Showing posts with label யமன். Show all posts
Showing posts with label யமன். Show all posts

Thursday, July 04, 2019

புறக்கணிக்கத்தக்க ஐவர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 130

Ignorable Five! | Anusasana-Parva-Section-130 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 130)


பதிவின் சுருக்கம் : அருந்ததி, சூரியன் மற்றும் யமன் ஆகியோர் சொன்ன பரமரகசியங்கள்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது, அங்கே கூடியிருந்த பல்வேறு முனிவர்களும், பித்ருக்களும், தேவர்களும், பெரும் தவத்தகுதியைக் கொண்டிருந்த (வசிஷ்டரின் மனைவியான) அருந்ததியிடம் குவிந்த கவனத்தோடு கேள்வி கேட்டனர்.(1) தவச் செல்வத்தை அபரிமிதமாகக் கொண்டவளும், நோன்புகள் மற்றும் ஒழுக்கத்தில் தன் கணவரும், உயர் ஆன்ம கொண்டவருமான வசிஷ்டருக்கு இணையானவளாதலால் சக்தியிலும் அவள் அவருக்கு இணையானவளாக இருந்தாள்.(2) அவர்கள் அவளிடம், "அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களை நாங்கள் உன்னிடம் கேட்க விரும்புகிறோம். ஓ! இனிமை நிறைந்த பெண்மணியே, உயர்ந்த புதிராக {ரகசியமாக} நீ எதைக் கருதுகிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக" என்று கேட்டனர்.(3)

Saturday, June 08, 2019

சிராத்த நட்சத்திர பலன்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 89

The merits of Shraddha performed under different constellations! | Anusasana-Parva-Section-89 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 89)


பதிவின் சுருக்கம் : சிராத்தங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் செய்யப்பட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை சசபிந்துவுக்குச் சொன்ன யமன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, வெவ்வேறு நட்சத்திரங்களில் விரும்பினால் செய்ய வேண்டிய {கட்டாயமில்லா} சிராத்தங்களைக் குறித்து மன்னன் சசபிந்துவிடம் யமன் சொன்னதை உனக்குச் சொல்லப்போகிறேன்; கேட்பாயாக[1].(1)

Sunday, May 19, 2019

நாசிகேதன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 71

Nachiketa! | Anusasana-Parva-Section-71 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 71)


பதிவின் சுருக்கம் : யமன் பசுக்கொடை குறித்து நாசிகேதனுக்குச் சொன்ன சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாவமற்றவரே, பசுக்கொடை அளிப்பதன் மூலம் அடையப்படும் பலன்களை இன்னும் விரிவாக எனக்குச் சொல்வீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது சொற்களில் ஒருபோதும் நான் தணிவடைவதில்லை" என்றான்.(1)

Friday, May 17, 2019

யமன் சொன்ன தானங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 68

Instructions by Yama on gifts! | Anusasana-Parva-Section-68 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 68)


பதிவின் சுருக்கம் : எள், விளக்கு, உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பது குறித்து யமனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, எள், இருள்விலக்கி ஒளிதரும் விளக்குகள், உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Monday, April 02, 2018

தாய் தந்தை! - சாந்திபர்வம் பகுதி – 129

Mother and Father! | Shanti-Parva-Section-129| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 129)


பதிவின் சுருக்கம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-129
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-129
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ! பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)

Thursday, October 16, 2014

வரங்களளித்த தர்மதேவன்! - வனபர்வம் பகுதி 312

The Lord of Justice granted boons! | Vana Parva - Section 312 | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யக்ஷன் சொன்னது போலவே பாண்டவர்கள் துயிலிலிருந்து எழும்புவது போலப் புத்துணர்ச்சி பெற்ற எழும்புவது; யுதிஷ்டிரனைப் பாராட்டிய தர்மதேவன், அவனுக்கு வரங்களை அருளியது; பாண்டவர்கள் அந்தணருக்கு அவரது அரணிகளைத் திருப்பிக் கொடுத்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு யக்ஷனின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாண்டவர்கள் எழுந்தனர்; அவர்களது பசியும், தாகமும் ஒரு கணத்தில் அவர்களை விட்டு அகன்றன. பிறகு யுதிஷ்டிரன், “வீழ்த்தப்பட முடியாதவராக, குளத்தில் ஒற்றைக் காலில் நிற்கும் உம்மை யக்ஷராக என்னால் எடுத்துக் {ஏற்றுக்} கொள்ள முடியவில்லை; ஆதலால் நீர் எந்தத் தேவன்? வசுக்களில் முதன்மையானவரா? ருத்திரர்களில் முதன்மையானவரா? மருதர்களின் தலைவரா? அல்லது வஜ்ரத்தைத் தாங்கும் தேவர்களின் தலைவரா {இந்திரனா}? எனது இந்தத் தம்பிகள் ஒவ்வொருவரும் போரில் நூறாயிரம் வீரர்களுக்குச் சமமானவர்களாவர். இவர்கள் அனைவரையும் கொல்லும் ஒரு வீரனையும் நான் காணவில்லை {கண்டதில்லை}! ஏதோ இனிமையான தூக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல அவர்களின் புலன்கள் புத்தணர்வு பெற்றிருப்பதை நான் காண்கிறேன். நீர் எங்களது நண்பரா? அல்லது எங்களது தந்தையா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

Wednesday, October 15, 2014

"நகுலன் பிழைக்கட்டும்" என்ற யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 311ஈ

“Let Nakula live!” said Yudhishthira! | Vana Parva - Section 311d | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்: யுதிஷ்டிரன் அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையான பதிலைச் சொன்னதால், அவனது தம்பிகளில் யுதிஷ்டிரன் விரும்பும் ஒருவனை மட்டும் பிழைக்க வைப்பதாக யக்ஷன் சொன்னது; யுதிஷ்டிரன் நகுலனைக் கேட்டது; பீமனையும், அர்ஜுனனையும் கேட்காமல் ஏன் யுதிஷ்டிரன் நகுலனைக் கேட்கிறான் என்று யக்ஷன் கேட்டது; அதற்கான பதிலை யுதிஷ்டிரன் சொன்னது; யுதிஷ்டிரனின் பதில்களால் மனநிறைவு கொண்ட யக்ஷன் பாண்டவர்கள் அனைவரையும் பிழைப்பிப்பதாகச் சொன்னது...

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்) , “ கர்வம் {அகங்காரம்} எது? பேடிசம் {டம்பம்}{#} எது? தேவர்களின் அருள் எது? பொல்லாங்கு {தீய குணம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்), “எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்} ஆகும். {அஞ்ஞானமே அகங்காரம்}. அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும். {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}. தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும். பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய குணம்} ஆகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்!" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, “அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்? நான் கேட்ட கேள்விக்கு விரைந்து பதிலளிப்பதே உனக்குத் தகும்!” என்று சொன்னான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான். வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ருக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும். செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர} கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான் {அந்தணனாகிறான்}? மெய்யுறுதியுடன் எமக்குச் சொல்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! யக்ஷா, கேள்! பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மையாகும்}. ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}. ஒருவன் தனது நடத்தையைக் கெடாநிலையுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை. பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உண்மையில் சாத்திரங்களைப் படிக்கும் அனைவரும், தீய பழக்கங்களுக்கு அடிமையானால், அவர்கள் கல்லாத மூடர்களாகக் கருதப்பட வேண்டும். அறக்கடமைகளைச் செய்பவனே கற்றவன். நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும். அக்னிஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன? எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன? நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன? அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}. தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான். பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்பநிலையை அடைகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்? அதிசயமானது எது? பாதை எது? {தினமும் நடைபெறும்} செய்தி எது? இந்த எனது நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்து, இறந்து போன உனது தம்பியரை மீட்டெடு!" என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! நிலத்திலும் நீரிலும் வாழ்பவனே {யக்ஷா}, கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான். நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத்தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்? வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை. அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற்செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். பகல்களையும், இரவுகளையும் எரிபொருளாய்க் கொண்டிருக்கும் சூரியனே, நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக்கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்." என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! எதிரிகளை அடக்குபவனே, எனது அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையில் பதிலளித்துவிட்டாய்! உண்மையில் யார் மனிதன் என்றும், அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார் என்றும் இப்போது எமக்குச் சொல்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும்வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.} ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, யார் மனிதன் என்பதற்கும், அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்ட மனிதன் யார் என்பதற்கும் உண்மையாகப் பதிலளித்து விட்டாய். எனவே, உனது தம்பிகளில், நீ விரும்பும் ஒருவன் மட்டும் உயிருடன் எழுந்திருக்கட்டும்!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷன்}, “ஓ! யக்ஷா, கறுத்த நிறமும், சிவந்த கண்களும், பெரும் ஆச்சா {சால} மரம் போன்ற உயரமும், அகன்ற மார்பும், நீண்ட கைகளும் கொண்ட நகுலன் உயிருடன் எழுந்திருக்கட்டும்!” என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பீமசேனன் உனக்கு அன்பானவன், இந்த அர்ஜுனனைத்தான் நீங்கள் அனைவரும் நம்பியிருக்கிறீர்கள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது மாற்றாந்தாய் மகன் ஏன் உயிருடன் எழும்ப வேண்டும் என்று விரும்புகிறாய்! பத்தாயிரம் யானைகள் பலத்திற்கு ஈடான பலம் கொண்ட பீமனைக் கைவிட்டு, நகுலன் உயிர்வாழ நீ எவ்வாறு விரும்புகிறாய்? இந்தப் பீமனே உனக்கு அன்பானவன் என்று மனிதர்கள் சொல்கிறார்களே. என்ன நோக்கத்திற்காக நீ மாற்றாந்தாய் மகனான உனது தம்பியை மீட்க விரும்புகிறாய்? பாண்டுவின் மகன்கள் அனைவராலும் வழிபடப்படும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனனைக் கைவிட்டு, நகுலனை மீட்க நீ ஏன் விரும்புகிறாய்?" என்று மீண்டும் கேட்டான்.

யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “அறம் தியாகம் செய்யப்பட்டால் {அறத்தைக் கைவிட்டால்}, அதைத் தியாகம் செய்பவன், தானே தொலைந்து போகிறான். அறம், தன்னைக் {அறத்தைக்} காப்பவனைக் காக்கிறது. எனவே, அறத்தைத் தியாகம் செய்து நம்மையே தொலைக்காமல் {அழிந்துவிடாமல்} இருக்கக் கவனம் கொண்டு, நான் எப்போதும் அறத்தைக் கைவிடுவதில்லை. ஊறிழைக்காமையே {அகிம்சையே} உயர்ந்த அறம் என்றும், அடையவிரும்பும் மிக உயர்ந்த சாதனையைவிட அதுவே {ஊறிழைக்காமையே} உயர்ந்தது என்றும் நான் கருதுகிறேன். நான் முனைப்புடன் அறம் பயிலவே முயல்கிறேன். எனவே, ஓ! யக்ஷா, நகுலன் புத்துயிர் பெறட்டும்! மன்னன் {நான்} எப்போதும் அறம் சார்ந்தவன் என்பதை மனிதர்கள் அறியட்டும்! நான் எப்போதும் கடமை தவறமாட்டேன். எனவே நகுலன் புத்துயிர் பெறட்டும்! என் தந்தை {பாண்டு} குந்தி, மாத்ரி என இரு மனைவியரைக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் {தத்தமக்கு ஒரு} பிள்ளையைப் பெற்றிருக்கட்டும். இதையே நான் விரும்புகிறேன். எனக்கு எப்படிக் குந்தியோ, அப்படியே மாத்ரியும். என் கண்களில் அவர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது. நான் எனது தாய்மாருக்குச் சமமானவனாக நடக்க விரும்புகிறேன். எனவ, நகுலன் பிழைக்கட்டும்!” என்றான் {யுதிஷ்டிரன்}.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பொருளையும், இன்பத்தையும் விட ஊறிழைக்காமையை {அகிம்சையை} நீ உயர்வாகக் கருதுகிறாய். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா} உனது தம்பிகள் அனைவரும் பிழைக்கட்டும்!” என்றான் {யக்ஷன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311இ

Yaksha's questions and Yudhishthira's answers!  | Vana Parva - Section 311c | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்...

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “மனிதனுடைய ஆன்மா எது? தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்? மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது? அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?” என்று கேட்டான்.
அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா; மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}; மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}; தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}” என்று பதிலளித்தான்.

Tuesday, October 14, 2014

யக்ஷனின் கேள்விகளும்! யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311ஆ

Yaksha's questions and Yudhishthira's answers!  | Vana Parva - Section 311b | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனிடம் யக்ஷன், தனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு நீர் குடிக்குமாறு சொன்னது; யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்தது; யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், “கடும் மொழியில் அறிக்கையிடப்பட்ட, இந்தச் சபிக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {Yudhishthira}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கு நின்று கொண்டிருந்த யக்ஷனை {Yaksha }அணுகினான். பிறகு அந்தப் பாரதர்களில் காளை {யுதிஷ்டிரன்}, வழக்கத்திற்கு மாறான கண்களும், பனை மரம் போன்ற உயர்ந்த பெரிய உடலும், நெருப்பைப் போலவோ சூரியனைப் போலவோ இருப்பவனும், தாங்க முடியாத பெரும் உருவம் கொண்ட மலை போன்றவனுமான யக்ஷன், ஒரு மரத்தில் இருந்து கொண்டு, மேகங்களுக்கு ஒப்பான ஆழ்ந்த கர்ஜனையை உரக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} என்னால் திரும்பத் திரும்பத் தடுக்கப்பட்டும் உனது தம்பிகள் வலுக்கட்டாயமாக நீரை எடுக்க முயன்றனர். அதற்காகவே அவர்கள் என்னால் கொல்லப்பட்டனர்! வாழ விரும்பும் ஒருவன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த நீரைக் குடிக்கலாகாது! ஓ! பிருதையின்  மகனே {{Son of Pritha - குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, நீ விரும்புமளவுக்கு {நீரை} எடுத்துச் செல்!” என்றான் {யக்ஷன்}.


யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “ஓ! யக்ஷா, ஏற்கனவே உனது உடைமையாக இருக்கும் ஒன்றின் மேல் நான் ஆசை கொள்ளவில்லை! ஓ! ஆடவரில் காளையே, தன்னையே பாராட்டிக் கொள்ளும் ஒருவனை அறம் சார்ந்த மனிதர்கள் அங்கீகரிப்பதில்லை. (எனவே, தற்பெருமை பேசாமல் உனது கேள்விகளுக்கு எனது புத்திக்கூர்மையினால் பதிலளிக்கிறேன்). நீ என்னிடம் கேள்!” என்றான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது சூரியனை உதிக்கச் செய்கிறது? யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்? எது அவனை மறையச் செய்கிறது? எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது; தேவர்கள் அவனுக்குத் துணையாக இருக்கின்றனர்; தர்மமே அவனை மறையச் செய்கிறது; அவன் {சூரியன்} உண்மையில் {சத்தியத்தில்} நிலைத்திருக்கிறான்" [1] என்று பதிலளித்தான். 

     [1] {ஆதித்தியன் என்பது சம்ஸ்க்ருத மூலத்தில் உள்ள சொல், கங்குலியில் Sun என்று குறிப்பிட்டுள்ளதால், சூரியன் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்} //கேள்வியிலும், பதிலிலும் உள்ள வார்த்தைகளில் எளிமையாகவும் வெளிப்படையாகவும் தெரியும் பொருளைத்தவிர, அதற்கு ஆன்மிக வகைச் சார்ந்த ஆழ்ந்த கருத்தும் உண்டு. இந்த வாசகத்தை நீலகண்டர் சரியாகப் புரிந்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆதித்தியன் என்பது பொதுவாகச் சூரியன் என்று பொருள்பட்டாலும், அது சுத்திகரிக்கப்படாத ஆன்மாவைச் சுட்டுகிறது. அப்படிப் பார்த்தால்,

    முதல் கேள்விக்கு “சுத்திகரிக்கப்படாத ஆன்மாவை யார் மேன்மையடையச் செய்வது?” என்ற பொருள்  பொருந்தி வரும். உலகம் சார்ந்த தொடர்புகளில் இருந்து ஆன்மா எழுவதே மேன்மையான செயல் எனப்படும். இதற்கான பதில், “பிரம்மம், அதாவது வேதம் அல்லது சுய அறிவு" எனக் கொள்ளலாம். தொடர்ந்து வரும்

    இரண்டாவது கேள்வியை "சுத்திகரிப்புப் பணியின் போது அந்த ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவை எவை?"
என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கான பதிலை, "தேவர்களைப் போலத் தெய்வீக இயல்பு கொண்ட தன்னடக்கம் மற்றும் பிற குணங்கள்" எனக் கொள்ள வேண்டும்.

    மூன்றாவது கேள்வியை, “ஆன்மாவை யார் ஓய்வு (நிலைக்கு) அழைத்துச் செல்கிறார்?" என்று புரிந்து கொண்டால், அதற்கான பதிலை, “அறம் {தர்மம்}, அதாவது நன்னெறி, நடத்தை {ஒழுக்கப்பண்பு}, அறநோன்புகள்" எனக் கொள்ள வேண்டும். ஓய்வுநிலை, உண்மை {சத்தியம்}, பரிசுத்தமான ஞானம் ஆகியவற்றை அடைவதற்கு முன்னர் ஒருவன் (கர்மாவை) செயல்கள் மூலம் கடக்க வேண்டும் என்று பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது.

