்கப்படும் அறம் சார்ந்த மனிதன், தனது மனைவி மற்றும் வேலையாட்களின் வசதிகளை இழந்தாலும் கூட, மிகுந்த சிரமப்பட்டாவது அவர்களுக்கு {உதவி கேட்டவர்களுக்கு} பிச்சையிட வேண்டும். தனது நன்மை, அறம் மற்றும் உலகத்தின் வழிகள் ஆகியவற்றில் ஒரு கண் வைத்திருக்கும் நல்ல மனிதர்கள், இவ்வழியிலேயே செயல்படுகின்றனர். எனவே அவர்களின் அறம், முடிவிலா காலத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நல்ல மனிதர்களிடம் இருக்கும் சத்தியம், அஹிம்சை, நன்னெறி, எவருக்கும் தீங்கிழையாமை, அகந்தையின்மை, அடக்கம், {உலகப்பற்று} விலக்கல், சுயக்கட்டுப்பாடு, ஆசையின்மை, ஞானம், பொறுமை, அனைத்துயிர்களிடத்திலும் அன்பு, தீயவை மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டிருக்கும் குணம் ஆகியவையே {இந்த} உலகத்திற்குச் சாட்சியாக இருக்கின்றன. ஒரு மனிதன் வேறு எவருக்கும் தவறு இழைக்கக்கூடாது, அவன் பிச்சையிட {தர்மகாரியங்களில் ஈடுபடவேண்டும்} வேண்டும், எப்போதும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்ற மூன்றும் சேர்ந்ததே, அறம் சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது.

தீர்மானமான நம்பிக்கைகளும், அறம்சார்ந்த நடத்தையும், உயர்ந்த ஆன்மாவும், அனைவரிடமும் அன்பு கொண்ட, இரக்கமும் நிறைந்த நல்ல மனிதர்கள், இவ்வுலகில் மனநிறைவு கொண்டு அறத்தின் சரியான பாதையை அடைவார்கள். தீயவற்றிலிருந்து விடுதலை, பொறுமை, மன அமைதி, மன நிறைவு, இன்சொல், ஆசை மற்றும் கோபத்தைக் கைவிடுதல், அறம்சார்ந்த நடத்தை, புனிதமான சாத்திர விதிகளின் படியான கட்டுப்பாடான செயல்கள் ஆகியவையே அறம்சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது. அறத்தில் நிலைத்திருப்பவர்கள் இந்த அறநடத்தை விதிகளைப் பின்பற்றுகிறார்கள். மனித நடத்தைகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களில் வரும் வேற்றுமை அறிதல் மற்றும் ஞானம் அடைதல் ஆகியவற்றின் உச்சியை அடைந்தவர்கள், மிகவும் அறம் சார்ந்தவர்களாகவோ, நேர்மாறானவர்களாகவோ {அறமற்றவர்களாகவோ} இருந்து பெரும் ஆபத்துகளில் இருந்து தப்புவார்கள். ஓ! பெரும் அந்தணரே {கௌசிகரே}, இப்படியே அற நடத்தை குறித்து ஓர் அறிமுகத்துடன், எனது ஞானத்தின் படியும், நான் கேள்விப்பட்டதன் படியும், இவை அனைத்தையும் உமக்கு விவரித்திருக்கிறேன்" என்றான் வேடன் {தர்மவியாதன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


வேடனிடம் சென்ற கௌசிகர்! - வனபர்வம் பகுதி 206அ

Kausika went to the fowler! | Vana Parva - Section 206a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

கற்புக்கரசியின் சொல் கேட்ட கௌசிகர், வேடனை {தர்மவியாதனைத்} தேடிச் செல்வது; அவ்வேடன் கௌசிகருக்கு அனைத்து அறங்களையும் சொல்வது…

கௌசிகரும் வேடனும் {தர்மவியாதரும்}
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தொடர்ந்து அந்தப் பெண்ணின் சொற்பொழிவை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகர் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு, குற்ற உணர்வு கொண்ட மனிதரைப் போல இருந்தார். அறநெறிகள் மற்றும் அறத்தின் நுட்பமான வழிகளைக் குறித்துத் தியானித்த அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, "அந்த மங்கை சொன்னதை மரியாதையுடன் நான் ஏற்க வேண்டும். எனவே நான் மிதிலைக்குச் செல்ல வேண்டும். நிச்சயம் அந்நகரத்தில் {மிதிலையில்} ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனும், அறம் மற்றும் அறநெறிகளின் மர்மங்களை அறிந்தவனுமான வேடன் இருப்பான். இந்த நாளிலேயே நான் துறவை செலவமாகக்கொண்ட அவனிடம் {வேடனிடம்} அறம் குறித்து விசாரிக்கச் செல்ல வேண்டும்" என்று சொன்னார். பெண் கொக்கின் மரணத்தை அறிந்த அவளது {கற்புக்கரசியின்} ஞானத்தைக் கொண்டும், அவள் சொன்ன இனிமையான அற்புதமான சொற்களைக் கொண்டும், அவருக்கு {கௌசிகருக்கு}, அவள் மேல் இருந்த நம்பிக்கை உறுதியானது. இப்படிச் சிந்தித்த கௌசிகர் அவள் சொன்ன அனைத்தையும் மரியாதையுடன் நினைத்துப் பார்த்து ஆவல் நிறைந்து மிதிலைக்குப் பயணப்பட்டார்.


