Jamvavati! | Anusasana-Parva-Section-14a | Mahabharata In Tamill
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் வரம் கேட்ட ஜாம்பவதி; இமயம் சென்ற கிருஷ்ணன்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையாற்றின் மைந்தரே, அண்டத்தின் தலைவனுடைய பெயர்கள் அனைத்தையும் நீர் கேட்டிருக்கிறீர். ஓ! பாட்டா, ஓ! பலமிக்கவரே, ஈசன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனின் பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக.(1) அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க ஆசானும், சங்கரன் என்றழைக்கப்படுபவனும், புலப்படாத தோற்றத்தைக் கொண்டவனும், பப்ரு அல்லது பரந்தவன் {பெரியவன்} என்றும் அழைக்கப்படுபவனுடைய பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக. அந்த மஹாதேவனின் பலத்தையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
