Showing posts with label பாகுகன். Show all posts
Showing posts with label பாகுகன். Show all posts

Wednesday, January 15, 2014

நளனும் தமயந்தியும் சேர்ந்தனர்! - வனபர்வம் பகுதி 76

Nala and Damayanti united! | Vana Parva - Section 76 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

சுருக்கம் : கேசினி பாகுகனின் உள்ளப் போராட்டத்தை தமயந்தியிடம் சொன்னது; வந்திருப்பது நளனே என்று ஒருவாறு அறிந்து கொண்ட தமயந்தி, தனது தாயிடம் நளனைச் சந்திக்க அனுமதி கோருவது; தமயந்தி பாகுகனிடம் கேள்விக் கேட்பது; நளன் தனது நிலையைச் சொல்லி, அறம்சார்ந்த பெண் இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று கேட்பது; தன்னைச் சந்தேகிப்பது தகாது என்று நளனுக்கு தமயந்தி உணர்த்துவது; வாயுத்தேவன் சாட்சி சொல்வது; தம்பதிகள் இணைவது…

பிருகதஸ்வர் சொன்னார், "அறம்சார்ந்த ஞானம் கொண்ட நளனின் உள்ளப்போராட்டத்தை அறிந்த கேசினி, தமயந்தியிடம் சென்று அனைத்தையும் கூறினாள். இதனால் இதயத் துயரம் கொண்ட தமயந்தி நளனைக் காணும் ஆவல் கொண்டு, கேசினியைத் தனது தாயிடம் தன் சார்பாக, "பாகுகரே - நளர் என்று நான் சந்தேகிக்கிறேன். நான் பல வழிகளில் அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். அவரது தோற்றம் குறித்து மட்டுமே எனக்குச் சந்தேகம் இருக்கிறது. நானே அவரைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறேன். ஓ தாயே, ஒன்று அவர் அரண்மனைக்குள் நுழைய அனுமதி கொடு, அல்லது நான் அவரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடு. இவற்றை எனது தந்தையின் {மன்னன் பீமனின்} கவனத்திற்கு கொண்டு சென்றோ அல்லது கொண்டு செல்லாமலோ செய்" என்று பேசு" என்று {கேசினியிடம்} சொன்னாள் {தமயந்தி}.


இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட அந்த மங்கை {தமயந்தியின் தாய்}, தனது மகளின் நோக்கத்தை பீமனிடம் தெரிவித்தாள். அம்மன்னனும் அவற்றை அறிந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் சம்மதத்தையும் பெற்ற தமயந்தி, நளனை தனது அறைக்கு கொண்டுவரச் செய்தாள். எதிர்பாராத வகையில் தமயந்தியைச் சந்தித்த மன்னன் நளன் துன்பத்திலும் துயரத்திலும் மூழ்கி கண்ணீரில் குளித்தான். பெண்களில் சிறந்த அந்த தமயந்தியும் மன்னன் நளனை அந்த நிலையில் கண்டு, துன்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டாள்.

ஓ ஏகாதிபதி, சிவப்பு நிற ஒற்றையாடை அணிந்து, சடை விழுந்த கூந்தலுடனும், அழுக்கடைந்த மேனியுடனும் இருந்த தமயந்தி பாகுகனிடம், "ஓ பாகுகரே, கடமையை நன்கு அறிந்த ஒரு மனிதர், கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியை கைவிட்டுச் செல்வதை நீர் எங்காவது கண்டிருக்கிறீரா? களைப்பால் பாதிக்கப்பட்ட, எக்குற்றமும் இழைக்காத தனது அன்புக்குரிய மனைவியைக் கைவிடும் செயலை அறம் சார்ந்த நளரைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்? அந்த ஏகாதிபதியின் {நளரின்} கண்களில் குற்றவாளியாகத் தெரிய, என் இளம் வயதில் இருந்து நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காகத் கானகத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னைக் கைவிட்டு அவர் சென்றார்? முன்பு தேவர்களையும் புறக்கணித்து அவரை {நளரைத்} தேர்ந்தெடுத்து, அவரது பிள்ளைகளுக்கும் தாயாகி அவருக்கே என்னை அர்ப்பணித்து, அவருக்கு அன்பான மனைவியாக இருந்த என்னை ஏன் அவர் கைவிட்டார்? நெருப்புக்கு எதிராகவும், தேவர்களுக்கு முன்னிலையிலும் எனது கைகளைப் பற்றி, "நிச்சயமாக நான் உனதே" என்று உறுதி ஏற்றார். ஓ, என்னைக் கைவிட்ட போது அவரது அந்தச் சபதம் என்ன ஆயிற்று" என்று கேட்டாள்.

தமயந்தி இவற்றையெல்லாம் சொன்னபோது, துயரத்தால் அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. துயரால் பாதிக்கப்பட்டு, அவளது சிவந்த கண்களின் கருவிழிகளில் இருந்து பெருகி வரும் நீரைக் கண்டு, நளனும் கண்ணீர் சிந்தி, "ஓ மருட்சி கொண்டவளே, நாட்டை இழந்ததோ, உன்னைக் கைவிட்டதோ எனது செயல் இல்லை. அவை இரண்டும் கலியால் ஏற்பட்டவை. ஓ அறம்சார்ந்த பெண்களில் முதன்மையானவளே, கானகத்தில் பகலும் இரவும் எனக்காக அழுது, சோகத்தில் மூழ்கி, கலியைச் சபித்தாய். அதன் காரணமாக அவன் எனது உடலிலேயே தங்கி, உனது சாபத்தின் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருந்தான். உண்மையில் உனது சாபத்தில் எரிந்த அவன், நெருப்புக்குள் இருக்கும் நெருப்பென என்னுள் வாழ்ந்தான்.

