The curse begot by the god of Justice! | Adi Parva - Section 108 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 44)
பதிவின் சுருக்கம் :
பிழை செய்துவிட்டதை உணர்ந்து மாண்டவ்யரிடம் மன்னிப்பைக் கோரிய மன்னன்; ஆணிமாண்டவ்யர் என்ற பெயரின் காரணம்; தர்மதேவனைச் சபித்த ஆணிமாண்டவ்யர்...
வைசம்பயாணர் சொன்னார், "இப்படிக் கேட்கப்பட்ட அந்த முனிவர்களில் புலியானவர் தவத்தை செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்களிடம், "நான் யாரைப் பழிப்பது? உண்மையில், (என்னைத் தவிர) எனெக்கதிராக வேறு யாரும் எதையும் செய்யவில்லை" என்றார்.(1) ஓ ஏகாதிபதியே, அதன்பிறகு, அந்த நீதி அதிகாரிகள், அவரை உயிருடன் கண்டு, மன்னருக்குத் தெரிவித்தனர்.(2) மன்னனும் அவர்கள் சொன்னதைக் கேட்டு, அலோசகர்களுடன் ஆலோசித்து, அந்த இடத்திற்கு வந்து சூலத்தில் இருந்த முனிவரை அமைதிப்படுத்த முயன்றான்.(3)
மன்னன் அவரிடம், "ஓ முனிவர்களில் சிறந்தவரே, நான் எனது அறியாமையால் உமக்குத் தீங்கிழைத்துவிட்டேன். அதற்கான மன்னிப்பை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன். நீர் என்னிடம் கோபம் கொள்ளாதிருப்பீராக" என்று கேட்டான்.(4) மன்னன் இப்படிக் கேட்டுக் கொண்டதன் பின்னர் முனிவர் அமைதியடைந்தார். கோபத்திலிருந்து விடுபட்டிருந்த அம்முனிவரைக் கண்டு, சூலத்துடன் சேர்த்து அவரைத் தூக்கி, அவரது உடலிலிருந்து அச்சூலத்தை உருவ முயன்றான் மன்னன். ஆனால் அவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை.(5,6) எனவே அந்த முனிவரின் உடலுக்கு வெளியே இருந்த பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தான். அதன்பின் அந்த முனிவர், கழுவின் ஒரு பகுதியை உடலில் தாங்கிக் கொண்டே நடந்தார். அந்த நிலையிலும், கடும் தவங்கள் நோற்று, எவராலும் அடைய முடியாத எண்ணற்ற உலகங்களை அடைந்தார்.(7)