Showing posts with label மயன். Show all posts
Showing posts with label மயன். Show all posts

Wednesday, September 11, 2013

அரண்மனையை முடிக்க பதினான்கு மாதம் - சபாபர்வம் பகுதி 3

The Palace was constructed in fourteen months | Sabha Parva - Section 3 | Mahabharata In Tamil

(சபா கிரியா பர்வத் தொடர்ச்சி)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
அர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது..

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு மய தானவன், வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனிடம், "நான் இப்போது உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு, விரைவில் திரும்பி வருகிறேன். கைலாச மலைக்கு {Kailasa peak} வடக்கில் மைநாகம் {Mainaka} என்ற மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் {Vindu Lake} கரையில், தானவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான், காண்பதற்கினிய பல வண்ணங்களினால் ஆன ரத்னத்தாலும் தங்கத்தாலும் ஆன பண்டா {Vanda-
கைலாச மலை
ஒரு வகை கரடு முரடான பொருள்} என்ற பொருளை அங்கே பெரும் அளவில் சேகரித்து வைத்தேன். அவை எப்போதும் தன்னை உண்மைக்கு அர்ப்பணித்திருந்த விருஷபர்வனின் {Vrishaparva} மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. அவை இப்போதும் இருக்குமானால், ஓ பாரதா {அர்ஜுனா}, நான் அவற்றுடன் திரும்பி வருகிறேன். அதன் பிறகு, நான் அனைத்து வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, உலகத்தால் கொண்டாடப்படப் போகும் பாண்டவர்களின் அரண்மனையைக் கட்ட ஆரம்பிப்பேன். ஓ குரு குலத்தில் வந்தவனே, (தானவ} மன்னனால் எதிரிகளைக் கொல்லப் பயன்படுத்துப்பட்ட ஒரு கொடும் கதாயுதமும் அந்த நதியில் இருப்பதாக நினைக்கிறேன். அது பலமும் எடையும் நிறைந்ததாக, பல வண்ணங்களில் தங்கக் குமிழ் கொண்டிருந்தது. அது பெரும் எடையைத் தாங்க வல்லதாகவும், எதிரிகளைக் கொல்ல வல்லதாகவும், நூறு கதாயுதங்களுக்கு சமமானதாகவும் இருந்தது. உனக்கு காண்டீவம் பொருந்தியிருப்பதைப் போல, அந்த ஆயுதம் பீமனுக்குப் பொருந்தும். அங்கு, வருணனிடம் இருந்து வந்த தேவதத்தம் {Devadatta} என்று சொல்லக்கூடிய, பெருத்த ஒலியை எழுப்பும் பெரிய சங்கு ஒன்றும் இருக்கிறது. சந்தேகமற நான் இவை எல்லாவற்றையும் உனக்குத் தருகிறேன்," என்றான். இப்படி பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய அந்த அசுரன் {மயன்} வட கிழக்கு திசையில் புறப்பட்டு சென்றான்.கைலாசத்துக்கு வடக்கில், மைநாக மலையில், ஹிரண்யசிருங்கம் {Hiranya-sringa} என்று ரத்தினங்களால் ஆன ஒரு பெரிய சிகரம் இருக்கிறது. அந்த சிகரத்திற்கு அருகில்தான், பிந்து {Vindu Lake} என்ற பெயரில் இனிமையான ஒரு ஏரி இருக்கிறது. அங்கே, அதன் கரையில், முன்பொரு சமயம் பகீரதன் {Bhagiratha} என்ற மன்னன், தெய்வீக கங்கையைக் காண விரும்பி, பல வருடங்களாக அங்கு வசித்தான். அதனாலேயே அதற்கு {கங்கைக்கு}, அந்த மன்னனின் பெயரை ஒட்டி பாகீரதி {Bhagirathee} என்ற பெயரும் உண்டு. அங்கே அதன் கரையில், ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும், சிறப்பு வாய்ந்த தலைவனான இந்திரன், நூறு வேள்விகளைச் செய்தான். அங்கே விதிப்படி அல்லாமல் வெறும் அழகுக்காக, ரத்தினங்களால் ஆன கம்பங்களும், தங்கத்தாலான பலிபீடங்களும் வைக்கப்பட்டிருந்தன.  அங்கே அந்த வேள்விகளைச் செய்த ஆயிரம் கண் கொண்டவனான சச்சியின் தலைவன் {இந்திரன்} வெற்றி மகுடம் சூட்டப்பட்டான். அங்கே, அனைத்து உயிர்களுக்கும் நிலைத்த தலைவனான கடும் மஹாதேவன் {சிவன்}, அனைத்து உலகங்களையும் படைத்துவிட்டு, பல ஆயிரக்கணக்கான ஆவிகளால் வழிபடப்பட்டு, தனது வசிப்பிடத்தை இங்கே அமைத்துக் கொண்டான். அங்கே, நரனும் நாராயணனும், பிரம்மனும், யமனும், ஐந்தாவது ஸ்தாணுவும் ஆயிரம் யுகங்களாக தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அங்கே, வாசுதேவன் {கிருஷ்ணன்}, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் நிறுவ, நேர்மையான அர்ப்பணிப்புடன், பல பல வருடங்களுக்கு நீண்ட, தனது வேள்விகளைச் செய்தான். அங்கே கேசவனால் {கிருஷ்ணனால்} ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக் கணக்கிலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வேள்விக் கம்பங்களும், பெரும் பிரகாசமுடைய பலிபீடங்களும் வைக்கப்பட்டன.

