Viswamitra and Menaka! | Adi Parva - Section 72 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்ரரை மயக்கிய மேனகை; மேனகை பெற்றெடுத்த மகள்; சகுந்தலையைக் கண்ட கண்வர்; சகுந்தலையின் பெயர்க்காரணம்; துஷ்யந்தனிடம் தன் கதையைச் சொல்லி முடித்த சகுந்தலை...
கண்வர் தொடர்ந்தார், "அவளால் {மேனகையால்} இப்படிச் சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்து இடங்களையும் அணுக வல்லவனிடம் (காற்று தேவன் வாயுவிடம்), முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன் மேனகை இருக்கும் நேரத்தில், அவளோடு இருக்குமாறு ஆணையிட்டான்.(1) பிறகு, மருட்சியுடையவளும், அழகானவளுமான மேனகை, அந்த ஓய்வில்லத்தில் நுழைந்து, தன் தவங்களால் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்தவரான விஷ்வாமித்திரர் இன்னும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அங்கே கண்டாள்.(2) முனிவரை {விஷ்வாமித்திரரை} வணங்கிய அவள் {மேனகை}, அவர் முன்பாக விளையாடத் தொடங்கினாள். சரியாக அதே நேரத்தில் மாருதன் {வாயு தேவன்}, சந்திரனைப் போன்ற வெண்மையுடன் கூடிய அவளது {மேனகையினது} ஆடைகளைக் களவாடிச் சென்றான்.(3) அதன்பேரில் பெரும் நாணத்தில் நிறைந்த அவள் {மேனகை}, ஏதோ தான் மாருதனிடம் {வாயு தேவனிடம்} மிகவும் எரிச்சல் அடைந்ததைப் போலவும் தன் ஆடையைப் பிடிக்க ஓடினாள்.(4)