The Marriage of Arjuna and Chitrangada! | Adi Parva - Section 217 | Mahabharata In Tamil
(அர்ஜுன வனவாச பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் பல சிகரங்களையும், பல புண்ணிய இடங்களையும் கண்டு மணிப்புரம் சென்றது; அங்கே சித்ரவாஹனன் மகள் சித்ராங்கதையை மணந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு அந்த வஜ்ரதாரியின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} (தன்னுடன் வசித்து வந்த) பிராமணர்களிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, இமயத்தின் சாரலை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் அகஸ்தியவடம் எனும் இடத்தை அடைந்து, அங்கிருந்து வசிஷ்டரின் சிகரத்திற்குச் சென்றான். பிறகு அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} பிருகுவின் சிகரத்திற்குச் சென்றான்.(2) அங்கே தன்னை நீராலும், சடங்குகளாலும் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல வீடுகளையும் பரிசாகக் கொடுத்தான்.(3) அந்த மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} ஹிரண்யபிந்து என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்தை நோக்கி முன்னேறினான். அங்கேயும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பாண்டுவின் மகன், அதன் பிறகு பல புனிதமான இடங்களைக் கண்டான் {புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்தான்}.(4)