Fortitude! | Shanti-Parva-Section-251 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 78)
பதிவின் சுருக்கம் : எவன் பிராமணன்? பிராமண நிலையை அடைவதெவ்வாறு? முக்திக்கு வழிவகுக்கும் மனோவுறுதி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "மணம், சுவை மற்றும் பிறவகை இன்பங்களில் ஒருவன் எந்தப் பற்றையும் வெளிக்காட்டக்கூடாது. மேலும் அவன் ஆபரணங்களையும், மணம் மற்றும் சுவைப் புலன்களால் நுகரும் பிற பொருட்களையும் ஏற்கக் கூடாது. அவன் கௌரவம், சாதனை மற்றும் புகழில் பேராசை கொள்ளக்கூடாது. கருத்துடைய பிராமணனின் ஒழுக்கம் இதுவேயாகும்.(1) வேதங்கள் அனைத்தையும் கற்று, தன் ஆசானிடம் கடமையுணர்வுடன் பணி செய்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனும், ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்கள் அனைத்தையும் அறிந்தவனுமான ஒருவன் மறுபிறப்பாளன் {பிராமணன்} ஆகமாட்டான்[1].(2) அனைத்து உயிரினங்களிடமும் சொந்தக்காரனைப் போல நடந்து கொள்பவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவனே வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஆசையற்றவனாக, (ஆத்ம ஞானத்தில் நிறைவடைந்தவனாக) இருக்கும் ஒருவன் ஒருபோதும் இறப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமும், இத்தகைய மனோநிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.(3) கருணையற்றவனாகவும், ஆசையைக் கைவிடாதவனாகவும் இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தக்ஷிணையுடன் கூடிய பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே பிராமண நிலையை அடைந்துவிடமுடியாது. அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும் ஒருவன் நிறுத்தும்போதும், எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் இருக்கும்போதும், அவன் பிராமண நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(5)