Cat and mouse – Friendship and Enemity! | Shanti-Parva-Section-138| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : ஆபத்துக் காலத்தில் எவ்வாறு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்குப் பூனை மற்றும் எலியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக்குலத்தின் காளையே, எதிர்காலத்திற்குத் தேவையானதைத் தருவதும் {அடைவதும்}, அவசர காலங்களை எதிர்கொள்வதுமான நுண்ணறிவே எங்கும் மேலானது, அதே வேளையில், காலதாமதம் அழிவையே கொண்டு வரும் என்று நீர் சொல்கிறீர்.(1) ஓ! பாட்டா, சாத்திரங்களை நன்கறிந்தவனும், அறம் மற்றும் பொருளை நன்கு அறிந்தவனுமான மன்னன், எந்த மேன்மையான நுண்ணறிவின் துணையுடன் இருந்தால், பல எதிரிகளால் சூழப்படும்போதும் கலங்காமல் இருப்பான் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, இதையே நான் கேட்கிறேன். இது குறித்து உரையாடுவதே உமக்குத் தகும்.(3) ஒரு மன்னன் பல எதிரிகளால் தாக்கப்படும்போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு இசைவாக அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(4) ஒரு மன்னன் துயரில் வீழும்போது, கடந்த காலத்தில் அவனது செயல்களால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான எதிரிகள், அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை வெல்ல முனைவார்கள்.(5)
