Brahma and emancipation! | Shanti-Parva-Section-270 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 97)
பதிவின் சுருக்கம் : வர்ணாசிரமங்களால் அடையத்தக்க முக்தி மற்றும் பிரம்மம் குறித்து ஸ்யூமரஸ்மிக்கும் கபிலருக்கும் இடையில் நடந்த உரையாடல்...
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "வேதங்களே அதிகாரம் பெற்றவையாக அனைவராலும் கருதப்படுகிறது. மக்கள் அவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை. ஒலியாலான பிரம்மம் {சப்தப்ரம்மம்}, (உணர்ந்தறிய முடியாத) உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} என்ற இருவகைப் பிரம்மங்கள் இருக்கின்றன[1].(1) ஒலியாலான பிரம்மத்தை அறிந்தவன், உயர்ந்த பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். கர்ப்பதானச் சடங்கில் தொடங்கி, வேத மந்திரங்களின் துணையுடன் தந்தை உண்டாக்கிய உடல், (பிறப்புக்குப் பிறகு) வேத மந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது.(2) (வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட்ட) தூய்மைச் சடங்குகளால் உடல் தூய்மை ஆகும்போது, (அந்த உடலின்) உரிமையாளன் அதுமுதல் ஒரு பிராமணன் என்று அழைக்கப்பட்டு, பிரம்ம அறிவைப் பெறத் தகுந்த பாத்திரமாகிறான். செயல்களின் வெகுமதியானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் இதயத் தூய்மை என்பதை அறிவீராக. நான் தற்போது அதுகுறித்து உம்மிடம் பேசப் போகிறேன்.(3) (செயல்களைச் செய்வதால்) இதயத் தூய்மையானது அடையப்பட்டதா, அடையப்படவில்லையா என்பது எந்த மனிதன் அஃதை அடைந்தானோ அவனால் அறியப்படும். வேதங்கள் அல்லது உள்ளுணர்வின் துணையால் அஃதை அறியமுடியாது. எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்க்காதவர்கள், எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சேர்க்காமல் எந்த வகைச் செல்வங்களையும் துறப்பவர்கள், ஆசையற்றவர்கள், அனைத்து வகை விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்கள், வேள்விகள் செய்வது கடமை என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக அவற்றைச் செய்கிறார்கள். தகுந்தவர்களுக்குக் கொடையளிப்பதே செல்வங்கள் அனைத்தின் (சரியான பயன்பாட்டுக்குரிய) கதியாகும்.(4,5)