Royal duties as said by Utatthya! | Shanti-Parva-Section-91 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 91)
பதிவின் சுருக்கம் : மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன? பலவீனமே பெரியது என்பதேன்? துன்புறுபவனின் கண்ணீர் செய்வதென்ன? மன்னனின் கடமைகள் என்னென்ன? மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, "மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)