Showing posts with label பூரிஸ்ரவஸ். Show all posts
Showing posts with label பூரிஸ்ரவஸ். Show all posts

Monday, October 16, 2017

சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 24

I fear Shakuni! | Stri-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 09) [ஸ்திரீ பர்வம் - 15]


பதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி ...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) "ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)

Saturday, September 10, 2016

பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 142

Satyaki killed Bhurisravas! | Drona-Parva-Section-142 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 58)

பதிவின் சுருக்கம் : நியாயமற்ற காரியத்தைச் செய்ததாக அர்ஜுனனைக் கடிந்து கொண்ட பூரிஸ்ரவஸ்; தன் செயல்பாட்டை நியாயப்படுத்திய அர்ஜுனன்; அர்ஜுனனின் நியாயத்தைக் கேட்டு அமைதியடைந்த பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு அருள் வழங்கிய கிருஷ்ணன்; பிராயோபவேசத்தில் அமர்ந்திருந்த பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி; தன் செய்கையை நியாயப்படுத்திய சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததுமான (பூரிஸ்ரவஸின்) அந்தக் கரம் (இப்படி வெட்டப்பட்டு), அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துயரத்தை அளிக்கும் வகையில் கீழே பூமியில் விழுந்தது.(1) உண்மையில், சாத்யகியின் தலையை வெட்ட இருந்த {பூரிஸ்ரவஸின்} அந்தக் கரம், {பூரிஸ்ரவஸின் கண்களுக்குக்} காணப்படாத அர்ஜுனனால் வெட்டப்பட்டு, ஐந்து தலை கொண்ட பாம்பொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(2) பார்த்தனால் {அர்ஜுனனால்} தான் திறனறுபட்டதைக் கண்ட அந்தக் குரு {கௌரவப்} போர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, சாத்யகியிடம் இருந்த பிடியைக் கைவிட்டுக் கோபத்தால் நிறைந்து பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கடிந்து பேசினான்.(3)


பூரிஸ்ரவஸ் {அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னால் காணப்படாதவனாகவும், என்னுடன் (போரில்) ஈடுபடாதவனுமாக இருந்த நீ, என் கரத்தை வெட்டியதால் ஈவிரக்கமற்ற கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்.(4) தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரனிடம், “பூரிஸ்ரவஸ், போரில் வேறொருவனுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் என்னால் கொல்லப்பட்டான்” என்று நீ சொல்ல வேண்டியிருக்காதா?(5) உயர் ஆன்ம இந்திரனாலோ, ருத்ரனாலோ, துரோணராலோ, கிருபராலோ உனக்கு இப்படிப்பட்ட ஆயுதப் பயன்பாடு கற்றுக் கொடுக்கப்பட்டதா?(6) இவ்வுலகில் யாவரையும் விட ஆயுதங்களின் பயன்பாடு குறித்த விதிகளை நன்கறிந்தவன் நீயே. அப்படியிருக்கையில், போரில் உன்னுடன் ஈடுபடாத ஒரு போர்வீரனின் கரத்தை ஏன் நீ வெட்டினாய்?(7) கவனிக்காதவனையோ, பயந்தவனையோ, தேரற்றவனாக ஆக்கப்பட்டவனையோ, உயிரை, அல்லது பாதுகாப்பை இரந்து {கெஞ்சிக்} கேட்பவனையோ, துயரில் வீழ்ந்தவனையோ நீதிமான்கள் ஒரு போதும் தாக்குவதில்லை.(8) அப்படியிருக்கையில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இழிந்தவனுக்கே தகுந்ததும், பொல்லாதவனால் மட்டுமே செய்யப்படுவதுமான இந்தப் பாவம் நிறைந்த, மிகவும் தகுதியற்ற செயலை ஏன் நீ செய்தாய்?(9) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, மரியாதைக்குரிய ஒருவன், மரியாதைக்குரிய செயலை எளிதாகச் செய்துவிடுவான். எனினும், மதிப்பற்ற ஒரு செயலைச் செய்வது மதிப்புமிக்க ஒருவனுக்கு மிகக் கடினமாகும்.(10) யாருடன் ஒரு மனிதன் திரிகிறானோ, அவனது நடத்தையையே அவன் விரைவில் பிடித்துக் கொள்வான். ஓ! பார்த்தா, இதுவே உன்னில் காணப்படுகிறது.(11) நல்ல நடத்தையைக் கொண்டவனாக, சிறந்த நோன்புகளை நோற்றவனாக, அரசபரம்பரையைச் சேர்ந்தவனாக, அதிலும் குறிப்பாக குரு குலத்தில் பிறந்தவனாக இருப்பினும், க்ஷத்திரிய கடமைகளில் இருந்து எவ்வாறு நீ விலகினாய்?(12) விருஷ்ணி போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நீ செய்த இந்த அற்பச் செயல் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஆலோசனைகளுக்கு இணக்கமாகவே செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. உன்னைப் போன்ற ஒருவனுக்கு இத்தகு செயல் பொருந்தாது.(13) வேறொருவனுடன் போரில் ஈடுபட்டுக் கவனமற்று இருக்கும் ஒருவனுக்கு, கிருஷ்ணனின் நண்பனைத் தவிர வேறு எவனால் இத்தகு குற்றத்தை இழைக்க முடியும்?(14) பாவச்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், நிந்திக்கத்தக்க நடத்தைக்கு இயல்பிலேயே அடிமையான தீய க்ஷத்திரியர்களாவர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனக்கு முன்மாதிரியாக அவர்களை ஏன் நீ கொண்டாய்? [1] [2]" என்றான் {பூரிஸ்ரவஸ்}.15

[1] "வங்க உரைகளில் முவ்வரியாக (triplet) இவ்வாறே அச்சிடப்பட்டுள்ளது. தீய க்ஷத்திரியர்கள் என்பது மூலத்தில் விராத்யர்கள் {Vratas) என்று இருக்கிறது. முறையான நேரத்தில் சாத்திரப்பூர்வமான வழக்கமான சடங்குகளைச் செய்து கொள்ளாத ஒரு பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ விராத்யனாகிறான். வீழ்ந்த {தவறு செய்த} மனிதன் என்று அழைக்கப்படும் நிலைக்கு அவன் ஆளாகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] வேறொரு பதிப்பில், "பார்த்தா, விராத்யர்களும், மிகவும் இகழத்தக்க செய்கையை உடையவர்களும், இயற்கையாகவே நிந்திக்கப்பட்டவர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் உன்னால் எவ்வாறு நிர்ணயம் சொல்லுகிறவர்களாகச் செய்யப்பட்டார்கள்?" என்றிருக்கிறது.

போரில் இப்படிக் கேட்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பூரிஸ்ரவஸுக்கு மறுமொழியாக, "ஓ! தலைவா {பூரிஸ்ரவஸ்}, மூடத்தனமான இவ்வார்த்தைகள் யாவும் உன்னால் சொல்லப்படுவதால், உடல் பலவீனத்தினால் ஒருவனது அறிவும் சிதைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது [3].(16) ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்}, என்னையும் நீ நன்றாக அறிந்தாலும், உன்னால் எவ்வாறு எங்களை இப்படிக் கடிந்து கொள்ள முடிகிறது? போர்விதிகளையும், சாத்திரங்களின் பொருள் அனைத்தையும் அறிந்த நான், பாவச்செயல் எதையும் செய்ய மாட்டேன்.(17) இதை நன்றாக அறிந்தும், என்னை நீ நிந்திக்கிறாய். தொண்டர்கள், சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், உறவினர்கள், சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் ஆகியோரால் சூழப்பட்டவர்களாகவே க்ஷத்திரியர்கள் பகைவரோடு போரிடச் செல்வார்கள்.(18) அப்படித் தங்களைப் பின்தொடர்வோரை (பின்தொடர்வோரின் பலத்தை) நம்பியே அவர்கள் போரிடவும் செய்வார்கள்.(19) அப்படியிருக்கையில், என் சீடனும், அன்புக்குரிய சொந்தக்காரனும், விடுவதற்கு அரிதான உயிரையே துச்சமாக மதித்து எங்களுக்காகப் போரிடுபவனுமான சாத்யகியை நான் ஏன் காக்கக் கூடாது? [4](20) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, போரில் வெல்லப்பட முடியாதவனான சாத்யகி என் வலக்கரமாவான்.

[3] வேறொரு பதிப்பில், "முதுமையடைந்த மனிதன் தன்புத்தியையும் முதுமையடையச் செய்து கொள்கிறான்; இது வெளிப்படை" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பயனற்ற வகையில் என்னை நீ இப்படி நிந்திப்பதால், உடலின் சிதைவு மனிதர்களின் அறிவையும் சிதைக்கிறது என்பது தெளிவாகிறது" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

[4] "20ம் சுலோகம் முழுமையடையாமல் இருக்கிறது. பொருள் புரிந்து கொள்ளத்தக்க வகையில், 'நான் ஏன் காக்கக் கூடாது' என்ற வார்த்தைகளை நானே சேர்த்திருக்கிறேன். 21வது சுலோகத்தின் முதல் வரி 20வது சுலோகத்துடன் இலக்கண ரீதியாக இணைப்புடையதாகும். மோசமான வாக்கியக் கட்டுமானத்தைத் தவிர்க்கும்பொருட்டே இவற்றைத் தனி வாக்கியங்களாக வாசகருக்கு நான் அளிக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

போருக்குச் செல்லும் ஒருவன் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்வது தகாது.(21) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, வேறொருவனின் காரியத்தில் ஈடுபடும் ஒருவன், (அந்த வேறொருவனால்) பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் பாதுகாக்கப்படுவதால், போரின் தொடர்ச்சியில் மன்னனும் பாதுகாக்கப்படுகிறான்.(22) பெரும்போரில், சாத்யகி கொல்லப்படப்போகும் தருணத்தில், (அவனைக் காக்க முயற்சி செய்யாமல்) நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தால், என்னுடைய அத்தகைய புறக்கணிப்பின் காரணமாக ஏற்படும் சாத்யகியின் மரணத்தால் நான் பாவத்தையே அடைவேன்.(23) நான் சாத்யகியைக் காத்ததற்காக என்னிடம் ஏன் நீ கோபம் கொள்கிறாய்? ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, “வேறொருவனிடம் போரிட்டுக் கொண்டிருந்தாலும், உன்னால் நான் அங்கம் சிதைக்கப்பட்டேன்” என்று நீ என்னைக் கடிந்து கொள்கிறாய். அக்காரியத்தில் தவறாகத் தீர்மானித்தேன் என்றே நான் பதிலளிப்பேன்.