    கடைசிக் கேள்வியை "எதில் ஆன்மா நிறுவப்பட்டுள்ளது?” என்று புரிந்து கொண்டு, அதற்கான பதிலாக, ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, “உண்மை {சத்தியம்}, அல்லது பரிசுத்த ஞானம்" என்று பதிலாகக் கொள்ள வேண்டும். விடுதலையின் வடிவம் ஆன்மா என்பதாலும், அனைத்து உடல் தொடர்புகளிலிருந்தும் {ஆன்மா} உயர எழ வேண்டும் என்பதாலும், அது {ஆன்மா} நோன்புகளையும் செயல்களையும் இனியும் நம்பியிருக்கவில்லை என்றும் ஆனால் அது {ஆன்மா} {ஜனனம் என்ற} உண்மை ஞானத்தில் அசைவற்று நிலைத்திருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்// என்கிறார் கங்குலி

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எதனால் ஒருவன் கற்றவனாகிறான்? எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்? இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்? மேலும் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்; தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்; புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான். பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்" என்று பதிலளித்தான். [2]

[2] திருதி, துவிதியை ஆகிய இரண்டையும் நீலகண்டர் ஆன்ம உணர்வுடனேயே விளக்குகிறார். எனினும் இங்கே ஆன்மீக விளக்கம் தேவையில்லை. திருதி என்பது புத்திக்கூர்மை நிலைத்திருக்கும் தன்மை; துவிதியை என்பது இரண்டாவது என்பதாகும். யுதிஷ்டிரன் இங்கே சொல்வதென்னவென்றால் தடுமாறாத நிலைத்த புத்திக்கூர்மையே பயனுள்ள நோக்கங்களுக்கு உதவுகிறது. என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான பக்திச்செயல் {அறம்} எது? அந்தணர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “வேதகல்வியில் அவர்களது தெய்வீகம் அடங்கியிருக்கிறது. அவர்களது தவமே பக்திமான்களுக்கான பக்தியாக இருக்கிறது; இறப்புக்கு ஆட்படும் அவர்களது குணமே மனிதத்தன்மை. அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான நடைமுறை {அறம்} என்ன? அவர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல இருக்கும் அவர்களது நடைமுறை {மறம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கணைகளும் ஆயுதமும் அவர்களது தெய்வீகம் ஆகும். பக்திமான்களுக்கு இருப்பது போல, வேள்விகள் கொண்டாடுவதே அவர்களது பக்திச்செயல் {அறம்} ஆகும். அச்சத்திற்கு ஆட்படுவதே அவர்களது மனிதத்தன்மையாகும். {துன்பப்படுவோரைக்} காப்பதை மறுத்தலே அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வேள்விக்கான சாமம் {ஸாமம்} என்பது எது? வேள்விக்கான யஜுஸ் என்பது எது? ஒரு வேள்விக்கான புகலிடம் எது? எது இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “வாழ்வே {உயிரே} வேள்வியின் சாமமாகும்; மனமே வேள்வியின் யஜுஸ் ஆகும். வேள்வியின் புகலிடமாக ரிக்கு {வேத வாக்கு} இருக்கிறது. அந்த ரிக்கு இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது" என்று பதிலளித்தான் [3]

[3] //"வேள்வி என்பது பரிசுத்தமான ஞானத்தை அடைவதற்கான ஆன்மத் தியாகம்" என்று நான் {கங்குலி} கருதுவது போல நீலகண்டர் இதைச் சரியாக விவரிக்கிறார். ஒருவன் வேள்வியைக் கொண்டாடும் நோக்கத்திற்குச் சாமம், யஜுர் மற்றும் ரிக்கு மந்திரங்கள் அனைத்தும் அவசியம். புறநிலை வேள்விக்குச் சாம யஜுர் வேத மந்திரங்கள் தேவை என்பது போல, அகநிலை வேள்வியில் உண்மை ஞானத்தை அடைய, வாழ்வு {உயிர்} மற்றும் மனம் ஆகியவை அவசியம். எந்தப் புறநிலை வேள்வியையும் ரிக்கு இல்லாமல், அதை முக்கியமாகக் கருதாமல் செய்ய முடியாதது போல, உண்மை ஞானத்தை அடையக் கருதும் அகநிலை வேள்விளையும் துதிகள் இல்லாமல் செய்ய முடியாது என்றும், ரிக்குகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன என்றும் நான்  {கங்குலி} கருதுகிறேன். இந்தப் பத்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள அக்னிஷ்டோமா அல்லது பிற வகை வேள்விச் சடங்குகளின் நெருக்கமான அறிமுகம் தேவை.// என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு {அ} வைசியருக்கு} முதன்மையான மதிப்புடையது {மதிப்புமிக்கது = சிறந்தது} எது? விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது எது? இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது எது? [4a] பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு} முதன்மையான மதிப்புடையது மழை; விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது விதை; பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} [4b] " என்று பதிலளித்தான்.

[4a] இந்தக் கேள்விக்கான பதிலை யுதிஷ்டிரன் சொல்வதாக கங்குலியில் காட்டப்பட்டவில்லை. வேறு பதிப்புகளில் செழிப்படைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது பசு என்று யுதிஷ்டிரன் சொன்னதாக இருக்கிறது. "gāvaḥ" என்று பசுக்களைக் குறிக்கும் சொல் சம்ஸ்க்ருத மூலத்தில் இருக்கிறது.

[4b] சில பதிப்புகள் அபதத்தம் என்றும் உவபதம் என்றும் குறிக்கின்றன. முன்னது சரியாக இருப்பின், அதன் பொருள் "நேர்வதில் சிறந்த பொருள் எது?" என்றாகும். நீலகண்டர் அவபதம் நிவபதம் ஆகிய இரண்டையும் ஆன்ம உணர்வாக விவரிக்கிறார். முதலில் அவர் "தேவர்களுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்" என்றும் இரண்டாவதாக "பித்ருகளுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்" என்று புரிந்து கொள்கிறார். இருப்பினும், வெளிப்படையாகப் பார்த்தால் ஆன்மிக விளக்கத்திற்கான தேவை இதற்கு இல்லை.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானது எது? சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது? காற்றைவிட வேகமானது எது? புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானவள் தாய்; சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை; காற்றைவிட வேகமானது மனம்; புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உறங்கும்போது கண்களை மூடாதது எது? பிறந்த பிறகும் நகராதது எது? இதயம் இல்லாதது எது? தன் சொந்த உத்வேகத்தால் வீங்குவது {Swells} {அதிகரிப்பது} எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "உறங்கும்போது மீன் கண்களை மூடுவதில்லை; பிறந்தும் நகராமல் இருப்பது முட்டை; இதயமற்றிருப்பது கல்; தனது சொந்த உத்வேகத்தால் அதிகரிப்பது ஆறு {நதி}" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்? இல்லறத்தானுக்கு யார் நண்பன்? நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்? சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "நாடுகடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே [5] நண்பன்; இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே; நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்; சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்" என்று பதிலளித்தான்.

[5] சார்த்த {sārthaḥ} என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதத்தில் வழிப்போக்கர் கூட்டம் என்று பொருள் என்கிறார் கங்குலி. வித்தையே நண்பன் என்றும் வேறு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிர்களுக்கும் விருந்தினன் யார்? நித்திய கடமை என்பது யாது?! ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அமிர்தம் என்பது என்ன? இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "அக்னியே அனைத்து உயிர்களுக்கு விருந்தினன்; பசுவின் பாலே அமிர்தம்; ஹோமமே நித்திய கடமை; இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது" என்று பதிலளித்தான் [6].

[6] அண்டத்தில் வியாபித்துள்ள பூதம் காற்று {வாயுவே} என்று சொல்வதற்குச் சுருதிகளில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எவன் தனியாக உலவுகிறான்? பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்? குளிர்ச்சிக்கான தீர்வு என்ன? பெரிய களம் எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "சூரியன் தனியாக உலவுகிறான்; சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான். குளிருக்கான தீர்வு நெருப்பு; பூமியே பெரிய களம்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தின் உயர்ந்த புகலிடம் எது? புகழுக்கு எது? சொர்க்கத்திற்கு எது? மகிழ்ச்சிக்கு எது?" என்று கேட்டான். யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஈகையே {தானமளிப்பது; Liberality = தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்: புகழுக்குக் கொடை; சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்}; மகிழ்ச்சிக்கு நன்னடத்தை {ஆகியன உயர்ந்த புகலிடங்களாக இருக்கின்றன}" என்று பதிலளித்தான் யுதிஷ்டிரன்.

{யக்ஷனின் கேள்விகளும், யுதிஷ்டிரனின் பதில்களும் தொடரும்....}
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


தம்பிகளுக்காக அழுத யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 311அ

Yudhishthira cried for his brothers!  | Vana Parva - Section 311a | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

தன் தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்டு யுதிஷ்டிரன் அழுது புலம்பியது; யமனைத் தவிர வேறு யாராலும் தன் தம்பிகளைக் கொன்றிருக்க முடியாத என யுதிஷ்டிரன் தீர்மானிப்பது; பிறகு தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தடாகத்தில் இறங்கியது; முன்பு போலவே யக்ஷன் எச்சரித்தது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்திரனின் புகழைக் கொண்ட தனது தம்பியர், யுகத்தின் முடிவில் தங்கள் கோளங்களில் {Spheres} {துறைகளில்} இருந்து விழுந்து கிடக்கும் லோகபாலர்களைப் போல இறந்து கிடப்பதைக் கண்டான் யுதிஷ்டிரன் {Yudhishthira}. தன் வில் மற்றும் கணைகளுடன் தரையில் விழுந்து இறந்து கிடக்கும் அர்ஜுனனையும், உயிர் இழந்து அசைவற்றுக் கிடக்கும் பீமசேனனையும், இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} சூடான நீண்ட பெருமூச்சுவிட்டு, துயரத்தில் ஏற்பட்ட கண்ணீரால் குளித்தான்.

