The acquisition of Righteousness! | Shanti-Parva-Section-310 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 137)
பதிவின் சுருக்கம் : ஆறமீட்டல் மற்றும் அறிவு ஈட்டல் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் வசுமானுக்கு விளக்கிச் சொன்ன பிராமண முனிவர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு காலத்தில், ஜனக குல மன்னன் ஒருவன் {மன்னன் வசுமான்}, வசிப்பாரற்ற காடுகளில் மானைத் தேடித் திரிந்து கொண்டிருந்தபோது, பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு மேன்மையான பிராமணரை அல்லது முனிவரைக் கண்டான்.(1) சுகமாக அமர்ந்திருந்த அந்த முனிவருக்குத் தலைவணங்கிய அந்த மன்னன் வசுமான், அவர் அருகில் அமர்ந்து, அவர் அனுமதியுடன் இந்தக் கேள்வியைக் கேட்டான்:(2) "ஓ! புனிதமானவரே, நிலையற்ற உடலைக் கொண்டவனும், ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவனுமான ஒரு மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் எது உயர்ந்த நன்மையை உண்டாக்கும்?" என்று கேட்டான்(3) மன்னனால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டவரும், தவத் தகுதி கொண்டவருமான அந்த முனிவர் நன்மைமிக்க வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(4)