தேர்கள் மற்றும் யானைகள் நிரம்பியதும், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் மிகுந்ததும், கடும் சிங்க முழக்கங்களை எதிரொலிப்பதும், அகன்ற கடலுக்கு ஒப்பானதுமான படைக்கு மத்தியில், சில நேரங்களில் என் கவசத்தை அசைத்துக் கொண்டும், சில நேரங்களில் என் தேரில் ஏறிச் சென்றும், சில நேரங்களில் வில்லின் நாணை இழுத்துக் கொண்டும், நான் என் எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} ஒரே ஒருவனுடன் மட்டுமே போரில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியம் [5]? பலருடன் போரிட்ட அந்தச் சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வென்று களைத்துப் போயிருந்தான்.(24-28) அவனது விலங்குகளும் {குதிரைகளும்} களைத்திருந்தன. ஆயுதங்களால் பீடிக்கப்பட்டிருந்த அவனும் {சாத்யகியும்} உற்சாகமற்றவனாகவே இருந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியை அப்படிப்பட்ட சூழ்நிலையில் வென்று, அவனை உன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உனது மேன்மையை நீ வெளிக்காட்ட முனைந்தாய்.(29) அந்தப் போரில் உன் வாளால் சாத்யகியின் தலையை வெட்டவும் நீ விரும்பினாய்.(30) அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை என்னால் அலட்சியமாகப் பார்க்க முடியாது [6]. (அடுத்தவனுக்குத் தீங்கிழைக்கையில்) உன்னைக் குறித்துக் {உன் பாதுகாப்பில்} கவனமில்லாமல் இருந்ததால், உன்னையே நீ நிந்தித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன்னைச் சார்ந்த ஒருவனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(31)

[5] வேறொரு பதிப்பில், “குதிரைகளாலும், காலாட்களாலும் நெருங்கியதும், தேர்ப்படைகளும், யானைப்படைகளுமுள்ளதும், சிம்மநாதத்தினால் அதிகமான சப்தத்துடன் கூடியதும், ஆழ்ந்திருக்கின்றதுமான இந்தச் சேனாசமுத்திரத்தில் கவசம்பூண்டவனும், தேரின் மீதேறியிருக்கின்றவனும், எல்லா ஆயுதங்களையும் உடையவனும், எதிர்த்துப் போர் செய்யும் வீரனை எதிர்பார்த்திருக்கின்றவனும், தன்னைச் சேர்ந்த வீரர்களோடு கூடியவனும், அவ்வாறே ரணகளத்தில் பராக்ரமமிக்கவனுமான உனக்குச் சாத்யகியோடு சண்டையிடுவது எவ்வாறு தகுந்ததாகும்?” என்றிருக்கிறது. கங்குலியில் அர்ஜுனன் தன்னைக் குறித்துச் சொல்வதைப் போலுள்ளவை அனைத்தும் இதில் பூரிஸ்ரவஸ் குறித்தவையாகச் சொல்லப்பட்டுள்ளன. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "குதிரைகளும், காலாட்படை வீரர்களும் நிறைந்ததும், தேர்களையும் யானைகளையும் கொண்டதும், போராளிகளின் போர்க்கூச்சல்களை எதிரொலித்துக் கொண்டிருந்ததுமான தனது எதிரிகளின் படைக்கு மத்தியில், உனக்கு எதிராகத் தன் கவசத்தை அசைத்த சாத்யகி, தன் தேரில் ஏறிச் சென்று, தன் வில்லின் நாணை இழுத்து அந்த எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, ஒருவனோடு மட்டுமே போரிடுவது எப்படிச் சாத்தியமாகும்?" என்றிருக்கிறது. இந்த மூன்றிலும், முழுவதும் சாத்யகியையே குறிக்கும் மன்மதநாததத்தரின் வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

[6] “உண்மையில், ’இந்த நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை அலட்சியமாகக் காண எவனால் முடியும்?’ என்ற பொருள் படும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “அவ்வாறு கஷ்டநிலைமையை அடைந்திருக்கும் சாத்யகியைப் பார்த்து எவன் பொறுப்பான்?” என்றிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி (அர்ஜுனனால்) சொல்லப்பட்டவனும், வலிய கரங்கொண்ட வனும், சிறப்பானவனும், வேள்விக்கம்பத்தை {யூபத்தைத்} தன் கொடியில் பொறித்திருந்தவனுமான பூரிஸ்ரவஸ், யுயுதானனை {சாத்யகியைக்} கைவிட்டு, பிராயம் என்ற நோன்பின்படி {பிராயோபவேசம் செய்து} [7] இறக்க விரும்பினான்.(32) பல நற்செயல்களால் புகழ்பெற்றவனான அவன் {பூரிஸ்ரவஸ்}, பிரம்ம லோகத்தை அடைய விரும்பி தன் இடக்கையால் அம்புப்படுக்கையைப் {கணைகளாலான ஆசனத்தைப்} பரப்பி, அவற்றைப் {அம்புகளைப்} பாதுகாக்கும் தெய்வத்தின் மீது கவனமாகத் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்தான்.(33) தன் பார்வையைச் சூரியனிலும், தூய்மையான தன் இதயத்தைச் சந்திரனிலும் நிலைக்கச் செய்து, பெரும் உபநிஷதத்தை (மஹா உபநிஷத் மந்திரங்களை) நினைத்த பூரிஸ்ரவஸ் யோகத்தை மேற்கொண்டு பேசுவதை நிறுத்தினான் [8].(34)

[7] “பொதுவாக உணவனைத்தையும் விலக்கிச் சாவது. பிராயம் என்பது யோகத்தால் உடலில் இருந்து ஆன்மாவை விடுவித்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்” என இங்கே கங்குலி விளக்குகிறார்.

[8] வேறொரு பதிப்பில், "புண்யமான லக்ஷணங்களையுடைய பூரிஸ்ரவஸ் இடக்கையினால் அம்புகளைப் பரப்பிப் பிரம்மலோகத்தையடைய எண்ணங்கொண்டு பிராணன்களை வாயுக்களில் ஒடுக்கிச் சூரியனிடத்தில் கண்ணைச் செலுத்திப் பிரஸன்னமான மனத்தை ஜலத்தில்சேர்த்து மகோபநிஷத்தைத் தியானஞ்செய்து கொண்டு யோகாப்பியாஸத்துடன் பிரம்மத்தை மனனம் செய்யலானான்” என்றிருக்கிறது.

அப்போது படைகள் அனைத்திலும் இருந்த மனிதர்கள் யாவரும் கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} நிந்தித்து, மனிதர்களில் காளையான அந்தப் பூரிஸ்ரவஸைப் பாராட்டினர்.(35) நிந்திக்கப்பட்டாலும், அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் (இறந்து கொண்டிருக்கும் அந்த வீரனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு}) ஏற்பில்லாத எந்த ஒரு வார்த்தையையும் பேசவில்லை. யூபக்கொடி கொண்ட பூரிஸ்ரவஸும், தான் இப்படிப் புகழப்படுவதால் எந்த இன்பத்தையும் உணரவில்லை.(36) அப்போது, பல்குனன் என்றும் அழைக்கப்படும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உமது மகன்கள் இவ்வகையில் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாகவும், அவர்களின் வார்த்தைகளையும், பூரிஸ்ரவஸின் வார்த்தைகளையும் மனத்தில் கொண்டும், துயரத்துடனும், கோபமற்ற இதயத்துடனும், அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டும்படி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.{37, 38) அவன் {அர்ஜுனன்}, “மன்னர்கள் அனைவரும், என் பெருநோன்பான {மகாவிரதமான} ‘எங்கள் தரப்பினர் எவரும் என் கணைகளின் எல்லைக்குள் உள்ள வரையில், அவர்களைக் கொல்வதில் எவராலும் வெல்ல முடியாது’ என்பதை {என்ற என் சபதத்தை} அறிவர்.(39) ஓ யூபக் கொடியோனே {பூரிஸ்ரவஸ்}, இதை நினைவுகூரும் நீ என்னை நிந்தித்தல் தகாது. அறநெறி எதுவென அறியாத ஒருவன், பிறரை நிந்திப்பது முறையாகாது.(40) போரில் நன்கு ஆயுதம் தரித்திருந்த நீ, (ஆயுதமற்ற) சாத்யகியை கொல்லப்போகும் தருணத்தில், நான் உனது கரத்தை வெட்டியது அறநெறிக்கு முரணானதல்ல.(41) ஆனால், ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்}, ஆயுதமற்றவனும், தேரை இழந்தவனும், கவசம் நழுவியவனும், வெறும் பாலகனே ஆனவனுமான அபிமன்யுவின் கொலையை நேர்மையான எந்த மனிதன்தான் பாராட்டுவான்?” என்றான் {அர்ஜுனன்}.(42)

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட பூரிஸ்ரவஸ் தன் தலையால் தரையைத் தொட்டு, (வெட்டப்பட்டிருந்த தன் வலக்கரத்தை) தன் இடக்கரத்தால் காணிக்கையளித்தான் {அர்ஜுனன் எதிரில் போட்டான்}.(43) கண்கவரும் பிரகாசத்தைக் கொண்டவனும், யூபக் கொடியோனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தலையைத் தொங்கப் போட்டவாறே அமைதியாக இருந்தான்.(44) அப்போது அர்ஜுனன், “ஓ! சலனின் அண்ணனே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரிடமோ, வலிமைமிக்கோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீமரிடமோ, நகுலனிடமோ, சகாதேவனிடமோ நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாகவே நான் உன்னிடமும் {அன்பு} கொண்டுள்ளேன்.(45) என்னாலும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனாலும் கட்டளையிடப்படும் நீ, உசீநரனின் மகனான சிபி எங்கே இருக்கிறானோ, அந்த நல்லோரின் உலகங்களுக்குச் செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(46) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, “வேள்விகளையும், அக்னிஹோத்திரங்களையும் நீ தொடர்ச்சியாகச் செய்திருக்கிறாய். எனவே, காந்தியால் எப்போதும் சுடர்விடுவதும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட முதன்மையான தேவர்களாலும் விரும்பப்படுவதுமான என் தூய உலகங்களுக்குத் தாமதமில்லாமல் சென்று, எனக்கு இணையானவனாகி, கருடனால் சுமக்கப்படுவாயாக” என்றான்.(47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவஸால்} விடுவிக்கப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, எழுந்திருந்து, தன் வாளை உருவி கொண்டு, பூரிஸ்ரவஸின் சிரத்தைக் கொய்ய விரும்பினான்.(48) உண்மையில், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளித்தவனும், போரில் உணர்வுகள் அற்றுப் போனவனும், பாண்டுவின் மகனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனும், வெட்டப்பட்ட கையுடன் அமர்ந்திருந்தவனும், துதிக்கையற்ற யானைக்கு ஒப்பாக இருந்தவனும், சலனின் அண்ணனுமான பாவமற்ற அந்தப் பூரிஸ்ரவஸைச் சாத்யகி கொல்ல விரும்பினான்.(49) போர்வீரர்கள் அனைவரும் (அவனது நோக்கத்திற்காகப்) அவனை உரக்க நிந்தித்தனர். படைவீரர்கள் மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதும், கிருஷ்ணன், உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்}, பீமன், (அர்ஜுனனுடைய தேரின்) இருசக்கரங்களையும் பாதுகாத்தவர்கள் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ்), அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், விருஷசேனன் ஆகியோராலும், சிந்துக்களின் ஆட்சியாளனாலும் {ஜெயத்ரதனாலும்} கூடத் தடுக்கப்பட்ட போதிலும், அறிவை இழந்தவனான சாத்யகி, நோன்பை நோற்றுக் கொண்டிருந்த பூரிஸ்ரவஸைக் கொன்றான்.(50-52) உண்மையில், பார்த்தனால் {அர்ஜுனனால்} கை அறுபட்டவனும், தன் ஆன்மாவை உடலில் இருந்து விடுவிக்கப் பிராயத்தில் {பிராயம் என்ற நோன்பில்} அமர்ந்திருந்தவனுமான அந்தக் குரு போர்வீரனின் தலையைத் தன் வாளால் அறுத்தான் சாத்யகி.(53)

