The Birth of Dhritarashtra, Pandu and Vidura! | Adi Parva - Section 106 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 42)
பதிவின் சுருக்கம் :
வியாசரின் மூலம் அம்பிகைக்குப் பிறந்த திருதராஷ்டிரன்; அம்பாலிகைக்குப் பிறந்த பாண்டு; பணிப்பெண்ணுக்குப் பிறந்த விதுரன்...
வைசம்பாயனர் சொன்னார், "கோசல இளவரசியின் மாதவிடாய் முடிந்ததும், சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் {அம்பிகையிடம்},(1) "ஓ கோசல இளவரசியே {அம்பிகையே}, உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக" என்றாள்.(2) தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி {அம்பிகை}, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.(3) அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் (இளவரசிகளில் மூத்தவள்) குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.(4) அந்த இளவரசி {அம்பிகை} அவரது {வியாசரது} கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்[1].(5)