ஓ அருளப்பட்ட பெண்ணே, நான் செய்த சடங்குகளாலும், தவங்களாலும் அந்த இழிந்தவனை வென்றேன். ஆகையால், நமது துயரங்கள் முறிந்து போகும். அந்த இழிந்த பாவி {கலி} என்னைவிட்டு சென்றுவிட்டான். அதனாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். ஓ அழகான மங்கையே, நான் உனக்காகவே இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் நோக்கம் கிடையாது. ஆனால் ஓ மருட்சியுடையவளே, அர்ப்பணிப்புடன் அன்பாக இருக்கும் கணவனைக் கைவிட்டு எந்தப் பெண்ணாவது உன்னைப் போல இரண்டாவது தலைவனைத் தேர்ந்தெடுப்பாளா? மன்னரின் {பீமரின்} உத்தரவின் பேரில், தூதுவர்கள், "பீமரின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்துடன், சுயமாக, தகுதியான இரண்டாவது கணவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்" என்று சொல்லி இந்த முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்} இங்கு வந்திருக்கிறார்" என்றான்.

நளனின் இந்தப் புலம்பலைக் கேட்ட தமயந்தி, பயந்து நடுங்கி, கரங்களைக் கூப்பி, "ஓ அருளப்பட்டவரே, என்னிடம் எந்தக் குறையும் கண்டு என்னைச் சந்தேகிப்பது உமக்குத் தகாது. ஓ நிஷாதர்களின் ஆட்சியாளரே {நளரே}, தேவர்களையும் புறக்கணித்து, நான் உம்மைத் தலைவராகக் கொண்டேன். உம்மை இங்கு கொண்டு வரவே, எல்லாப்புறங்களிலும் அலைந்து, கீழ்வானத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று, எனது வார்த்தைகளை பாடல்களாக்கி பாடிக்கொண்டிருக்கிறார்கள் கற்ற அந்தணர்கள். ஓ மன்னா, பர்ணாதன் என்ற கற்ற அந்தணன் உம்மை கோசலத்தில் ரிதுபர்ணனின் அரண்மனையில் கண்டுபிடித்தான். நீர் அந்த வார்த்தைகளுக்குத் தகுந்த விடையை மறுமொழியாய்ப் பகர்ந்த போதே, ஓ நைஷாதரே {நளரே}, நான் உம்மை மீட்க இந்தத் திட்டத்தை உருவாக்கினேன்.

ஓ பூமியின் தலைவரே, உம்மைத் தவிர இந்த உலகத்தில் குதிரைகளைக் கொண்டு நூறு {100} யோஜனை தூரத்தைக் கடந்து வர யாரும் கிடையாது. ஓ ஏகாதிபதி {நளரே}, உமது பாதத்தைத் தொட்டுச் சத்தியமாகச் சொல்கிறேன், நான் நினைவால் கூட எந்தப் பாவமும் செய்யாதவள். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், அனைத்தையும் சாட்சியாகக் கண்டு, இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்று எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சூரியன் எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், எல்லா உயிரிலும் வசித்து சாட்சியாக இருக்கும் சந்திரன் எனது உயிரை எடுக்கட்டும். மூன்று உலகங்களையும் முழுமையாக நிலைத்திருக்கச் செய்யும் அந்த மூன்று தேவர்களும் {வாயு, சூரியன், சந்திரன்} இன்று உண்மையை அறிவிக்கட்டும். அல்லது அவர்கள் இன்று என்னைக் கைவிடட்டும்" என்றாள் {தமயந்தி}.

அவளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்டதும், காற்றின் தேவன் {வாயுத்தேவன்} வானத்தில் இருந்து, "ஓ நளா, அவள் {தமயந்தி} எந்தத் தவறும் செய்யவில்லை என்ற உண்மையை நான் உனக்குச் சொல்கிறேன். ஓ மன்னா {நளா}, தமயந்தி தனது குடும்பத்தின் மரியாதைக் காப்பாற்றியும், அந்த மரியாதையை உயர்த்தியும் இருக்கிறாள். இதற்கான சாட்சி நாங்களே. இந்த மூன்று {3} வருடங்களிலும் நாங்களே இவளுக்குப் பாதுகாவலர்களாக இருந்தோம். இந்த நிகரற்ற திட்டத்தை அவள் உனக்காகவே உருவாக்கினாள். உன்னைத்தவிர, நூறு யோஜனைகள் தூரத்தை ஒரே நாளில் கடக்கும் திறன், இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. ஓ ஏகாதிபதி, நீ பீமனின் மகளை அடைந்துவிட்டாய். அவளும் உன்னை அடைந்து விட்டாள். நீ எந்தச் சந்தேகத்தையும் ஊக்குவிக்கும் அவசியம் இல்லை. உனது துணைவியுடன் சேர்ந்திருக்கக் கடவாய்" என்றான்.

காற்றின் தேவன் இப்படிச் சொன்னதும் அங்கே மலர் மாரி பொழிந்தது. தேவதுந்துபிகள் முழங்கின. மங்களகரமாக காற்றும் வீசத்தொடங்கியது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இந்த அற்புதங்களைக் கண்ட எதிரிகளை ஒடுக்குபவனான மன்னன் நளன், தமயந்தி குறித்த தனது சந்தேகங்களையெல்லாம் தூக்கி எறிந்தான். பிறகு அந்த பூமியின் தலைவன் {நளன்}, பாம்புகளின் மன்னனை {கார்க்கோடகனை} நினைவுகூர்ந்து, அந்த சுத்தமான ஆடையை அணிந்து தனது சொந்த உருவத்தை அடைந்தான். தனது நீதிமானான தலைவன் சுய உரு அடைந்ததைக் கண்ட, குற்றமற்ற அங்கங்கள் கொண்ட பீமனின் மகள் {தமயந்தி}, அவனை வாரி அணைத்தபடி,  உரத்த சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள். மன்னன் நளனும், தனக்காக அர்ப்பணித்திருந்த பீமனின் மகளையும் {தமயந்தியையும்}, தனது பிள்ளைகளையும் முன்பைப் போல அணைத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.

