Parasara's Rakshasa sacrifice! | Adi Parva - Section 183 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் சொல் மதித்து உலகத்தை அழிப்பதைக் கைவிட்ட பராசரர்; ராட்சசர் அழிவுக்கான வேள்வியைச் செய்து பல ராட்சசர்களை அழிப்பது; பிறகு அத்ரி, புலஸ்தியர், புலஹர் கிரது ஆகியோரின் சொல் கேட்டு அவ்வேள்வியை நிறுத்தியது...
கந்தர்வன் தொடர்ந்தான், "சிறப்புமிகுந்த வசிஷ்டரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த பிராமண முனிவர் {பராசரர்} உலகத்தை அழிக்கத் தன்னைத் தூண்டிய கோபத்தை அடக்கிக் கொண்டார்.(1)ஆனால், வேதமறிந்தவர்களில் முதன்மையானவரும், சக்திரியின் மகனும், பெரும் சக்தியைக் கொண்ட முனிவருமான பராசரர், ஒரு பெரும் ராட்சச வேள்வியை நடத்தினார்.(2) (தமது தந்தையான) சக்திரியின் படுகொலையை நினைத்துப் பார்த்த அந்த முனிவர் முதிர்ந்த மற்றும் இளமையான ராட்சசர்களைத் தான் நடத்திய வேள்வியின் மூலமாக எரித்தார்.(3) (தமது பேரனின்) இரண்டாவது உறுதிமொழியில் குறுக்கிடக்கூடாது என்று உறுதியேற்ற வசிஷ்டர், ராட்சசர்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை.(4) பராசர முனிவர் அவ்வேள்வியில் சுடர்விட்டெரியும் மூன்று நெருப்புகளுக்கு எதிரில் நான்காவது நெருப்பாக அமர்ந்திருந்தார்.(5)