Rajdharma alias Nadijangha! | Shanti-Parva-Section-169 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் : வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை...
![]() |
| Rajdharma alias Nadijangha! | Shanti-Parva-Section-169 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த கௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ! மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொருவனாகத் திரியத் தொடங்கினான்[1].(5)