அகன்ற கண்கள் கொண்ட தமயந்தி, அவனது மார்பில் தனது முகத்தைப் புதைத்து, பெருமூச்சுவிட்டபடி தனது துயரங்களை நினைவு கூர்ந்தாள். துன்பத்தில் மூழ்கிய அந்த மனிதர்களில் புலி {நளன்}, அழுக்கடைந்திருந்த, இனிய புன்னகை கொண்ட தமயந்தியை அணைத்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அரசத்தாய் {Queen mother - பீமனின் தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, பீமனிடம், நளன் மற்றும் தமயந்திக்கிடையே நடந்த நிகழ்ச்சியைச் சொன்னாள். அதற்கு அந்த பலம் பொருந்திய ஏகாதிபதி, "இன்றையப் பொழுதை நளன் அமைதியுடன் கழிக்கட்டும், நாளை அவனது குளியலும், இறவணக்கமும் முடிந்த பின்னர், தமயந்தியுடன் இருக்கும் அவனை நான் காண்பேன்" என்றான்.

ஓ மன்னா, அவர்கள், தங்கள் கானக வாழ்வையும், கடந்தகால நிகழ்ச்சிகளையும் ஒருவருக்கொருவர் உரைத்து, அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். விதரப்ப்பத்தின் இளவரசியும் {தமயந்தியும்}, நளனும், மகிழ்ச்சியால் நிறைந்த இதயங்களுடன், ஒருவரை ஒருவர் மகிழச் செய்து, மன்னன் பீமனின் அரண்மனையில் தங்கள் நாட்களைக் கழிக்கத்தொடங்கினர். (நாட்டை இழந்து) நான்காவது வருடத்திலேயே நளன், தனது விருப்பங்கள் நிறைவேறி, தனது மனைவியுடன் சேர்ந்து, உயர்ந்த அருளை மறுபடியும் அனுபவித்தான். வயலில் இருக்கும் இளஞ்செடிகள் மழையைப் பெற்று மகிழ்வது போல, தனது தலைவனை {நளனை} மீட்டதில் மகிழ்ச்சி அடைந்தாள் தமயந்தி. தனது தலைவனை மீட்ட பீமனின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்தை அடைந்து, களைப்பு நீங்கி, துயரங்கள் விலகி, அழகில் பிரகாசித்து, சந்திரனால் பிரகாசித்த இரவு போல மகழ்ச்சியில் திளைத்தாள்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, January 14, 2014

தனது பிள்ளைகளைக் கண்ட நளன்! - வனபர்வம் பகுதி 75

Nala saw his children! | Vana Parva - Section 75 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி மீண்டும் கேசியினை அனுப்பி பாகுகனின் நடத்தையைக் கண்காணிக்கச் செய்தல்; பாகுகனின் இயல்புக்கு மிக்க செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்த கேசினி விரைவாக வந்து அச்செய்தியை தமயந்தியிடம் சொல்லல்; தமயந்தி மீண்டு கேசினியை அனுப்பி சூடான இறைச்சியைக் கொண்டு வரச் செய்தல்; பாகுகனே நளன் என்று உறுதி செய்துகொண்டு, தனது பிள்ளைகளைக் கேசினியுடன் அனுப்பி வைத்தல்; பிள்ளைகளைக் கண்ட பாகுகன் பெருந்தொனியுடன் அழுதல்…

பிருகதஸ்வர் சொன்னார், "அனைத்தையும் கேட்ட தமயந்தி துயரத்தில் ஆழ்ந்து, அந்த மனிதரே நளன் என்று சந்தேகித்து, கேசினியிடம், "ஓ கேசினி, நீ மறுபடியும் சென்று பாகுகரின் நடத்தையை அமைதியாகக் குறித்துக் கொள். ஓ அழகானவளே, அவர் ஏதாவது நிபுணத்துவத்துடன் செய்தால், அவர் அதைச் செய்யும்போது நன்றாகக் கூர்ந்து கவனித்துக் கொள். மேலும், ஓ கேசினி, அவர் உன்னிடம் நீரோ நெருப்போ கேட்கலாம். அப்போது நீ அவரது காரியத்தைத் தடை செய்வதற்காக, அதைக் கொடுப்பதற்கு எந்த அவசரத்தையும் காட்டாதே. அவரது நடத்தைகளை நன்றாகக் குறித்துக் கொண்டு இங்கே வந்து என்னிடம் சொல். பாகுகரிடம் மனிதச் செயலையோ, மனிதர்களுக்கு மீறிய {தெய்வ} செயலையோ கண்டால் மற்ற அனைத்துடன் சேர்த்து எனக்கு வந்து தெரிவி" என்றாள்.


இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட கேசினி, குதிரைகளின் மரபுகளை அறிந்த அந்த மனிதனின் நடத்தைகளைக் குறித்துக் கொண்டு திரும்பி வந்தாள். பிறகு, உண்மையில் அங்கு பாகுகனிடம் தான் கண்ட மனித செயலையும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட {தேவ} செயல்கள்  அத்தனையும் சொன்னாள். கேசினி, "ஓ தமயந்தி, அனைத்துக்கூறுகளிலும் இத்தகு கட்டுப்பாடும் ஆற்றலும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதோ கேட்டதோ கிடையாது. தாழ்வான பாதைகளில் அவர் வரும்போது ஒரு போதும் குனிவதில்லை. ஆனால் அவர் வருவதைக் கண்டு அந்தப் பாதையே வளர்ந்து, அவரது உருவம் எளிதாகச் செல்லும் அளவிற்கு இடம் கொடுக்கிறது. அவர் அணுகும்போது நுழையமுடியாத குறுகிய துளைகளும் இவருக்காக வழிவிட்டு அகன்றுவிடுகின்றன.