பார்த்தனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனான அந்தக் குருகுலத்தைத் தழைக்க வைத்தவனை {பூரிஸ்ரவஸைக்} கொன்றதற்காகச் சாத்யகியைப் போர்வீரர்கள் மெச்சவில்லை.(54) அந்தப் போரில் சக்ரனை {இந்திரனைப்} போன்ற பூரிஸ்ரவஸ், பிராய நோன்பை நோற்று அமர்ந்திருக்கையில் கொல்லப்பட்டதைக் கண்டும், அவனால் சாதிக்கப்பட்ட செயல்களால் வியப்படைந்தும், சித்தர்கள், சாரணர்கள், அங்கே இருந்த மனிதர்கள், ஏன் தேவர்களும் கூட அவனை {பூரிஸ்ரவஸைப்} புகழத் தொடங்கினர்.(55) உமது வீரர்களும் இக்காரியத்தை வாதிட்டுக் கொண்டே, "இது விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தவறன்று. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. எனவே, நாம் கோபமடைய வேண்டாம். கோபமே மனிதர்களின் கவலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.(56,57) விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பூரிஸ்ரவஸ் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இது {இக்குற்றம்} யாருடையது, அல்லது யாருடையதில்லை என்று ஆராய்வது பயனற்றதாகும். சாத்யகியே போரில் பூரிஸ்ரவஸின் மரணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்" என்றனர்.(58)

சாத்யகி, "பாவிகளான கௌரவர்களே, நீதி {அறம் / தர்மம்} என்ற ஆடையை மேலுக்குப் போர்த்திக் கொண்டு, இந்தப் பூரிஸ்ரவஸ் கொல்லப்படத்தகாதவன் என்று என்னிடம் நீங்கள் அறச்சொற்களில் {தர்ம வாதங்கள்} பேசுகிறீர்கள்.(59) எனினும், ஆயுதங்களை இழந்திருந்த பாலகனான சுபத்திரையின் மைந்தனை {அபிமன்யுவை} நீங்கள் கொன்ற போது உங்கள் நீதி {அறம்} எங்கே சென்றது?(60) 'போரில், உயிரோடு என்னைக் கீழே தூக்கிப் போட்டுச் சினத்துடன் தன் காலால் எவன் என்னைத் தாக்குவானோ, அவன் தவத்தைச் செய்பவனாகவே இருப்பினும், அந்தப் பகைவன் என்னால் கொல்லப்படுவான்' என நான் ஒரு குறிப்பிட்ட அளவு அகந்தையோடு சபதம் செய்திருக்கிறேன்.(61) கைகளோடும், கண்களோடும், முழுவதும் நலமாக மோதலில் போராடிக் கொண்டிருந்த என்னை இறந்தவன் என்றே நீங்கள் கருதினீர்கள். அஃது உங்கள் மூடத்தனமே. குருக்களில் காளையரே, என்னால் சாதிக்கப்பட்ட பூரிஸ்ரவஸின் படுகொலை முற்றிலும் முறையானதே. எனினும் பார்த்தர் {அர்ஜுனர்}, என் மீது கொண்ட பற்றாலும், (தன் தரப்பில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும்படி) தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றும்பொருட்டும் வாளைப் பிடித்திருந்த இவனது {பூரிஸ்ரவஸின்} கரத்தை வெட்டி என் புகழைக் களவாடிவிட்டார்.(64) எது விதிக்கப்பட்டுள்ளதோ அது நடக்கவே வேண்டும். இங்கே விதியே வேலை செய்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டிருக்கிறான். {இதில்} நான் என்ன பாவத்தை இழைத்துவிட்டேன்?(65) பழங்காலத்தில் பூமியில் வால்மிகி "ஓ! குரங்கே, பெண்கள் கொல்லப்படக்கூடாது என நீ சொல்கிறாய்.(66) எனினும், மனிதர்கள் எப்போதும் எதிரிகளுக்கு வலியை {துன்பத்தைக்} கொடுப்பதை உறுதியான கவனத்துடன் {பாதுகாப்புடன்} எக்காலத்திலும் சாதிக்க வேண்டும்" என இவ்வரிகளைப் பாடியுள்ளார்" என்றான் {சாத்யகி} [9].(67)

[9] வாலி ராமனால் மறைந்திருந்து கொல்லப்பட்டான். அதே போல பூரிஸ்ரவஸும், தன்னால் காணப்படாத அர்ஜுனனால் கொல்லப்பட்டான். எனவே, வாலியிடம் ராமன் சொன்னதாக சொல்லும் வால்மிகியின் வார்த்தைகளை இங்கே சாத்யகி கௌரவர்களிடம் சொல்வதாகத் தெரிகிறது. "ஓ குரங்கே" என்பது வாலியைச் சுட்டும் சொல்லாகவே இருக்க வேண்டும்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சாத்யகி இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களிலோ, கௌரவர்களிலோ எவரும் எதையும் பேசவில்லை. மறுபுறம் அவர்கள் பூரிஸ்ரவஸை மனத்தால் புகழ்ந்தனர்.(68) காட்டில் வாழும் தவசிக்கோ, பெரும் வேள்வியில் மந்திரங்களால் தூய்மையடைந்த ஒருவனுக்கோ ஒப்பானவனும், ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களைக் கொடையாக அளித்தவனுமான சிறப்புமிக்கச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} படுகொலையை எவரும் மெச்சவில்லை.(69) அழகிய நீலக் குழல்களால் அருளப்பட்டதும், புறாக்களைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டதுமான அவ்வீரனின் {பூரிஸ்ரவஸின்} தலையானது, குதிரை வேள்வியில் {அஸ்வமேதயாகத்தில்} அறுக்கப்பட்டு வேள்விப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் குதிரையின் தலையைப் போலத் தெரிந்தது [10].(70) தன் ஆற்றலாலும், ஆயுத முனையில் தான் அடைந்த மரணத்தாலும் புனிதமடைந்தவனும், எவ்வரத்துக்கும் தகுந்தவனும், வரங்களை அளிப்பவனுமான பூரிஸ்ரவஸ், அந்தப் பெரும்போரில் தன் உடலைத் துறந்து, தன் அறங்களால் {நற்பண்புகளால்} ஆகாயத்தை நிறைத்தபடியே உயர்ந்த உலகங்களுக்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.(71)

[10] "உண்மையில், 'வேள்வி நெய் வைக்கப்படும் இடத்திற்கு அருகே' என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.


ஆங்கிலத்தில் | In English

Friday, September 09, 2016

பூரிஸ்ரவஸின் கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 141

Arjuna cut off the arm of Bhurisravas! | Drona-Parva-Section-141 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 57)

பதிவின் சுருக்கம் : சாத்யகியை எதிர்த்த பூரிஸ்ரவஸ்; சாத்யகியிடம் பேசிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு சாத்யகியின் மறுமொழி; பூரிஸ்ரவஸுக்கும், சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; களைத்துப் போயிருந்தவனும், புத்துணர்வுடன் கூடிய பூரிஸ்ரவஸை எதிர்த்துப் போரிட்டவனுமானச் சாத்யகியைக் காக்க அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பூரிஸ்ரவஸிடம் அடங்கிய சாத்யகி; பூரிஸ்ரவஸின் ஒரு கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வெல்லப்பட முடியாத அந்தச் சாத்வதன் {சாத்யகி} (அர்ஜுனனை நோக்கி) வருவதைக் கண்டவனும், சினமடைந்தவனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(1) பிறகு அந்தக் குரு குலத்தோன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையிடம் {சாத்யகியிடம்}, “நற்பேறின் நிமித்தமாகவே இன்று நீ என் பார்வை அடையும் தொலைவுக்குள் வந்திருக்கிறாய்.(2) எப்போதும் என் மனதில் கொண்டிருந்த விருப்பத்தை இந்தப் போரில் நான் இன்று அடையப் போகிறேன். நீ போரில் இருந்து ஓடாமலிருந்தால், நீ உயிருடன் தப்ப மாட்டாய்.(3) {நீ கொண்ட} வீரத்தில் எப்போதும் செருக்குடையவனான உன்னை இன்று போரில் கொன்று, ஓ! தாசார்ஹ குலத்தோனே {சாத்யகி}, குரு மன்னன் சுயோதனனை {துரியோதனனை} நான் மகிழச் செய்யப் போகிறேன்.(4)


என் கணைகளால் எரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் உன்னை வீரர்களான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் இன்று சேர்ந்திருந்து காண்பார்கள்.(5) உன்னை இந்தப் படைக்குள் ஊடுருவச் செய்தவனான தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, என்னால் நீ கொல்லப்பட்டதைக் கேட்டு, வெட்கத்தில் மூழ்கப் போகிறான்.(6) இன்று நீ கொல்லப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு, பூமியில் கிடப்பதைப் பார்க்கையில், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என் ஆற்றலை அறிந்து கொள்வான்.(7) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில், சக்ரன் மற்றும் பலியின் மோதலைப் போலவே உன்னுடன் {இப்போது} நேரப்போகும் இந்த மோதலை எப்போதுமே நான் விரும்பி வந்தேன்.(8) ஓ! சாத்வதா {சாத்யகி} இன்று நான் உனக்குப் பயங்கரப் போரைத் தருவேன். அப்போதுதான், உண்மையில் என் சக்தி, வலிமை மற்றும் ஆண்மை ஆகியவற்றை நீ புரிந்து கொள்வாய்.(9)

போரில் என்னால் கொல்லப்படும் நீ, ராமனின் தம்பியான லட்சுமணனால் கொல்லப்பட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல இன்று யமனுலகை அடையப் போகிறாய்.(10) இன்று உன் கொலையைப் பார்க்கும் கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, மனத்தளர்ச்சியடைந்து போரைக் கைவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.(11) கூரிய கணைகளால் இன்று உனக்கு மரணத்தை ஏற்படுத்தி, ஓ! மாதவா {சாத்யகி}, போரில் உன்னால் கொல்லப்பட்டோர் அனைவரின் மனைவிமாரையும் மகிழச் செய்யப் போகிறேன்.(12) என் பார்வையின் இலக்குக்குள் வந்த நீ, சிங்கத்தின் பார்வை தொலைவுக்குள் வந்த சிறு மானைப் போல என்னிடம் இருந்து தப்ப மாட்டாய்” என்றான் {பூரிஸ்ரவஸ்}.(13)

