Hayagriva and Madhukaitabhas! | Shanti-Parva-Section-348 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 175)
பதிவின் சுருக்கம் : பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு...
ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, "தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)