மன்னர் பீமர் ரிதுபர்ணனின் உணவுக்காக பல வகையான விலங்குகளின் இறைச்சியை அனுப்பி வைத்தார். அங்கே இறைச்சியைச் சுத்தப்படுத்துவதற்காக பல பாத்திரங்கள் இருந்தன. அவர் {பாகுகன் -நளர்} அவற்றைப் பார்த்த உடனேயே அவை (நீரால்) நிரம்பின. பிறகு இறைச்சியைக் கழுவிய பிறகு, உணவைச் சமைக்க ஆரம்பித்தார். அவர் கை நிறைய புல்லை எடுத்துக் கொண்டு சூரியனுக்கு நேராகக் காட்டினார். அது தானாகவே திடிரென்று பற்றிக் கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு நான் இங்கு வந்துவிட்டேன். மேலும், அவரிடம் நான் மேலும் ஒரு அற்புதத்தைக் கண்டேன். ஓ அழகானவளே, அவர் நெருப்பைத் தொடுகிறார். ஆனால், அது அவரைச் சுடவில்லை. அவர் சில மலர்களை எடுத்து மெதுவாக அவற்றை அழுத்தினார். அவரது கையால் அழுத்தப்பட்ட அம்மலர்கள் தங்கள் சுய உருவை இழக்கவில்லை. மாறாக அவை சாம்ப நிறம் {அதிக நிறம்} கூடி, மேலும் நறுமணமாயிற்று. இந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு நான் இங்கே விரைவாக வந்துவிட்டேன்" என்றாள்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "அறம்சார்ந்த நளனின் இச்செயல்களைக் கேட்டு, அவனது நடத்தைகளைக் கொண்டு அவனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனை மீட்டு விட்டதாகவே கருதினாள். இந்த அனைத்துக் குறிப்புகளாலும் பாகுகன்தான் தனது கணவன் என்று சந்தேகித்த தமயந்தி, மீண்டும் அழுதுகொண்டே கேசினியிடம் மென்மையான வார்த்தைகளால், "ஓ ஆழகானவளே, மீண்டும் ஒரு முறை சென்று, அடுக்களையில் {சமையல் செய்யும் இடம்} (அவரால்) சமைத்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை பாகுகன் அறியாமல் எடுத்துக் கொண்டு வா" என்றாள் {தமயந்தி}.

தமயந்திக்கு ஏற்புடையதை எப்போதும் செய்ய விழையும் கேசினி, இப்படிக் கட்டளையிடப்பட்டதும் பாகுகனிடம் சென்று, சூடான இறைச்சியை எடுத்துக் கொண்டு நேரம் கடத்தாமல் விரைவாக வந்தாள். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இறைச்சியை கேசினி தமயந்தியிடம் கொடுத்தாள். நளனால் சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை ஏற்கனவே உண்டிருக்கும் தமயந்தி, தனது பணிப்பெண்ணால் கொண்டுவரப்பட்ட இறைச்சியை சுவைத்துப் பார்த்தாள். அதன் பிறகு பாகுகன்தான் நளன் என்ற தீர்மானத்திற்கு வந்து, இதயத்தின் துயரத்தால் உரக்க அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா} துக்கத்தில் மூழ்கி, தனது முகத்தைக் கழுவிக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கேசினியுடன் அனுப்பி வைத்தாள். பாகுகன் என்ற மாற்று உருவத்தில் இருந்த மன்னன் {நளன்}, இந்திரசேனையையும் அவளது சகோதரனையும் {இந்திரசேனனையும்} அடையாளம் கண்டு, விரைவாக முன்னேறி, அவர்களை வாரி அணைத்து, தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.

தேவர்கள் போன்று இருந்த தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, பெரும் துக்கத்தால் இதயம் ஒடுக்கப்பட்டு, பெருந்தொனியில் உரத்த வார்த்தைகள் சொல்லி அழ ஆரம்பித்தான். தனது உள்ளப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பின், திடீரென பிள்ளைகளை விட்டு விட்டு, கேசினியிடம், "ஓ அழகான மங்கையே, இந்த இரட்டையர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றே இருக்கின்றனர். எதிர்பாராமல் இவர்களைச் சந்தித்ததால் நான் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் வேறு நிலத்தில் {நாட்டில்} இருந்து வந்திருக்கும் விருந்தாளிகள், நீ அடிக்கடி என்னிடம் வந்தால், மக்கள் தவறாக நினைப்பார்கள். ஆகையால், ஓ அருளப்பட்டவளே, சுகமாக செல்" என்றான் {நளன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


நளனைச் சந்தித்த கேசினி! - வனபர்வம் பகுதி 74

Kesini met Nala! | Vana Parva - Section 74 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி கேசியினை பாகுகனிடம் தூதாக அனுப்புதல்; கேசினி பாகுகனிடம் வந்து விசாரித்தல்; நளனின் துயரம்…

தமயந்தி சொன்னாள், "ஓ கேசினி, பார்வைக்குச் சகிக்காதபடி, நீளம் குறைந்த கைகளுடன் தேரின் அருகே அமர்ந்திருக்கும் அந்தத் தேரோட்டியிடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வா. ஓ அருளப்பட்டவளே, ஓ குறைகளற்றவளே, அவரை அணுகி, தகுந்த வார்த்தைகளுடனும், எச்சரிக்கையுடன், வழக்கமாக விசாரிப்பது போல விசாரித்து, அவர் குறித்த அனைத்து உண்மையான விவரங்களையும் கேள். எனது மனம் கொள்ளும் திருப்தியான உணர்வையும், எனது இதயம் உணரும் மகிழ்ச்சியையும் கருதி, இவரே மன்னன் நளர் என்று நினைத்து நான் அஞ்சுகிறேன். மேலும், ஓ குறையற்றவளே, அவரது நலத்தை விசாரித்த பிறகு, பர்ணாதன் சொன்ன வார்த்தகளை அவரிடம் சொல். ஓ அழகானவளே, அவர் சொல்லும் மறுமொழியைப் புரிந்து கொண்டு, என்னிடம் வந்து சொல்" என்றாள் {தமயந்தி}.