ஓ பாரதா {ஜனமேஜயா}, அங்கே சென்ற மயன் கதாயுதத்தையும், சங்கையும், மன்னன் விருஷபர்வனுக்குச் சொந்தமான பளிங்கினாலான கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களையும் கொண்டு வந்தான். அந்தப் பெரும் அசுரனான மயன், அங்கே சென்று யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வந்த பெரும் செல்வத்தை எடுத்து வந்தான். அப்படிக் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் வைத்து, பெரும் அழகுடனும், தெய்வீகக் கலையம்சத்துடனும், ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்ட, இணையற்ற ஒரு அரண்மனையைக் கட்டினான். அவன் அந்த கதைகளில் சிறந்த கதையை பீமசேனனிடம் கொடுத்தான். அர்ஜுனனிடம் அற்புதமான அந்த சங்கைக் {தேவதத்தம் என்ற சங்கைக்} கொடுத்தான். அதன் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் அனைத்து உயிரினங்களும் நடுங்க ஆரம்பித்தன.

மயன் கட்டிய அந்த அரண்மனை, தங்கத் தூண்கள் கொண்டிருந்தது. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அது ஐயாயிரம் முழத்திற்கான பகுதியைப் பிடித்துக் கொண்டது. மிகுந்த அழகான உருவம் கொண்ட அந்த அரண்மனை அக்னியைப் போலவும், சூரியனைப் போலவும், சோமனைப் {சந்திரனைப்} போவலவும், பிரகாசத்தில் ஒளிர்ந்து, சூரியனையே கருத்துவிட்டது போலத் தெரியச் செய்தது. அது வெளிப்படுத்திய பிரகாசம், ஆகாயம் மற்றும் பாதாளத்தின் ஒளிகளைக் கலந்து, நெருப்பைப் போல இருந்தது. வானத்தில் தெளிவாய்த் தெரிகிற மேகத்திரள் போல, அந்த மாளிகை அனைவரும் பார்க்க எழுந்து நின்றது. திறமை வாய்ந்த மயனால் கட்டப்பட்ட அந்த அரண்மனை, மிகுந்த அகலமானதாக, இனிமையானதாக, அற்புதமான பொருட்களால் ஆனதாக. தங்கச் சுவர்களும், வளைவுகளும் கொண்டு, பல வித்தியாசமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து செல்வங்களும் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட போது, அது தசார்ஹா குலத்தைச் சேர்ந்த சுதர்மாவைக் காட்டிலும், பிரம்மனின் வசிப்பிடத்தைக் காட்டிலும் விஞ்சியது.

