Showing posts with label புலஸ்தியர். Show all posts
Showing posts with label புலஸ்தியர். Show all posts

Tuesday, February 04, 2014

புலஸ்தியரும் நாரதரும் விடைபெற்றனர்! - வனபர்வம் பகுதி 85இ

Pulastya and Narada bade farewell! | Vana Parva - Section 85c | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "புஷ்கரையில் ஒருவன் தவம் பயில வேண்டும்; மஹாலயத்தில் ஒருவன் தானம் செய்ய வேண்டும்; மலைய மலைகளில் ஒருவன் ஈமச் சிதையில் ஏற வேண்டும்; பிருகுதுங்கத்தில் ஒருவன் உணவைப் புறந்தள்ளி உடலைக் கைவிட வேண்டும். புஷ்கரை, குருக்ஷேத்திரம், கங்கை, {கங்கை யமுனை} சங்கமம் ஆகியவற்றில் நீராடும் ஒருவன் தனக்கு முன்பும் பின்புமான ஏழு தலைமுறைகளைப் புனிதப்படுத்துகிறான். கங்கையின் பெயரை உரைக்கும் ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான்; அதைக் {கங்கையைக்} காண்பவன் செழிப்பை அடைகிறான்; அதில் நீராடி, அதன் நீரைப் பருகுபவன் தனக்கு முன்பும் பின்புமான ஏழு தலைமுறைகளைப் புனிதப்படுத்துகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, கங்கையின் நீர் ஒரு மனிதனின் எலும்பை எவ்வளவு காலம் தொட்டுக் கொண்டிருக்குமோ அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறான். பக்தியுடன் புனித தீர்த்தங்களுக்கும், புனிதமான இடங்களுக்கும் புனிதப்பயணம் செய்யும் பலனையும் அவன் அடைகிறான். கங்கையைப் போன்று வேறு எந்தத் தீர்த்தமும் கிடையாது, கேசவனைப் {கிருஷ்ணன் (அ) விஷ்ணு} போன்று வேறு எந்தத் தெய்வமும் கிடையாது, அந்தணனுக்கு மேன்மையானவன் யாரும் கிடையாது என்று பெருந்தகப்பனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, கங்கை பாயும் பகுதிகள் புனிதமான ஆசிரமங்களாகக் கருதப்பட வேண்டும். கங்கைக்கரையில் இருக்கும் நிலப்பகுதிகள் துறவின் வெற்றிக்கு உகந்ததாகக் கருதப்பட வேண்டும்.


(தீர்த்தங்கள் குறித்த) இந்த உண்மையான விளக்கத்தை ஒருவன் மறுபிறப்பாளர்களுக்கும் {பிராமணர்களுக்கும்}, பக்திமான்களுக்கும், தனது மகனுக்கும், நண்பர்களுக்கும், சீடர்களுக்கும் தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் உரைக்கலாம். அருளப்பட்ட ஒப்பற்ற புனிதமான இந்த உரை ஒருவனைச் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும். புனிதமான, பொழுதுபோக்கான ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் இந்த உரை உயர்ந்த மதிப்பையும், உயந்த பலன்களையும் தருகிறது. அனைத்துப் பாவகளையும் அழிக்கும் இந்தப் புதிர் பெரும் முனிவர்களால் கவனத்துடன் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.

அந்தணர்களுக்கு மத்தியில் இதை உரைப்பதால் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். தீர்த்தங்களின் இந்த விவரிப்பு மங்களகரமான, சொர்க்கத்தைக் கொடுக்க வல்லது புனிதமானது; எப்போதும் அருளப்பட்டிருக்கும் அது ஒருவனின் எதிரிகளை அழிக்கிறது; அது எல்லாக் காரியங்களிலும் முதன்மையானதாக இருந்து புத்திகூர்மையை அதிகரிக்கிறது. பிள்ளையற்றவன் இந்த உரையைப் படிப்பதால் மகனைப் பெறுகிறான், ஏதுமற்றவன் செல்வத்தைப் பெறுகிறான், அரச வழியில் வந்தவன் முழு உலகத்தையும் அடைகிறான், வைசியன் செல்வத்தைப் பெறுகிறான், சூத்திரன் அவனது விருப்பங்களை அடைகிறான், அந்தணன் (இந்த உலகத்தின்) கடலைக் கடக்கிறான். ஒருவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பலவகைப்பட்ட தீர்த்தங்களின் பலன்களைத் தினமும் கேட்பதால், தனது முந்தைய பல பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூர்ந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.

இங்கே உரைக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்களில் சிலவற்றை எளிதாக அடையலாம், சில அடையக் கடினமானதாகும். ஆனால் அனைத்துத் தீர்த்தங்களையும் காணும் விருப்பம் கொண்டவன், கற்பனையால் கூட அவற்றுக்குப் பயணம் செய்யலாம். வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள், தேவர்களுக்கு இணையான முனிவர்கள் ஆகியோர் பலன்களை அடைய விரும்பி இந்தத் தீர்த்தங்களில் நீராடியிருக்கின்றனர். ஓ அற்புதமான நோன்புகள் நோற்கும் குரு குலத்தவனே {பீஷ்மா}, நான் சொல்லிய முறைகளின் படியும், புலனடக்கத்துடனும் இத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்தால், உனது தகுதியை நீ வளர்த்துக் கொள்வாய். கற்ற பக்திமான்கள், தங்கள் சுத்திகரிக்கப்பட்ட புலன்களாலும், கடவுள் நம்பிக்கையாலும், வேத அறிவாலும் இத்தீர்த்தங்களை அடைய இயலும்.

கௌரவனே {பீஷ்மா} நோன்புநோற்காதவன், ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவன்; சுத்தமில்லாதவன், திருடன், வக்கிர புத்தியுள்ளவன் ஆகியோர் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. நீ எப்போதும் அறம்பயில்பவனாகவும், சுத்தமான நடத்தையுள்ளவனாகவும் இருக்கிறாய். ஓ அறம்சார்ந்தவனே, அறம் அறிந்தவனே {பீஷ்மா}, உனது அறத்தால் உனது தந்தையையும், பாட்டனையும், பெரும் பாட்டன்களையும், பிரம்மாவைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையும், முனிவர்களையும் எப்போதும் திருப்தி செய்திருக்கிறாய். ஓ பீஷ்மா, வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் நீ வசுக்களின் உலகை அடைந்து, பூமியில் நிலைத்த புகழுடன் இருப்பாய்" என்றார்.

நாரதர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படி மகிழ்ச்சியுடன் பேசிய சிறப்புமிக்கப் புலஸ்திய முனிவர், மிகவும் திருப்தி கொண்டவராய் பீஷ்மரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கேயே மறைந்து போனார். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, சாத்திரங்களின் உண்மைகளை நன்றாகப் புரிந்த பீஷ்மன், புலஸ்தியரின் உத்தரவின் பேரில் உலகம் முழுவதும் சுற்றினான். ஓ அருளப்பட்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே பீஷ்மன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் தனது உயர்ந்த பலன்வாய்ந்த பயணத்தைப் பிரயாகையில் முடித்தான். இக்குறிப்புகளின் படி உலகத்தைச் சுற்றும் மனிதர் நூறு குதிரை வேள்விகளின் உயர்ந்த கனியை அடைந்து, அதன் பிறகு முக்தியை அடைவான்.

பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, முன்பு குருக்களில் முதன்மையான பீஷ்மன் அடைந்தது போல நீயும் எட்டுக் குணங்களுடன் கூடிய பலன்களை அடைவாய். நீ துறவிகளை அத்தீர்த்தங்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று {எட்டு மடங்கு} மிகப் பெரிதான பலன்களை அடைவாய். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} ராட்சசர்களின் தொந்தரவுகள் கொண்ட தீர்த்தங்களை உன்னையன்றி யாரும் அடைய முடியாது. அதிகாலையில் எழுந்து, தீர்த்தங்களைக் குறித்து தெய்வீக முனிவர்கள் அருளியிருக்கும் உரைகளை உரைப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.

முனிவர்களில் முதன்மையான வால்மீகி, கசியபர், அத்ரேயர், குண்டஜடரர், விஸ்வாமித்திரர், கௌதமர், அசிதர், தேவலர், மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், வசிஷ்டர், உத்தாலக முனிவர், தனது மகனுடன் கூடிய சௌனகர், துறவிகளில் சிறந்த வியாசர், முனிவர்களில் முதன்மையான துர்வாசர், பெரும் தவமியற்றிய ஜாபாலி ஆகிய துறவை செல்வமாகக் கொண்ட சிறப்புமிக்க முனிவர்கள் உன்னிடம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஓ பலம்பொருந்திய மன்னா {யுதிஷ்டிரா} நீ அத்தீர்த்தங்களைக் காணச் செல்.