இப்படி உத்தரவிடப்பட்ட அந்தப் பெண் தூதுவர், எச்சரிக்கையுடனேயே சென்றாள். அப்படிச் சென்ற கேசினி பாகுகனிடம் {நளனிடம்} பேசுவதை, தமயந்தி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கேசினி, "ஓ மனிதர்களில் முதன்மையானவரே, உமது வரவு நல்வரவாகுக. நான் உமது மகிழ்ச்சியை விரும்புகிறேன். ஓ மனிதர்களில் காளையே, தமயந்தின் வார்த்தைகளை இப்போது கேளும். நீ எப்போது கிளம்பினீர்கள்? என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள்? எங்களுக்கு உண்மையைச் சொல்லும். விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} இவற்றைக் கேட்க விரும்புகிறார்" என்றாள். அதற்கு பாகுகன், "கோசலத்தின் சிறப்பு மிகுந்த மன்னன் {ரிதுபர்ணன்}, தமயந்தியின் இரண்டாவது சுயம்வரம் நடைபெறப் போவதாக ஒரு அந்தணன் மூலம் அறிந்தார். அதைக் கேள்விப்பட்டே, காற்றின் வேகம் கொண்டு, நூறு யோஜனை தூரம் செல்லக்கூடிய அற்புதமான புரவிகளின் உதவியுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் அவரது தேரோட்டி" என்று பதில் சொன்னான்.

பிறகு கேசினி, "உங்களில் மூன்றாமவர் எங்கிருந்து வருகிறார்? அவர் யாருடையவர் (யாருடைய மகன்}? நீர் யாருடைய மகன்? இந்த வேலையைச் செய்ய எப்படி நீர் வந்தீர்?" என்று கேட்டாள். இப்படிக் கேட்கப்பட்டு பாகுகன், "(நீ விசாரிக்கும்) அவன் {வார்ஷ்ணேயன்}, அறம்சார்ந்த நளனின் தேரோட்டியாக இருந்து, வார்ஷ்ணேயன் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான். ஓ அழகானவளே, நளன் நாட்டைவிட்டு சென்றதும், அவன் பங்காசூரனின் மகனிடம் {ரிதுபர்ணரிடம்} வந்தான். நான் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணன் ஆகையால், தேரோட்டியாக அமர்த்தப்பட்டேன். உண்மையில், மன்னன் ரிதுபர்ணரே என்னை அவரது தேரோட்டியாகவும், சமையற்காரனாகவும் தேர்ந்தெடுத்தார்" என்று மறுமொழி கூறினான் {பாகுகனாக இருக்கும் நளன்}.

கேசினி மீண்டும், "வார்ஷ்ணேயன், தனது மன்னன் நளன் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அறிவானோ. ஓ பாகுகரே, அவன் (தனது தலைவரைக்) இது குறித்து உம்மிடம் பேசியிருக்கலாமே" என்றாள். அதற்கு பாகுகன், "அற்புதமான செயல்கள் செய்து நளனுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, வார்ஷ்ணேயன் தற்போது இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு {வார்ஷ்ணேயனுக்கு} அந்த நைஷாதன் {நளன்} எங்கிருக்கிறான் என்பது தெரியாது. ஓ சிறப்பானவளே, நளன் தனது அழகை (உண்மையான உருவை) இழந்து, மாற்றுருவத்தில் உலகம் முழுவதும் திரிந்து வருவதால் அவன் எங்கிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. நளனை நளன் மட்டுமே அறிவான். நளனுக்கு உரிய அடையாளங்கள் எங்கும் அவனைக் காட்டாது {அவனது அடையாளங்களை வைத்து, அவனை எங்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது}." என்றான் {நளன்}.

இப்படிச் சொல்லப்பட்ட கேசினி மறுபடியும், "அவன் முன்பு இங்கிருந்து அயோத்தியாவுக்குச் சென்ற ஒரு அந்தணன், பெண்ணின் உதடுகளுக்குரிய வார்த்தைகளை "ஓ அன்புக்குரிய சூதாடியே "ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது  எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர்! விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, நீர் அப்போது சொன்ன அவ்வார்த்தைகளை மறுபடியும் கேட்க விரும்புகிறார்" என்று கேட்டாள்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, கேசினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நளனின் இதயம் வலித்தது. அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பின. தனது துயரத்தை அடக்கிக் கொண்ட அம்மன்னன் {நளன்}, எரியும் துயரத்துடன் மறுபடியும் அவ்வார்த்தைகளை, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள்.  அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் {கணவனால்} நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது" என்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தால் ஒடுக்கப்பட்ட, நளன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழத்தொடங்கினான். அதன்பிறகு கேசினி, இந்த உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து, அவனின் {பாகுகனின் - நளனின்} வருத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்து தமயந்தியிடம் திரும்பினாள்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


தேரொலியால் ஏற்பட்ட குழப்பம்! - வனபர்வம் பகுதி 73

The confusion led by the rattle of the car | Vana Parva - Section 73 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

மாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வருந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.


கர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிரைகளும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.

தமயந்தி, "முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம் தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான் கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது" என்று சொன்னாள்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்தடியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, "நல்வரவு! உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன?" என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, "நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்" என்றான்.

இதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன், நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்கும் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், "மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்" என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், "நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்" என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும்,  மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, "இந்தத் தேரொலி யாருடையது? நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா?" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அழகான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


நளனை விட்டு வெளியேறிய கலி! - வனபர்வம் பகுதி 72

Kali came out of Nala! | Vana Parva - Section 72 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

வேகமாக நளன் தேரை ஓட்டிச் சென்ற போது, ரிதுபர்ணனின் மேலாடை விழுவது; நளன் ரிதுபர்ணனை அம்மேலாடையை எடுக்க அனுமதியாதது; ரிதுபர்ணன் தனது திறமையைச் சொல்வது; நளன் நம்பாதது; ரிதுபர்ணன் தான்றி மரத்தின் இலைகளையும் கனிகளையும் எண்ணிச் சொல்வது; நளன் அதை நம்பாது எண்ணி உண்மை கண்டறிந்து அதிசயிப்பது; நளன் ரிதுபர்ணனிடம் இருந்து பகடையின் ரகசியத்தை அறிவது; கலி நளனை விட்டு அகலுவது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "வானத்தில் பறந்து செல்லும் பறவையைப் போல நளன் விரைவாக ஆறுகளையும், மலைகளையும், கானகங்களையும், தடாகங்களையும் கடந்து சென்றான். அப்படி அவன் {நளன்} சென்று கொண்டிருக்கும்போது, எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பங்காசூரனின் மகனது {ரிதுபர்ணனின்} மேலாடை தரையில் விழுந்தது. அப்படி அவனின் {ரிதுபர்ணனின்} மேலாடை விழுந்ததும், அந்த உயர்ந்த மனம் கொண்ட ஏகாதிபதி நேரத்தைக் கடத்தாமல் உடனேயே நளனிடம், "நான் அதை {விழுந்த மேலாடையை} எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ ஆழ்ந்த புத்திகூர்மை கொண்டவனே {பாகுகனே-நளனே}, மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் குதிரைகளை நிறுத்து. நான் வார்ஷ்ணேயனைக் கொண்டு அந்த ஆடையை எடுத்து வரச் செய்கிறேன்" என்றான்.

அதற்கு நளன் அவனிடம் {ரிதுபர்ணனிடம்}, அந்த ஆடை வெகுதூரத்தில் விழுந்து கிடக்கிறது. நாம் ஒரு யோஜனை தூரம் {எட்டு மைல்கள் அல்லது 13 கிலோமீட்டர்கள்} கடந்து வந்துவிட்டோம். ஆகையால் அதை நம்மால் மீட்டெடுக்க முடியாது" என்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா} நளன் இப்படிச் சொன்னதும், அந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, அக்கானகத்தில் கனிகள் நிறைந்த தான்றி {Vibhitaka tree = தான்றி மரம்} மரத்தைக் கண்டான். அந்த மரத்தைக் கண்டதும் அம்மன்னன் பாகுகனிடம் விரைவாக, "ஓ தேரோட்டியே, கணக்கீட்டில் {எண்ணிக்கை அறிவில்) எனது உயர்ந்த திறமையைப் பார். எல்லா மனிதர்களும் அனைத்தையும் அறிந்துவிடுவதில்லை. அனைத்து அறிவியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கிடையாது. ஓ பாகுகா, ஞானம் முழுவதும் {உலகத்தின் மொத்த ஞானத்தையும்} ஒரே மனிதனிடம் காணப்படுவதில்லை.  இந்த மரத்தில் இருக்கும் இலைகளும் கனிகளையும் விட, தரையில் உதிர்ந்து கிடக்கும் அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் நூற்றி ஒரு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது {இலைகளில் நூறும், கனிகளில் ஒன்றும் அதிகம் என்றும் கதைகளில் கேட்டிருக்கிறேன்}. அந்த மரத்தின் இரு கிளைகளில் ஐம்பது லட்சம் (5 million} இலைகளும், இரண்டாயிரத்து தொண்ணூற்று ஐந்து கனிகளும் இருக்கின்றன. வேண்டுமானால் இந்த இரு கிளைகளையும் மற்ற கிளைகளையும் ஆராய்ந்து பார்" என்றான்.

அதற்கு நளன் தேரை நிறுத்தி அம்மன்னனிடம், "ஓ எதிரிகளை நசுக்குபவரே {ரிதுபர்ணரே}, எனது அறிவுக்கு எட்டாத ஒரு காரியத்தைச் சொல்லி, நீரே உம்மைப் புகழ்ந்து கொள்கிறீர். ஆனால், ஓ ஏகாதிபதி, அந்தத் தான்றி மரத்தை வெட்டி நான் எனது புலன்களால் கிடைக்கும் சாட்சிகளைக் கொண்டு {எண்ணிப் பார்த்து} அதை உறுதி செய்வேன். ஓ மன்னா,  அப்படி உண்மையிலேயே நான் எண்ணிப் பார்த்தால் அது ஊகங்களின்படி இருக்காது {உண்மையாகக் கூட இருக்கலாம்}. ஆகையால், உமது முன்னிலையிலேயே, ஓ ஏகாதிபதி {ரிதுபர்ணரே}, நான் இந்த தான்றியை வெட்டுவேன். அது {நீர் சொன்னது போலச்} சரியாக இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, உமது முன்னிலையிலேயே நான் அதன் கனிகளையும் இலைகளையும் எண்ணுவேன். அதுவரை வார்ஷ்ணேயன் இந்தக் குதிரைகளின் கடிவாளத்தைச் சிறிது நேரம் பிடிக்கட்டும்" என்றான் {பாகுகனாக இருக்கும் நளன்}.

அந்தத் தேரோட்டியிடம் {பாகுகன் என்ற நளனிடம்} அம்மன்னன் {ரிதுபர்ணன்}, "விரையமாக்குவதற்கு நேரம் இல்லை" என்றான். ஆனால் பாகுகன் பணிவுடன், "சிறிது நேரம் காத்திருக்கவும். நீர் அவசரத்தில் இருக்கிறீர் எனில், வார்ஷ்ணேயனை தேரோட்டியாகக் கொண்டு செல்லும். சாலை நேராகவும் சமமாகவுமே இருக்கிறது" என்றான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதற்கு பாகுகனைச் சமாதானப்படுத்த ரிதுபர்ணன், "ஓ பாகுகா, நீயே ஒரே தேரோட்டி, உனக்கு இணையானவன் இந்த உலகத்தில் இல்லை. மேலும், நீ குதிரைகளின் மரபுகளை அறிந்திருக்கிறாய். நான் விதரப்ப்பத்திற்குச் செல்வது உனது உதவியின் மூலம்தான் ஆகும் என்று நினைக்கிறேன். நான் என்னை உனது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். நீ எனக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்துவது உனக்குத் தகாது. மேலும், ஓ பாகுகா, நீ இன்றே என்னை விதரப்ப்பத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சூரிய உதயத்தைக் காணச் செய்தாயானால், நீ விரும்பும் எதையும் நான் உனக்குக் கொடுப்பேன்" என்றான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.