பெரும் உடலும், பெரும் பலமும், தாமிரம் போலக் கண்கள் சிவப்பாகவும், அம்புகள் போல காதுகள் நீண்டும், அனைத்து ஆயுதங்களும் தரித்துக் கொண்டும், விண்ணில் செல்லும் சக்தியும் கொண்ட கடுமையான எட்டாயிரம் ராட்சசர்களான, கிண்ணரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், அந்த அரண்மனையைப் பாதுகாத்து வந்தனர். அந்த அரண்மனைக்குள்ளேயே மயன் ஒரு இணையற்ற குளத்தை உருவாக்கினான். அந்தக் குளத்தில் கருத்த நிறம் கொண்ட ரத்தினங்களாலான இலைகளும், பிரகாசமான நகைகளாலான தண்டுகள் கொண்ட தாமரைகளும், தங்க இலைகள் கொண்ட மற்ற மலர்களும் அங்கே அதில் இருந்தன. அதன் மார்பில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் விளையாடித் திரிந்தன. முழுதும் மலர்ந்த தாமரைகளுடனும், மீன்களும் நிறைந்து, தங்க நிற ஆமைகளும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது அந்தக் குளம். மண் கலவாமல் தெளிந்த நீரை அது கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையில் இருந்து நீர் வரை, பளிங்கினால் ஆன படிக்கட்டுகள் இருந்தன. மிதமாக வீசிய தென்றல் அதன் {குளத்தின்} மார்புகளை மெதுவாகத் தழுவி, அங்கே நின்று கொண்டிருந்த மலர்களை குலுக்கி விட்டு சென்றது. அந்தக் குளத்தின் கரைகள், விலை மதிப்பு அதிகம் கொண்ட வெண்பளிங்கினாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இப்படிப் பல வித நகைகளாலும் மதிப்பு மிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த குளத்தைக் கண்ட மற்ற மன்னர்கள், தங்கள் கண்கள் அகலமாக விரிந்திருக்கும் போதே, தவறுதலாக நிலம் என்று நினைத்து, அதற்குள் விழுந்தனர். பல வகையான பல மரங்கள் அந்த அரண்மனையைச் சுற்றி நடப்பட்டன. அடர்த்தியான பச்சை வண்ணத்துடன், குளிர்ந்த நிழலைக் கொடுத்துக் கொண்டு, எப்போதும் மலர்ந்து கொண்டே இருந்த அந்த மரங்கள், பார்ப்பதற்கு அழகாக இருந்தன. அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை கானகம் {நந்தவனம் - artificial woods} எப்போதும் நறுமணத்தை வீசிக்கொண்டே இருந்தது. அங்கே இன்னும் பலக் குளங்களும் இருந்தன. அதில் அன்னப் பறவைகளும், கறந்தவங்களும் {நீர்க்காக்கைகளும்}, சக்கரவாகப் பறவைகளும் இருந்தன. நீரில் மலர்ந்த தாமரையின் மணத்தைச் சுமந்து வந்த தென்றல் பாண்டவர்களின் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் கூட்டியது. மயன் தெய்வீக சபை கொண்ட அத்தகையை அரண்மனையை பதினான்கு மாதங்களில் கட்டி முடித்து, அதன் நிறைவு குறித்து யுதிஷ்டிரனிடம் தெரிவித்தான் {மயன்}.

Monday, September 09, 2013

"அரண்மனை கட்டிக் கொடு!" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1

"Build a Palace" said Krishna | Sabha Parva - Section 1 | Mahabharata In Tamil

(சபா கிரியா பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
மயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...

இடத்தைச் சுட்டிக்காட்டும் அர்ஜுனன்
பார்க்கும் மற்ற பாண்டவர்கள்
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், அர்ஜுனனை வழிபட்ட மய தானவன் {Maya Danava}, கரங்கள் கூப்பி இனிமையான வார்தைகளால் தொடர்ந்து அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நான், கிருஷ்ணன் எனும் பிரவாகத்திலிருந்தும் {ஆற்று வெள்ளம்}, என்னை உட்கொள்ள விரும்பிய பாவகனிடமிருந்தும் (நெருப்பிடமிருந்தும்) உன்னால் காக்கப்பட்டேன். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்," என்று கேட்டான்.{மயன்} 


அர்ஜுனன், "ஓ பெரும் அசுரனே {மயனே},  ஏற்கனவே உன்னால் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன (இந்த உனது சலுகையுடன் சேர்த்து). நீ அருளப்பட்டிரு. நீ விரும்பிய இடத்திற்கு செல். நாங்கள் உன்னிடம் எப்படி அன்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறோமோ, அதே போல நீ என்னிடம் அன்பாகவும் திருப்தியுடனும் இரு!" என்றான்{அர்ஜுனன்}.