அவனது {பூரிஸ்ரவஸ்ஸின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே அவனுக்குப் {பூரிஸ்ரவஸ்ஸுக்குப்} பதிலளிக்கும் வகையில், “ஓ! குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்ஸே}, போரில் நான் எப்போதும் அச்சங்கொண்டதில்லை.(14) உன் வார்த்தைகளால் மட்டுமே என்னை அச்சுறுத்துவதில் உன்னால் வெல்ல முடியாது. எவன் என்னை ஆயுதங்களை இழக்கச் செய்வதில் வெல்வானோ, அவனாலேயே போரில் என்னைக் கொல்ல முடியும்.(15) எவன் போரில் என்னைக் கொல்வானோ, அவன் இனி வரப்போகும் காலம் முழுவதும் (எதிரிகளைக்) கொன்று கொண்டிருப்பான் [1]. வீணான வார்த்தைகளைக் கொண்டு நீண்ட மூச்சுடன் தற்பெருமை பேசுபவது எதற்குப் பயன்படும்? நீ சொல்வதைச் செயலில் சாதிப்பாயாக.(16) கூதிர்காலத்துக் கார்முகில்களின் கர்ஜனையைப் போலவே உன் சொற்களும் கனியற்றவையாகவே தெரிகின்றன. ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன் முழக்கங்களைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.(17) ஓ குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்} நீண்ட நாட்களாக உன்னால் விரும்பப்பட்ட அந்த மோதல் இன்று நடக்கட்டும். ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்} உன்னுடனான மோதலை விரும்பும் என் இதயத்தால், தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! இழிந்தவனே, உன்னைக் கொல்லாமல் நான் போரில் இருந்து திரும்பேன்” என்றான் {சாத்யகி}. இத்தகு வார்த்தைகளால் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்ட மனிதர்களில் காளையரான அவ்விருவரும், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டு, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, ஒருவரையொருவர் போரில் தாக்கிக் கொண்டனர்.(19)

[1] “எவன் என்னைக் கொல்வானோ அவன் போரில் எப்போதும் வெற்றியாளனாக இருந்து, போரில் ஈடுபடும் போர் வீரர்களை எப்போதும் கொல்வான். எப்போதும் தோல்வி அவனுடையதாகாது” என்பதே இங்குப் பொருள் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காக மதங்கொண்ட இரண்டு கோபக்கார யானைகள் மோதுவதைப் போலப் போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(20) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பூரிஸ்ரவஸ் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், மேகத்திரள்கள் இரண்டைப் போல ஒருவர் மீதொருவர் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.(21) அப்போது, அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வேகமாகச் செல்லும் கணைகளால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்து, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் மீண்டும் அவனைப் {சாத்யகியைப்} பல கணைகளால் துளைத்தான்.(22)

பத்து கணைகளால் சாத்யகியைத் துளைத்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தச் சிநிக்களின் காளைக்கு {சாத்யகிக்கு} அழிவை ஏற்படுத்தும் விருப்பத்தால் அவன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான். எனினும் சாத்யகி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் சக்தியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் பூரிஸ்ரவஸின் கணைகளில் எவையும் தன்னை அடையும் முன்பே அவை அனைத்தையும் ஆகாயத்திலேயே அறுத்தான். நற்குலத்தில் பிறந்தவர்களும், முறையே குருக்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரின் புகழை அதிகரித்தவர்களுமான அவ்விரு போர்வீரர்களும் இப்படியே ஒருவர் மீதொருவர் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். தங்கள் நகங்களைக் கொண்டு போரிடும் இரு புலிகள், அல்லது தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடும் இரு பெரும் யானைகளைப் போன்றே அவர்கள், தேர்வீரர்கள் பயன்படுத்துபவையான கணைகளாலும், ஈட்டிகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(23-26) ஒருவரையொருவர் அங்கங்களைச் சிதைத்துக் கொண்டு, தங்கள் காயங்களில் குருதிப் பெருக்கெடுத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உயிரையே பணயம் வைத்து சூதாடி, ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டும், ஒருவரையொருவர் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.(27)

சிறந்த சாதனைகளைக் கொண்டவர்களும், முறையாகக் குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவர்களுமான அந்த வீரர்கள், யானைக் கூட்டங்களின் தலைமையானைகளில் இரண்டைப் போல இப்படியே ஒருவருடனொருவர் போரிட்டனர்.(28) உண்மையில், உயர்ந்த உலகங்களை அடைய ஆசைப்பட்ட போர்வீரர்களான அவ்விருவரும், பிரம்ம லோகத்தை விரைவில் அடைய விரும்பி ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கினர். உண்மையில் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த சாத்யகியும், சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர். அங்கே இருந்த மக்கள், அவ்விரு போர்வீரர்களுக்கு இடையில் நடந்த அந்த மோதல், பருவ காலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு தலைமை யானைகள் போரிடுவதைப் போலவே இருப்பதைக் கண்டனர் [2].(29-31)

[2] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, "அரசரே, கோபமிகுந்தவர்களான அவ்விருவரும் அடிக்கடி அம்புகளால் அடித்துக் கொண்டு காட்டில் இரண்டு சிங்கங்கள் சண்டையிடுவது போலப் பெரிதான யுத்தரங்கத்தில் சண்டை செய்தார்கள். மர்மஸ்தானத்தையறிந்தவர்களும், மிகுந்த கோபத்துடன் வதஞ்செய்யக் கருதியவர்களுமான அவ்விருவரும், பலனும் வஜ்ரதரனான இந்திரனும் போல ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு கர்ஜித்தார்கள். பிறகு, ஒருவரையொருவர் எதிர்த்து வருகின்ற அவ்விருவரும் படிந்த கணுக்களுள்ள அம்புகளாலே அந்யோன்யம் கொடிகளையும், ரதத்திலுள்ள எல்லா உபகரணங்களையும் நன்றாக அறுத்தார்கள். பின்னும் அவ்விருவரும் அம்பு மழைகளால் ஒருவரையொருவர் வர்ஷித்துக் கொண்டு விரைவாக ஒருவர் மற்றவருடைய சாரதிகளைக் கொன்றார்கள்" என்றிருக்கிறது. இதன்பின்னர் பின்வருவதைப் போலவே தொடர்கிறது. மேற்கண்ட நிகழ்வுகள் கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இல்லை.

பிறகு அந்தத் தேரற்ற போராளிகள் ஒவ்வொருவரும் மற்றவரின் குதிரைகளைக் கொன்று, மற்றவரின் விற்களை அறுத்த பிறகு, வாள்களைக் கொண்டு அந்தப் பயங்கரப்போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(32) அவர்கள், அழகியவையும், பெரியவையும், பிரகாசமானவையும், காளையின் தோலால் செய்யப்பட்டவையுமான இரண்டு அழகிய கேடயங்களை எடுத்துக் கொண்டும், உறையிலிருந்து இரு வாள்களை உருவிக் கொண்டும் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(33) எதிரிகளைக் கலங்கடிப்பவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களுமான அவர்கள், மண்டலகதிகளைப் பின்பற்றியும், பிறவகைகளிலான முறையான நகர்வுகளைச் செய்தும், தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(34) வாள்களை ஏந்தி, பிரகாசமான கவசம் பூண்டு, மார்புக்கவசங்கள் மற்றும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களான புகழ்பெற்ற அந்தப் போர்வீரர்கள் இருவரும், பல்வேறு வகைகளிலான நகர்வுகளை வெளிப்படுத்தினர்.(35) அவர்கள் சக்கரமாகச் சுழன்று, உயரக் குதித்து, பக்கவாட்டில் உந்தித் தள்ளி, முந்தித் தாவி, முன்னோக்கியும் மேல்நோக்கியும் விரைந்தனர் [3].(36) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள், தங்கள் வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரும் மற்றவனின் தவறுகளுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். அழகாகத் தாவிய அவ்வீரர்கள் இருவரும், தங்கள் பயிற்சி, நகர்வு நளினம் மற்றும் திறம் ஆகியவற்றை வெளிக்காட்டினர்.(37) போர்வீரர்களில் முதன்மையான அவர்கள், அந்தப் போரில் திறம்பட ஒருவரையொருவர் குத்த தொடங்கினர்.(38) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருக்கணம் ஓய்வெடுத்தனர்.(39)

[3] வேறொரு பதிப்பில், "கீர்த்திமான்களான அவ்விரு வீரர்களும், ப்ராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், ஆப்லுதம், விப்லுதம், ஸ்ருதம், ஸம்பாதம், ஸமுதீர்ணம் எனும் கத்தி சுழற்றும் வகைகளைக் காண்பித்துக் கொண்டும், கத்திகளால் பரஸ்பரம் வெட்டிக் கொண்டும் ஆச்சரியகரமாக ஸஞ்சாரஞ்செய்தார்கள். யுத்தஞ்செய்கிறவர்களுள் சிறந்தவர்களான அவ்விருவரும் யுத்தரங்கத்தில் சிக்ஷையையும் லாகவத்தையும் அவ்வாறே தேர்ச்சியையும் காண்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் குத்திக் கொண்டனர்" என்றிருக்கிறது.

அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் ஒவ்வொருவரின் கேடயங்களையும் தங்கள் வாள்களால் துண்டு துண்டாக வெட்டி மற்போரில் ஈடுபட்டனர்.(40) அகன்ற மார்புகள் மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், மற்போரில் திறம் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும், பரிகாயுதங்களுக்கு ஒப்பான இரும்பு போன்ற தங்கள் கரங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(41) தங்கள் கரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டும் இருந்த அவர்கள் தங்கள் கரங்களால் மற்றவரின் கழுத்தையும் பிடித்தனர்.(42) அப்படி அந்த வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் விழும் இடிக்கு ஒப்பாக அந்தப் போரில் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலி பயங்கரமான பேரொலியாக இருந்தது.(43)

முறைப்படி குருக்கள் மற்றும் சாத்வத குலங்களின் போர்வீரர்களில் முதன்மையானவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அவ்விருவரும், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு ஒன்றோடொன்று மோதும் இரு யானைகள், அல்லது தங்கள் கொம்புகளைக் கொண்டு மோதும் இரு காளைகளைப் போலவே, சில நேரங்களில் ஒருவரையொருவர் கரங்களால் கட்டியும், சில நேரங்களில் தங்கள் தலைகளால் ஒருவரையொருவர் தாக்கியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் ஒருவரையொருவர் பின்னியும், சில நேங்களில் தங்கள் நகங்களால் ஒருவரையொருவர் கிள்ளியும், சில நேரங்களில் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் மற்றவரின் இடுப்பைச் சுற்றிப் பின்னியும், சில நேரங்களில் தரையில் உருண்டும், சில நேரங்களில் முன்னேறியும், சில நேரங்களில் பின்வாங்கியும், சிலநேரங்களில் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தும், சில நேரங்களில் ஒருவரையொருவர் கீழே தூக்கி வீசியும், சில நேரங்களில் எழுந்து கொண்டும், சில நேரங்களில் உயரத் தாவிக் கொண்டும் இருந்தனர்.(44-46) உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் போராளிகளான அவ்விருவரும் அவ்வகை மோதல்களின் இயல்புக்குத் தகுந்த முப்பத்திரண்டு விதமான தனிப்பட்ட திறன்கள் மற்றும் செயல்கள் ஆகிய {செயல்திறன்கள்} அனைத்தையும் அந்தப் போரில் வெளிக்காட்டினர்.(47)