பல காடுகளையும், கிராமங்களையும், நகரங்களையும் கடந்து சென்று கடைசியாக {மன்னன்} ஜனகனால் ஆளப்பட்ட மிதிலையை அடைந்தார் {கௌசிகர்}. பல்வேறு நம்பிக்கைகள் {மதங்களுக்காகக் கூட இருக்கலாம்} சம்பந்தமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்நகரத்தைக் கண்டார். வேள்விகள் மற்றும் விழாக்களின் சத்தங்கள் நிறைந்த அந்த அழகான நகரம் {மிதிலை} அற்புதமான வாயில்களுடன் இருப்பதை அவர் கண்டார். அது {அந்நகரம் மிதிலை} அரண்மனை போன்ற வசிப்பிடங்களால் நிறைந்து, அனைத்து பக்கங்களிலும் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது; கர்வப்படுவதற்க் கென்று அற்புதமான பல கட்டடங்களை அந்நகர் {மிதிலை} கொண்டிருந்தது. காண்பதற்கினிய அந்நகரத்தில் {மிதிலையில்} எண்ணிலடங்கா தேர்களும் இருந்தன. அதன் தெருக்களும் சாலைகளும் நிறைய இருந்தன.. அவை சரியாகப் போடப்பட்டிருந்தன. பலவற்றில் வழிநெடுக கடைகளாக இருந்தன. அது குதிரைகள், ரதங்கள், யானைகள், போர்வீரர்கள் என நிறைந்திருந்தது. அந்நகரத்தின் குடிமக்கள் ஆரோக்கியமானவர்களாகவும், மகிழ்ச்சிகரமானவர்களாகவும் எப்போதும் ஏதாவதொரு விழாவில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தனர். அந்த நகரத்தில் நுழைந்ததும், அந்த அந்தணர் {கௌசிகர்} பலவற்றைக் கண்டார்.