மயன், "ஓ மனிதர்களில் காளையே {அர்ஜுனனே}, ஓ மேன்மையானவனே, நீ என்ன சொன்னாயோ அதற்கு நீ தகுதி உடையவனே, ஆனால் ஓ பாரதா {அர்ஜுனா}, உனது மகிழ்ச்சிக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அசுரர்களில் விஸ்வகர்மாவான ஒரு பெரும் கலைஞன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, எனது நிலைக்கேற்ப, நான் உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்," என்றான்{மயன்}.

அர்ஜுனன், "ஓ பாவமற்றவனே {மயனே}, "உடனடி மரணத்திலிருந்து நீ (என்னால்) காக்கப்பட்டதாக கருதுகிறாய். அது அப்படியே இருந்தாலும், நான் எனக்காக உன்னை எதையும்  செய்ய வைக்க முடியாது. அதே வேளையில், ஓ தானவா, நான் உனது நோக்கங்களை சலிப்பூட்ட {நிராகரிக்க} விரும்பவில்லை. நீ கிருஷ்ணனுக்கு ஏதாவது செய். அதுவே நான் உனக்கு செய்த சேவைகளுக்கு போதுமான பதிலுதவியாக இருக்கும்," என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மயனால உந்தப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, மயனிடம் என்ன சாதனையைச் செய்யச் சொல்வது என்று சிறிது நேரம் சிந்தித்தான். அண்டத்தின் தலைவனும், அனைத்து பொருட்களின் படைப்பாளியுமான கிருஷ்ணன், தனது மனதில் ஒரு முடிவுக்கு வந்து மயனிடம், "ஓ திதியின் மகனே {மயனே}, கலைஞர்களில் முதன்மையானவனே, நீதிமானான யுதிஷ்டிரனுக்கு நீ நன்மை செய்ய விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கும்படி, ஒரு சிறப்பு வாய்ந்த {அரண்மனை போன்ற} சபை (கூட்டமன்றம்-Meeting hall) (உன்னால்) கட்டப்படட்டும். உண்மையில், இந்த மனித உலகில் உள்ள மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கும் போது, கவனத்துடன் பரீட்சித்துப் பார்க்கப்பட்டாலும் போலி செய்ய {imitate} முடியாதவாறு அந்த அரண்மனையை நீ கட்ட வேண்டும். மேலும், ஓ மயனே, அந்த மாளிகை தேவ, அசுர, மனித வடிவமைப்புகளின் கலவையாக இருக்குமாறு நீ அதைக் கட்ட வேண்டும்," என்று கேட்டான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட மயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, தேவர்களின் அரண்மனையைப் போன்ற ஒரு உன்னதமான அரண்மனையை உடனடியாகக் கட்டிக்கொடுத்தான். பிறகு, இந்த அனைத்து காரியங்களையும் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும், பார்த்தனும் (அர்ஜுனனும்) தெரிவித்து, அவனுக்கு மயனை அறிமுகப்படுத்தி வைத்தனர். யுதிஷ்டிரன் மயனை உரிய மதிப்புடன் வரவேற்று, அவனுக்குத் {மயனுக்குத்} தகுந்த மரியாதையைச் செய்தான். மேலும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயன் அந்த வரவேற்பை உயர்வாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டான். ஓ பாரத குலத்தில் ஏகாதிபதியே {ஜனமேஜயா}, திதியின் பெருமைக்குரிய அந்த மகன் {மயன்} பாண்டுவின் மகன்களுக்கு, தானவ விருஷபர்வனின் கதையை உரைத்தான். பிறகு அந்த கலைஞர்களில் முதன்மையானவன் {மயன்}, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களுக்கு அரண்மனையைக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான். கிருஷ்ணன் மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் அனுமதி பெற்ற பெரும் வீரம் கொண்ட சிறப்பு வாய்ந்த  தானவன் {மயன்}, ஒரு அதிர்ஷ்டமான நாளில் அடித்தளத்திற்கான {அஸ்திவாரத்திற்கான} ஆரம்பக்கட்ட சடங்குகளைச் செய்து, நன்கு கற்ற ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு இனிமையான பாலும் அரிசியும், பல வகையான ஆடம்பரப் பரிசுகளையும் கொடுத்து திருப்திப்படுத்தினான். பிறகு, பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில், அனைத்து பருவ காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ஐயாயிரம் சதுர முழத்திற்கு {Cubit square, 1 Cubit = 1 முழம்} கட்டடத்திற்காக அளந்து எடுத்தான் {மயன்}.