பூரிஸ்ரவஸுடனான மோதலில் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} ஆயுதங்கள் தீர்ந்து போன போது, அர்ஜுனனிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தேரை இழந்தவனுமான சாத்யகி போரில் ஈடுபடுவதைப் பார்.(48) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி}, உன்னைத் தேடியே பாரதப் படைகளைப் பிளந்து அதற்குள் நுழைந்தான். பெரும் சக்தி கொண்ட பாரத வீரர்கள் அனைவருடனும் அவன் போரிட்டான்.(49) வேள்விக்கொடைகளைப் பெருமளவில் அளிப்பவனான பூரிஸ்ரவஸ், அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி} சோர்வும், களைப்பும் அடைந்திருக்கும்போது மோதுகிறான். போரிடும் விருப்பம் கொண்ட பூரிஸ்ரவஸ், முன்னேறி வரும் சாத்யகியோடு [4] மோதப் போகிறான் {பீமனோடும் என்றிருக்கிறது}. ஓ! அர்ஜுனா, இம்மோதல் சமமற்றதாவே {நியாயமற்றதாகவே} இருக்கும்" என்றான் {கிருஷ்ணன்}.(50)

[4] வேறொரு பதிப்பில், "அர்ஜுனா, சாத்யகி களைத்துப் போனதைப் பார். இவனை நீ காப்பாற்ற வேண்டும். பாண்டவா, இவன் பாரதச் சேனையை உடைத்துக் கொண்டு உன் பின்புறத்திலே நுழைந்துவிட்டான். பாரத! மிக்க வீர்யமுடையவர்களான எல்லாப் பாரதர்களாலும் போர்புரியும்படி செய்யப்பட்டான். கௌரவச் சேனையில் முக்கியர்களும், தலைமையானவர்களுமான மகாரதர்கள் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் (இந்த) விருஷ்ணி வீரனால் கொல்லப்பட்டார்கள். அர்ஜுன, யுத்தஞ்செய்கிறவர்களுள் சிறந்தவனும், களைப்படைந்தவனும் இங்கு வருகின்றனவருமான இந்தச் சாத்யகியை மிக்கத் தக்ஷிணை கொடுப்பவனான பூரிஸ்ரவஸ் யுத்தத்தில் விருப்பமுள்ளவனாக எதிர்த்தான். இது சமமானதன்று" என்று இருக்கிறது. இதிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் பீமனைப் பற்றிய குறிப்பு இல்லை.

அப்போது போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட எதிராளியைத் தாக்கும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலச் சாத்யகியை மூர்க்கமாகத் தாக்கினான் [5].(51) கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் தேர்களிலிருந்த அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் மோதலைக் கண்டு கொண்டிருந்த போதே போரிட்டனர் [6].(52)

[5] மன்மதநாத தத்தரின் பதிப்பில் 51வது ஸ்லோகம், "அப்போது கட்டுக்கடங்காத பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, தன் வாளை உயர்த்தி, மதங்கொண்ட யானையொன்று அதே நிலையிலுள்ள மற்றொன்றைத் தாக்குவதைப் போலச் சாத்யகியைத் தாக்கினான்" என்றிருக்கிறது. பூரிஸ்ரவஸ் சாத்யகியைக் கத்தியால் தாக்கினான் என்பது கங்குலியிலும், வேறொரு பதிப்பிலும் இல்லை.

[6] இப்படியே மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இருக்கிறது. ஆனால் வேறொரு பதிப்பிலோ, "யுத்தத்தில் கோபங்கொண்டவர்களும், வீரர்களுள் தலைவர்களும், ரதத்தில் வீற்றிருப்பவர்களுமான கேசவரும், அர்ஜுனனும் யுத்தகளத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே புஜபலமுள்ளவனான பூரிஸ்ரவஸ் சாத்யகியைத் தூக்கிப் பூமியில் அடித்தமையால் பக்கத்ததிலுள்ள சைனிகளர்களுக்கும் மேகத்தின் இடிமுழக்கம் போன்ற பெரிதான ஆரவாரம் உண்டாயிற்று" என்றிருக்கிறது. பூரிஸ்ரவசும், சாத்யகியும் தங்கள் தேர்களில் இருந்து போரிட்டனர் என்பது இல்லாமல், கிருஷ்ணனும், அர்ஜுனனும் தேரில் இருந்து கண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அர்ஜுனனிடம், "விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியானவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்குவதைப் பார்.(53) மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவன் {சாத்யகி}, முயற்சியால் களைத்துப்போய்த் தன் தேரை இழந்தான். ஓ! அர்ஜுனா, உன் வீரச் சீடன் சாத்யகியைக் காப்பாயாக.(54) ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மனிதர்களில் முதன்மையான அவன் {சாத்யகி}, வேள்விகளில் அர்ப்பணிப்புள்ள பூரிஸ்ரவஸுக்கு உன் நிமித்தமாக அடிபணியாதிருக்கும்படி பார்த்துக் கொள்வாயாக. ஓ !பலம் வாய்ந்தவனே {அர்ஜுனா}, தேவையானதை விரைந்து செய்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(55)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "காட்டில் மதங்கொண்ட யானையொன்று வலிமைமிக்கச் சிங்கத்துடன் விளையாடுவதைப் போல அந்தக் குருக்களில் காளையும் {பூரிஸ்ரவஸும்}, அந்த விருஷ்ணிகளில் முதன்மையானவனும் {சாத்யகியும்} ஒருவருடனொருவர் விளையாடுவதைப் பார்" என்றான்.(56) பாண்டுவின் மகனான தனஞ்சயன் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பூரிஸ்ரவஸ் தீவிரமாக முயன்று, சாத்யகியைத் தாக்கி, அவனைத் தரையில் கிடத்தியதால், துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(57,58) யானையை இழுத்துச் செல்லும் சிங்கத்தைப் போல, குரு குலத்தில் முதன்மையானவனும், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளிப்பவனுமான அந்தப் பூரிஸ்ரவஸ், அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியை} இழுத்துச் சென்ற போது, அந்தப் போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(59)

பிறகு அம்மோதலில் தன் உறையில் இருந்து வாளை உருவிய பூரிஸ்ரவஸ், சாத்யகியின் தலைமுடியைப் பிடித்திழுத்து, தன் காலால் அவனது மார்பைத் தாக்கினான்.(60) பிறகு பூரிஸ்ரவஸ், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சாத்யகியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க எத்தனித்தான். அப்போது அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} தலையானது, அதன் முடியை {குடுமியைப்} பிடித்திருந்த பூரிஸ்ரவஸின் கரத்தோடு சேர்ந்து கழியைச் சுற்றும் குயவனின் {மண் பாண்டம் செய்பவரின்} சக்கரம் போலச் சிறிது நேரம் வேகமாகச் சுழன்றது.(61,62)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சாத்வதன் {சாத்யகி}, போரில் பூரிஸ்ரவஸால் இப்படி இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் அர்ஜுனனிடம், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியும், உன் சீடனும், வில்லாளித்தன்மையில் {விற்திறமையில்} உனக்குச் சற்றும் குறைவில்லாதவனுமான அவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்கிவிட்டான்.(64) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இந்தப் பூரிஸ்ரவஸ், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட விருஷ்ணி வீரன் சாத்யகியை இப்படி மீறியிருப்பதால், பின்னவனின் {சாத்யகியின்} பெயரே பொய்யாகப் போகிறது [7]" என்றான் {கிருஷ்ணன்}.(65)

[7] "65ம் சுலோகத்தை நான் சரியாக வழங்கவில்லை. "சத்யவிகர்மன்" என்று சாத்யகி அழைக்கப்படுகிறான், அஃதாவது "உண்மையான ஆற்றல் கொண்டவன்", அல்லது "கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவன்" என்பது அதன் பொருள். இவன் இன்று பூரிஸ்ரவஸிடம் தோல்வியை அடைந்தால், அவனது அந்தப் பட்டப் பெயர் பொய்யாகிவிடும். இதையே கிருஷ்ணன் சொல்ல வருகிறான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் பூரிஸ்ரவஸை மனதினால் வழிபட்டான்.(66) அவன் {அர்ஜுனன்} "குருக்களின் புகழை அதிகரிப்பவனான பூரிஸ்ரவஸ், விளையாட்டில் இழுப்பதைப் போலப் போரில் சாத்யகியை இழுக்கிறான் என்பதில் நான் மகிழ்கிறேன்.(67) விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையானவனான சாத்யகியைக் கொல்லாமல், பெரும் யானையை இழுத்துச் செல்லும் வலிமைமிக்கச் சிங்கத்தைப் போல இந்தக் குரு போர்வீரன் {பூரிஸ்ரவஸ்} அவனை {சாத்யகியை} இழுத்துச்செல்ல மட்டுமே செய்கிறான்" என்று நினைத்தான் {அர்ஜுனன்}.(68)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தக் குரு {கௌரவப்} போர்வீரனை {பூரிஸ்ரவஸை} இப்படியே மனதால் பாராட்டிவிட்டு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}(69), "ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் கண்கள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மீது நிலைத்திருந்ததால், என்னால் சாத்யகியைக் காண முடியவில்லை. எனினும், அந்த யாதவப் போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நான் மிகக் கடினமான சாதனையையும் செய்வேன்" என்று மறுமொழி கூறினான்.(70)

வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பணிந்து இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய க்ஷுரப்ரம் {கத்தி போன்ற தலை கொண்ட கணை} ஒன்றைக் காண்டீவத்தில் பொருத்தினான்.(71) பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டதும், ஆகாயத்தில் இருந்து சுடர்விட்டபடி விழும் கண்கவரும் விண்கல்லுக்கு ஒப்பானதுமான அந்தக் கணை, வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததும், அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் குரு போர்வீரனின் {பூரிஸ்ரவஸின்} கரத்தைத் துண்டித்தது" என்றான் {சஞ்சயன்}.(72)


ஆங்கிலத்தில் | In English

Friday, January 22, 2016

துரியோதனன் தம்பிகளைக் கொல்லாத அபிமன்யு! - பீஷ்ம பர்வம் பகுதி - 085

Abhimanyu let Duryodhana's brothers not to be killed! | Bhishma-Parva-Section-085 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 43)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கும் சுருதாயுஷுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனின் கோபத்தைக் கண்டு உலகமே நடுங்கியது; புறமுதுகிட்ட சுருதாயுஷ்; சேகிதானனுக்கும், கிருபருக்கும் இடையில் நடைபெற்ற போர்; இருவரும் மயங்கி விழுந்தது; திருஷ்டகேதுவுக்கும் பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர் இழந்த திருஷ்டகேது சதானீகனின் தேரில் ஏறியது; துரியோதனன் தம்பிகள் மூவருக்கும், அபிமன்யுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர்களை இழந்த துரியோதனன் தம்பிகளைக் கொல்லாமல் விட்ட அபிமன்யு; சுசர்மனிடம் பேசிய அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சூரியன் நடுக்கோட்டை {நடுப்பகலை) அடைந்ததும், சுருதாயுஷைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது குதிரைகளைத் துரிதப்படுத்தினான். எதிரிகளைத் தண்டிக்கும் சுருதாயுஷை நோக்கி விரைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கூர்முனை கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {சுருதாயுஷை} தாக்கினான். பெரும் வில்லாளியான மன்னன் சுருதாயுஷ், அப்போரில் யுதிஷ்டிரனால் ஏவப்பட்ட கணைகளைத் தடுத்து, ஏழு கணைகளால் அந்தப் பாண்டு மைந்தனைத் {யுதிஷ்டிரனைத்} தாக்கினான். அப்போரில் அவனது {யுதிஷ்டிரனின்} கவசத்தை ஊடுருவிய அவை {ஏழு கணைகள்}, மிக முக்கியச் சக்திகளை உறிஞ்சிக் குடிப்பதைப் போல [1]., உயர் ஆன்மா கொண்ட அவனது {மகாத்மாவான யுதிஷ்டிரனின்} குருதியைக் குடித்தன.

