Agni suffering from surfeit! | Adi Parva - Section 225 | Mahabharata In Tamil
(காண்டவ தாஹ பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…
வைசம்பாயனர் சொன்னார், "அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர்.(1) அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.(2)