ஓ சிறப்புமிக்க ஏகாதபதி {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி கொண்ட லோமசர் என்ற பெயர் கொண்ட பெரும் முனிவர் ஒருவர் உன்னிடம் வருவார். ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரா}, அவர் சொல்வதையும், நான் சொல்லியிருப்பதையும் ஏற்று அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செல். இதனால் நீ மன்னன் மகாபிஷனைப் போலப் பெரும்புகழை அடைவாய். ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த யயாதி போல, புரூரவஸ் போல நீ உனது தன்னறத்தால் பிரகாசிப்பாய். பகீரதன் போலவும், சிறப்புமிக்க {தசரத} ராமன் போலவும் மன்னர்களுக்கு மத்தியில் நீ சூரியனாக ஒளிர்வாய். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, முனி அல்லது இக்ஷவாகு போலவோ அல்லது பெரும் புகழ் கொண்ட புரு அல்லது வைனியன் போலவோ நீ உலகத்தால் கொண்டாடப்படுவாய். பழங்காலத்தில் விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, தனது அனைத்து எதிரிகளையும் எரித்து மூன்று உலகத்தையும் ஆண்டு, மனத்துயரத்தில் இருந்து விடுபட்டான். தனது எதிரிகளை எல்லாம் கொன்ற அவன் தனது குடிமக்களைச் {தேவர்களைச்} சிறப்புற ஆண்டான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, உனது வகைக்கான {க்ஷத்திரிய} முறைகளுடன் முழு உலகத்தையும் அடைந்து, உனது அறத்திற்காக நீ இப்பூமியில் கார்த்தவீரியார்ஜுனனைப் போலப் புகழப்படுவாய்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்கு} இப்படி ஆறுதலளித்த சிறப்பு மிக்க நாரத முனிவர், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு அங்கேயே மறைந்து போனார். அறம்சார்ந்த யுதிஷ்டிரன் அக்காரியத்தை ஆலோசித்து, தீர்த்தங்கள் குறித்த பலன்களைத் துறவிகளுக்கு உரைக்க ஆரம்பித்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


ஓம் என்ற எழுத்தின் சக்தி! - வனபர்வம் பகுதி 85ஆ

The power of the syllable Om! | Vana Parva - Section 85b | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் 

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் துங்ககத்தை அடைய வேண்டும். பழங்காலத்தில் அங்கேதான் சாரஸ்வத முனிவர் துறவிகளுக்கு வேதங்களைக் கற்பித்தார். வேதங்கள் (முனிவர்களால் மறக்கப்பட்டுத் தொலைந்த போது, அந்த அங்கிரச குமாரன் {சாரஸ்வதர்}, முனிவர்களின் மேலாடைகள் {துண்டு என்று நினைக்கிறேன்} மேல் வசதியாக அமர்ந்து கொண்டு, "ஓம்" என்ற முக்கிய எழுத்தை முழுவதும் முறைப்படி உச்சரித்தார். இதன்காரணமாக, துறவிகள் அனைவரும் தாங்கள் ஏற்கனவே கற்றதை நினைவு கூர்ந்தனர். அந்த இடத்தில்தான் முனிவர்களும், தேவர்களும் வருணன், அக்னி, பிரஜாபதி, ஹரி என்று அழைக்கப்படும் நாராயணன், மகாதேவன், மற்றும் பெரும் பிரகாசம் கொண்ட சிறப்புமிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மா} ஆகியோரும் வேள்வியை நடத்த பிரகாசித்துக் கொண்டிருந்த பிருகுவை நியமித்தனர். தெளிந்த நெய்யை முறைப்படி பானபலியாகக் {libation} கொடுத்து அக்னியைத் திருப்தி செய்த சிறப்புமிக்கப் பிருகு, ஒருமுறை அக்னேயதான வேள்வியை முனிவர்களுக்காக நடத்தினார். அந்த வேள்விக்குப் பிறகு முனிவர்களும் தேவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு ஒருவர் பின் ஒருவராகத் திரும்பினர். துங்கக வனத்தில் நுழையும்  ஆணோ பெண்ணோ, ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர். ஓ வீரனே, ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் புலனடக்கத்துடனும், முறையான உணவுக்கட்டுப்பாட்டுடனும் ஒரு மாதம் தங்க வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, இதனால் ஒருவன் பிரம்மனின் உலகத்தை அடைந்து, தனது குலத்தைக் காக்கிறான்.

பிறகு ஒருவன் மேதாவிகத்தை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். இதனால் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, ஞாபக சக்தியையும் புத்திகூர்மையையும் பெறுகிறான். அந்தத் தீர்த்ததில் {மேதாவிகத்தில்}, முழு உலகத்தாலும் அறியப்பட்ட காலஞ்சரம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அங்கே இருக்கும் தெய்வீகத் தடாகத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா, ஒருவன் அங்கே நீராடிய பிறகு அந்தக் காலஞ்சர மலையில் (தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும்) நீர்க்கடன் செலுத்தினால், சந்தேகமற சொர்க்கத்தில் மதிக்கப்படுகின்றான். பிறகு ஒருவன், ஓ ஏகாதிபதி {பீஷ்மா} அனைத்துப் பாவங்களையும் அழிக்கவல்ல மந்தாகினி நதியை அடைந்து, மலைகளில் சிறந்த சித்திரகூடத்தையும் அடைந்து, அங்கே நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் வழிபாடுகளைச் செய்பவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான பர்த்திரிஸ்தானத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே தேவர்களின் தளபதியான கார்த்திகேயன் {முருகன்} இருக்கிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதாலேயே ஒருவன் வெற்றியை அடைகிறான். பிறகு கோடி என்றழைக்கப்படும் தீர்த்ததில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு அந்தக் கோடியை வலம் வரும் ஒருவன் ஜேஷ்டஸ்தானத்தை அடைய வேண்டும். அங்கே சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மகாதேவனைக் {சிவனைக்} காண வேண்டும். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே ஒரு கொண்டாடப்படும் கிணறு இருக்கிறது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தக் கிணற்றில் நான்கு கடல்களும் இருக்கின்றன. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அங்கே கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவோடு தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு நீராடும் ஒருவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மேன்மையான நிலையை அடைகிறான். ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பெருமைவாய்ந்த சிருங்கபேரபுரத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, முன்பொரு காலத்தில் தசரதனின் மகனான ராமன் இங்கேதான் (கங்கையைக்) கடந்து சென்றான். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். புலனடக்கத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் அங்கே இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, *வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் உயர்ந்த நுண்ணறிவு கொண்ட மகாதேவனைப் பிரதிஷ்டை செய்திருக்கும் மயூரவடத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தெய்வத்தைக் கண்டு, அவனை வணங்கி வலம் வருபவன், ஓ பாரதா {பீஷ்மா} கணபத்திய நிலையை அடைகிறான். அந்தத் தீர்த்தத்தில் இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவனது அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகின்றன. ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், முனிவர்களால் அதன் பெருமைகள் பாடப்படும் பிரயாகையை அடைய வேண்டும். பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், திக்குகளின் தெய்வங்களும், லோகபாலர்களும், சித்தர்களும், உலகங்களால் வழிபடப்படும் பித்ருக்களும், பெரும் முனிவர்களான சனத்குமாரர்களும் மற்றவர்களும், களங்கமற்ற பிரம்ம முனிவர்களான அங்கிரசும் மற்றவர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், சித்தர்களும், பாம்புகளும் {நாகர்களும்}, ஆறுகளும், கடல்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், பிரஜாபதியுடன் கூடிய தலைவன் ஹரியும் அங்கே  {பிரயாகையில்} வசிக்கின்றனர். அத்தீர்த்ததில் இருக்கும் மூன்று அக்னிக்குண்டங்களுக்கு மத்தியில், தீர்த்தங்களில் முதன்மையான கங்கை வேகமாக வருகிறாள். அங்கே அந்தப் பகுதியில்தான் உலகத்தைச் சுத்தப்படுத்தும் சூரியனின் மகளான, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் யமுனை, கங்கையுடன் இணைகிறாள்.

கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட நாடு பெண்ணின் இடையைப் போன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது. பிரயாகையே அதன் முதன்மையான இடம் என்றும் கருதப்படுகிறது. பிரவேள்வி, பிரதிஷ்டாம், கம்பளம், அஸ்வதரம், போகவதி ஆகிய தீர்த்தங்கள் படைப்பாளனின் {பிரம்மாவின்} வேள்வி மேடைகளாகும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா} அந்த இடங்களில் வேதங்களும் வேள்விகளும் வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்கள் பிரம்மனை வழிபடுகின்றனர். தேவர்களும், எல்லைகளை ஆளுபவர்களும் {மன்னர்களும்} அங்கே தங்கள் வேள்விகளை நடத்துகின்றனர். ஓ மேன்மையானவனே, இருப்பினும் இந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் பிரயாகையே மிகவும் புனிதமானது என்று கற்றோர் சொல்கின்றனர். உண்மையில் அது மூன்று உலகிலும் முதன்மையான தீர்த்தமாகும். அந்தத் தீர்த்ததிற்குச் {பிரயாகைக்குச்} சென்று, அதன் {பிரயாகையின்} புகழைப் பாடி, அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக் கொள்பவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே இருக்கும் சங்கமத்தில் நீராடும் ஒருவன், ராஜசூய வேள்வி செய்த பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான். இந்த வேள்விக்கான இடம் தேவர்களால் கூட வழிபடப்படுகிறது. ஓ பாரதா {பீஷ்மா} ஒரு மனிதன் அங்கே சிறிதளவே தானம் செய்தாலும் அது ஆயிரம் மடங்காகப் பெருகும்.