Sunday, September 08, 2013

வன எரிப்பு முடிவுக்கு வந்தது! - ஆதிபர்வம் பகுதி 236

Forest conflagration extinguished! | Adi Parva - Section 236 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 7)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது...

வைசம்பாயனர் சொன்னார், "மந்தபாலர் தனது பிள்ளைகளிடம், "உங்கள் பாதுகாப்புக்காக நான் அக்னியிடம் பேசினேன். அந்தச் சிறப்புமிகுந்த தெய்வம் {அக்னி} எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தான். அக்னியின் அந்த வார்த்தையாலும், உங்கள் தாயின் {ஜரிதையின்} அறத்தன்மையாலும், நீங்களே பெற்றிருக்கும் பெரும் சக்தியாலும் தான் நான் முன்னமே வரவில்லை. ஆகையால் எனது மக்களே {மகன்களே}, என்னைக்குறித்து உங்கள் இதயங்களில் மனக்கசப்பை நிலைக்க வைக்காதீர். நீங்கள் அனைவரும் வேதங்களை அறிந்த முனிவர்கள். அக்னி கூட உங்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்" என்றார்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது மகன்களுக்கு இப்படிப்பட்ட உறுதிகளைக் கொடுத்த அந்த அந்தணர் மந்தபாலர், தன்னுடன் தனது மனைவியையும் {ஜரிதையையும்} மகன்களையும் {சாரங்கப் பறவைகளையும்} அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று, வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார்.

"இப்படியே அந்தக் கொடும் கதிர்கள் கொண்ட பிரகாசமான தேவன் {அக்னி}, பலத்தால் வளர்ந்து, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் துணையுடன் உலக நன்மைக்காகக் காண்டவ வனத்தை எரித்தான். கொழுப்பு மற்றும் எலும்பினுள் இருக்கும் மஜ்ஜையின் பல ஆறுகளைக் குடித்த அக்னி பெரிதும் மனநிறைவு அடைந்து தன்னை அர்ஜுனனுக்கு வெளிக்காட்டினான்.

மருத்துகளால் {காற்றுத் தேவர்களால்} சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, வானில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்}, கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "தேவர்களாலும் கூடாத காரியத்தைச் சாதித்துவிட்டீர்கள். மனிதர்களால் அடைய முடியாத வரத்தை நீங்கள் ஒவ்வொருவரும் கேட்கலாம். நான் உங்களிடம் பெரும் மனநிறைவு அடைந்துள்ளேன்" என்றான் {இந்திரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனிடம் அவனது அனைத்து ஆயுதங்களையும் கேட்டான். இது குறித்துப் பெரும் பிரகாசமுள்ள சக்ரன் {இந்திரன்}, அவற்றைக் கொடுக்க ஒரு நேரத்தை நிச்சயத்துக் கொண்டு, "சிறப்பு மிகுந்த மாதவன் {கிருஷ்ணன்} உன்னிடம் எப்போது மனநிறைவு கொள்வானோ, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, அப்போது நான் என் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன். ஓ குரு குலத்தின் இளவரசனே {அர்ஜுனனே}, அந்த நேரம் வரும்போது நான் அதை அறிவேன். உனது ஆன்மத் தவங்களுக்காக {உனது தவங்கள் முடிந்த பிறகு}, நான் உனக்கு எனது அனைத்து நெருப்பாலான ஆயுதங்களையும் {அக்னேயா அஸ்திரங்களையும்}, வாயவ்யா ஆயுதங்களையும் {வாயு அஸ்திரங்களையும்} கொடுப்பேன். நீயும் அனைத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாய்" என்றான் {இந்திரன்}.