Friday, October 03, 2014

சத்யவானை மீட்ட சாவித்ரி! - வனபர்வம் பகுதி 295அ

Savitri restored Satyavan!  | Vana Parva - Section 295a | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

பழங்களைப் பறித்து, மரக்கிளைகளை வெட்டிய சத்யவானுக்கு வியர்த்துப் போனதால், தலைவலி வந்தது; தூங்கப்போவதாகச் சொன்ன சத்தியவானின் தலையைச் சாவித்ரி தனது மடியில் கிடத்தியது; சாவித்ரி யமனைக் கண்டது; சாவித்ரிக்கும் யமனுக்கு இடையில் நடந்த உரையாடல்; சாவித்ரி பெற்ற நான்கு வரங்கள்; யமனிடம் ஐந்தாவது வரமாகச் சாவித்ரி சத்யவானின் உயிர்மீட்பைக் கேட்பது....

"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பலவானான சத்யவான் பிறகு தனது மனைவியையும் {சாவித்ரியையும்} அழைத்துக் கொண்டு, பழங்களைப் பறித்து, தனது கூடையை அவற்றால் நிரப்பிக் கொண்டான். பிறகு அவன் {சத்யவான்} மரங்களின் கிளைகளை விழச்செய்யத் தொடங்கினான் {வெட்டத் தொடங்கினான்}. அப்படி அவன் {சத்யவான்} வெட்டிக் கொண்டிருந்தபோது, அவனுக்கு {சத்யவானுக்கு} வேர்க்கத் தொடங்கியது. அவ்வேலையின் விளைவாக, அவனுக்குத் தலை வலிக்கத் தொடங்கியது. கடும் உழைப்பால் பாதிக்கப்பட்ட அவன் தனது அன்பிற்குரிய மனைவியை {சாவித்ரியை} அணுகி, அவளிடம், “ஓ! சாவித்ரி, இந்தக் கடுமையான வேலையின் காரணமாக எனக்குத் தலை வலிக்கிறது. எனது அங்கங்கள் அனைத்தும், எனது இதயமும் மிகவும் களைத்துப் போய்விட்டன! ஓ! மிதமாகப் பேசுபவளே {சாவித்ரி}, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். எண்ணிலடங்கா அம்புகளால் எனது தலை துளைக்கப்படுவதைப் போல உணர்கிறேன். எனவே, ஓ! மங்களகரமான மங்கையே {கல்யாணி}, நிற்பதற்கும் சக்தியற்ற நான் உறங்க விரும்புகிறேன்" என்றான் {சத்யவான்}.


இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி விரைவாக முன்னேறி, தனது கணவனை {சத்யவானை} அணுகி, தரையில் அமர்ந்து, அவனது தலையைத் தனது மடியில் வைத்தாள். பிறகு நாரதரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்த ஆதவற்ற பெண் {சாவித்ரி}, அந்த நாளின் (நிர்ணயிக்கப்பட்ட) பிரிவு, முகூர்த்தம் மற்றும் கணத்தைக் கணிக்கத் தொடங்கினாள். அடுத்த நொடியில் அவள் {சாவித்ரி}, செவ்வாடை உடுத்தி, தலையில் கிரீடத்துடன் உள்ள ஒருவனைக் கண்டாள். அவனது பெரிய உடல் சூரியனைப் போன்று பிரகாசித்தது. கரிய நிறமும், சிவந்த கண்களும் கொண்ட அவன் {யமன்}, கையில் சுருக்குக் கயிறை {பாசத்தை} வைத்துக் கொண்டு பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். அவன் {யமன்}, சத்யவானுக்கு அருகில் நின்று கொண்டு அவனை {சத்யவானை} நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைக் {யமனைக்} கண்ட சாவித்ரி, தனது கணவனின் தலையை மெதுவாகத் தரையில் வைத்து, திடீரென எழுந்து, நடுங்கும் இதயத்துடன் துயர் நிறைந்த இவ்வார்த்தைகளைப் பேசினாள். அவள் {சாவித்ரி}, “மனிதசக்திக்கு அப்பாற்பட்ட உனது உருவத்தைக் கண்டு, நீ ஒரு தேவன் என்பதாகக் கொள்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால், ஓ! தேவர்களின் தலைவா, நீ யார் என்றும், நீ என்ன செய்யக் கருதுகிறாய் என்றும் என்னிடம் சொல்" என்றாள். அதன் பேரில் யமன் {சாவித்ரியிடம்}, “நீ எப்போதும் உனது கணவனுக்கு அர்ப்பணிப்போடு இருக்கிறாய், மேலும் தவத்தகுதி கொண்டவளாகவும் இருக்கிறாய். இதன்காரணமாகவே நான் உன்னோடு உரையாடுகிறேன். ஓ! மங்களகரமானவளே, நான் யமன் என்று அறிந்து கொள். மன்னனின் {தியுமத்சேனனின்} மகனான இந்த உனது தலைவன் சத்யவானின் நாட்கள் முடிந்துவிட்டன {வாழ்ந்நாள் [ஆயுள்] முடிந்துவிட்டது}. எனவே, நான் இவனை எனது சுருக்குக் கயிற்றில் {பாசத்தில்} கட்டி எடுத்துச் செல்லப் போகிறேன். இது எனது வேலை {கடமை} என்பதை அறிந்து கொள்!” என்றான். இந்த வார்த்தைகளுக்கு, சாவித்ரி {யமனிடம்}, “ஓ! வழிபடத்தகுந்தவனே! மனிதர்களைக் கொண்டு செல்ல உனது தூதர்களே வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! தலைவா, பிறகு ஏன் நீயே நேரடியாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள் {சாவித்ரி}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளால் {சாவித்ரியால்} இப்படிச் சொல்லப்பட்ட பித்ருக்களின் சிறப்புமிக்கத் தலைவன் {யமன்}, அவளை இணங்க வைக்கும் நோக்கில், தனது நோக்கங்கள் குறித்த உண்மை அனைத்தையும் அவளுக்கு வெளிப்படுத்தத் தொடங்கினான். யமன் {சாவித்ரியிடம்}, “இந்த இளவரசன் {சத்யவான்}, அறங்களையும், மேனி அழகையும் கொண்டவன். சாதனைகள் கடலளவு கொண்டவன். எனது தூதர்களால் கொண்டு போகத் தகாதவன். எனவேதான், நானே நேரடியாக வந்தேன்!” என்றான். இதைச் சொன்ன யமன் தனது முக்கியச் சக்தியின் மூலம் சத்யவானின் உடலில் இருந்து, {யமனின்} முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்த கட்டைவிரலளவு உள்ள ஒருவனைத் தனது சுருக்குக் கயிற்றால் {பாசத்தால்} கட்டி வெளியே இழுத்தான். சத்யவானின் உயிர் இப்படி எடுக்கப்பட்ட போது, அவனது உடல், சுவாசமற்று, பிரகாசமிழந்து, அசைவிழந்து, காணச் சகியாத படி இருந்தது. சத்யவானின் உயிர் சாரத்தைக் கட்டி எடுத்த யமன், தென்திசையில் முன்னேறினான். அதன்பேரில், தனது தலைவனுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், தனது நோன்புகளில் வெற்றி மகுடம் தரித்தவளும், துயரத்தில் மூழ்கிய இதயம் கொண்டவளுமான மேன்மையான சாவித்ரி யமனைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினாள்.

இதனால் யமன், “ஓ! சாவித்ரி, நில்! திரும்பிச் செல். உனது தலைவனின் {சத்யவானின்} ஈமக்கடன்களைச் செய்! நீ உன்னுடைய தலைவனிடம் கொண்ட அனைத்துக் கடமைகளிலிருந்தும் விடுபட்டுவிட்டாய். எதுவரை வரமுடியுமோ அதுவரை நீ வந்துவிட்டாய்" என்றான். சாவித்ரி, “எனது கணவர் எங்கே கொண்டு செல்லப்படுகிறாரோ, அல்லது அவர் எங்குப் போகிறாரோ, அங்கே நான் அவரைத் தொடர்ந்து செல்வேன். இது எனது நித்திய வழக்கமாகும் {கடனாகும்}. என் தவத்தின் அறத்தால், மூத்தவர்களிடம் நான் கொண்ட மரியாதையால், எனது தலைவன் மீது நான் கொண்ட பாசத்தால், நான் நோற்ற நோன்புகளால், உனது உதவியாலும் கூட நான் வருவது தடுக்கப்படவில்லை. மற்றொருவருடன் ஏழு அடிகள் சேர்ந்து நடப்பதின் மூலம், அந்த மற்றவனின் துணை கொண்டதால், அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தமாகிறது என்று உண்மை ஞானம் கொண்ட ஞானிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (நான் உன்னிடம் கொண்ட) அந்த நட்பைக் கருதி, நான் உன்னிடம் ஒன்றைப் பேசுகிறேன். அதை நீ கேள்.