[1] மூலத்தில் Vichnvantas என்று இருக்கிறது. இதன் பொருள் "மலர்களைப் பறிப்பதைப் போல" என்பதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.


அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னன் சுருதாயுஷால் ஆழமாகத் துளைக்கப்பட்டிருந்தாலும், (பதிலுக்கு) வராஹகர்ணத்தால் {பன்றியின் காது போன்ற ஒரு கணையால்} அந்த உயர் ஆன்ம மன்னின் {சுருதாயுஷின்} இதயத்தைத் துளைத்தான். தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் ஒரு பல்லத்தால், உயர் ஆன்ம சுருதாயுஷின் கொடிமரத்தை, அவனது தேரில் இருந்து விரைவாகப் பூமியில் வீழ்த்தினான். தன் கொடிமரம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட மன்னன் சுருதாயுஷ், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} ஏழு கூரிய கணைகளால் துளைத்தான்.

அப்போது, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், உயிரினங்களை எரிப்பதற்காக யுகத்தின் முடிவில் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டு மகனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் நடுங்கினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அண்டமும் கலங்கத் தொடங்கியது. "கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்றே மூவுலகங்களையும் எரிக்கப்போகிறான்" என்பதே உயிர்கள் அனைத்தின் மனதிலும் எழுந்த சிந்தனையாக இருந்தது. உண்மையில், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கோபத்தால் இப்படித் தூண்டப்பட்ட போது, உலக அமைதிக்காக முனிவர்களும், தேவர்களும் வேண்டிக்கொண்டனர்.

கோபத்தால் நிறைந்து, கடைவாயை அடிக்கடி நாவால் நனைத்த {நக்கிய} யுதிஷ்டிரன், யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலப் பயங்கரமாகத் தோன்றினான். அப்போது, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அனைவரும் தங்கள் வாழ்வைக் குறித்த நம்பிக்கையை இழந்தனர். எனினும், பொறுமையால் கோபத்தைத் தணித்த புகழ் பெற்ற அந்தப் பெரும் வில்லாளி {யுதிஷ்டிரன்}, சுருதாயுஷின் வில்லை அதன் கைப்பிடியில் வெட்டினான். பிறகு அப்போரில், அனைத்துத் துருப்புகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வில்லறுபட்ட சுருதாயுஷை, நாராசம் {நெடுங்கணை} ஒன்றினால் நடுமார்பில் துளைத்தான்.

பிறகு, அந்த வலிமைமிக்க யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கணைகளால் சுருதாயுஷின் குதிரைகளை விரைவாகக் கொன்று, மேலும் ஒருக்கணமும் தாமதிக்காமல் அவனது தேரோட்டியையும் கொன்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட சுருதாயுஷ், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரை விட்டு விட்டு, போரில் இருந்து விரைவாக ஓடினான் [2]. தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் பெரும் வில்லாளி {சுருதாயுஷ்}, வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் அனைத்தும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன {புறமுதுகிட்டு ஓடின}. இந்தச் சாதனையை அடைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.

[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீமனால் கொல்லப்பட்டதாக பகுதி 54ஆவில் கண்டோம். இது வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.

பிறகு, விருஷ்ணி குலத்தின் சேகிதானன், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தேர்வீரர்களின் முதன்மையான கௌதமரைத் {கிருபரைத்} தன் கணைகளால் மறைத்தான். அந்தப் போரில், அந்தக் கணைகளையெல்லாம் கலங்கடித்த சரத்வானின் மகனான கிருபர், பதிலுக்குப் பெரும்கவனத்துடன் தன் கணைகளால் சேகிதானனைத் துளைத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் ஒரு பல்லத்தைக் கொண்டு சேகிதானனின் வில்லை அறுத்த அந்தப் பெருங்கரவேகம் கொண்டவர் {கிருபர்}, மற்றுமொரு பல்லத்தினால் முன்னவனின் {சேகிதானனின்} தேரோட்டியையும் வீழ்த்தினார். பிறகு அந்தக் கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சேகிதானனின் குதிரைகளையும், பின்னவனின் {சேகிதானனின்} சிறகுகளைப் {பக்கங்களைப்} பாதுகாத்த இரண்டு வீரர்களையும் கொன்றார்.

பிறகு அந்தச் சத்வத குலத்தின் சேகிதானன், தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கதாயுதம் தாங்குவோர் எவரிலும் முதன்மையான சேகிதானன், வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால், கௌதமரின் {கிருபரின்} குதிரைகளைக் கொன்று, பிறகு அவரது தேரோட்டியையும் கொன்றான். அப்போது, அந்தக் கௌதமர் {கிருபர்}, தரையில் நின்றபடியே சேகிதானன் மேல் பதினாறு {16} கணைகளை ஏவினார். சத்வத குலத்தின் அந்த வீரனை {சேகிதானனைத்} துளைத்துச் சென்ற அந்தக் கணைகள், பூமியில் நுழைந்தன.

அதன்பேரில் சினம் தூண்டப்பட்ட சேகிதானன், விருத்திரனைக் கொல்ல விரும்பிய புரந்தரனை {இந்திரனைப்} போல, மீண்டும் ஒரு முறை தன் கதாயுதத்தை வீசினான். கௌதமர் {கிருபர்}, தன்னை நோக்கி வரும் அந்தத் கதாயுதத்தைக் கடினமான பலம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கணைகளால் தடுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உறையில் இருந்து தன் வாளை உருவிய சேகிதானன், கௌதமரை {கிருபரை} நோக்கி விரைந்தோடினான்.

அதன் பேரில், கௌதமரும் {கிருபரும்}, தன் வில்லைத் தூக்கியெறிந்துவிட்டு, பளபளக்கும் ஒரு வாளை எடுத்துக் கொண்டு, சேகிதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார். அற்புதமான வாள்களுடன் இருந்தவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான அந்த இருவரும், கூர்முனை கொண்ட தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மனிதர்களில் காளையரான அவர்கள் தங்கள் கத்திகளால் ஒருவரை ஒருவர் சக்தியுடன் தாக்கிக் கொண்டதால், உயிரினங்களின் பூதமான (உயிரினங்கள் பொதுப் பூதமான) பூமியில் விழுந்தனர்.

தாங்கள் கொண்ட முயற்சியினால் களைப்படைந்த அந்த இருவரும் மூர்ச்சையடைந்து அங்கங்கள் அசைவற்றுக் கிடைந்தனர். அப்போது, நட்பால் உந்தப்பட்ட காரகார்ஷன் {பீமன்} [3] அந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான். வெல்லப்பட முடியாத அந்த வீரன் {பீமன்}, அந்த அவல நிலையில் கிடந்த சேகிதானனைக் கண்டு, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனை {சேகிதானனைத்} தன் தேரில் ஏற்றினான். அதே போல, உமது மைத்துனனான துணிச்சல்மிகு சகுனியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கௌதமரை {கிருபரை} தன் தேரில் விரைவாக ஏறச் செய்தான்.

[3] காரகார்ஷன் என்ற பெயர் கங்குலியின் பாரதத்தில் வேறு எங்கும் இல்லை. வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் பீமன் என்றே இருக்கிறது.

கோபத்தால் தூண்டப்பட்ட {சேதி மன்னன்} திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} விரைவாக மார்பில் துளைத்தான். தன் மார்பில் கொண்ட அந்தக் கணைகளோடு இருந்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போலப் பெரிதும் பிரகாசித்தான்.

எனினும் அந்தப் போரில் பூரிஸ்ரவஸ், தன் சிறந்த கணைகளால் திருஷ்டகேதுவின் தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்று, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {திருஷ்டகேதுவை}, அவனது தேரை இழக்கச் செய்தான். குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டுத் தன் தேரை இழந்து நிற்கும் திருஷ்டகேதுவைக் கண்ட பூரிஸ்ரவஸ், அந்த மோதலில் அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} மறைத்தான். பிறகு, தன் தேரைக் கைவிட்ட அந்த உயர் ஆன்ம திருஷ்டகேது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனின் தேரில் ஏறிக் கொண்டான்.

தங்கக்கவசம் பூண்டிருந்த தேர்வீரர்களான சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகியோர் அனைவரும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். பிறகு, காற்று {வாயு}, பித்தம், சளி {வாதம், பித்தம், கபம் [சிலேத்துமம்]} ஆகியவற்றோடு {எனும் மூன்றோடு} உடல் கொள்ளும் போரைப் போல [4], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவுக்கும், அந்த {மூன்று} வீரர்களுக்கும் இடையில் ஒரு கடுமையான போர் நடந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனினும் அந்த மனிதர்களில் புலி (அபிமன்யு),  உமது மகன்களைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்து, பீமனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவர்களைக் கொல்லாமல் விட்டான் [5].

[4] இந்து {இந்து மத} உடலியக்கவியலில், முக்கியச் சக்திகளின் மேலான ஆதிக்கத்திற்காக எப்போதும் போட்டியிடும் உடலின் மூன்று தாதுக்கள் இவை என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[5] திருதராஷ்டிரர் மகன்களைக் கொல்வதாகப் பீமன் உறுதியேற்றிருந்தான்; எனவே, அபிமன்யு, அவர்களைத் தானே கொன்று, தனது பெரியப்பனின் உறுதிமொழியைப் பொய்யாக்க விரும்பவில்லை என இங்கே விளக்குகிறார் கங்குலி.

