Brahmanahood attained by King Vitahavya! | Anusasana-Parva-Section-30 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 30)
பதிவின் சுருக்கம் : வத்ஸ நாட்டு மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலை அடைந்த வரலாறு; வத்ஸ நாட்டு வீதஹவ்யனின் முன்னோர்கள்; காசி நாட்டு பிரதர்த்தனனின் முன்னோர்கள்; இரு நாட்டுக்கும் இருந்த பகை; வத்ஸர்களால் பீடிக்கப்பட்ட காசி; வீதஹவ்யனை வீழ்த்திய பிரதர்த்தனன்; பிருகுவிடம் தஞ்சமடைந்த வீதஹவ்யன்; அவனைத் தேடி வந்த பிரதர்த்தனன்; வீதஹவ்யன் பிராமணனான பிறகு அவனுக்கு உண்டான வழித்தோன்றல்களின் பட்டியல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, இந்தக் கதையை நான் கேட்டிருக்கிறேன். ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, பிராமண நிலையானது அடைவதற்கு மிக அரிதானது என்று நீர் சொல்கிறீர்.(1) எனினும், பழங்காலத்தில் விஷ்வாமித்திரரால் பிராமண நிலை அடையப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். எனினும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, அந்நிலை அடையப்பட இயலாதது என எங்களுக்கு நீர் சொல்கிறீர்.(2) பழங்காலத்தில் மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலையை அடைவதில் வென்றான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! பலமிக்கவரே, ஓ! கங்கையின் மைந்தரே, மன்னன் வீதஹவ்யன் மேன்மையடைந்த கதையை நான் கேட்க விரும்புகிறேன்.(3) அந்த மன்னர்களில் சிறந்தவன், பிராமண நிலை அடைவதில் எந்தச் செயல்களின் மூலம் வென்றான்? (பெரும்பலம் கொண்ட எவரிடம் இருந்தாவது அடையப்பட்ட) ஏதாவது வரத்தின் மூலமோ, தவ அறத்தின் மூலமோ அது நடந்ததா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(4)