கல்வியுடன் கூடிய மணமாகாநிலை {பிரம்மச்சரியம்} (1),
இல்லறம் {கிரகஸ்தம்} (2),
காட்டில் ஓய்ந்திருத்தல் {வானப்பிரஸ்தம்} (3),
உலகைத் துறத்தல் {சந்நியாசம்} (4)

ஆகிய தொடர்ச்சியான நான்கு வகை வாழ்வுகளை மேற்கொண்டாலும் தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்கள் எந்தத் தகுதியையும் அடைவதில்லை. உண்மை ஞானம் கொண்டதே ஆன்மத்தகுதி என்று அழைக்கப்படுகிறது. எனவே, ஆன்மத்தகுதியே {ஆத்மஞானமே} அனைத்திலும் முதன்மையானது என்றும், தொடர்ச்சியாக வரும் நான்கு வகை வாழ்வின் வழிகள் {முதன்மையானவை} அல்ல என்றும் ஞானிகள் தீர்மானித்துள்ளனர். நான்கு வகையான இவற்றில் ஒன்றின் கடமைகளையாவது ஞானிகளின் வழிகாட்டுதலின் படி ஏற்புடைய வகையில் பயின்றால். ஞானிகளின் வழியில் உடன்படும் இந்த நான்கு வகையில் ஏதாவதொன்றின் கடமைகளைப் பயில்வதன் மூலம், நாம் உண்மையான தகுதியை {ஞானத்தை} அடைந்துவிடுகிறோம். எனவே, நாம் கல்வியுடன் கூடிய மணமாகா நிலையான {பிரச்மச்சரியம்}, இரண்டாவது வகையையும் {முதல் வகை என்றிருக்க வேண்டும், ஆனால் ஆங்கிலத்தில் இப்படித்தான் இருக்கிறது}, துறவு என்ற மூன்றாவது வகையையும் {நான்காவது வகை என்றிருக்க வேண்டும்) விரும்பவில்லை. இதற்காகவே ஞானிகள், ஆன்மத்தகுதியே {ஆத்மஞானமே} அனைத்திலும் முதன்மையானது என்று தீர்மானித்திருக்கிறார்கள்!” என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “நீ திரும்பு! ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்து, சரியான எழுத்துகள், உச்சரிப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட உனது இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழ்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்கள் கொண்டவளே {சாவித்ரி}, உனது கணவனின் வாழ்வைத் {உயிரைத்} தவிர வேறு ஏதேனும் வரத்தை நீ கேள். நீ கேட்கும் எந்த வரத்தையும் நான் அளிப்பேன்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “நாட்டை இழந்து, பார்வையும் இழந்து, எங்கள் காடுறை ஆசிரமத்தில் ஓய்வு வாழ்வை வாழ்கிறார் எனது மாமனார். உன் ஆதரவால் அந்த மன்னன் {தியுமத்சேனன்} தனது பார்வையைப் பெற்று, நெருப்பைப் போன்றோ சூரியனைப் போன்றோ பலத்தைப் பெறட்டும்!” என்றாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “குற்றமற்ற குணங்கள் கொண்டவளே, இவ்வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்! நீ சொன்னவாறே அது நடக்கும்! உனது பயணத்தால் நீ களைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே நீ திரும்பு! சோர்வுற்றிருக்கும் நீ மேலும் பாதிப்படையாதே!" என்றான்.

அதற்குச் சாவித்ரி {யமனிடம்},எனது கணவர் அருகில் இருக்கும் போது களைப்பை நான் எப்படி உணர்வேன்? எனது கணவர் எங்கிருக்கிறாரோ, நிச்சயமாக அதுவே எனது இடமும் ஆகும். நீ எனது கணவரை எங்கே கொண்டு போகிறாயோ, அங்கே நானும் வருவேன்! ஓ! தேவர்களின் தலைவா {யமனே}, நான் சொல்வதை மீண்டும் கேள்! பக்திமானுடனான ஒரேயொரு நேர்காணல் கூட மிகவும் விரும்பத்தக்கதாகும்; அவர்களுடன் {பக்திமான்களுடனான} நட்பு என்பது அதைவிட மேலானதாகும். அறம்சார்ந்தவர்களுடனான {நல்லவர்களுடனான} உறவு கனியற்றதாக {பலனற்றதாக} இருக்க முடியாது. எனவே, நெறிசார்ந்தவர்களின் துணையுடனே ஒருவன் வாழ வேண்டும்" என்றாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “பயனுள்ள வழிமுறைகள் நிறைந்திருக்கும் நீ சொன்ன வார்த்தைகள், இதயங்களை மகிழ்விக்கும், கற்றோரின் ஞானத்தை மேம்படுத்தும். எனவே, ஓ! பெண்ணே {சாவித்ரியே}, சத்யவானின் வாழ்வைத் தவிர இரண்டாவதாக இன்னொரு வரத்தை கேள்!” என்றான். சாவித்ரி, “சில காலத்துக்கு முன்னால், ஞானமும், புத்தி கூர்மையும் கொண்ட எனது மாமனார் தனது நாட்டை இழந்தார். அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} மீண்டும் தனது நாட்டை அடையட்டும். எனக்கு மேன்மையான அவர் தனது கடமைகளைக் கைவிடாதிருக்கட்டும்! இதுவே நான் கேட்கும் இரண்டாவது வரம்!” என்றாள். யமன், “விரைவில் அம்மன்னன் {தியுமத்சேனன்} தனது நாட்டை மீண்டும் பெறுவான். அவன் தனது கடமைகளில் இருந்து எப்போதும் விழ மாட்டான். இப்படியே, ஓ! மன்னனின் மகளே நான் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன்! இப்போது நீ திரும்பு! மேலும் எதிர்வரும் சிரமத்தை அனுபவிக்காதே!” என்றான்.

அதற்குச் சாவித்ரி {யமனிடம்}, “உனது தீர்ப்புகளின் மூலம் அனைத்து உயிர்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. உனது தீர்ப்புகளாலேயே, {விதியின் பயனாகவே} அவற்றை எடுத்துச் செல்கிறாய். உனது விருப்பத்தின் படி அல்ல. எனவே, ஓ! தெய்வமே, ஓ! தெய்வீகமானவனே, மக்கள் உன்னை யமன் என்று அழைக்கின்றனர்! நான் சொல்லும் வார்த்தைகளை நீ கேள்! சிந்தனையாலோ, வார்த்தையாலோ, செயலாலோ காயப்படுத்தாமல், அன்பு செலுத்தி, அவரவர் பெற வேண்டியதைக் கொடுப்பதே அனைத்து உயிர்களின் நன்மையை நோக்கிச் செய்யப்படும் {உனது} நித்திய கடமை ஆகும். இவ்வுலகைப் பொறுத்தமட்டில், அனைத்தும் இவ்வாறே (எனது கணவரைப் போலவே} இருக்கிறது. மனிதர்கள் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் அற்றிருக்கிறார்கள். எனினும், நல்லவர்கள் தங்கள் பாதுகாப்பைக் கோரும் எதிரிகளுக்குக் கூடக் கருணை காட்டுவார்கள்!” என்றாள். யமன், “தாகம் கொண்ட ஆன்மாவுக்கு நீரைப் போல, உன்னால் எனக்குச் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகள் இருக்கின்றன. எனவே, ஓ! அழகான பெண்ணே {சாவித்ரி}, மீண்டும் சத்யவானின் உயிரைத் தவிர வேறு ஏதேனும் வரத்தைக் கேள்!” என்றான்.