பிறகு, மோதல் தொடர்ந்து கொண்டிருந்த போது, தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவரான பீஷ்மர்,  உமது மகன்களை மீட்பதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரனாயினும் சிறுவனும், தனியனுமான அபிமன்யுவை நோக்கி முன்னேறுவதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக்  குந்தியின் மகன் (அர்ஜுனன்), வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேர்வீரர்கள் அதிகமாக இருக்கும் அந்த இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக, ஆயுதங்களை அறிந்தவர்களாக, போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதிரி நமது துருப்புகளைக் கொல்ல இயலாதவண்ணம் குதிரைகளை வழிநடத்துவாயாக" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

அளவிலா சக்தி கொண்ட குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} இப்படித் தூண்டப்பட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரைப் போரில் செலுத்தினான். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், இப்படி உமது படையை நோக்கி முன்னேறிய போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஆரவாரமிக்கப் பேரொலி எழுந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாத்தபடி நின்ற அந்த மன்னர்களிடம் வந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்},  (முதலில்) {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடம், "போரில் முதன்மையானவன் என்றும், ஆரம்பத்தில் {பழங்காலத்தில்} இருந்தே (எங்களுடைய) கொடிய எதிரியாக இருப்பவன் என்று உன்னை நான் அறிவேன். அந்த (உனது) தீய நடத்தையின் பயங்கரக் கனியை இன்று நீ பார். நான், இன்று உன்னை உனது முன்னோர்களின் ஆவிகளைச் சந்திக்கச் செய்வேன்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

எனினும், தேர்ப்படைகளின் தலைவனான சுசர்மன், எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} சொன்ன இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டும், (பதிலுக்கு) நல்லதாகவோ, அல்லதாகவோ ஒன்றும் சொல்லவில்லை. (ஆனால்) வீர அர்ஜுனனை அணுகி, தன்னைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களுடன் அந்தப் போரில் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் துணையுடன், பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போல, முன்புறம், பின்புறம், பக்கங்கள் {விலாப்புறம்} என அனைத்துப் புறங்களிலும் கணைகளால் அவனை {அர்ஜுனனை} மூடினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},  உமது படைக்கும், பாண்டவர்களின் படைக்கும் இடையில் நீரைப் போல குருதி ஓடும் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Sunday, January 03, 2016

சாத்யகியின் மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்! - பீஷ்ம பர்வம் பகுதி - 074

Bhurisravas killed Satyaki's sons! | Bhishma-Parva-Section-074 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 32)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் ஏவிய படைகளைக் கொன்ற சாத்யகி; சாத்யகியின் படையினரைத் தாக்கி விரட்டிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவசை சவாலுக்கழைத்த சாத்யகியின் மகன்கள்; சாத்யகியின் பத்து மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்; சாத்யகியும், பூரிஸ்ரவசும் தங்கள் தேர்களை இழந்தது; சாத்யகியைப் பீமசேனனும், பூரிஸ்ரவசைத் துரியோதனனும் தங்கள் தங்கள் தேரில் ஏற்றிச் சென்றது; இருபத்தைந்தாயிரம் கௌரவத் தேர்வீரர்களைக் கொன்ற அர்ஜுனன்; ஐந்தாம் நாள் போர் முடிவுக்கு வந்தது....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒப்பற்றவனான வலிய கரங்களைக் கொண்ட சாத்யகி, அம்மோதலில் பெரும் வலிமையைத் தாங்கக்கூடிய ஓர் அற்புத வில்லை இழுத்து, கொடும்நஞ்சு மிக்கப் பாம்புகளைப் போன்றவையும், சிறகு படைத்தவையுமான எண்ணற்ற கணைகளைத் தொடுத்து, தனது கரங்களின் அற்புத வேகத்தைக் காட்சிப்படுத்தினான். போரில் தன் எதிரிகளைக் கொன்றபோது, விரைவாக வில்லை இழுத்த அவன் {சாத்யகி}, தன் கணைகளை எடுத்து, வில்லின் நாணில் பொருத்தி, எதிரிக்கு மத்தியில் அவற்றை ஏவிய போது, கன மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலத் தெரிந்தான்.


(வளரும் நெருப்பைப் போலச்) சுடர்விட்டெரியும் அவனைக் {சாத்யகியைக்} கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {சாத்யகிக்கு} எதிராகப் பத்தாயிரம் {10,000} தேர்களை அனுப்பினான். ஆனால், கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்டவனான பெரும் வில்லாளி சாத்யகி, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் தனது தெய்வீக ஆயுதங்களால் கொன்றான். கையில் வில்லுடன் அருஞ்செயலைச் செய்து கொண்டிருந்த அந்த வீரன் {சாத்யகி}, அடுத்ததாகப் போரிட பூரிஸ்ரவசை அணுகினான்.

குருக்களின் புகழைப் பெருக்குபவனான பூரிஸ்ரவசும், யுயுதானனால் {சத்யகியால்} வீழ்த்தப்படும் தார்தராஷ்டிர படையணிகளைக் கண்டு, அவனை {சாத்யகியை} நோக்கி விரைந்தான். இந்திரனை {இந்திராயுதத்தைப்} போன்ற நிறத்தில் இருந்த தனது பெரும் வில்லை இழுத்த அவன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது கரங்களின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், இடியின் பலத்தைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தான். அதன்பேரில், சாத்யகியைப் பின்தொடர்ந்த போராளிகள், அந்தக் கணைகளின் மரணத் தீண்டலை அந்த மோதலில் தாங்கிக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற சாத்யகியைக் கைவிட்டுத் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.

இதைக் கண்டவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கவசம் தரித்தவர்களும், பல்வேறு வகையிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், அற்புத கொடிமரங்களைக் கொண்டவர்களுமான யுயுதானனின் {சாத்யகியின்} வலிமைமிக்க மகன்கள் [1], அந்தப் போரில் பெரும் வில்லாளியான பூரிஸ்ரவசை அணுகி, வேள்விப்பீடப் {யூபஸ்தம்பப்} பொறியைத் தனது கொடிமரத்தில் தாங்கிய அந்த வீரனிடம் {பூரிஸ்ரவசிடம்} கோபத்துடன், "ஓ! கௌரவர்களின் சொந்தக்காரா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {பூரிஸ்ரவசே}, சேர்ந்திருக்கும் எங்கள் அனைவரிடமோ, எங்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியாகவோ வந்து போரிடுவாயாக. ஒன்று, போரில் எங்களை வீழ்த்தி, நீ பெரும்புகழை அடைவாயாக, அல்லது உன்னை வீழ்த்தி நாங்கள் பெரும் மனநிறைவு கொள்வோம்" என்றனர்.

[1] இப்படி வந்த சாத்யகியின் மகன்கள் பத்து பேராவர்.

அவர்களால் {சாத்யகியின் மகன்களால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களைத் தன் முன்பு கண்டு, அவர்களிடம் {சாத்யகியின் மகன்களிடம்}, "வீரர்களே, நன்றாகச் சொன்னீர்கள். இப்போது உங்கள் விருப்பம் இத்தகையதே என்றால், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கவனத்துடன் போரிடுவீர்களாக. போரில் நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்" என்றான். அவனால் {பூரிஸ்ரவசால்} இப்படிச் சொல்லப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்புடைய வலிமைமிக்க வில்லாளிகளுமான அவ்வீரர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அடர்த்தியான கணைமழையால் அந்த எதிரிகளைத் தண்டிப்பவனை {பூரிஸ்ரவசை} மறைத்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபுறம் தனியனான பூரிஸ்ரவசுக்கும், மறுபுறம் ஒன்றுசேர்ந்த பலருக்கும் {சாத்யகியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போர் பிற்பகலில் நடந்தது. மழைக்காலத்தில் மலை முகட்டில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, அந்தப் பத்து வீரர்களும் {சாத்யகியின் பத்து மகன்களும்}, தனியனான வலிமைமிக்க அந்தத் தேர்வீரனைத் {பூரிஸ்ரவசை} தங்கள் கணை மழையால் மறைத்தார்கள். எனினும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களால் தொடுக்கப்பட்டவையும், மரணத்தைத் தரும் காலனின் ஈட்டிகள், அல்லது பிரகாசத்தில் இடியைப் போன்றவையான அந்தக் கணை மேகங்கள் தன்னை நெருங்கும் முன்னரே அறுத்தெறிந்தான். பிறகு, வலிய கரங்கள் கொண்ட அந்த வீரனை {பூரிஸ்ரவசைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அவனைக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தச் சோமதத்தன் மகனோ {பூரிஸ்ரவசோ}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! பாரதரே, அவர்களது விற்களையும், பிறகு அவர்களது தலைகளையும் கூரிய கணைகளால் அறுத்தான். இப்படிக் கொல்லப்பட்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இடியால் விழுந்த வலிமைமிக்க மரங்களைப் போலக் கீழே விழுந்தார்கள் [2].

[2] பம்பாய் உரைகளில் சாத்யகியின் மகன்கள் கொல்லப்படும் இந்த இடத்தில் கூடுதலாக ஒரு வரி இருப்பதாகவும், ஆனால் வங்க உரைகள் அவற்றைத் தவிர்த்திருப்பதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். பின்வருவன வேறு பதிப்பில் கண்டவை: தனியனாக இருந்து கொண்டு, அச்சமற்றவன்போலப் போரில் பலரை எதிர்த்துப் போராடிய சோமதத்தன் மகனான பூரிஸ்ரவசின் அற்புத ஆற்றலை நாங்கள் அனைவரும் அவ்விடத்தில் கண்டோம்.

தன் வலிமைமிக்க மகன்கள் போரில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட அந்த விருஷ்ணி வீரன் (சாத்யகி), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கியபடி பூரிஸ்ரவசை எதிர்த்து விரைந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பூரிஸ்ரவசும்}, தங்கள் தேரை மற்றவர் தேரில் நெருக்கி அழுத்தினார்கள் {மோதினார்கள்}. அம்மோதலில் அவர்கள் இருவரும், மற்றவரின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொன்றார்கள். பிறகு, தேர்களை இழந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரும் தரையில் குதித்தார்கள். பெரும் கத்திகளையும், அற்புத கேடயங்களையும் எடுத்துக் கொண்ட அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். {இப்படி} மோதிக் கொண்ட அம்மனிதப் புலிகள் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த கத்தியுடன் இருந்த சாத்யகியை நோக்கி விரைந்து வந்த பீமசேனன், அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். அதே போல உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வில்லாளிகள் அனைவரின் பார்வைக்கெதிராகவே பூரிஸ்ரவசைத் தனது தேரில் விரைந்து ஏற்றிக் கொண்டான்.

அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மருடன் போரிட்டார்கள். சூரியன் சிவப்பு நிறத்தை எட்டியபோது, செயலூக்கத்துடன் முயன்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} இருபத்தைந்தாயிரம் {25,000} பேரைக் கொன்றான்.

பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காகத் துரியோதனனால் ஏவப்பட்ட அவர்கள், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல, அவனை {அர்ஜுனனை} வந்தடைவதற்கு முன்பே இப்படி முற்றாக அழிந்தனர். பிறகு, ஆயுதங்களின் அறிவியலை அறிந்தவர்களான மத்ஸ்யர்கள் மற்றும் கேகயர்கள் வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது மகனையும் {அபிமன்யுவையும்} (அவர்களை ஆதரிப்பதற்காகச்) சூழ்ந்து கொண்டார்கள். சரியாக அதே நேரத்தில் சூரியனும் மறைந்தான், போராளிகள் அனைவரும் தங்கள் புலன்களை {உணர்வுகளை} இழந்ததாகவும் தெரிந்தது.

