History of Charvaka! | Shanti-Parva-Section-39 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் : சார்வாகனுடைய வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது உலகளாவிய அறிவு படைத்தவனான தேவகியின் மகன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தம்பிகளுடன் அங்கே நின்று கொண்டிருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம்,(1) "ஓ! ஐயா, இவ்வுலகில் பிராமணர்கள் எப்போதும் என் வழிபாட்டுக்குரியவராவர். பேச்சில் நஞ்சு கொண்டவர்களும், நிறைவு செய்ய எளிதானவர்களுமான அவர்களே {பிராமணர்களே} இந்தப் பூமியில் தேவர்களாவர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு கிருத காலத்தில், சார்வாகன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், பதரியில் பல வருடங்கள் கடுந்தவமிருந்தான்.(3) தம்மிடம் வரங்களை வேண்டுமாறு பிரம்மன் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக அந்த ராட்சசன், அண்டத்தின் அனைத்துயிரிடம் கொண்ட அச்சத்திலிருந்தும் எதிர்ப்புணர்வு கொள்ளும் {எவ்வுயிரிடமும் அச்சமடையாமல் இருக்கும்} வரத்தை வேண்டினான்.(4) அண்டத்தின் தலைவன் {பிரம்மன்}, பிராமணர்களுக்குக் குற்றமிழைக்காமல் கவனத்துடன் இருக்கும்வரை, அனைத்துயிரிடமும் அச்சமடையாத எதிர்ப்புணர்வைக் கொள்வான் என்ற உயர்ந்த வரத்தை அவனுக்கு அளித்தான்.(5)