ஓ குழந்தாய் {பீஷ்மா}, வேதங்களின் உரையோ, மனிதர்களின் கருத்துகளோ, பிரயாகையில் உயிரை விட விரும்பும் உனது மனதை மாற்றாது இருக்கட்டும். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பத்தாயிரம் {ten thousand} தீர்த்தங்களுடன், அறுபது கோடி {600 million) தீர்த்தங்களும் பிரயாகையில் இருக்கின்றன. கங்கை மற்றும் யமுனையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் நால்வகை அறிவு சம்பந்தமான பலன்களையும், உண்மையின் பலன்களையும் அடைகிறான். அந்தப் பிரயாகையில் வாசுகியின் தீர்த்தமான போகவதி என்றழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அந்தக் கங்கையில், பத்து குதிரை வேள்விகளின் பலனைத் தரும் மூன்று உலகத்திலும் புகழோடு இருக்கும் ராமப்பிரப்பதன தீர்த்தம்  இருக்கிறது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, கங்கையில் எங்கேனும் நீராடும் மனிதன் குருக்ஷேத்திரப் பயணத்திற்கு ஒப்பான பலனை அடைகிறான். இருப்பினும், கனகலத்தில் அதைவிட அதிகப் பலனை அடைகிறான். பிரயாகையில் கனகலத்தைவிட அதிக பலனை அடைகிறான். நூறு பாவங்களைச் செய்த ஒருவன் கங்கையில் நீராடினால், அதன் நீரால் அவனது பாவங்கள் அனைத்தும் எரிபொருளை விழுங்கும் நெருப்பைப் போலக் கழுவப்படும். சத்திய யுகத்தில் அனைத்து தீர்த்தங்களும் புனிதமானவை என்றும், திரேதா யுகத்தில் புஷ்கரை மட்டுமே அப்படி என்றும், துவாபரையில் குருக்ஷேத்திரம் என்றும், கலியுகத்தில் கங்கை மட்டுமே புனிதம் என்றும் சொல்லப்படுகிறது.

*******************************************

* வாஜபேய வேள்வி என்றால் என்ன? என்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். ஆறு சோம வேள்விகளில் முக்கியமான ஒன்றுதான் வாஜபேய வேள்வி. அதில் அந்த வேள்வியின் தலைவன் {எஜமானன்} சடங்கு நீராடி  வர வேண்டும். வேள்வியின் முடிவில் மன்னனே அத்தலைவனுக்கு {எஜமானனுக்கு} வெண்குடை பிடிக்க வேண்டும். "வாஜ" என்றால் அரிசி {உணவு} என்று பொருள். "பேய" என்றால் பானகம் என்று பொருள். வாஜபேயம் என்ற பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, அவ்வேள்வி அபரிமிதமான பயிர் உற்பத்தியையும், அபரிமிதமான நீரையும் கொடுக்கும். அவ்வேள்வியில் சோமரச ஹோமம், பசுஹோமம் (23 விலங்குகள்), அன்னம் அல்லது வாஜ ஹோமம் {அதாவது உணவு} ஆகியவை அடக்கம். வேள்வித்தலைவன் மீதியிருக்கும் அரசியில் குளிப்பதால், அதாவது, நீரைப்போல அரிசி அவன் மீது ஊற்றப்படுவதால் "வாஜபேயம்" என்று அழைக்கப்படுகிறது. ஆதாரம் : http://www.kamakoti.org/hindudharma/part19/chap6.htm


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, February 03, 2014

குமரிக்கு அப்பால் நடுக்கடலில் ஒரு தீர்த்தம்! - வனபர்வம் பகுதி 85அ

A tirtha after Kanya in the midst of the sea! | Vana Parva - Section 85a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு அற்புதமான தீர்த்தமான சம்வேத்திய தீர்த்தத்தை மாலைப்பொழுதில் அடைந்து, அதன் நீரைத் தொடுவதால் ஒருவன் நிச்சயமாக அறிவைப் பெறுகிறான். முற்காலத்தில் {தசரத} ராமனின் அருளால் உண்டான லௌஹித்ய தீர்த்தத்தை அடைந்தால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கரதோயை நதியை அடையும் ஒருவன், மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். இந்த விதி படைப்பாளியாலேயே {பிரம்மனாலேயே} உண்டாக்கப்பட்டது. ஓ மன்னா {பீஷ்மா}, கடலில் கங்கை கலக்கும் இடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனைப் போன்று பத்து மடங்கு பலனை அடைவான் என்று ஞானிகள் கூறுகின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} கங்கையின் மறு கரைக்குக் கடந்து சென்று, அதில் நீராடி அங்கே மூன்று இரவுகள் வசிப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.


பிறகு ஒருவன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வைதரணியை அடைய வேண்டும். அடுத்ததாக விராஜம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடையும் ஒருவன் சந்திரனைப் போலப் பிரகாசிப்பவனாகி, தனது குலத்தைப் புனிதமாக்கி, அதைக் காத்து, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். விராஜத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து தனது குலத்தை புனிதப்படுத்துகிறான். சுத்தத்துடன் சோணம் மற்றும் ஜோதிரத்தியையின் சங்கமத்தில் வசிக்கும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்துவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக, சோணம் மற்றும் நர்மதையின் பிறப்பிடங்களை உள்ளடக்கிய வம்சகுல்மத்தின் நீரைத் தொடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.

ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, அடுத்ததாக கோசலத்தில் ரிஷபம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் சிறிது காலம் தங்குபவன் அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்தால் வாஜபேய வேள்வி செய்த பலனையும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் அடைந்து, தனது குலத்தையும் காக்கிறான். கோசலத்தை அடையும் மனிதன் அங்கே இருக்கும் கால தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் நிச்சயமாக பதினோரு காளைகளை தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} புஷ்பவதியில் நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது குலத்தைப் புனிதப்படுத்தி, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு, ஓ பாரத குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மா}, பதரிகா என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைந்து, சொர்க்கத்தை அடைகிறான். அடுத்ததாக சம்பையை அடைந்து, பாகிரதியில் நீராடும் ஒருவன், தண்டத்தைக் காண்பதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் புண்ணியவான்கள் இருக்கும் புனிதமான லபேடிகையை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் வாஜபேய வேள்வியைச் செய்த பலனை அடைந்து தேவர்வகளால் மதிக்கப்படுகிறான். அடுத்ததாக ஜமதக்னேயன் {பரசுராமன்} வசிக்கும் மகேந்திரம் என்று அழைக்கப்படும் மலையை அடைந்து, ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, இங்கே மதங்கரின் கேதாரம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஒ குரு குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மனே}, அங்கே நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ {ஸ்ரீபர்வதம்} என்ற மலையை அடைந்து, அங்கிருக்கும் ஓடையின் நீரைத் தொட்டு காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வணங்கினால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ என்ற அந்த மலையில் பிரகாசமிக்க மகாதேவன் {சிவன்}, தேவியுடன் மகிழ்ச்சியாக வசிக்கிறான். பிரம்மனும் மற்ற தேவர்களும் கூட அங்கே வசிக்கின்றனர். அங்கிருக்கும் தேவத்தடாகத்தில் சுத்தமான தெளிந்த மனதுடன் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து உயர்ந்த வெற்றியை அடைகிறான். அடுத்ததாக பாண்டிய நாட்டில் தேவர்களால் வழிபடப்படும் ரிஷப மலையை அடைபவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.

பிறகு ஒருவன் அப்சரஸ்கள் அடிக்கடி செல்லும் காவேரி ஆறுக்குச் செல்ல வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கு நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கடற்கரையில் இருக்கும் கன்யா {கன்யாகுமாரி} தீர்த்தத்தை அடைந்து அதன் நீரைத் தொடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா} பிறகு ஒருவன், கடலுக்கு மத்தியில் பிரம்மாவின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், பூதங்களும், யக்ஷர்களும், பிசாசர்களும், கின்னரர்களும், பெரும் நாகர்களும் {மகோரகர்களும்}, சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், பன்னகர்களும், ஆறுகளும், கடல்களும், மலைகளும் எங்கு உமையின் தலைவனை {சிவனை} வழிபடுகிறார்களோ, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்து அந்த ஈசானனை {சிவனை} வணங்க வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து கணபத்திய {கணங்களின் தலைவன்} நிலையை அடைகிறான். அங்கே பனிரெண்டு இரவுகள் தங்குவதால் ஒருவனது ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது.

பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் காயத்ரி என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் வசிக்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா} அங்கே அந்தணர்கள் காரியத்தில் ஒரு வினோதமான நிகழ்வு நடக்கிறது. ஒரு பிராமணத்தி மூலமோ அல்லது வேறு பெண்ணின் மூலமோ பிறந்த ஒரு அந்தணன் அங்கே காயத்ரியை உச்சரித்தால் அது ஸ்வரமும் நியமமும் உள்ளதாக இருக்கிறது. அதுவே அந்தணனில்லாத மனிதன் அப்படி உரைக்க முடிவதில்லை. அந்தண முனிவரான சம்வர்த்தரின் அடைவதற்கு அரிதான குளத்தை {வாவியை} ஒருவன் அடைந்தால் அவன் மேனி அழகையும் செழிப்பையும் அடைகிறான்.

பிறகு வேணையை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்யும் ஒருவன் மயில்களாலும் நாரைகளாலும் இழுக்கப்படும் தேரை {விமானமாக இருக்கும் என்று நினைக்கிறேன்} அடைகிறான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அணுகப்படும் கோதாவரியை அடைபவன் பசு வேள்வி செய்த பலனை அடைந்து, வாசுகியின் அற்புதமான உலகத்தை அடைகிறான். பிறகு வேணையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு வரதாவின் சங்கமத்தில் மூழ்கி எழும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு பிரம்மஸ்தானத்தை அடைந்து, மூன்று இரவுகள் தங்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான். 

பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் குசப்லவனத்தை அடையும் ஒருவன், அங்கே மூன்று இரவுகள் தங்கி நீராடுவதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கிருஷ்ண வேணையின் நீரினால் உண்டான தேவஹ்ரதம் ஜாதிஸ்மரஹ்ரதம் என்கிற குளத்திலும் நீராடினால் முற்பிறப்புகளின் நினைவுகளை அடைகிறான். அங்கேதான் தேவர்கள் தலைவன் நூறு வேள்விகளைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அங்கே ஒருவன் பயணம் செய்வதாலேயே அவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு சர்வதேவஹ்ரதத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் மிகப்பெரும் புனிதம் வாய்ந்த பயோஷ்ணி என்ற நீரில் சிறந்த நீரைக் கொண்ட குளத்தை அடையும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான காடான தண்டகத்தை அடையும் ஒருவன், அங்கே (அக்கானகத்தில் இருக்கும் நீரில்) நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ பாரதா, இதனால் ஒருவன் உடனே, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். அடுத்ததாக சரபங்கரின் ஆசிரமத்தையும், சிறப்பு மிக்க சுகரின் ஆசிரமத்தையும் அடையும் ஒருவன், துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைந்து தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான். 

பிறகு ஒருவன் ஜமதக்னியின் மகன் {பரசுராமன்} முன்பு வசித்த சூர்ப்பாரகத்தை அடைய வேண்டும். அங்கே ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் சப்தகாதுவாரத்தில் நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைந்து தேவர்களின் உலகத்தை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் தேவஹ்ரதத்தை அடையும் ஒருவன், தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, February 02, 2014

பூர்வ ஜென்ம ஞாபகங்கள்! - வனபர்வம் பகுதி 84ஈ

Recollections of former life! | Vana Parva - Section 84e | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் 

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் தேவர்களின் குளத்திற்குச் சென்று துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்பை அடைந்து, குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் சோமபதத்தை அடைய வேண்டும். அங்கே இருக்கும் மகேஸ்வரபதத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அத்தீர்த்தத்தில் கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன என்பது நன்கறியப்பட்டதே. ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மனே}, ஆமை வடிவில் இருந்த ஒரு தீய அசுரன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தை அபகரித்துச் சென்றான். அப்போது பலமிக்க விஷ்ணு அவனிடம் இருந்து அதை மீட்டான். அத்தீர்த்தத்தில் ஒருவன் தனது நீர்க்கடன்களைச் செலுத்துவதால் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான்.


ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நாராயணன் என்றும் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், ஆதித்தியர்களும், வசுக்களும், ருத்திரர்களும் அத்தீர்த்தத்தில் கூடி அந்த ஜனார்த்தனனை {விஷ்ணுவை} வழிபடுகின்றனர். அற்புதமான செயல்கள் செய்யும் அந்த விஷ்ணு அங்கே சாலக்கிராமன் என்று அறியப்படுகிறான். {இது பத்ரிநாத் மற்றும் கண்டகி நதியாக இருக்கலாம்} மூன்று உலகங்களின் தலைவனான, வரங்கள் அருளும் அந்த நிலைத்த விஷ்ணுவை அணுகுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா} அவ்விடத்தில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் ஒரு கிணறு இருக்கிறது. நான்கு கடல்களும் அந்தக் கிணற்றுக்குள் எப்போதும் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைகிறான். அங்கிருக்கும் வரமருளும் நித்தியமான கடுமை நிறைந்த மகாதேவனைக் காண்பதால், ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் மேகத்திலிருந்து வெளிவரும் நிலவெனப் பிரகாசிக்கிறான். பிறகு தூய மனதுடனும், புலனடக்கத்துடனும் ஜாதிஸ்மரத்தில் நீராடும் ஒருவன் சந்தேகமற தனது பூர்வ ஜென்ம ஞாபகங்களை அடைவான்.

பிறகு மகேஸ்வரபுரத்தை அடையும் ஒருவன், காளையைக் குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வணங்கி, சிறிது காலம் உண்ணா நோன்பிருப்பதால் அவனது விருப்பங்கள் யாவையும் சந்தேகமற அடைகிறான். பிறகு பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வாமனத்திற்குச் சென்று ஹரி தெய்வத்தை வணங்கி அனைத்து துரதிர்ஷ்டங்களில் இருந்தும் ஒருவன் விடுபடுகிறான். பிறகு ஒருவன், அனைத்துப் பாவங்களையும் அகற்றும் குசிகரின் ஆசிரமத்தை அடைய வேண்டும். பிறகு கௌசிகி நதியை அடைந்து பெரும்பாவங்களாக இருப்பினும் அங்கே நீராடுவதால் தொலைந்துவிடும். ஆகையால், ஒருவன் அங்கே நீராட வேண்டும். இதனால் அவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா},  பிறகு ஒருவன் அற்புதமான சம்பக வனத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவைக் கழிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை ஒருவன் அடைகிறான். அங்கே பெரும் பிரகாசமிக்க விஸ்வேஸ்வரனை அவனது துணையுடன் காணும் மனிதன், ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மா}, மித்ர வருணனின் உலகத்தை அடைகிறான். அங்கே மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் கன்னியாசம்வேத்ய தீர்த்தத்தை புலனடக்கத்துடனும் முறைப்படுத்தப்பட்ட உணவு வழக்கத்துடனும் அடைய வேண்டும். அதனால், ஓ மனிதர்களில் காளையே, ஒருவன் படைப்புத் தலைவனான மனுவின் உலகத்தை அடைகிறான். அத்தீர்த்தத்தில் அரிசியைத் தானம் கொடுத்தாலோ அல்லது அங்கே தானமளிக்கப்படும் எந்தப் பரிசாக இருந்தாலும் அது பெருகும் என்று கடும் நோன்புகள் கொண்ட முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து மூன்று உலகத்தாலும் நிஷ்சீரம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, நிஷ்சீரத்தில் தானமளிக்கும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். அந்தத் தீர்த்தத்தில் மூன்று உலகத்தாலும் அறியப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தெய்வீக முனிவர்களால் அடிக்கடி பயணிக்கப்படும் தேவகூடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு, குசிக முனிவரின் மகனான விஸ்வாமித்திரயை வெற்றியடைந்த இடமான கௌசிக முனிவரின் தடாகத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ வீரனே {பீஷ்மா} அங்கே கௌசிகத்தில் ஒருமாதம் தங்குபவன், ஓ பாரத குலத்தின் காளையே, அதனால் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். தீர்த்தங்களில் சிறந்ததான மஹாஹ்ரதத்தை அடைந்து வசிக்கும் ஒருவன் துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்படைந்து, அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் வீராஸ்ரமத்தில் வசிக்கும் கார்த்திகேயனைக் {முருகனைக்} கண்டு ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடையலாம். பிறகு, மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்னிதாரத்தை அடைந்து, அங்கே நீராடி, தேவர்களுக்குத் தேவனான நித்தியமான வரமளிக்கும் விஷ்ணுவைக் காண்பதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு பனியால் முடி மூடப்பட்டிருக்கும் மலைகளின் அருகே இருக்கும் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} குளத்தை அடைந்து அங்கே நீராடும் ஒரு மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பெருந்தகப்பனின் குளத்தில் இருந்து கீழிறங்கும் ஒருவன் மூன்று உலகத்தாலும் குமாரதாரம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் தனது காரியங்கள் அனைத்தும் ஈடேறிவிட்டதாகக் கருதலாம். அத்தீர்த்தத்தில் மூன்று நாள் உண்ணாதிருந்து, அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் விடுபடலாம்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி, மூன்று உலத்திலும் புகழ்பெற்ற கௌரி என்ற பெரும்பெண் தெய்வத்தின் சிகரத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் மீதேறி ஸ்தனகுண்டத்தை அடைய வேண்டும். ஸ்தனகுண்டத்தின் நீரைத் தொடுவதால் ஒரு மனிதன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன்  குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து இந்திரனின் உலகை அடைகிறான். தேவர்களால் அடிக்கடி காணப்படும் தாமரார்ண கிணற்றை அடையும் ஒருவன், ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, மனித வேள்வி செய்த பலனை அடைகிறான். கிருத்திகை, கௌசிகி மற்றும் அருணை சங்கமிக்கும் சங்கமத்தில் மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்கும் படித்த மனிதன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஊர்வசி மற்றும் சோமஸ்ராம தீர்த்தங்களை அடையும் ஒரு விவேகி, கும்பகர்ணாஸ்ரத்தில் நீராடி உலகத்தால் வழிபடப்படுவான். தடுமாறாத நோன்புகளுடன் பிரம்மச்சரியம் இருந்து கோமுகத்தின் நீரைத் தொடுவதால் ஒருவன் முந்தைய ஜென்ம ஞாபகங்களை மீட்டெடுக்கிறான்.