அங்கே {மிதிலையில்}, அந்த அந்தணர் {கௌசிகர்}, அறம்சார்ந்த வேடனைக் {தர்மவியாதனைக்} குறித்து விசாரித்தார். சில இருபிறப்பாள மனிதர்கள் அவரைக் குறித்துச் சொல்லினர். அந்த இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} சொன்ன இடத்திற்குச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, அந்த வேடன் கசாப்புக்கடை முற்றத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தத் தவசியான வேடன் அப்போது மான் இறைச்சியையும், எருமை இறைச்சியையும் விற்றுக் கொண்டிருந்தான். {இறைச்சியை} விலைக்கு வாங்குவோர், வேடனைச் சுற்றி பெரிய படையாகக் கூடியிருந்ததால், கௌசிகர் சற்றுத் தொலைவில் நின்றார். அந்த அந்தணர் தன்னைக் காணவே வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்ட வேடன், திடீரெனத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அந்த அந்தணர் {கௌசிகர்} இருந்த அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அவரை {கௌசிகரை} அணுகினான். வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, "ஓ! புனிதமானவரே! நான் உம்மை வணங்குகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} உமக்கு நல்வரவு. நீர் அருளப்பட்டிரும். நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடும். "மிதிலைக்குச் செல்லும்" என்ற கற்புள்ள பெண்ணின் வார்த்தைகளை நான் அறிவேன். நீர் என்ன காரியத்திற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதையும் நான் அறிவேன்" என்றான். வேடனின் {தர்மவியாதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {கௌசிகர்} ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, "உண்மையில் இது நான் காணும் இரண்டாவது அதிசயமாகும்!" என்று நினைத்தார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "ஓ! பாவமற்றவரே {கௌசிகரே} உமக்குத் தகாத இடத்தில் நீர் இப்போது நின்று கொண்டிருக்கிறீர். ஓ! புனிதமானவரே, நீர் விரும்பினால், நாம் எனது இல்லத்திற்குச் செல்லலாம்" என்றான் {வேடன் தர்மவியாதன்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்படியே ஆகட்டும்" என்று அந்த அந்தணர் மகிழ்ச்சியுடன் அவனிடம் சொன்னார். அதன்பேரில் அந்த வேடன், தனக்கு முன்னால் அந்த அந்தணரை நடக்க விட்டு தனது இல்லத்துக்குச் சென்றான். காண்பதற்கினிய இல்லத்தில் நுழைந்த அந்த வேடன், தனது விருந்தாளிக்கு {கௌசிகருக்கு} ஆசனத்தைக் கொடுத்து மரியாதையுடன் நடத்தினான். பிறகு அவன் {தர்மவியாதன்} கால்களையும் முகத்தையும் கழுவி கொள்ள நீரும் கொடுத்தான். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்}, வசதியாக அமர்ந்தார். பிறகு அவர் {கௌசிகர்}, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "உமது தொழில் உமக்குப் பொருத்தமானது அல்ல எனத் தெரிகிறது. ஓ! வேடா, இத்தகு கொடுந்தொழிலை நீ செய்ய நேர்வதைக் கண்டு நான் ஆழமாக வருந்துகிறேன்" என்றார். அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வேடன், "இது எனது குலத்தொழில். நான் இதை எனது பாட்டன்கள் மற்றும் முப்பாட்டன்களிடம் இருந்து மரபுரிமையாகச் செய்து வருகிறேன். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட எனது கடமைகள் குறித்து எனக்காக நீர் வருந்தாதீர். படைப்பாளனால் முன்பே எனக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காக, நான் எனக்கு மேன்மையானவர்களுக்கும், முதியவர்களுக்கும் கவனமாகச் சேவை செய்கிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நான் எப்போதும் உண்மையே பேசுகிறேன், பிறரை எப்போதும் பகைப்பதில்லை; எனது சக்திக்குத்தக்க சிறந்த வகையில் தானம் செய்கிறேன். தேவர்கள், விருந்தினர்கள், என்னை நம்பியிருப்பவர்கள் ஆகியோருக்குச் சேவை செய்து போக மீதம் வருவதிலேயே {மீதம் வருவதை உண்டே} நான் வாழ்கிறேன்.

நான் எதைக் குறித்தும் சிறுமையாகவோ பெருமையாகவோ பேசுவதில்லை; எதையும் நிந்திப்பதில்லை. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முந்தைய பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனைத் தொடர்கின்றன. இவ்வுலகத்தில் வேளாண்மை {விவசாயம்}, {ஆடு, மாடு போன்ற} கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகிய மூன்று முதன்மைத் {முக்கிய} தொழில்கள் இருக்கின்றன. மறு உலகத்தைப் பொறுத்தவரை, மூன்று வேதங்கள், ஞானம், அறநெறி அறிவியல் ஆகியன பயனளிக்கக்கூடியவை. (மூன்று வகையினருக்கும் {வர்ணத்தாருக்கு}} சேவை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. வேளாண்மை வைசியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. போர்த்தொழில் க்ஷத்திரியர்களுக்கும், பிரம்மச்சரிய நோன்பு பயில்தல், துறவு, மந்திரங்கள் உச்சரித்தல், சத்தியம் ஆகியன பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. சரியான கடமைகளைச் செய்யும் குடிமக்களை, ஒரு மன்னன் அறம் சார்ந்து ஆள வேண்டும். தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து விழுந்தவர்களைச் சரியான பாதையில் அவன் {மன்னன்} செலுத்த வேண்டும்.

தங்கள் குடிமக்களுக்குத் தலைவர்களாக இருப்பதால் மன்னர் அஞ்சத்தக்கவர்களாக இருக்கிறார்கள். மான்களைக் கணைகளால் அடக்குவதைப் போல, தங்கள் கடமைகளில் இருந்து விழுந்த குடிமக்களை அவர்கள் {மன்னர்கள்} அடக்க வேண்டும். ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட கடமைகளில் தவறும் ஒரு குடிமகன் கூட ஜனகனின் இந்த நாட்டில் கிடையாது. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நால்வகை மக்களும் தங்களுக்குரிய கடமைகளை உறுதியுடன் பற்றுகிறார்கள். தீயவர்களை மன்னன் ஜனகன் தண்டிக்கிறான். அவன் தனது சொந்த மகனாகவே இருப்பினும் அவனைத் தண்டிக்கிறான். ஆனால், அறம்சார்ந்தவர்களுக்கு அவன் {ஜனகன்} தீங்கிழைப்பதில்லை. நல்ல திறமையான ஒற்றர்களை நியமித்து, நடுநிலை தவறாத பார்வையுடன் அனைத்தையும் கவனிக்கிறான். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} செழிப்பு, அரசு, தண்டிக்கும் திறன் ஆகியவை க்ஷத்திரியர்களுக்கு உரியது. தங்களுக்குரிய கடமைகளைப் பயில்வதன் மூலம் மன்னர்கள் உயர்ந்த செழிப்பை விரும்புகிறார்கள். ஒரு மன்னனே நால் வகை மனிதர்களுக்கும் பாதுகாவலனாக இருக்கிறான்.

