Bharadwaja's burning desire for Ghritachi | Adi Parva - Section 131 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 67)
பதிவின் சுருக்கம் : கிரிடச்சியைக் கண்டு மயங்கிய பரத்வாஜர்; துரோணரின் பெயர்க்காரணம்; துரோணருக்கு ஆயுத கல்வி அளித்த அக்னிவேசர்; துரோணரும் துருபதனும் நண்பர்களானது; துரோணர் கிருபியை மணந்து அஸ்வத்தாமனைப் பெற்றது; பரசுராமரிடம் ஆயுத ஞானத்தைப் பெற்ற துரோணர்; துருபதனைக் காணச் சென்ற துரோணர்...
வைசம்பாயனர் சொன்னார், "மேன்மையான கல்வியைத் தனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுக்க நினைத்த பீஷ்மர், பெரும் சக்தியும், போர் அறிவியலில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான ஓர் ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார்.(1) ஓ பாரதர்களின் தலைவா, பெரும் புத்திசாலித்தனம் இல்லாத எவரும், ஆயுத அறிவியலின் நுட்பம் அறியாத எவரும், தேவர்களைப் போன்ற பலம் இல்லாத எவரும், குரு குலத்தவருக்குக் குருவாக இருக்கக்கூடாது என்றெண்ணிய கங்கையின் மைந்தன் {பீஷ்மர்}, ஓ மனிதர்களில் புலியே, பரத்வாஜரின் மகனும், வேதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான துரோணரின் கீழ் கல்வி பயில பாண்டவர்களையும், கௌரவர்களையும் அனுப்பினார். பீஷ்மரால் கொடுக்கப்பட்ட வரவேற்பினால் பெரிதும் மகிழ்ந்தவரும், உலகப்புகழ்பெற்றவரும், சிறப்புவாய்ந்தவருமான துரோணர் அந்த இளவரசர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(2-5) துரோணர் அவர்களுக்கு ஆயுத அறிவியலையும் அதன் கிளைகள் அனைத்தையும் பயிற்றுவித்தார். ஓ ஏகாதிபதி! பெரும் பலம் வாய்ந்த கௌரவர்களும், பாண்டவர்களும் குறுகிய காலத்திற்குள் அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(6)