Highly sacred Kurukshetra! | Shalya-Parva-Section-53 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்...
அம்முனிவர்கள், "ஓ! ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது" என்றனர்.(2)