பிறகு நந்தா என்று அழைக்கப்பட்டும் வேகமாகச் செல்லும் நதியை அடையும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, கட்டுப்பட்ட ஆன்மாவுடன் இந்திரனின் உலகத்துக்கு உயர்கிறான். பிறகு கொக்குகள் அழியும் ரிஷபத் தீவுக்குச் சென்று அங்கே சரஸ்வதியில் நீராடும் ஒருவன் சொர்க்கத்தில் சுடரெனப் பிரகாசிக்கிறான். பிறகு ஔத்தாலகம் என்றழைக்கப்படும் தீர்த்ததிற்குச் செல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். அடுத்து, அந்தணர்களால் அதிகம் பார்க்கப்படும் தர்மம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அதனால் ஒருவன் வாஜபேயி வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மதிக்கப்படுவான். பிறகு சம்பைக்குச் சென்று பகீரதியில் {கங்கையில்} நீராடி, தண்டபர்ணத்தில் சிறிது காலம் தங்கி ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் புனிதமான தடாகமான லலிதகாவை அடையவேண்டும். அறம்சார்ந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். இதனால் ஒருவன் ராஜசூய வேள்வி செய்ததாகக் கருதப்பட்டு சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகின்றான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


சாம்பலை மேனியில் பூசுதல்! - வனபர்வம் பகுதி 84இ

Rub ash on one's body! | Vana Parva - Section 84c | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் 

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "அடுத்ததாக வாரணாசிக்குச் சென்று காளையைத் தனது குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, கபிலஹ்ரதத்தில் நீராடுபவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைவான். பிறகு, ஓ குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, அவிமுக்தம் என்ற தீர்த்தத்திற்குச் சென்று அங்கு தேவர்களுக்கு தேவனைக் காணும் புனிதப்பயணி, அந்தக் காட்சியின் நிமித்தமாகவே அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் கூட விடுபடுகிறான். அங்கே தனது உயிரைக் கைவிடுபவன், விடுதலையைப் பெறுகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு அரிதான தீர்த்தமும் உலகத்தால் கொண்டாப்படுவதும், கங்கை சங்கமிக்கும் இடத்தில் இருப்பதுமான மார்க்கண்டேய  தீர்த்தத்தை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைந்து, தனது குலத்தை விடுவிக்கிறான். பிறகு கயைக்குச் சென்று புலன்களை அடக்கி, பிரம்மச்சரியம் இருந்து சிறிதுகாலம் அங்கு தங்கியிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான். மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்ஷயவடம் அந்தத் தீர்த்தத்தில் தான் இருக்கிறது. அங்கே பித்ருக்களுக்கு தானமளிக்கப்படும் எதுவாக இருந்தாலும் அது பன்மடங்காகிறது. அங்கே மகாநதியில் நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் மனிதன் நித்தியமான உலகங்களை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.


பிறகு தர்மவனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பிரம்மசரத்தை அடைந்து அங்கே ஒரு இரவை கழிக்கும் மனிதன் பிரம்ம லோகத்தை அடைகிறான். அந்தத் தடாகத்தில் பிரம்மா ஒரு வேள்வித்தூணை எழுப்பியிருக்கிறான். அத்தூணை வலம் வரும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, பிறகு ஒருவன் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தேனுகா என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். அங்கே ஓரிரவு தங்கி எள்ளையும், பசுவையும் தானமாகக் கொடுப்பவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு, ஒருவன் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே அந்த மலைகளில் கபிலை என்ற பசு தனது கன்றுடன் உலாவுவது வழக்கம். ஓ பாரதா {பீஷ்மா}, அந்தப் பசு மற்றும் கன்றின் கால் தடயங்கள் இன்னும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஓ பாரதா, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மா}, அக்கால்த் தடயங்களில் உண்டான தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் எப்பாவம் செய்திருந்தாலும் அப்பாவங்கள் கழுவப்படுகின்றன. பிறகு ஒருவன், திரிசூலம் தாங்கும் தெய்வத்தால் {சிவனால்} புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கிருத்திரவடத்தை அடைய வேண்டும். அங்கே காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} அணுகும் ஒருவன் சாம்பலைத் தன் மேனியில் பூசிக் கொள்ள வேண்டும். ஒருவன் அந்தணனாக இருந்தால், பனிரெண்டு வருட நோன்பு மேற்கொண்ட பலனை அடைகிறான். அவன் வேறு வகைகளைச் சார்ந்தவானாக இருந்தால், அவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.

பிறகு ஒருவன் இனிய மெல்லிசையால் நிறைந்த உதயந்த மலைகளை அடைய வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே சாவித்திரியின் கால் தடம் இன்னும் தெரிகிறது. கடும் நோன்பிருந்து காலை, நடுப்பகல் மற்றும் மாலை வழிபாடுகளை இங்கே செய்யும் அந்தணன், பனிரெண்டு வருடம் இச்சேவையைச் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே, அங்கே, புகழ்மிக்க யோனிதுவாரம் இருக்கிறது. அங்கே செல்லும் ஒரு மனிதன் மறுபிறவி பெறும் வலியில் இருந்து விடுபடுகிறான். தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்கள் அனைத்தையும் கயையில் கழிப்பவன் நிச்சயமாக சுத்திகரிக்கப்பட்டவனாகி, ஓ மன்னா {பீஷ்மா}, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறைகளைக் காக்கிறான். தனது பிள்ளைகளில் ஒருவன் கயைக்குச் செல்லவோ அல்லது குதிரை வேள்வி செய்யவோ அல்லது நீலக்காளையை தானம் செய்யவோ வேண்டுமானால் ஒருவன் நிறைய மகன்களைப் பெற்றுக் கொள்ள விரும்ப வேண்டும்..

ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி பல்குவை அடைய வேண்டும். இதனால் அவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து பெரும் வெற்றியையும் அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன், கட்டுப்பட்ட ஆன்மாவுடன் தர்மப்பிரஸ்தத்தை அடைய வேண்டும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, அங்கே, அறம் என்பது நிலைத்து இருக்கிறது. அங்கே இருக்கும் கிணற்றிலுள்ள நீரை அருந்தி, குளித்துத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தி தனது பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொண்டு சொர்க்கத்திற்கு உயர்கிறான். அத்தீர்த்ததில் தான் மதங்கப் பெருமுனிவரின் ஆசிரமம் இருக்கிறது. களைப்பையும் துன்பத்தையும் போக்கும் அந்த அழகிய ஆசிரமத்திற்குள் நுழையும் ஒருவன்  கவாயன {கவாமயநயஜ்ஞ} வேள்வி செய்த பலனை அடைந்து, அங்கே இருக்கும் அறத்தேவனைத் {தர்மதேவனின் உருவத்தைத்} தொடுவதால், ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.

ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மஸ்தானம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனை அணுகும் ஆடவர்களில் காளையே, ஓ பலம் பொருந்திய ஏகாதிபதியே {பீஷ்மா}, ராஜசூயம் மற்றும் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி ராஜசூயத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியாக வாழும்  காக்ஷீயரை (முனிவரைப்) போல வாழ்கிறான். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட ஒருவன் யக்ஷிணிக்கு படையலிட்டதை உண்ண வேண்டும். இதனால் யக்ஷிணியின் அருளை அடைந்து, அந்தணரைக் கொன்ற பாவத்திலிருந்தும் கூட ஒருவன் விடுபடுகிறான். பிறகு மணிநாகத்தை அடையும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா} மணிநாகத்தீர்த்தத்திற்குச் சம்பந்தப்பட்ட எதையும் உண்ணும் ஒருவன், கடும் விஷம் கொண்ட பாம்பால் கடிக்கப்பட்டாலும், அதன் விஷத்துக்கு வீழ்வதில்லை. அங்கே ஒரு இரவு தங்கும் ஒருவன் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.

பிறகு ஒருவன் பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி} கௌதமருக்குப் பிடித்தமான வனத்தை அடைய வேண்டும். அங்கே அகலிகையின் மடுவில் நீராடும் ஒருவன் மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு ஸ்ரீயின் உருவத்தைக் காணும் ஒருவன் பெரும் செழிப்பை அடைகிறான். அந்தத் தீர்த்ததில் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஒரு கிணறு இருக்கிறது. அதில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அங்கே அரசமுனியான ஜனகனின் மற்றுமொரு கிணறும் இருக்கிறது. அது தேவர்களாலும் வணங்கப்படுகிறது. அக்கிணற்றில் நீராடும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒருவன் அனைத்து பாவங்களையும் அழிக்கும்  விநசத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான்.

பிறகு ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களின் நீராலும் உண்டாக்கப்பட்ட கந்தகியை அடைவதால், அவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சூரிய உலகத்திற்கு உயர்கிறான். பிறகு ஒருவன் விசல்யை என்ற மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் இடத்தை அடைவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, துறவிகளின் வனமான ஆதிவங்கத்தை அடையும் ஒருவன், சந்தேகமற குஹயர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அடைவான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அடையப்படும் கம்பனை என்ற நதியை அடைபவன், பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா} மகேஸ்வரி என்று அழைக்கப்படும் ஓடைக்கு வரும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, February 01, 2014

ராமனும் கோப்ரதாரமும்! - வனபர்வம் பகுதி 84ஆ

Rama and Gopratra! | Vana Parva - Section 84b | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் உலகத்தால் கொண்டாடப்படும் சுகந்தத்தை அடைய வேண்டும். இதனால் தனது பாவம் விலகி ஒருவன் பிரம்மனின் வசிப்பிடத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி ருத்ரவர்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்ததிற்கு உயர்கிறான். கங்கையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். பிறகு பத்ரகர்ணேஷ்வரம் சென்று முறைப்படி தேவர்களை வணங்குபவன், அதன்பிறகு துன்பத்தில் மூழ்காதிருந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி குப்ஜாம்ரகம் {குப்ஜாவதி} என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைகிறான். பிறகு, ஓ மன்னா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி அருந்ததிவடம் செல்ல வேண்டும். ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிரம்மச்சரியத்துடன் இருந்து, அங்குள்ள சமுத்ரகத்தில் {கடலில்} நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனையும், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனையும் அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.