அதற்கு பாகுகன், "நான் உமது வார்த்தைகளை ஏற்கிறேன். இந்தத் தான்றியை (அந்த மரத்தின் இலைகளையும் கனிகளையும்} எண்ணி முடித்ததும், விதரப்ப்பத்திற்கு முன்னேறுவேன்" என்று பதில் சொன்னான். பிறகு அந்த மன்னன் {ரிதுபர்ணன்}, அவனிடம் {நளனிடம்} தயக்கத்துடன், "எண்ணிப்பார். இந்தக் கிளையின் பகுதியில் இருக்கும் இலைகளையும் கனிகளையும் எண்ணியதும், நீ எனது உறுதியை {எண்ணிக்கையை} ஏற்று திருப்தியடைவாய்" என்றான். அதன்பிறகு பாகுகன் {நளன்} விரைவாகத் தேரில் இருந்து இறங்கி அந்த மரத்தைச் சாய்த்தான். அப்படி எண்ணி முடித்ததும் கனிகளின் எண்ணிக்கை, அம்மன்னன் சொன்னது போலச் சரியாக இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்து, "ஓ ஏகாதிபதி, இந்த உமது சக்தி அற்புதமானது. ஓ இளவரசரே, நீர் எதைக் கொண்டு இதை உறுதி செய்தீரோ அந்தக் கலையை அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்  {பாகுகன் என்ற நளன்}.

விரைவாகச் செல்ல நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பாகுகனிடம் {நளனிடம்}, "எண்ணிக்கையில் உள்ள நிபுணத்துவத்தைப் போல நான் பகடையிலும் நிபுணன் என்பதை அறிந்து கொள்" என்றான். அதற்கு பாகுகன் {நளன்}, "ஓ மனிதர்களில் காளையே, இந்த அறிவை எனக்குக் கொடும். பதிலுக்கு குதிரைகளின் அறிவை நான் உமக்குக் கொடுக்கிறேன்" என்றான். பாகுகனின் நல்லெண்ணத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதிய மன்னன் ரிதுபர்ணன், {அந்தத் தேரோட்டி கொண்டிருந்த) குதிரைகளின் மரபு ஞானத்தில் இருந்த மயக்கத்தால், "அப்படியே ஆகட்டும்" என்றான். "உன்னால் பரிந்துரைக்கப்பட்ட படி, நீ பகடை அறிவியலை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். ஓ பாகுகா, நான் பெற வேண்டிய குதிரை அறிவியலைக் குறித்து நீ சொன்னதில் உறுதியோடு இரு" என்று சொன்னான். இப்படிச் சொன்ன ரிதுபர்ணன், நளனுக்கு அந்த அறிவைப் {நளன் விரும்பிய பகடை அறிவியலை} போதித்தான். நளன் பகடை அறிவியலைக் கற்றுக் கொண்டதும், அவனது உடலில் இருந்து {பாம்பு} கார்க்கோடகனின் கடும் விஷத்தைக் கக்கிக் கொண்டு, கலி {கலி யுகம்} வெளியேறினான்.

பிறகு, (தமயந்தியின் சாபத்தால்) பாதிக்கப்பட்ட கலி (நளனின் உடலில் இருந்து) வெளியேறியபோது, அந்தச் சாபத்தின் நெருப்பும் கலியை விட்டது. உண்மையில், நெடுங்காலம் கலியால் பாதிக்கப்பட்ட மன்னன் {நளன்}  கீழான உடலைப் பெற்றிருந்தான். இதனால் நிஷாதர்களின் ஆட்சியாளனான அந்தக் கலா [Kala = கலா (அ) காலன்] {நளன்}, கோபத்தில் கலியைச் சபிக்க எண்ணினான், ஆனால் அதற்குள் பயந்து போன கலி, நடுக்கத்துடனும், கூப்பி கரங்களுடனும், "ஓ மன்னா {நளா},  உனது கோபத்தைக் கட்டுப்படுத்து. உனக்கு நான் சிறப்பைத் {புகழைத்} தருவேன். இந்திரசேனனின் தாய் {தமயந்தி}, நீ அவளைக் கைவிட்டபோதே, என்னைக் கோபத்தில் சபித்துவிட்டாள். அப்போதிருந்து உனக்குள் இருந்து நான் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதியே, ஓ வீழ்த்தப்பட முடியாதவனே, நான் தினமும் இரவும் பகலும் அந்த பாம்புகளின் இளவரசன் {கார்க்கோடகன்} விஷத்தால் எரிந்து வருகிறேன். நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். பயந்து போய், உனது பாதுகாப்பைக் கோரும் என்னை நீ சபிக்காமல் இருந்தால், உனது கதையைக் {நளனின் கதையைக்} கவனத்துடன் உரைக்கும் மனிதர்கள், என்னைக் குறித்த {கலியின்-கலிகாலத்தின்} பயத்தில் இருந்து நிச்சயம் விடுபடுவார்கள் {மனிதர்களுக்கு} என்னைக் {கலிகாலத்தைக்} குறித்த பயம் உண்டாகாது}" என்றான் {கலி என்ற கலிகாலம்}.

இப்படி கலியால் சொல்லப்பட்ட மன்னன் நளன், தனது கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்படி பயந்துபோயிருந்த கலி விரைவாக அந்தத் தான்றி மரத்துக்குள் நுழைந்தான். கலி அந்த நைஷாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, மற்றவர்களின் பார்வைக்கு தெரியாதவாறு {தன்னை மறைத்து அரூபமாக} இருந்தான். தனது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மரத்தின் கனிகளை எண்ணி முடித்திருந்த அம்மன்னன் {நளன்}, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, உயர்ந்த சக்தியை அடைந்து, அந்தத் தேரில் ஏறி, குதிரைகளை விரைவாகச் செலுத்தி, பெரும் சக்தியுடன் முன்னேறினான். கலியின் தொடுதலால், அந்தத் தான்றி மரம், அந்நேரத்திலிருந்தே {மனிதர்களால்} விலக்கப்பட்ட மரமானது.