பிறகு அந்த மாலை சந்திப் பொழுதில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களைப்படைந்த விலங்குகளைக் {குதிரைகளைக்} கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, துருப்புகளைப் பின்வாங்கச் செய்தார். பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருதரப்புத் துருப்புகளும், அந்தப் பயங்கர மோதலால் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்து, தங்கள் தங்களின் பாசறைகளுக்குச் சென்றனர். கௌரவர்களும், சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்களும், (படை அறிவியலின்) விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இரவில் ஓய்ந்திருந்தனர்" {என்றான் சஞ்சயன்}.

ஐந்தாம் நாள் போர் முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English

Wednesday, December 16, 2015

திருதராஷ்டிரன் மகன்கள் எட்டு பேரைக் கொன்ற பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 064அ

Bhima killed eight sons of Dhritarashtra! | Bhishma-Parva-Section-064 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : சாத்யகிக்கும், பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடந்த மோதல்; துரியோதனன்  தலைமையிலான திருதராஷ்டிர மகன்களுடன் பீமன் செய்த போர்; திருதராஷ்டிரன் மகன்கள் எண்மரைக் கொன்ற பீமன்; பீஷ்மரின்  கட்டளை ....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட பூரிஸ்ரவஸ், பெரும் யானையை அங்குசத்தால் துளைக்கும் யானைப்பாகனைப் போல, சாத்யகியை ஒன்பது கணைகளால் துளைத்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகியும், அனைத்துத் துருப்புகளின் பார்வையிலேயே, அந்தக் கௌரவ வீரனை {பூரிஸ்ரவசை} ஒன்பது கணைகளால் துளைத்தான். அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிப் போராடிக் கொண்டிருந்த சோமதத்தன் மகனைச் {பூரிஸ்ரவசைத்} தனது தம்பிகளுடன் சேர்ந்து சூழ்ந்து கொண்டான். அதே போலப் பெரும் சக்தி வாய்ந்த பாண்டவர்களும், விரைந்து சாத்யகியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைகளை அவனைச் {சாத்யகியைச்} சுற்றி அமைத்துக் கொண்டனர்.


கோபம் தூண்டப்பட்டவனும், உயர்த்திய கதாயுதத்துடன் கூடியவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது மகன்கள் அனைவருடனும் மோதினான். பல்லாயிரம் தேர்களுடையவனும், கோபமும், பொறாமையும் கொண்டவனுமான உமது மகன் நந்தகன், கல்லில் கூர்தீட்டப்பட்டுக் கூர் முனைகளைக் கொண்டிருந்தவையும், கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைச் சிறகுகளாகக் கொண்டவையுமான {ஆறு} கணைகளால் பெரும் பலம் வாய்ந்த பீமசேனனைத் தாக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட துரியோதனன்,  ஒன்பது {9} கணைகளால் பீமசேனனை மார்பில் அடித்தான். அப்போது, வலிய கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்டவனான பீமன் தனது அற்புதத் தேரில் ஏறி (தனது தேரோட்டியான) விசோகனிடம், "துணிவுமிக்கவர்களும், வலிமையானவர்களும், பெரும் தேர் வீரர்களுமான அந்தத் திருதராஷ்டிர மகன்கள் அனைவரும் என் மீது பெருங்கோபம் கொண்டு, என்னைப் போரில் கொல்ல விரும்புகின்றனர். இவர்கள் அனைவரையும் நான் உன் பார்வைக்கு எதிராகவே கொல்வேன் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! தேரோட்டி {விசோகா}, என் குதிரைகளைக் கவனத்துடன் வழிநடத்துவாயாக" என்றான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கூர்முனைக் கணைகளால் உமது மகனைத் {துரியோதனனைத்} துளைத்தான்.

மேலும் அவன் {பீமன்}, மூன்று கணைகளால் நந்தகனை நடு மார்பில் துளைத்தான். அப்போது ஆறு கணைகளால் வலிமைமிக்கப் பீமனைத் துளைத்த துரியோதனன், வேறு மூன்று கூரிய கணைகளால் விசோகனைத் துளைத்தான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நகைத்துக் கொண்டே வேறு மூன்று கூரிய கணைகளால் {பல்லங்களால்} பீமனின் பிரகாசமிக்க வில்லை அதன் கைப்பிடியருகே வெட்டினான்.

மனிதர்களில் காளையான அந்தப் பீமன், அம்மோதலில், வில்தரித்த உமது மகனின் {துரியோதனனின்} கூரிய கணைகளால் தனது தேரோட்டியான விசோகன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல், கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனின் அழிவுக்காக மற்றொரு அற்புத வில்லை எடுத்தான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்} அற்புதச் சிறகுகளைப் படைத்த க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட அம்பு} ஒன்றை எடுத்தான். அதைக் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} அற்புத வில்லை அறுத்தான் பீமன்.

பிறகு, அதிகபட்ச கோபத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த முறிந்த வில்லை ஒரு புறமாக வீசி, மற்றொரு கடினமான வில்லை விரைவாக எடுத்தான். மரணக் கோலைப் {காலமிருத்யுவைப்} போலச் சுடர்விட்ட அந்தப் பயங்கரக் கணையைக் குறிபார்த்த அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனை நடு மார்பில் அடித்தான். அதனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {பீமன்}, தனது தேரின் தட்டில் அமர்ந்தான். அப்படித் தனது தேர்த்தட்டில் அமர்ந்த அவன் {பீமன்} அப்படியே மயக்கமடைந்தான்.

அபிமன்யுவின் தலைமையில் இருந்த ஒப்பற்றவர்களும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் பீமன் இப்படித் துன்புறுவதைக் கண்டு, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள். பெரும் உறுதி கொண்ட அந்த வீரர்கள், உமது மகன் {துரியோதனன்} முடியின் மீது கடும் கணைகளை மழையாகப் பொழிந்தனர். அப்போது, தனது சுயநினைவை அடைந்தவனான வலிமைமிக்கப் பீமசேனன் முதலில் மூன்று [1] கணைகளாலும், பிறகு ஐந்து கணைகளாலும் துரியோதனனைத் துளைத்தான். மீண்டும், வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கச்சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் சல்லியனைத் துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட சல்லியன் களத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டான்.

[1] pierced Duryodhana at first with those shafts and then with five. என்று கங்குலி சொல்கிறார். இங்கு those என்று சொல்லி இருப்பது three என்று இருக்க வேண்டும். பிற பதிப்புகளில் மூன்றும், ஐந்தும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதனால் நாமும் அதை அச்சுப்பிழையையாகக் கருதி மூன்று என்றே ஏற்கிறோம்.

பிறகு, சேனாபதி, சுஷேணன், ஜலசந்தன் [2], சுலோசனன், உக்ரன், பீமரதன், பீமன், வீரபாகு, அலோலுபன், துர்முகன், துஷ்ப்ரதர்ஷன், விவித்சு, விகடன், சமன் என்கிற உமது பதினான்கு {14} மகன்கள் அந்தப் போரில் பீமசேனனுடன் மோதினார்கள். கண்கள் சிவக்க ஒன்று சேர்ந்து பீமசேனனுக்கு எதிராக விரைந்த அவர்கள் எண்ணற்ற கணைகளைப் பொழிந்து, அவனை {பீமனை} ஆழமாகத் துளைத்தனர். அப்போது, பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனன், உமது மகன்களைக் கண்டு, சிறு விலங்குகளுக்கு மத்தியில் உள்ள ஓநாயைப் போல [3] கடைவாயை நக்கிக் கொண்டு, கருடனைப் போல அவர்கள் மீது மூர்க்கமாக விழுந்தான்.

[2] இங்கு கொல்லப்படுவது, திருதராஷ்டிரன் மகனும், துரியோதனனின் தம்பியுமான ஜலசந்தன் ஆவான். இனி வரும் பகுதிகளில் குறிப்பிடப்படும் ஜலசந்தன் வேறொருவனாவான். அவன் {மற்றொரு ஜலசந்தன்} துரோண பர்வம் பகுதி 114ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். அவன் பூரு குலத்தவன் என்றும் குரு வீரன் என்றும் துரோணபர்வம், கர்ண பர்வம் மற்றும் சல்லிய பர்வங்களில் நினைவுகூரப்படுகிறான்.

[3] இதே இடத்தில் வேறொரு பதிப்பில் பசுக்களுக்கு மத்தியில் செந்நாய்ப் பாய்வது போல என்ற உவமை சொல்லப்படுகிறது.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் சேனாதிபதியின் தலையைக் கொய்தான்.

பிறகு, மகிழ்ச்சி நிறைந்த ஆன்மாவுடன் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, சிரித்துக் கொண்டே மூன்று கணைகளால் ஜலசந்தனைத் துளைத்து அவனை {ஜலசந்தனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.

அடுத்ததாகச் சுஷேணனை அடித்த அவன் {பீமன்}, அவனை {சுஷேணனைக்} காலனின் {மிருத்யுவின்} முன்னிலைக்கு அனுப்பி வைத்தான்.

பிறகு, நிலவைப் போன்று அழகானதும், தலைப்பாகையுடன் கூடியதும், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான உக்கிரனின் தலையை ஒரு பல்லத்தினால் பூமியில் விழச் செய்தான்.

மேலும் அந்தப்போரில் பாண்டுவின் மகன் பீமன், எழுபது {70} கணைகளால், குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோட்டியோடும் கூடிய வீரபாகுவைப் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்தபடியே இருந்த பீமசேனன், உமது மகன்களான பீமன் மற்றும் பீமரதன் ஆகிய இரு சகோதரர்களும் யமனின் வசிப்பிடத்தை அடையும்படி செய்தான்.

பிறகு அந்தப் பெரும்போரில், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு க்ஷுரப்ரத்தால் சுலோசனனையும் மரணவாசலுக்கு அனுப்பி வைத்தான்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எஞ்சி இருந்த உமது மகன்கள் அனைவரும் அந்த ஒப்பற்ற வீரனால் {பீமனால்} தாக்கப்படும்போது, அந்தப் பீமசேனனின் ஆற்றலைக் கண்டும், அவன் {பீமன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும் போர்க்களத்தை விட்டு ஓடினார்கள்.

பிறகு, நோக்கிய சந்தனுவின் மகன் (பீஷ்மர்), (தனது படையின்) பெரும் தேர்வீரர்கள் அனைவரிடமும், "போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனும், கடுமையான வில்லாளியுமான அந்தப் பீமன், திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்களையும், ஒன்றுசேர்ந்திருக்கும் வீரர்களான பிற தேர்வீரர்களையும் அவர்கள் என்ன ஆயுத அறிவைப் பெற்றிருந்தாலும், என்ன வீரத்தைக் கொண்டிருந்தாலும் கொல்கிறான். எனவே, நீங்கள் அனைவரும் அவனை {பீமனைப்} பிடிப்பீர்களாக" என்றார்.

இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரப் படையின் துருப்புகள் அனைத்தும், கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வலிமைமிக்கப் பீமசேனனை நோக்கி விரைந்தன" {என்றான் சஞ்சயன்}.
_________________________________________________________________________________
துரியோதனாதிபதிகள் 100 பேரின் பெயர் பட்டியல்:

http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.html


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள்,
{1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவிம்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23}  சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.html


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top