பிறகு ஒருவன் அடுத்ததாக ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் பிரம்மவர்தத்தை அடைய வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான். யமுனபிரபாவத்துக்குச் (யமுனையின் தோற்றுவாய்க்கு{நதி மூலத்திற்கு}ச்) சென்று அங்கே நீராடும் ஒருவன்  குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு, சித்தர்களாலும் கந்தரவர்களாலும் வழிபடப்படும் சிந்து பிரபாவத்தை (சிந்து நதியின் தோற்றுவாய்) அடைந்து, ஐந்து நாட்கள் அங்கே தங்கினால், அவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

அடுத்ததாக யாரும் அணுகுவதற்கு அரிதான தீர்த்தமான வேதிக்குச் செல்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ரிஷிகுல்யையும், வசிஷ்டையையும் அடைய வேண்டும். வசிஷ்டைக்குச் செல்லும் எந்த வகையினரும் அந்தண நிலையை அடைகின்றனர். ரிஷிகுல்யத்திற்குச் சென்று அங்கே நீராடி ஒரு மாதத்திற்கு மூலிகைகளை உண்டு வாழ்ந்து, தேவர்களையம் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் முனிவர்களின் உலகத்தை அடைவான். பிறகு அடுத்ததாக பிருகுதுங்கத்தை அடையும் மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, விப்ரமோட்சத்தை அடையும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு கிருத்திகை மற்றும் மாக தீர்த்தங்களை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளின் பலன்களைவிட மேன்மையான பலன்களை அடைகிறான்.

வித்யை எனும் அற்புதமான தீர்த்தத்தை அடையும் மனிதன், அங்கே மாலையில் நீராடினால் அனைத்து ஞானங்களையும் திறமைகளையும் பெறுகிறான். பிறகு ஒருவன் பாவங்களை அழிக்கவல்ல மஹாஸ்ரமம் என்ற தீர்த்தத்தை அடைந்து ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். இதனால் ஒருவன் பல மங்களகரமான பகுதிகளை அடைந்து தனக்கு முன்பான பத்து தலைமுறைகளையும், தனக்குப் பின்பான பத்து தலைமுறைகளையும் விடுவிக்கிறான். மஹாலயத்தில் ஒரு மாத காலம் தங்கி, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அபரிமிதமான தங்கத்தை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பெருந்தகப்பனால் {பிரம்மனால்} வணங்கப்படும் விதசிகத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனையும் உசானசின் நிலையையும் அடையலாம். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் சுந்தரிகா என்ற தீர்த்தத்தை அடைந்தால் முன்னோர்கள் கண்ட அற்புத மேனி அழகைப் பெறுவார்கள்.

பிறகு புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் பிராமணி தீர்த்தத்தை அடைந்து தாமரை நிறத் தேரில் பிரம்ம லோகத்தை அடைவான். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் புனிதமான நைமிஷத்தை அடையவேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பிரம்மனும் வசிக்கிறார். நைமிஷத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே ஒருவனின் பாதி பாவங்கள் அழிகின்றன. அதற்குள் நுழையும்போது அவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலனடக்கத்துடன் நைமிஷத்தில் ஒரு மாத காலம் தங்க வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, உலகத்தில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் நைமிஷத்தில் உள்ளன. புலன்களில் இருந்து விடுபட்டு, ஒழுங்கு செய்யப்பட்ட உணவுமுறையுடன் அங்கு நீராடுபவன் பசு வேள்வி {கோமேத வேள்வி} செய்த பலனை அடைந்து, ஓ பாரதர்களில் சிறந்தவனே, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறையினரையும் புனிதப்படுத்துகிறான். உண்ணாதிருந்து நைமிஷத்தில் உயிரை விடுபவன், சொர்க்கலோகங்களில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். இது விவேகிகளின் கருத்தாகும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, நைமிஷம் என்றும் எப்போதும் புண்ணியமானதே! புனிதமானதே!

அடுத்ததாக ஒருவன் கங்கோத்பேதத்தை அடைந்து மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனைப் போல ஆகிறான். சரஸ்வதியில் {நதியில்} பயணித்து ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படையலிட வேண்டும். இதனால் ஒருவன் சரஸ்வதா உலகங்களில் மகிழ்ச்சியடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் பாகுதம் செல்ல வேண்டும். ஓ கௌரவா {பீஷ்மா}, அங்கே ஓரிரவு தங்குபவன் சொர்க்கத்தை அடைந்து அங்கே வழிபடப்பட்டு தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான மனிதர்களால் அடிக்கடி பார்க்கப்படும் க்ஷீரவதிக்குச் செல்ல வேண்டும். அங்கே தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடுபவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் விமலசோகம் அடைந்து, அங்கே ஓர் இரவு வசிப்பவன் சொர்க்கத்தில் கொண்டாடப்படுகிறான்.

பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா},  சரயுவில் இருக்கும் கோப்ரதாரம் என்ற தீர்த்ததின் மகிமையால் {தசரத} ராமன், தனது பணியாட்களுடனும் மற்ற விலங்குகளுடனும் தனது உடலைத் துறந்த, அந்த அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, ராமனின் அருளாலும், ஒருவனது தன்னறங்களாலும் {தனது செயல்களின் அறங்களாலும்}, அத்தீர்த்தத்தில் நீராடுபவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது. அவன் சொர்க்கத்தை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மனே}, கோமதியில் இருக்கும் ராம தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமான சதசாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. புலன்களில் இருந்து விடுபட்டு, முறையான உணவுப்பழக்கத்துடன் இருக்கும் மனிதன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஒப்பற்ற தீர்த்தமான பர்த்துருஸ்தானத்தை அடைய வேண்டும். இதனால் ஒரு மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கோடி என்ற தீர்த்தத்தில் நீராடி கார்த்திகேயனை வழிபடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, பெரும் சக்தியை அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, January 30, 2014

கங்கை யமுனை சங்கமம்! - வனபர்வம் பகுதி 84அ

Confluence of Ganga and Yamuna! | Vana Parva - Section 84a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான தர்ம தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். சிறப்புமிக்க தர்மதேவன் உன்னதமான துறவு பயின்ற இடம் அந்தத் தீர்த்தமாகும். துறவு பயில்வதற்காகவே அவன் {தர்ம தேவன்} அந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதற்குத் தன் பெயரையும் இட்டான். ஓ மன்னா, அங்கே நீராடும் ஓர் அறம் சார்ந்த மனிதன், தனது ஏழு தலைமுறை குடும்பத்தைச் சுத்தப்படுத்துகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான ஞானபாவனத்தை அடையவேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, முனிவர்களின் உலகத்தை அடைகிறான்.

பிறகு, ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, ஒருவன் சௌகந்திவனத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், நாகர்களும் வசிக்கின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஓடைகளில் சிறந்ததும், நதிகளில் முதன்மையானதுமான புனிதமான பெண்தெய்வம் ரஸ்வதி, பிலக்ஷை என்ற பெயரில் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். அங்கே எறும்புப் புற்றிலிருந்து வெளியேறும் நீரில் ஒருவன் நீராட வேண்டும். (அங்கே நீராடி) பித்ருக்களையும், தேவர்களையும் வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். எறும்புப் புற்றின் அருகில் இருந்து ஒரு கனமான தடியைத் தூக்கி எறிந்தால், அந்தத் தடி செல்லும் தூரத்தைவிட ஆறு மடங்கு தூரத்தில் ஈசானதியுஷிதம் {கவேராத்யுஷிதம்} என்ற அரிதான தீர்த்தம் ஒன்று இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே புராணங்களில் உரைத்திருக்கும்படி அங்கு நீராடும் மனிதன் கபில வகைப் பசுக்களை ஆயிரம் எண்ணிக்கையில் தானம் அளிக்கும் பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான்.

ஓ மனிதர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, பிறகு சுகந்தம், சதகும்பம், பஞ்சயக்ஷம் ஆகியவற்றுக்குப் பயணப்படுபவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு திரிசூல கதம் என்ற பெயர் கொண்ட தீர்த்தத்தை அடைந்து, அங்கு நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் ஒருவன் வணங்க வேண்டும். அப்படிச் செய்வதால், ஒருவன், சந்தேகமற தனது மரணத்திற்குப் பின்னர் கணபத்திய நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகத்தாலும் சாகம்பரி என்று கொண்டாடப்படும் பெண்தெய்வத்தின் அற்புதமான இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, அங்கே அற்புதமான நோன்புகள் நோற்ற அவள் {சாகம்பரி}, தேவ வருடங்களில் ஆயிரம் வருடகாலம், மாதம் ஒரு முறை மூலிகைகளை {சாகத்தை} மட்டுமே உணவாகக் கொண்டாள். அவள் மீது ஏற்பட்ட பக்தியால் தவசிகளான முனிவர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். ஓ பாரதா {பீஷ்மா}, அவர்கள் அவளிடம் இருந்த மூலிகைகளால் மகிழ்ந்தார்கள். அதன் காரணமாகவே அவளுக்குச் சாகம்பரி என்ற பெயர் உண்டானது.

