Fight between Indra and Kesin! | Vana Parva - Section 222 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஆதிகாலத்தில் அசுரர்களிடம் தேவர்கள் தொடர் தோல்வி காண்பது; அதனால் தேவர்கள் படைக்கு ஒரு பலமிக்கத் தளபதி வேண்டும் என்று இந்திரன் நினைப்பது; இந்திரன் மானச மலைக்குச் செல்வது; அங்கு அவனுக்கும் கேசினுக்கும் இடையே நடக்கும் மோதல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குரு குலத்தின் பாவமற்ற வாரிசே {யுதிஷ்டிரா}, அக்னி குலத்தின் பல்வேறு கிளைகளை நான் உனக்கு விவரித்துவிட்டேன். இப்போது, புத்திக்கூர்மை கொண்ட கார்த்திகேயனின் பிறப்புக் கதையைக் கேள். நான் உனக்கு, பிரம்ம முனிவர்களின் மனைவியரிடம், அத்புத நெருப்பு {அக்னி} பெற்ற அற்புதமான, புகழ்பெற்ற, உயர்ந்த சக்தி கொண்ட மகனைக் குறித்துச் சொல்கிறேன். பழங்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். பயங்கரமான அசுரர்கள் தேவர்களை வீழ்த்துவதில் எப்போதும் வெற்றி பெற்றார்கள்.