அர்ஜுனனுடனான தனது நட்பு எப்போதும் நிலைத்ததாக இருக்க வேண்டும் என்று வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டான். புத்திசாலிக் கிருஷ்ணன் விரும்பிக் கேட்ட வரத்தை தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, அருளினான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் கேட்ட இந்த வரங்களைக் கொடுத்த மருத்துகளின் தலைவன் {இந்திரன்}, ஹூதாசனனுடனும் (வேள்வி நெய்யை உணவாகக் கொண்டவன்) {அக்னியுடனும்} பேசிய பிறகு, அனைத்துத் தேவர்களையும் அழைத்துக் கொண்டு விண்ணுலகம் சென்றான். பதினைந்து நாட்கள் அக்கானகத்தையும், அதிலிருந்த விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் எரித்த அக்னி பெரும் மனநிறைவு கொண்டு, மேலும் எரிவதை நிறுத்திக் கொண்டான். ஏராளமான அளவில் இறைச்சியை உண்டு, கொழுப்பு மற்றும் இரத்தத்தைக் குடித்து மிக மனநிறைவை அடைந்த அக்னி அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம், "மனிதர்களில் இரு புலிகளான உங்களால் நான் மனநிறைவு அடைந்தேன். வீரர்களே, எனது கட்டளையால் {வரத்தால்}, விரும்பும் இடத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள்" என்றான். சிறப்பு வாய்ந்த அக்னியால் இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனனும், வாசுதேவனும், தானவன் மயனுமாகிய -- அம் மூவரும் -- கொஞ்ச நேரம் உலவி விட்டுக் கடைசியாக நதியின் இன்பம் தரும் கரையில் வந்து அமர்ந்தார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.

************ ஆதிபர்வம் முற்றும் ************ 


ஆங்கிலத்தில் | In English

Friday, September 06, 2013

"அர்ஜுனா! என்னைக் காப்பாற்று," என்றான் மயன்! - ஆதிபர்வம் பகுதி 230

"Arjuna! Save me," said Maya! | Adi Parva - Section 230 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 1)

கிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது.

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு அந்த காண்டவ வன வாசிகளான, தானவர்கள், ராட்சசர்கள், நாகர்கள், ஓநாய்கள், கரடிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள், மதம் கொண்ட யானைகள், புலிகள், பிடரி மயிர் கொண்ட சிங்கங்கள், மான்கள், நூற்றுக்கணக்கான எருமைகள், பறவைகள், பலதரப்பட்ட மற்ற உயிரினங்கள் அனைத்தும் விழுந்து கொண்டிருக்கும் கற்களால் பயந்து, மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி எல்லாப்புறங்களிலும் பறக்க ஆரம்பித்தனர். அவை (எல்லாப்புறமும் பற்றி எரியும்} கானகத்தையும், ஆயுதத்துடன் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்டன.