ஓ பாரதா {பீஷ்மா}, சாகம்பரிக்கு வரும் மனிதன், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் மூன்று இரவுகளை மூலிகைகளை மட்டுமே உண்டு சுத்தமாகக் கழித்தால், அந்தத் தேவியின் விருப்பத்தின் பேரில் பனிரெண்டு வருடங்கள் மூலிகைகளை மட்டுமே உண்டவன் அடையும் பலனை அடைவான். பிறகு ஒருவன் மூன்று உலகங்களிலும் புகழப்படும் சுவர்ணம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பழங்காலத்தில் விஷ்ணு, ருத்திரனின் கருணைக்காகவும், தேவர்களுக்கும் கிடைக்காத கிடைத்தற்கரிய வரங்களுக்காகவும், தனது வழிபாடுகளை ருத்திரனுக்குச் செலுத்தினான். ஓ பாரதா திரிபுரத்தை அழித்தவன் {சிவன்} இதனால் திருப்தி கொண்டு, "ஓ கிருஷ்ணா, சந்தேகமற நீ உலகத்தால் நேசிக்கப்படுவாய். இவ்வண்டத்தில் இருக்கும் அனைத்திலும் முதன்மையானவனாவாய்" என்றான்.

ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே செல்லும் ஒருவன் காளையைக் குறியீடாகக் கொண்டவனை {சிவனை} வணங்கி குதிரை வேள்வி செய்த பலனையும் கணபத்திய நிலையையும் அடைகிறான். பிறகு ஒருவன், தூமவதி என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் உண்ணாமல் நோன்பிருக்கும் ஒருவன் சந்தேகமற தனது விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றிக் கொள்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு தேவிக்குத் தென்பாதியில் ரதவர்த்தம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம்சார்ந்தவனே, ஒருவன் பக்தியுடனும் புலனடக்கத்துடனும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இதனால் மகாதேவனின் {சிவனின்} கருணையை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு அந்த இடத்தை வலம் வரும் ஒருவன், ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மனே} தாரை என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அத்தீர்த்தம் அவனது அனைத்துப் பாவங்களையும் கழுவுகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, அங்கே நீராடும் ஒருவன் தனது அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடுகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன் பெரும் மலையை (இமயத்தை) வணங்கி, சந்தேகமற சொர்க்கத்தின் வாயிலைப் போல இருக்கும் கங்கையின் தோற்றுவாய்க்குச் {கங்காத்துவாரத்துக்குச்} செல்ல வேண்டும். அங்கே குவிந்த ஆன்மாவுடன் கோடி என்ற தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். அங்கே ஒரு நாள் தங்குவதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனையும் அடைகிறான். பிறகு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் சப்தகங்கா, திரிகங்கா, சக்ரவர்தா ஆகிய அங்கே இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன் அறம்சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒரு மனிதன் கனகலத்தில் நீராடி மூன்று நாள் உண்ணாநோன்பிருந்து குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கம் செல்கிறான்.

ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, பிறகு ஓர் புனிதப்பயணி, கபிலாவடத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவு உண்ணா நோன்பிருந்து ஆயிரம் பசுக்கள் கொடுத்த பலனை அடையலாம். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ குருக்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே நாகர்களின் மன்னனான சிறப்புமிக்கக் கபிலனின் தீர்த்தமும் இருக்கிறது. அந்த நாகதீர்த்தத்தில் நீராடும் ஒருவன், ஓ மன்னா, ஆயிரம் கபில வகைப் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் சந்தனுவின் அற்புதமான தீர்த்தமான லலிதிகத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் அதுமுதல் எப்போதும் துயரத்தில் மூழ்குவதில்லை. கங்கையும் யமுனையும் சேருமிடத்தில் நீராடும் ஒருவன் பத்து குதிரை வேள்விகள் செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, January 29, 2014

குருக்ஷேத்திரத்தின் தூசி! - வனபர்வம் பகுதி 83உ

Dust of Kurukshetra! | Vana Parva - Section 83e | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஓ மன்னா {பீஷ்மா}, புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணி {யாத்ரீகர்} பிறகு, சுவஸ்திபுரம் செல்ல வேண்டும். அந்த இடத்தை வலம் வருபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாவனம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் திருப்படையல் {தர்ப்பணம்} செய்ய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா} இதனால் அவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே கங்காஹ்ரதமும் மற்றுமொரு தீர்த்தமான கூபமும் இருக்கின்றன. ஓ மன்னா, அந்தக் கூபத்தில் மூன்று கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கு நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கங்காஹ்ரதத்தில் நீராடி மகேஸ்வரனை {சிவனை} வணங்கும் ஒருவன் கணபத்திய நிலையை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். பிறகு ஒருவன் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஸ்தாணுவடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.


பிறகு ஒருவன் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கும் பதரீபாச்சனத்தை {பதரீகானனம்} அடையவேண்டும். அங்கே மூன்று இரவுகள் தங்கி இலந்தைப்பழத்தைச் {Jujubes} சுவைத்து உண்ண வேண்டும். அங்கே இலந்தைப்பழத்தை {மட்டுமே} உண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்பவனும், அங்கே மூன்று இரவுகள் உண்ண நோன்பிருப்பவனும் நிலையான நிலையை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு இந்திரமார்க்கத்தை அடைந்து, அங்கே ஒரு பகலும் ஒரு இரவும் உண்ணாதிருக்கும் புனிதப்பயணி இந்திரனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஏகராத்ரத்தை அடையும் மனிதன் முறையான நோன்புகளுடன், பொய்மையில் இருந்து விலகி ஒரு இரவு அங்கே தங்கினால் பிரம்மனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஒளிக்குவியலான சிறப்பு மிக்க தேவன் ஆதித்தியனின் ஆசிரமத்தை அடைய வேண்டும். மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் அத்தீர்த்தத்தில் நீராடி, அந்த ஒளித்தேவனை வழிபடும் ஒருவன் ஆதித்திய உலகத்தை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒரு புனிதப்பயணி சோமத் தீர்த்தத்தில் நீராடுவதால் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன், அனைத்தையும் தூயதாக்கும் வல்லமைப் படைத்ததென முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் ததீச்சரின் மிகப் புனிதமானத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கேதான் சரஸ்வத குலத்தைச் சேர்ந்த தவச்சடங்குகளின் கடல் அங்கிரஸ் பிறந்தார். அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, சந்தேகமற சரஸ்வதியின் உலகத்தை அடைகிறான். புலனடக்கத்துடன், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் ஒருவன் அடுத்ததாக கன்னியாஸ்ரமத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே புலனடக்கத்துடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் மூன்று இரவுகள் தங்குபவன் நூறு தெய்வீக மங்கையரை அடைகிறான். பிறகு அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஸன்னிஹதி என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் அங்கே சிறிது காலம் தங்கி மேலும் அறப்பயன் அடைந்தனர். அங்கே சரஸ்வதி நதியில் சூரிய கிரஹணத்தின் போது நீராடும் ஒருவன் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனை அடைகிறான். அங்கு செய்யப்படும் எந்த வேள்வியும் நிலையான பலனைத் தருகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஓ மனிதர்களின் மன்னா, பூமியிலோ, ஆகாயத்திலோ, ஆறுகளிலோ, ஏரிகளிலோ, சிறு தடாகங்களிலோ, ஊற்றுகளிலோ, குளங்களிலோ, பெரியதாகவோ, சிறியதாகவோ குறிப்பிட்ட சில தேவர்களுக்குப் புனிதமாக இருக்கும் அனைத்து தீர்த்தங்களும் சந்தேகமற, மாதத்திற்கு மாதம் சந்நிஹதியில் கலக்கிறது. அனைத்துத் தீர்த்தங்களும் இங்கே ஒன்று சேரும் காரணத்தால்தான் அத்தீர்த்தம் தனது பெயரை {சந்நிஹதி என்று} அடைந்தது. அங்கே நீராடி அதன் நீரைப் பருகும் ஒருவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான்.

ஒ மன்னா {பீஷ்மா}, சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசையில் சிராத்தம் செய்யும் மனிதனுக்கு உண்டாகும் பலனைக் கேள். அங்கே {சந்நிஹதியில்}, அந்த நாளில் சிராத்தம் செய்து {சமைக்கப்படாத உணவுப்பொருட்களை அந்தணர்களுக்கு தானமளித்தல் அன்னசிராத்தம் எனப்படுகிறது} அத்தீர்த்தத்தில் நீராடும் மனிதன், ஆயிரம் குதிரை வேள்விகளைச் சரியாகச் செய்வதால் வரும் பலனை அடைகிறான். ஆண்களாலும் பெண்களாலும் செய்யப்படும் என்ன வகை பாவமானாலும், அங்கே நீராடியவுடன் சந்தேகமற அழிந்து போகிறது. அங்கே நீராடும் ஒருவன் தாமரை நிறம் கொண்ட தேரில் பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு, வாயில் காப்போனான யக்ஷன் மசக்ரூகனை வழிபட்டபின் கோடி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்திற்கு அருகிலேயே கங்காஹ்ரதம் என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மனே}, அங்கே ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், பிரம்மச்சரியம் கடைப்பிடித்து நீராட வேண்டும். இதனால் ஒருவன் ராஜசுயம் மற்றும் குதிரை வேள்விகள் செய்ததை விட உயர்ந்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே பூமியில் நன்மையை விளைவிக்கும் நைமிஷம் என்ற தீர்த்தம் இருக்கிறது. விண்ணுலகத்துக்கு புஷ்கரை நன்மையை விளைவிக்கும் என்றாலும் மூன்று உலகத்திற்கும் குருக்ஷேத்திரமே நன்மையை விளைவிக்கும். காற்றால் சுமக்கப்படும் குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு பாவியை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்.

