The wisdom of Namuchi! | Shanti-Parva-Section-226 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 53)
பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சோகத்தை விலக்க வேண்டிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்ன நமுசி...
[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் மரணம் குறித்து அறிந்தவனான அசுரன் நமுதி, செழிப்பை இழந்தவனாக இருந்தும், முற்றிலும் அசைவற்றதாக இருக்கும் பரந்த பெருங்கடலைப் போலக் கலங்காத இதயத்துடன் இருந்த போது, புரந்தரன் {இந்திரன்} இந்த வார்த்தைகளை அவனிடம் {நமுசியிடம்} சொன்னான்:(2) "ஓ! நமுசியே, உன் நிலையில் இருந்து வீழ்ந்து, கயிறுகளால் கட்டப்பட்டு, உன் எதிரிகளின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, செழிப்பை இழந்தவனாக இருக்கும் நீ, துயரத்தில் ஈடுபட்டு வருகிறாயா? அல்லது உன் நாட்களை உற்சாகமாகக் கழித்து வருகிறாயா?" என்று கேட்டான்.(3)