இந்த வார்த்தைகளுக்குச் சாவித்ரி {யமனிடம்}, “பூமியின் தலைவரான எனது தந்தை {அஸ்வபதி} மகன்களற்று இருக்கிறார். அவர் தனது இடுப்பில் நூறு மகன்களைப் {ஔரஸ புத்திரர்களைப்} பெற்று, அவரது {என் தந்தையான மன்னன் அஸ்வபதியின்} குலம் தழைக்க வேண்டும் என்பதே நான் உன்னிடம் கேட்கும் மூன்றாவது வரமாகும்" என்று மறுமொழி கூறினாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “ஓ! மங்களகரமான பெண்ணே {கல்யாணி}, உனது தகப்பன் {மன்னன் அஸ்வபதி}, நூறு சிறப்புமிக்க மகன்களைப் பெறுவான். அவர்கள் உனது தந்தையின் குலத்தைத் தழைக்கச் செய்வார்கள்! ஓ! மன்னனின் மகளே {சாவித்ரி}, இப்போது நீ உனது விருப்பதை அடைந்தாய். திரும்பிச் செல். போதுமான அளவுக்கு நெடுந்தூரம் வந்துவிட்டாய்!” என்றான். சாவித்ரி, “எனது கணவருக்கு அருகில் இருப்பதால், நான் நடந்த வந்த வழியின் தொலைவை நான் உணரவில்லை. உண்மையில், எனது மனம் இன்னும் நீண்ட வழிகளில் விரைகிறது. {இப்படிச்} சென்று கொண்டிருக்கும்போதே நான் தற்போது சொல்லும் வார்த்தைகளையும் கேள்! நீ விவஸ்வத்தின் {விவஸ்வானின் = சூரியனின்} பலமிக்க மகனாவாய். இதன் காரணமாகவே நீ ஞானிகளால் வைவஸ்வதன் என்று அழைக்கப்படுகிறாய். ஓ! தலைவா, படைக்கப்பட்ட அனைத்திற்கும் பொதுவான சட்டத்துக்கு உட்பட்டு நீ செயல்படுவதாலேயே நீ அறத்தலைவனாக {தர்மத்தின் தலைவனாக = தர்மராஜாவாக = தர்மதேவனாக} நியமிக்கப்பட்டிருக்கிறாய்! நேர்மையானவர்களிடம் ஒருவன் கொள்ளும் நம்பிக்கையை, தன்னிடத்தில் கூட ஒருவனும் கண்டுகொண்டு இளைப்பாறுவதில்லை. எனவே, அனைவரும் நேர்மையானவர்களுடனான நெருக்கத்தை அதிகம் விரும்புகின்றனர். இதயத்தின் நற்குணம் மட்டுமே அனைத்து உயிரினங்களிடமும் நம்பிக்கையைத் தூண்டுகிறது. குறிப்பாக இதன்காரணமாகவே மக்கள் நேர்மையானவர்களை நம்புகிறார்கள்" என்றாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “ஓ அழகான பெண்ணே {சாவித்ரி}, உன்னைத் தவிர வேறொருவரிடமும் இவ்வார்த்தைகளை நான் கேட்டதில்லை; உனது இந்தப் பேச்சால் நான் பெரிதும் மகிழ்கிறேன். சத்யவானின் உயிரைத் தவிர நான்காவதாக ஒரு வரத்தைப் பெற்று, நீ உன் வழியே செல்!” என்றான். பிறகு சாவித்ரி, “நான் மற்றும் சத்யவான் {இவர்} ஆகிய எங்கள் இருவரின் இடைகளைக் {loins} கொண்டு, பலமும், பராக்கிரமமும், {எங்கள்} குலத்தைத் தழைக்க வைக்கும் திறனும் கொண்ட நூறு மகன்கள் {ஔரஸபுத்திரர்கள் = இடையில் பிறக்கும் பிள்ளைகள்} பிறக்கட்டும்! இதுவே நான் உன்னிடம் இரந்து கேட்கும் நான்காவது வரமாகும்!” என்றாள். அவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட யமன், “ஓ! பெண்ணே, பலமும், பராக்கிரமும் கொண்டு, பெரும் மகிழ்ச்சியில் உன்னை ஆழ்த்தும் நூறு மகன்களை நீ பெறுவாய்! ஓ! மன்னனின் மகளே, மேலும் நீ களைப்படையாதே! திரும்பிப் போ! நீ ஏற்கனவே வெகுதூரம் வந்துவிட்டாய்!” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி {யமனிடம்}, “நேர்மையாக இருப்பவர்கள் எப்போதும் நித்திய அறநெறிகளையே பயில்கிறார்கள்! பக்திமான்களுடனான பக்திமான்களின் தொடர்பு கனியற்றதாகாது {பயனற்றதாகாது}! பக்திமானர்களால், அந்தப் பக்திமான்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. நேர்மையானவர்களே தங்கள் சத்தியத்தால் வானத்தில் சூரியனை நகர வைக்கிறார்கள். அந்த நேர்மையானவர்களே உலகத்தையும் தங்கள் துறவால் தாங்குகிறார்கள்! ஓ! மன்னா, நேர்மையானவர்களை நம்பியே கடந்த காலமும் எதிர் காலமும் இருக்கிறது! எனவே, நேர்மையானவர்களின் துணையுடன் இருக்கும் நேர்மையானவர்கள் ஒருபோதும் உற்சாகமற்று இருப்பதில்லை. இதுவே நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர்களின் நித்திய பயிற்சி என்பதை அறிந்திருக்கும் நேர்மையானவர்கள், எந்தக் கைம்மாறும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மையைச் செய்கின்றனர். ஒரு நற்காரியத்தை நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் எப்போதும் தூக்கி எறிய மாட்டார்கள். ஆர்வமோ, கண்ணியமோ இத்தகு செயல்களால் பாதிக்கப்படுவதில்லை. இத்தகு நடத்தை நேர்மையின்பாற்பட்டதால், நேர்மையானவர்களே அனைவரின் பாதுகாவலர்களாகிறார்கள்" என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “இது போன்ற மனதிற்கு ஏற்புடைய, அறநெறி கலந்த, தேன் போன்ற சொற்றொடர்கள் நிறைந்த பெருமைமிக்க வார்த்தைகளை மேலும் மேலும் நீ சொல்வதால், உன் மீது நான் உணரும் {கொள்ளும்} மரியாதை மேலும் அதிகரிக்கிறது. ஓ! கொண்ட தலைவனிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவளே, ஒப்பற்ற ஒரு வரத்தை கேள்!” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி {யமனிடம்}, “ஓ! கௌரவத்தைக் கொடுப்பவனே, நீ ஏற்கனவே கொடுத்திருக்கும் வரம், எனது கணவனுடனான சேர்க்கை {கலவி} இல்லாது சாத்தியப்படாது! எனவே, மற்ற வரங்களுக்கு மத்தியில், இந்தச் சத்யவானின் உயிர் மீட்கப்படட்டும் என்பதே நான் கேட்கும் வரமாகும்! எனது கணவரில்லாத நான் இறந்தவள் போன்றவளே! என் கணவரில்லாத எந்த மகிழ்ச்சியையும் நான் விரும்பவில்லை. என் கணவரில்லாத சொர்க்கத்தையே கூட நான் விரும்பவில்லை. என் கணவரில்லாத எந்தச் செழிப்பையும் நான் விரும்பவில்லை. என் கணவரில்லாது வாழ்வதற்கு என்னால் எனது மனதைத் தயார் செய்ய இயலாது! “சத்யவான் உயிருடன் மீட்கப்படட்டும்; அப்படி நேர்ந்தால் தான் உனது வார்த்தைகளை உண்மையாக்க முடியும் {உனது வார்த்தைகள் பொய்க்காது}” என்ற இந்த வரத்தையே நான் கேட்கிறேன்!” என்றாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அதன்பேரில், “அப்படியே ஆகட்டும்!” என்று சொன்ன நீதி அளிக்கும் விவஸ்வத்தின் {சூரியனின்} மகன், தனது சுருக்குக் கயிற்றை {பாசத்தை} அவிழ்த்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சாவித்ரியிடம் , “ஓ! மங்களகரமான கற்புடைய பெண்ணே, இப்படியே உனது கணவன் என்னால் விடுவிக்கப்பட்டான்! நோயிலிருந்து விடுதலை பெற்றிருக்கும் இவனை நீ மீண்டும் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வெற்றியை அடைவான்! உன்னுடன் சேர்ந்து அவன் {சத்யவான்} நானூறு வருட வாழ்வை அடைவான். உரிய சடங்குகளுடன் வேள்விகளைக் கொண்டாடும் அவன், இவ்வுலகில் பெரும்புகழைப் பெறுவான். உன்னிடம் சத்யவான் நூறு மகன்களைப் பெறுவான். தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரர்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் மன்னர்களாக இருப்பார்கள். உனது பெயரின் தொடர்பால் அவர்கள் எப்போதும் புகழுடன் இருப்பார்கள். உனது தந்தையும் {அஸ்வபதியும்}, உனது தாய் மாளவியிடம் நூறு மகன்களைப் பெறுவான். தேவர்களைப் போன்றிருக்கும் உனது க்ஷத்திரிய சகோதரர்கள், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுடன் மாளவர்கள் என்ற பெயரில் பரவலாக அறியப்படுவார்கள்!” என்றான் {யமன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, March 18, 2014

யமனைச் சந்தித்த சோமகன்! - வனபர்வம் பகுதி 128

Somaka met Yama! | Vana Parva - Section 128 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேள்வி நடந்தேறுவது; ஜந்து கொல்லப்படுவது; தாய்மார்களுக்கு நூறு மகன்கள் பிறப்பது; ஜந்துவே மீண்டும் மூத்த மகனாகப் பிறப்பது; சோமகனும் புரோகிதரும் இறப்பது; புரோகிதர் நரகத்தில் அவிக்கப்படுவதைச் சோமகன் காண்பது; புரோகிதருடன் சேர்ந்து சோமகனும் நரகவாசம் பெற்று பிறகு அருள் உலகை அடைந்தது...

சோமகன் {குடும்ப புரோகிதரிடம்} சொன்னான், "ஓ அந்தணரே! எது நடத்தப்பட வேண்டுமோ அதை, அதன் அவசியத்திற்கேற்ப துல்லியமாகச் செய்யும். நான் பல மகன்களைப் பெற விரும்புவதால், நீ சொல்லும அனைத்தையும் நான் செய்வேன்"

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு வேள்வியை நடத்திய அந்தப் புரோகிதர், ஜந்துவை பலிக்காணிக்கையாக்கினார். இரக்கம் கொண்ட அந்தத் தாய்மார்கள் அந்த மகனை வலுக்கட்டாயமாகப் பறித்து எடுத்துச் சென்றான். பிறகு அவர்கள், "ஐயோ, நாங்கள் கெட்டோம்" என்றனர். அவர்கள் துன்பத்தின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு, ஜந்துவின் வலக்கரத்தைப் பற்றிப் பரிதாபகரமான முறையில் அழுதனர். ஆனால் வேள்வியை நடத்திய புரோகிதரோ, அந்தப் பிள்ளையை வலக்கரத்தால் பற்றி இழுத்தார். பெண் அன்றில் பறவைகளைப் போல அவர்கள் துயரத்தால் கதறினர். ஆனால் அந்தப் புரோகிதர் அவர்களது மகனை இழுத்து, அவனைக் கொன்று, அவனது கொழுப்பை சரியான முறையில் எரித்தார். ஓ! குரு குலத்தின் இன்பமே {யுதிஷ்டிரா}, அக்கொழுப்புப் படையலாக்கப்பட்ட போது, துயரத்தில் இருந்த அத்தாய்மார், அதன் மணத்தை நுகர்ந்தபடியே, திடீரெனத் தரையில் (மயங்கி) விழுந்தனர்.


ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த அழகிய மங்கையர் அனைவரும் கருவுற்றனர். ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே! {யுதிஷ்டிரா}, பத்து மாதம் கடந்ததும் சோமகனுக்கு அந்த மங்கையர்கள் மூலம் நூறு மகன்கள் பிறந்தனர். ஓ பூமியின் ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஜந்து, முன்புபோலவே, தன் தாயிடத்திலேயே சோமகனின் மூத்த பிள்ளையாகப் பிறந்தான். அந்த மங்கையருக்கு அவன் {ஜந்து} அன்பிற்கினியவனாக இருந்தது போல அவர்களது சொந்த பிள்ளைகளும் இருக்கவில்லை. அவனது முதுகில் தங்கக்குறியும் {மச்சம்} இருந்தது. அவன் அந்த நூறு மகன்களைக் காட்டிலும் மேன்மைதங்கியவனாக இருந்தான்.

பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சோமகனின் குடும்பப் புரோகிதர் தனது உயிரை விட்டார். சோமகனும் அவ்வாறே தனது உயிரை விட்டான். இப்போது அவன் {சோமகன்}, தனது புரோகிதர் கொடுராமன நரகத்தில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் {சோமகன்} அவரிடம் {புரோகிதரிடம்}, "ஓ! அந்தணரே! நீர் ஏன் இந்த நரகத்தில் அடைபட்டுக் கிடக்கிறீர்!" என்று கேட்டான். நெருப்பில் வெந்து கொண்டிருந்த அந்தக் குடும்பப் புரோகிதர் அவனிடம் {சோமகனிடம்}, "உனது வேள்வியை நான் நடத்தியதன் விளைவு இது" என்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட தவசியான அம்மன்னன் {சோமகன்}, இறந்தவர்களின் ஆன்மாவைத் தண்டிக்கும் தேவனிடம் {யமனிடம்}, "நான் இதற்குள் நுழைவேன். எனது வேள்வியை நடத்திய புரோகிதரை விடுவி; இந்த மரியாதைக்குரிய மனிதர் என் காரணமாகவே இந்நரக நெருப்பில் வேக வைக்கப்படுகிறார்" என்றான்.

அதற்குத் தர்மராஜன் {யமன்} {மன்னன் சோமகனிடம்}, "ஒருவன் இன்னொருவன் செயல்களுக்காக மகிழவோ துன்பப்படவோ முடியாது. ஓ! பேசுபவர்களில் சிறந்தவனே {சோமகா}! நீ காணும் இவை யாவும் உனது செயல்களின் கனிகளாகும்", என்றான்.

சோமகன் {யமனிடம்}, "இங்கே இருக்கும் இந்த அந்தணர் இல்லாமல் நான் அருளுலகு செல்ல விரும்பவில்லை. சொர்க்கமோ, நரகமோ நான் இம்மனிதரின் துணையுடனே இருந்து விடுகிறேன். ஓ தர்மராஜா {யமா}, எனது செயல் அவருக்கு ஒத்ததுதான். அச்செயல் நன்மையோ தீமையோ, அதன் கனி எங்கள் இருவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்" என்றான்.

தர்மராஜன் {யமன்}, "ஓ! மன்னா {சோமகா}! இதுவே உனது விருப்பமென்றால், அச்செயலுக்கான கனியை அவன் பெறும் காலம் வரை சுவை. அதன் பிறகு நீ அருளுலகு செல்லலாம்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தத் தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட மன்னன் {சோமகன்}, பரிந்துரைக்கப்பட்டபடியே அனைத்தையும் சரியாகச் செய்தான். அவரது பாவங்கள் தொலைந்த பிறகு, அவன் தனது புரோகிதருடன் விடுவிக்கப்பட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புரோகிதரிடம் அன்பு கொண்ட அவன் நல்வினையினால் கிடைத்த அருள் உலகையும், மற்றும் அனைத்தையும் புரோகிதரான அந்த அந்தணருடனேயே அடைந்தான். நமது கண்ணெதிரே இருக்கும் இந்த ஆசிரமம் அவனுடையதே {சோமகனுடையதே}. இங்கே புலனடக்கத்துடன் ஆறு இரவுகள் தங்கும் மனிதன் அருளப்பட்ட உலகங்களை அடைகிறான். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தின் தலைவா! உற்சாகத்தை விடுத்து, தன்னடகத்துடன், நாம் ஆறு இரவுகளைக் கழிக்க வேண்டும். நீ அதற்குத் தயாராகு" என்றார் {லோமசர்}. 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, December 24, 2013

மேலும் ஆயுதங்கள் அடைந்தான் அர்ஜுனன் - வனபர்வம் பகுதி 41

Arjuna acquired more weapons | Vana Parva - Section 41 | Mahabharata In Tamil

(கைராத பர்வத் தொடர்ச்சி)

யமன், வருணன், குபேரன் ஆகியோரிடம் இருந்து அர்ஜுனன் ஆயுதங்களைப் பெறுவது….


வைசம்பாயனர் சொன்னார், "காளையைக் குறியீடாகக் கொண்ட பிநாகத்தைத் தாங்குபவன் {சிவன்}, உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சூரியன் மறைவதைப் போல, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்படி மறைந்து போனான். எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன் இதைக் கண்டு வியந்து, "ஓ, நான் பெரும் தேவனான தேவர்களுக்குத் தேவனை {சிவனை} நான் கண்டுவிட்டேன். நான் பிநாகத்தைத் தாங்கும் முக்கண்ணனான ஹரனை {சிவனை} அருள் வழங்கும் கோலத்தில், எனது கண்களால் கண்டும், கைகளால் தொட்டுமிருக்கிறேன். நான் நிச்சயம் பேறுபெற்றவன்தான். நான் நிச்சயம் வெற்றியடைவேன். நான் ஏற்கனவே பெருமைவாய்ந்தவன் ஆகிவிட்டேன். எனது எதிரிகள் என்னால் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். எனது காரியங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது" என்று நினைத்துக் கொண்டான் {அர்ஜுனன்}.

அளவிடமுடியாத சக்தி கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன், இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அங்கே அந்த இடத்திற்கு நீர்க்கடவுளான வருணன், அனைத்து விதமான நீர் மிருகங்களுடன், வைடூரியத்தைப் போன்று பிரகாசித்துக் கொண்டு, அந்தச் சூழ்நிலையையே தனது பிரகாசத்தால் நிறைத்து அழகுடன் வந்தான். ஆண் நதிகளையும், பெண் நதிகளையும், நாகர்களையும், தைத்தியர்களையும், சத்யர்களையும், சிறு தெய்வங்களையும் அழைத்துக் கொண்டு அந்த நீர் மிருகங்களின் தலைவனும் நிர்வாகியுமான வருணன் அந்த இடத்திற்கு வந்தான். மேலும், சுத்தமான தங்கத்தைப் போன்ற உடல் கொண்டு தலைவன் குபேரன், தனது பிரகாசமிக்க தேரில் அமர்ந்து, எண்ணிலடங்கா யக்ஷர்களுடன் அங்கே வந்தான். அந்தக் கருவூலத் தலைவன் {குபேரன்}, பெரும் அழகுடன், அந்தச் சூழ்நிலையைத் தனது பிரகாசத்தால் நிறைத்து அங்கே அர்ஜுனனைக் காண வந்தான். மேலும், உலகங்களை அழிக்கும் சக்தி கொண்ட பெரும் அழகு கொண்ட யமன், படைப்புத் தலைவர்களான பித்ருகளையும் உடன் அழைத்துக் கொண்டு வந்தான். சூரியனின் மகனும், அனைத்து உயிர்களை அழிப்பவனுமான, அந்த புத்திக்கெட்டாத ஆன்மா கொண்ட அறத்தேவன் {யமன்}, கையில் கதாயுதத்துடன், தனது தேரில், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் ஆகிய பகுதிகளையும் சேர்த்து மூன்று உலகத்திற்கும் ஒளியூட்டி, யுகத்தின் முடிவில் எழும் இரண்டாவது சூரியனைப் போல இருந்தான்.

அங்கே வந்த அவர்கள், சுடரொளி வீசிக்கொண்டு, பலவண்ண வேறுபாடுகளுடன் இருந்த அந்தப் பெரும் மலையின் உச்சியில் கடுந்தவத்தில் இருந்த அர்ஜுனனைக் கண்டார்கள். மேலும், மறு கணத்தில் சிறப்புமிகுந்த சக்ரன் {இந்திரன்}, தனது ராணியுடன், (தெய்வீக யானையான) ஐராவதத்தில் அமர்ந்து, அனைத்து தேவர்களும் சூழ அங்கே வந்தான். தனது தலைக்கு மேலே வெண்குடை பிடிக்கப்பட்டதால், மேகங்களில் இருந்து எட்டிப் பார்க்கும் சந்திரனைப் போல இருந்தான் அவன் {இந்திரன்}. கந்தர்வர்களாலும், தவத்தை செல்வமாகக் கொண்ட முனிவர்களாலும் வாழ்த்தப்பட்ட அந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} , அந்த மலையின் உச்சியில் இரண்டாவது சூரியனைப் போல இறங்கினான்.