தெளிவாகக் கேட்கும் பயங்கரமான சத்தங்களால் பயம் கொண்ட அந்த உயிரினங்கள் தங்கள் நகரும் சக்தியை இழந்தன. பல இடங்களில் கானகம் பற்றி எரிவதையும், தனது ஆயுதங்களுடன் தங்களைத் தாக்கத் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும் கண்ட அவை, அச்சத்துடன் கதறின. அந்தப் பயங்கர ஆரவாரத்தாலும், நெருப்பின் சீற்றத்தாலும், அந்த மொத்தச் சுற்றுப்புறமே எச்சரிக்கும் மேகங்களைப் போல சத்தம் நிறைந்ததாக இருந்தது. கரிய நிறம் கொண்ட, பலம் நிறைந்த கேசவன் {கிருஷ்ணன்} அவற்றை அழிக்க, தீ கக்கும் சுய சக்தியாலேயே பிரகாசமான தனது பெரிய சக்கரத்தைச் சுழற்றி வீசினான். தானவர்களும் ராட்சசர்களும் அடங்கிய அந்தக் கானகவாசிகள், அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டு, நூறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அக்னியின் வாயில் விழுந்தனர். கிருஷ்ணனின் சக்கரத்தால் சிதைக்கப்பட்ட அந்த அசுரர்கள், அவர்களது கொழுப்பிலும் ரத்தத்தில் நனைந்து மாலை நேர மேகங்கள் போல இருந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} மரணமே அங்கு நேராக வந்து நடப்பது போல, பிசாசங்களையும், பறவைகளையும், நாகர்களையும் மற்ற விலங்குகளையும் ஆயிரக்கணக்கில் கொன்று நகர்ந்து கொண்டிருந்தான். எதிரிகளைக் கொல்பவனான கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தொடர்ந்து வீசப்பட்ட அந்தச் சக்கரம், எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொண்டு மறுபடி மறுபடி அவன் கரங்களுக்கே திரும்பிக் கொண்டிருந்தது. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் ஆன்மாவான கிருஷ்ணனின் உருவமும் முகமும், அவன் பிசாசங்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று கொண்டிருக்கும்போது பார்ப்பதற்கு மிகக்கடுமையாக இருந்தது. அங்கே கூடியிருந்த தேவர்களில் யாரும் கிருஷ்ணனையோ அர்ஜுனனையோ வீழ்த்த முடியவில்லை. கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தால் எரிந்து கொண்டிருந்த கானகத்தை இனி காக்க முடியாது என்று கண்ட தேவர்கள், காட்சியில் இருந்து மறைந்தார்கள். பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), தேவர்கள் பின்வாங்கியதைக் கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பாராட்டினான். தேவர்கள் சண்டையிடுவதைக் கைவிட்டதும், உருவமற்ற ஒலி {அசரீரி}, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் {இந்திரனிடம்} ஆழமாகவும் சத்தமாகவும், "உனது நண்பனான பாம்புகளின் தலைவன் தக்ஷகன் கொல்லப்படவில்லை! காண்டவ வனம் எரியூட்டப்படும் முன்பே அவன் குருக்ஷேத்திரத்திற்குப் பயணப்பட்டுவிட்டான். ஓ வாசவா {இந்திரா}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்], அர்ஜுனனும் போர்க்களத்தில் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்பதை எனது வர்த்தைகளால் அறிந்து கொள்! அவர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சொர்க்கவாசிகளால் கேள்விப்படப்படும் பழங்காலத்தின் தெய்வங்களான நரனும் நாராயணனும் ஆவர்! அவர்களது சக்தியையும் வீரத்தையும் பற்றி நீ அறிவாய். போர்க்களத்தில் வெல்லப்பட முடியாத அந்த பழைய முனிவர்களில் சிறந்தவர்கள், உலகத்தில் யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள்! அவர்கள் தேவர்களாலும் அசுரர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும், மனிதர்களாலும், கிண்ணரர்களாலும், நாகர்களாலும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆகையால், ஓ வாசவா {இந்திரா}, அனைத்து தேவர்களுடன் சேர்ந்து நீயும் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் உனக்குத் தகும். காண்டவத்தின் அழிவு விதியால் நிர்ணயிக்கப்பட்டது!", என்றது. பிறகு இறவாதவர்களின் தலைவன் {இந்திரன்} அந்த வார்த்தைகளை உண்மை என்று ஏற்று, தனது கோபத்தையும் பொறாமையையும் கைவிட்டு, சொர்க்கத்திற்குத் திரும்பினான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, சொர்க்கவாசிகள், சிறப்புமிகுந்த இந்திரன் சண்டையைக் கைவிட்டதைக் கண்டு, அவனைத் தங்கள் அனைத்து படைவீரர்களுடன் தொடர்ந்தனர். பிறகு, அந்த வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தேவர்கள் பின்வாங்குவதைக் கண்டு சிம்மகர்ஜனை செய்தனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இந்திரன் காட்சியை விட்டு அகன்றதும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். பிறகு அந்த வீரர்கள், அந்தக் கானகம் எரிவதற்கு அச்சமற்று துணை புரிந்தார்கள். காற்று மேகங்களை சிதற வைப்பது போல, அர்ஜுனன் தேவர்களைச் சிதற வைத்தான். அந்தக் கானகத்தில் வசித்த எண்ணற்ற உயிர்களைத் தனது கணை மழையால் கொன்றான். அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்ட கணக்கற்ற உயிர்களில் ஒன்று கூட, அந்த எரியும் கானகத்திலிருந்து தப்ப முடிய வில்லை. சண்டையிடுவதற்கு அப்பாற்பட்டு, அங்கிருந்த பலம்வாய்ந்த உயிர்களில் ஒருவராலும் அர்ஜுனனின் கணை பொய்ப்பதைக் காண முடியவில்லை.. சில நேரங்களில் ஒரு கணையால் நூற்றுக்கணக்கான உயிர்களையும், சில நேரங்களில் ஒரு உயிரை நூற்றுக்கணக்கான கணைகளாலும் துளைத்துக் கொண்டே அர்ஜுனன் தனது தேரில் நகர்ந்தான். உயிரற்ற அந்த விலங்குகள், மரணத்தால் அடிக்கப்பட்டது போல தானாகவே அக்னியின் (நெருப்பு தேவன்) வாயில் விழுந்தன. நதியின் கரைக்குச் சென்றாலும், சமமற்ற தரைக்குச் சென்றாலும், சுடுகாட்டுக்குச் சென்றாலும், எங்கு சென்றாலும் அந்த உயிரினங்கள் வெப்பத்தால் துன்பத்துக்குள்ளாயின. பல விலங்குகள் வலியால் கதறின. யானைகளும், மான்களும், ஓநாய்களும் துன்பத்தால் கதறின. அந்த சத்தங்களைக் கேட்ட கங்கையிலும் கடலிலும் இருந்த மீன்களும், அந்தக் கானகத்தில் வசித்த வித்யாதரர்கள் என்ற பல்வேறு இனங்களும் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாயின. ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவனே {ஜனமேஜயா}, அவர்களுடன் தனியாக சண்டைக்கு நின்ற எந்த உயிரினத்தாலேயும் கரிய நிறம் கொண்ட அர்ஜுனனையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} காணக்கூட முடியவில்லை. ஹரி {கிருஷ்ணன்} தன்னை நோக்கி விரைந்து வந்த ராட்சசர்களையும், தானவர்களையும், நாகர்களையும் தனது சக்கரத்தால்{சக்கராயுத்தால்} கொன்றான். அந்தச் சக்கரத்தின் வேகமான நகர்தலால் அந்தப் பெரும் உடலில் இருந்த தலைகள் கொய்யப்பட்டு, உயிர் மாய்க்கப்பட்ட அவர்களது உடல்கள் எரியும் நெருப்புக்குள் விழுந்தன. பெரும் அளவிலான சதை, ரத்தம், கொழுப்பு ஆகியவற்றால் பெரும் திருப்திக் கொண்ட சுடர்கள், சுருள்புகை இல்லாமல் பெரும் உயரத்திற்கு எழுந்தன.