ஓ! அந்தணரே {கௌசிகரே}, என்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் பன்றி மற்றும் எருமை இறைச்சியை விற்கிறேன். அவ்விலங்கள் என்னால் கொல்லப்படுவதில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, நான் மற்றவர்களால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியையே விற்கிறேன். எப்போதுமே நான் ஊண் {இறைச்சி} உண்பதில்லை; அவளது {ருது} காலத்தைத் தவிர மற்ற காலங்களில் நான் எனது மனைவியிடம் செல்வதில்லை; ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நான் பகலில் {உண்ணா} விரதமிருந்து, இரவில் உண்கிறேன். ஒருவனின் வகைக்கான நடத்தை தீயவையாக இருந்தாலும், அவன் நன்னடத்தைக் கொண்டவனாக இருக்கலாம். அப்படியே ஒரு மனிதன் தொழிலால் விலங்குகளைக் கொல்பவனாக இருப்பினும், அவன் அறம் சார்ந்தவன் ஆகிறான். மன்னர்களில் பாவச்செயல்களின் தொடர்ச்சியாகவே அறம் பெருமளவு குறைந்து, பாவம் வளர்கிறது. இவை அனைத்தும் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களிடம் ஏற்பட்டால், அது நாட்டை அழிக்கிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, அப்போதுதான், காணக் கொடூரமானவர்கள், குள்ளர்கள், கூனர்கள், கனத்த தலை கொண்ட மனிதர்கள், குருடர்கள், செவிடர்கள், கோணல் கண் கொண்டவர்கள், இனப்பெருக்க சக்தியை இழந்தவர்கள் {நபும்சகர்கள்} ஆகியோர் பிறக்க ஆரம்பிக்கின்றனர். மன்னர்களின் பாவங்களினாலேயே எண்ணிலடங்கா துயர்களைக் குடிமக்கள் சந்திக்கின்றனர். ஆனால், எங்கள் மன்னன் ஜனகன், அனைத்துக் குடிமக்கள் மீதும் அறம்சார்ந்த பார்வையைச் செலுத்துகிறான். உரிய கடமைகளைத் தானே செய்பவர்களை அவன் எப்போதும் அன்புடன் நடத்துகிறான்.

என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நற்செயல்கள் புரிகிறேன். என்னை நிந்திப்பவர்களையும் நான் நிந்திப்பதில்லை. தங்களுக்கு உரிய கடமைகளைத் தாங்களே செய்யும் மன்னர்கள், நன்மையான நேர்மையான செயல்களைப் பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்கள், தங்கள் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், எப்போதும் தயாராகச் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆகியோர் எப்போதும் தங்கள் சக்தியைத் தாங்குவதற்கு எதையும் நம்பியிருப்பதில்லை. தனது சக்திக்குத் தக்க சிறந்த வகையில் அன்னதானம் செய்வது, வெப்பம் மற்றும் குளிரில் உறுதியுடன் இருப்பது, அறத்தில் உறுதியோடு இருப்பது, அனைத்து உயிர்களிடமும் அன்புடன் இருப்பது ஆகிய இந்தக் குணங்கள் அத்தனையும், இவ்வுலகத்தில் இருந்து தனித்து இருப்பவனைத் தவிர வேறு எவரிடமும் காண முடியாது. ஒருவன் தனது பேச்சில் பொய்மையைத் தவிர்த்து, நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ, துன்பத்தாலோ ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. நல்ல காலத்தில் அளவுக்கதிகமான இன்பத்தையும், கெட்ட காலத்தில் அளவுக்கதிகமான துன்பத்தையும் ஒருவன் அடையக்கூடாது. வறுமை வரும்போது ஒருவன் தாழவோ, அல்லது அறத்தின் பாதையைக் கைவிடவோ செய்யக்கூடாது. ஒருவன் எப்போதாவது தவறு செய்தாலும், அதே போன்ற தவறை மீண்டுமொருமுறை அவன் செய்யக்கூடாது. தான் நன்மை என்று கருதும் காரியத்திலேயே ஒருவன் தனது ஆன்மாவை ஊக்கப்படுத்த வேண்டும்"

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top