Jackals dragged Drona's feet! | Stri-Parva-Section-23 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 08) [ஸ்திரீ பர்வம் - 14]
பதிவின் சுருக்கம் : சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி ...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)