பிரகாசமான தாமிரக் கண்களையுடைய ஹூதாசனன் (நெருப்பு கடவுள்), எரியும் நாவுடனும், பெரிய வாயுடனும், நெருப்புப் போன்ற கூந்தலுடனும் இருந்தான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் உதவியால், தேன் ஊற்றைக் குடிப்பது போல விலங்குகளின் கொழுப்பைக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். பெரும் திருப்தியடைந்த அக்னி பெரும் இன்பம் அடைந்தான். தக்ஷகனின் வசிப்பிடத்திலிருந்து மயன் {Maya} எனும் அசுரன் தப்புவதை மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} திடீரெனக் காண நேர்ந்தது. வாயுவை ரதசாரதியாகக் கொண்ட அக்னி, தலையில் ஜடாமுடி தரித்தவரின் உடலுடன், மேகங்களைப் போல கர்ஜித்து அந்த அசுரனை கண்டு அவனை {மயனை}உட்கொள்ள விரும்பினான்.

அசுரனைக் {மயாசுரனைக்} கண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, அவனை அடிக்கத் தயாராக தனது சக்கரத்தை உயர்த்தி பிடித்தபடி நின்றான். பின்னால் அவனை {மாயாசுரனை} எரித்துவிட அக்னி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது மயன், "ஓ அர்ஜுனா, என்னிடம் ஓடிவா, என்னைக் காப்பாற்று!" என்றான். இந்த அச்சம் கலந்த குரலைக் கேட்ட அர்ஜுனன், "அஞ்சாதே" என்றான். அர்ஜுனனின் அந்தக் குரல், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயனுக்கு உயிர் கொடுத்தது போல இருந்தது. பிருதையின் {குந்தியின்} கருணை கொண்ட மகன் {அர்ஜுனன்} மயனிடம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவன் {கிருஷ்ணன்}, அதற்கு மேல் நமுச்சியின் சகோதரனான மயனைக் கொல்ல விரும்பவில்லை. அக்னியும் அவனை எரிக்கவில்லை."

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்திரனால் பாதுகாக்கப்பட கானகத்தை, கிருஷ்ணன் மற்றும் பார்த்தனின் தயவால், அந்த புத்திகூர்மையைக் கொடையாகக் கொண்ட அக்னி பதினைந்து நாட்களுக்கு எரித்தான். அந்தக் கானகம் எரிந்த போது அக்னி அந்தக் கானகவாசிகளில் ஆறு பேரை மட்டுமே விட்டு வைத்தான். அவர்கள் அஸ்வசேனன் {தக்ஷகனின் மகன்}, மயன், மற்றும் நான்கு சாரங்கப் பறவைகள் ஆகிய அறுவர் ஆவர்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top