அறத்தை முழுதும் அறிந்து பெரும் புத்திகூர்மை கொண்ட யமன், அந்த மலை உச்சியின் தெற்கே இறங்கி, மேகங்களை ஒத்த ஆழ்ந்த குரலில், "அர்ஜுனா, உலகப் பாதுகாவலர்களான நாங்கள் இங்கு வந்திருப்பதைப் பார். நீ எங்களைக் காணும் தகுதியைப் பெற்றிருப்பதால், நாங்கள் உனக்குப் {தெய்வீகப்} பார்வையைத் தருகிறோம். நீ உனது முற்பிறவியில் அளவிடமுடியா ஆன்மாவும், பெரும் பலமும் கொண்ட நரன் என்ற முனிவனாக இருந்தாய். ஓ குழந்தாய், பிரம்மனின் கட்டளைக்கிணங்க, நீ மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தாய்! ஓ பாவமற்றவனே, வசுக்களின் மைந்தனும், குருக்களின் அறம்சார்ந்த பாட்டனுமான பெரும் சக்தி கொண்ட பீஷ்மன் போர்க்களத்தில் உன்னால் வீழ்த்தப்படுவான். போர்க்களத்தில் பரத்வாஜரால் {துரோணரால்} கட்டளையிடப்பட்ட கடும் சக்தி படைத்த அனைத்து க்ஷத்திரியர்களையும் வீழ்த்துவாய். மனிதர்கள் மத்தியில் பிறந்திருக்கும் கடும் வீரம் கொண்ட தானவர்களையும் {அசுரர்களையும்}, நிவாதகவசர்கள் என்ற பெயர்பெற்ற தானவர்களையும் வீழ்த்துவாய்.

ஓ குருகுலத்தின் மகனே {அர்ஜுனா}, ஓ தனஞ்சயா, தனது சக்திக்காக உலகங்களால் கொண்டாடப்படுபவனும் எனது தந்தையின் {சூரியனின்} பகுதியுமான கடும் வீரம் கொண்டவனுமான கர்ணனை நீ கொல்வாய். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, எதிரிகளை அடிப்பவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளைக் கொண்டு பூமியில் அவதரிப்பவர்களையும் கொல்வாய். உன்னால் கொல்லப்படும் இவர்கள், தங்கள் செயல்களால் எந்த உலகங்களை அடைய வேண்டுமோ அந்த உலகங்களை அடைவார்கள். ஓ பல்குனா {அர்ஜுனா}, உனது சாதனைகளால், உலகம் உள்ளளவும் உனது புகழ் நிலைத்திருக்கும். போரில் நீ மகாதேவனையே {சிவனையே} திருப்தி செய்துவிட்டாய். நீ விஷ்ணுவுடன் சேர்ந்து, பூமியின் பாரத்தைக் குறைப்பாய். யாராலும் கலங்கடிக்க முடியாது எனது ஆயுதமான இந்த கதாயுதத்தைப் பெற்றுக் கொள். இந்த ஆயுதத்தால் நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்” {என்றான் எமன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஜனமேஜயா, பிறகு பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, உரிய மந்திரங்கள் மற்றும் சடங்குகளுடனும், அந்த கதா ஆயுதத்தை விடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்குமான புதிர்களுடனும் யமனிடம் இருந்து முறையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு மேகங்களைப் போல நீல நிறம் கொண்ட நீர் வாழ்வனவற்றின் தலைவனான வருணன், அந்த மலை உச்சியின் மேற்கு பாகத்தில் அமர்ந்து, "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, க்ஷத்திரியம் பயிலும் க்ஷத்திரியர்களில் முதன்மையானவன். ஓ அகன்ற தாமிரக் கண்கள் உடையவனே, என்னைப் பார், நானே நீர்த்தலைவனான வருணன், என்னால் வீசப்படும் சுருக்குக் கயிறு தாங்கமுடியாததாக இருக்கும். ஓ குந்தியின் மகனே, நீ என்னிடம் இருந்து இந்த வருண ஆயுதங்களை அதை விடுப்பதற்கும், திரும்ப அழைப்பதற்குமான புதிர்களுடன் பெற்றுக் கொள். ஓ வீரனே, இந்த ஆயுதங்களைக் கொண்டு, தாரகைக்காக {பிருஹஸ்பதி மனைவியின் காரணமாக} நடைபெற்ற யுத்தத்தால் பெரும் பலம் வாய்ந்த ஆயிரக்கணக்கான தானவர்கள் கட்டப்பட்டு பிடிபட்டனர். நீ அவற்றை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். யமனே உனது எதிரியானாலும், இதை நீ உனது கைகளில் வைத்திருந்தால், அவனால் உன்னிடம் இருந்து தப்ப முடியாது. நீ இதை வைத்துக் கொண்டு போர்க்களத்தில் உலாவும் போது, அந்த நிலம் க்ஷத்திரியர்களற்றதாகவிடும்." என்றான் {வருணன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "வருணன், யமன் ஆகிய இருவரும் தங்கள் தெய்வீக ஆயுதங்களைக் கொடுத்தபிறகு, கைலாசத்தின் உயரங்களில் தனது இல்லத்தைக் கொண்டுள்ள கருவூலத் தலைவன் {குபேரன்}, "ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன்னுடனான எனது இந்தச் சந்திப்பு, கிருஷ்ணனை நான் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கிறது. ஓ இடது கையால் வில்லைத்தாங்குபவனே, ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ முன்பு (மற்ற தேவர்களைப் போல) நித்தியமான தேவனாக இருந்தவன். பழங்கால கல்பங்களில், நீ தினமும் எங்களுடன்  தவச்சடங்குகளில் ஈடுபட்டுள்ளாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் உனக்கு தெய்வீகப் பார்வையைத் தருகிறேன். ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ ஒப்பந்த தைத்தியர்களையும் தானவர்களையும் கூட வீழ்த்துவாய். நேரத்தையிழக்கமால், என்னிடமிருந்தும் நீ ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொள். இதைக் கொண்டு நீ திருதராஷ்டிரனின் படைகளை வீழ்த்த முடியும். எனக்குப் பிடித்தமான இந்த அந்தர்த்தானாயுதத்தைப் பெற்றுக் கொள். சக்தியும், பராக்கிரமும், பிரகாசமும் கொண்ட இந்த ஆயுதம் எதிரிகளைத் தூக்கத்தில் ஆழ்த்தும் வல்லமைபெற்றது. சிறப்புமிக்க சங்கரரால் {சிவனால்} திரிபுரம் அழிக்கபட்ட போது, பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் இந்த ஆயுதத்தாலேயே உட்கொள்ளப்பட்டார்கள். ஓ ஒப்பற்ற வீரம் கொண்டவனே, உனக்கு கொடுப்பதற்காக நான் அதை எடுக்கிறேன். மேருவைப் போன்ற கண்ணியம் பொருந்திய நீ, இதைத் தாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவனே" என்றான். இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, பெரும் பலம் பொருந்திய குரு இளவரசனான அர்ஜுனன், குபேரனிடம் இருந்து அந்த தெய்வீக ஆயுதத்தை முறைப்படி பெற்றுக் கொண்டான்.

பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தடையற்ற சாதனைகள் செய்த  பிருதையின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இனிமையான வார்த்தைகளாலும், பேரிகைகளைப் போன்றதும், மேங்களின் கர்ஜனை போன்றதுமான ஆழ்ந்த குரலில், "ஓ பெரும்பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட குந்தியின் மகனே, நீ பழங்கால தேவனாவாய். நீ ஏற்கனவே உயர்ந்த வெற்றியையும், தேவனின் தன்மையையும் பெற்றுவிட்டாய். ஆனால், ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, நீ இன்னும் தேவர்களின் காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நீ விண்ணுலகத்திற்கு வர வேண்டும். ஆகையால், ஓ பெரும் ஒளிவீசும் வீரனே, தயாராக இரு. மாதலியைத் தேரோட்டியாகக் கொண்ட எனது தேர் விரைவில் பூமியில் இறங்கப் போகிறது. ஓ கௌரவனே {அர்ஜுனா}, உன்னை விண்ணுலகம் அழைத்துச் சென்று, அங்கே எனது தெய்வீக ஆயுதங்களை உனக்குக் கொடுப்பேன்" என்றான் {இந்திரன்}.

இமய மலையின் உயரங்களில், ஒன்றாகக் கூடியிருந்து உலகப் பாதுகாவலர்களைக் {லோகபாலர்களைக்} கண்ட, பெரும் சக்தி கொண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிகவும் வியந்து, அங்கே கூடியிருந்த லோகபாலர்களை வார்த்தைகளாலும், நீராலும், பழங்களாலும் முறைப்படி வழிபட்டான். அந்த தேவர்களும் பதில் மரியாதை செய்து திரும்பிச் சென்றனர். விரும்பிய இடத்திற்கு செல்லும் சக்தி படைத்த தேவர்கள் மனோ வேகத்தால் தங்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

மனிதர்களில் காளையான அர்ஜுனன், இப்படி ஆயுதங்களை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்தான். விருப்பம் நிறைவேறு வெற்றி மகுடம் தரித்தவனாக அவன் தன்னைக் கருதினான்.

 ******************கைராத பர்வம் முற்றிற்று******************


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top