King Nriga! | Anusasana-Parva-Section-70 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 70)
பதிவின் சுருக்கம் : மன்னன் நிருகனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வழிதவறி வந்த பசு; பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்த மன்னன் நிருகன்; ஓணானாக மாறியது; கிருஷ்ணன் நிருகனை விடுவித்தது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒரு பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிட்டதன் விளைவால் மன்னன் நிருகன் அடைந்த பேரிடரைக் குறித்த கதையை இது தொடர்பாக அறவோர் குறிப்பிடுகின்றனர்.(1) சில காலத்திற்கு முன்பு, யதுகுலத்தைச் சார்ந்த சில குறிப்பிட்ட இளைஞர்கள் நீர் தேடிச் சென்ற போது, புல் மற்றும் கொடிகளால் நன்கு மறைக்கப்பட்ட ஒரு பெரிய கிணற்றை அடைந்தனர்.(2) அதனிலிருந்து நீரெடுக்கும் விருப்பத்தில் அதன் வாயைச் சுற்றியிருந்த கொடிகளை அகற்ற பெரிதும் முயற்சி செய்தனர். அந்த வாயில் தூய்மையடைந்ததும், அதனுள் ஒரு பெரிய ஓணான் வசிப்பதைக் கண்டனர். அந்த இளைஞர்கள் அச்சூழலில் இருந்து அந்த ஓணானை மீட்க மீண்டும் மீண்டும் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(3,4) மலையின் அளவுக்கு ஒப்பாக இருந்த அந்த ஓணானைக் கயிறுகளாலும், தோல் வார்களாலும் விடுவிக்க முயன்றனர். தங்கள் நோக்கத்தில் வெல்ல முடியாத அந்த இளைஞர்கள் ஜனார்த்தனனிடம் சென்றனர்.(5)
