Not even a drop of dew fell from the sky! | Adi Parva - Section 175 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : மீண்டும் மறைந்த தபதி; மன்னனிடம் வந்த வசிஷ்டர்; சூரியனிடம் பெண் கேட்ட வசிஷ்டர்; சம்வர்ணனும், தபதியும் திருமணம் செய்து கொண்டது; நாட்டில் பஞ்சமேற்பட்டது; பஞ்சத்தை நீக்கிய வசிஷ்டர்...
கந்தர்வன் தொடர்ந்தான், "இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.(1) அவனது அமைச்சர்களும், தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடிக் கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர்.(2) அந்தத் தனிமையான இடத்தில் வானிருந்து விழுந்த வானவில்லைப் போலக் கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது முதல் அமைச்சர் நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனைத் தூக்கினார்.(3-5) வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, மன்னனிடம், "ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!" என்று சொல்லி இனிமையாகப் பேசத் தொடங்கினார்.(6,7)