திருஷ்த்வதிக்கு {நதி} வடக்கிலும், சரஸ்வதிக்குத் தெற்கிலும் இருக்கும் குருக்ஷேத்திரத்தில் வசிப்பவர்கள் உண்மையில் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள். "நான் குருக்ஷேத்திரத்திற்குச் செல்வேன்" என்றும், "நான் குருக்ஷேத்திரத்தில் வசிப்பேன்" என்ற வார்த்தைகளை ஒரு முறையேனும் உச்சரித்தாலும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். பிரம்ம முனிவர்களாலும் வழிபடப்படும் குருக்ஷேத்திரம் தேவர்களின் வேள்வி மேடையாகக் {பலிப்பீடமாகக்} கருதப்படுகிறது. அங்கே வசிக்கும் மனிதர்களுக்கு எந்தக் காலத்திலும் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. தரந்துகம், அருந்துகம் ஆகியவற்றுக்கும் ராம {ராமஹ்ரதம்}, மசக்ருகம் ஆகிய தடாகங்களுக்கும் மத்தியில் இருப்பதே குருக்ஷேத்திரம். அது சமந்தபஞ்சகம் என்றும் அழைக்கப்படுகிறது. அது பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} வடபுற வேள்வி மேடையெனச் சொல்லப்படுகிறது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, January 28, 2014

அந்தணராக ஒரு தீர்த்தம்! - வனபர்வம் பகுதி 83ஈ

A thirtha for one to become a Brahmana! | Vana Parva - Section 83d | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்...

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "சாரஸ்வதத்தை அடைந்த பின்னர் ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் ஔசன தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, அங்கே பிரம்மனின் தலைமையில் தேவர்களும், துறவையே செல்வமாகக் கொண்டிருக்கும் முனிவர்களும், சிறப்பு மிகுந்த கார்த்திகேயனும் தினந்தோறும் பகலும் இரவும் சந்திக்கும் இரு சந்திவேளைகளிலும் மதிய வேளையிலும் பார்க்கவருக்கு {சுக்ரனுக்கு} நன்மை செய்ய விரும்பி நேரடியாகவே இருப்பார்கள். அங்கே கபாலமோட்சம் என்ற பாவங்களைக் கழுவும் மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் அக்னி என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் காளையே, அங்கே நீராடும் ஒருவன் அக்னியின் உலகத்தை அடைந்து தனது குலத்தை தாழ்ந்த உலகங்களில் இருந்து மீட்டெடுக்கிறான். அந்தத் தீர்த்தத்திலேயே விஸ்வாமித்ரருடைய மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ பாரதர்களில் தலைவா, அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் சிறந்தவனே, பிரம்மனின் நிலையை அடைகிறான்.


பிறகு ஒருவன் சுத்தமான உடலுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மயோனியை அடையும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடி பிரம்மலோகத்தை அடைந்து ஏழு தலைமுறை வரை தனது குலத்தைச் சந்தேகமற சுத்தம் செய்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் கார்த்திகேயனின் {முருகனின்} பிருதூதகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களையும் தேவர்களையும் வழிபடும் வேலையில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனித நோக்கங்களால் உந்தப்பட்ட ஆணாலோ, பெண்ணாலோ அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட தீமைகள் யாவும் அங்கு நீராடுவதால் அழிந்து போகும். அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். குருக்ஷேத்திரத்தைப் புனிதம் என்றும்; சரஸ்வதி குருக்ஷேத்திரத்தைவிட புனிதமானது என்றும்; சரஸ்வதியைவிட ஒன்றாகக் கூடிய அனைத்துத் தீர்த்தங்களும் புனிதமானது என்றும்; அனைத்துத் தீர்த்தங்களைக் காட்டிலும் பிருதூதகம் புனிதமானது என்றும் கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அங்கே தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் மனிதன், அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறந்ததான பிருதூதகத்திலேயே தனது உடலைக் கைவிட்டு இறவா நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிருதூதாகம் செல்ல வேண்டும் என்று வேதங்களிலும் உள்ளது. சனத்குமாரராலும், உயர் ஆன்ம வியாசராலும் கூட இது பாடப்பட்டுள்ளது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிருதூதகத்திற்கும் மேன்மையான ஒரு தீர்த்தம் வேறு எதுவும் இல்லை. சந்தேகமற அத்தீர்த்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதும், புனிதமானதும், பாவங்களை அழிக்கவல்லதுமாகும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா} ஒரு மனிதன் எவ்வளவுதான் பாவியாக இருந்தாலும், பிருதூதகத்தில் நீராடினால் சொர்க்கம் செல்வான் என்று கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமாக மதுஸ்ரவம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் கொண்டாடப்படும் புனித தீர்த்தமும், சரஸ்வதியும் அருணை நதிகளும் சந்திக்கும் சங்கமமுமான அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன் அந்தணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகள் செய்த பலனை விட மேன்மையான பலனைப் பெற்று மேலும் கீழுமாகத் தனது ஏழு தலைமுறைகளை மீட்டெடுக்கிறான். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {பீஷ்மா}, அங்கேயே மற்றுமொரு தீர்த்தமான அர்த்தகீலம் {அவதீர்ணம்} என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்தத் தீர்த்தம் முன்பொரு காலத்தில் அந்தணர்கள் மீது கொண்ட கருணையால் தார்பீயினால் {சார்ங்கீயினால்} உண்டாக்கப்பபட்டது. நோன்புகளாலும், புனிதமடைவதாலும், உண்ணா நோன்புகளாலும், சடங்குகளாலும், மந்திரங்களாலும் சந்தேகமற ஒருவன் அந்தணனாகிறான். ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மனே}, இருப்பினும், முற்காலத்தில் இருந்த கற்றவர்கள், சடங்குகளும், மந்திரங்களும் அற்ற ஒருவன் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதன் மூலமே கற்றவனாகவும், நோன்புகள் நோற்ற பலனையும் அடைகிறான் என்பதைக் கண்டனர். தார்ப்பி இங்கே நான்கு கடல்களையும் கொண்டு வந்தான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, இங்கே நீராடும் ஒருவன், அதன்பிறகு துயரை அடையாமல், நாலாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

ஓ ஆறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் சதஸஹஸ்ரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அதன் அருகிலேயே மற்றும் ஒரு தீர்த்தமான சாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்த இரண்டு தீர்த்தங்களும் கொண்டாடப்படுபவையே. அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். அங்கே அளிக்கப்படும் தானங்களும் நோன்புகளும் ஆயிரம் மடங்குகளாகப் பெருகுகின்றன. ஓ மன்னா, பிறகு ஒருவன் ரேணுகா என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வழிபட வேண்டும். இதன்காரணமாக ஒருவன் அனைத்துப் பாவங்களிலும் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு விமோ என்ற தீர்த்தத்தில் ஆசைகளையும் புலன்களையும் கட்டுக்குள் வைத்து நீராடும் ஒருவன், பரிசுகளை ஏற்பதால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, பிரம்மச்சரிய வாழ்வுமுறை வாழ்ந்து பஞ்சவடி வனத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கி இருப்பதால் ஒருவன் மிகுந்த அறத்தை அடைந்து, அறம் சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான்.

பிறகு ஒருவன் வருணனின் தீர்த்தமான தன்னொளியால் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தைஜசத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் யோகத்தின் தலைவனான, காளையைத் தனது வாகனமாகக் கொண்ட ஸ்தாணு {சிவன்} இருக்கிறான். அங்கே சிலகாலம் தங்கும் ஒருவன் தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வழிபடுவதால் வெற்றியை அடைகிறான். அங்கேதான், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் குகனை {முருகனை} தேவர்களின் படைத்தளபதியாக நியமித்தனர். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, அந்தத் தீர்த்தத்திற்குக் கிழக்கேதான் குரு தீர்த்தம் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழும் ஒருவன் அக்குரு தீர்த்தத்தில் நீராடுவதால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு பிரம்மனின் உலகை அடைகிறான்.

பிறகு அடக்கப்பட்ட புலன்களுடனும், முறையான உணவுப் பழக்கத்துடனும் இருக்கும் ஒருவன் சுவர்க்கத்வாரம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி, அநரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே நீராடும் ஒருவன் அதன்பிறகு எந்தத் துயரையும் அடைவதில்லை. ஓ மன்னா, ஓ மனிதர்களில் புலியே அங்கே நாராயணனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் எப்போதும் இருக்கின்றனர். ஓ குருகுலத்தின் அரசமகனே {பீஷ்மா}, ருத்திரனின் மனைவியும் அங்கே இருக்கிறாள். அந்தத் தேவியைக் காணும் ஒருவன் அதன்பிறகு துயரையே சந்திப்பதில்லை. அங்கே அந்தத் தீர்த்தத்தில் உமையின் தலைவனான விஸ்வேஸ்வரனும் இருக்கிறான். தேவர்களுக்குத் தேவனை {சிவனை} அங்கே காணும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே நாராயணனையும், அவனது நாபியில் உதிக்கும் கமலத்தையும் {தாமரையையும்} காணும் ஒருவன் சுடர்விட்டுப் பிரகாசித்து விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மனிதர்களில் காளையே அனைத்து தேவர்களின் தீர்த்தங்களிலும் நீராடும் ஒருவன் அனைத்து துக்கத்தில் இருந்தும் விடுப்பட்டு, சந்திரனைப் போல ஒளிர்கிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top