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நளன் அந்த குதிரைகளில் முதன்மையானவற்றை விரைவுப்படுத்தினான். அவை சிறகுகள் கொண்ட உயிரினங்களைப் போல மீண்டும் காற்றில் ஏறியது. நளன் சென்ற பிறகு, கலியும் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கலியால் கைவிடப்பட்ட அந்த பூமியின் தலைவனான் மன்னன் நளன், தனது சொந்த உருவத்தை ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பேரிடரில் இருந்து விடுபட்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, January 12, 2014

வார்ஷ்ணேயனின் சந்தேகம் - வனபர்வம் பகுதி 71

The doubt of Varshneya | Vana Parva - Section 71 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல ரிதுபர்ணன் பாகுகனைப் பணித்தது; பாகுகன், வார்ஷ்ணேயன் மற்றும் ரிதுபர்ணன் ஆகிய மூவரும் விதரப்ப்பம் நோக்கி தேரில் சென்றது; பாகுகன் தேரோட்டும் திறனைப் பார்த்து இவன் நளனாக இருப்பானோ என்று வார்ஷ்ணேயன் சந்தேகித்தது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "சுதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ரிதுபர்ணன், பாகுகனிடம் மென்மையான வார்த்தைகளில், "ஓ பாகுகா {நளனே}, குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றை வழிநடத்துவதிலும் நீ அதி நிபுணனாக இருக்கிறாய். இது உனக்கு விருப்பமானால், நான் தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல விரும்புகிறேன்" என்றான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட நளன், தனது இதயம் வெடித்துவிடுவது போன்ற துயரத்தில் ஆழ்ந்தான். அந்த உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னன் துன்பத்தால் எரிந்தான். அவன் தனக்குள்ளேயே, "துன்பத்தால் குருடாகியே தமயந்தி இப்படிச் செய்கிறாளோ! அல்லது இந்த அற்புதமானத் திட்டத்தை அவள் {தமயந்தி} என் பொருட்டு உருவாக்கியிருக்கிறாளோ!


ஐயோ, புத்தியற்ற எனது பாவத்தால் ஏமாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் அப்பாவி இளவரசி {தமயந்தி} செய்யும் இந்தச் செயல் கொடூரமாக இருக்கிறதே. இந்த உலகத்தில் பெண்களின் இயல்பு நிலையற்றதாகவே காணப்படுகிறது. எனது குற்றமும் பெரியதுதான்; அல்லது எனது பிரிவால் துயரடைந்ததால் என்னை வெறுத்து இப்படிச் செய்கிறாளோ. உண்மையில், அந்தக் கொடியிடை கொண்ட பெண் {தமயந்தி}, என்னால் துன்பத்துக்கும் நம்பிக்கையின்மைக்கும் ஆளாகியிருந்தாலும், நிச்சயமாக இவ்வகை செயலைச் செய்யக் கூடியவள் அல்ல. அதுவும் குறிப்பாக (என்மூலமாக) குழந்தைகள் இருக்கும்போது அப்படிச் செய்ய மாட்டாள். இருப்பினும், இது உண்மையா? பொய்யா? என்று நான் அங்கே சென்று உறுதி செய்த பிறகு அறிந்து கொள்வேன். ஆகையால், நான் ரிதுபர்ணன் காரியத்தையும் மற்றும் எனது காரியத்தையும் {ஒரே நாளில் விதரப்ப்பம் செல்வது என்ற ரிதுபர்ணன் காரியத்தையும் எனது மனைவியைக் காண்பது என்ற எனது காரியத்தையும்} சாதிப்பேன்" என்று நினைத்துக் கொண்டான்.

இப்படி மனதுக்குள் தீர்மானித்துக் கொண்ட பாகுகன் {நளன்}, இதயத்தில் துயரத்துடன் மன்னன் ரிதுபர்ணனிடம் கரங்கள் கூப்பி, "ஓ ஏகாதிபதி, நான் உமக்கு அடிபணிகிறேன். ஓ மனிதர்களில் புலியே, ஓ மன்னா {ரிதுபர்ணரே} நான் விதரப்ப்ப நகரத்திற்கு ஒரே நாளில் செல்வேன்" என்றான். பிறகு ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பங்காசூரனின் மகனின் {ரிதுபர்ணனின்} கட்டளையின் பேரில் பாகுகன் {நளன்} கொட்டிலுக்குச் {குதிரை லாயத்திற்குச்} சென்று குதிரைகளைப் பரிசோதித்தான். விரைந்து செய்யுமாறு ரிதுபர்ணனால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பாகுகன் {நளன்}, தீவிர ஆராய்ச்சிக்கும், கவனமான யோசனைக்கும் பின்னர், சதைப்பற்றற்று மெலிந்திருந்தும், வலிமையுடையதும், நீண்ட பயணத்துக்கு தகுதியானதும், உயர்ந்த இனம் மற்றும் பண்புகளால் பலம்வாய்ந்ததும், அமங்களமான குறிகளற்றதும், அகலமான நாசிகளும், வீங்கிய கன்னங்களும், முடி சார்ந்த பத்து சுழிகளால் குறைகளற்றதும், சிந்து நாட்டில் பிறந்ததும், காற்றைப் போன்ற வேகம் கொண்டதுமான சில குதிரைகளைத் தேர்ந்தெடுத்தான்.

அந்தக் குதிரைகளைக் கண்ட மன்னன் {ரிதுபர்ணனின்} சிறிது கோபம் கொண்டு, "நீ செய்ய விரும்பிய இந்தக் காரியம் என்ன? நீ எங்களைக் கேலி செய்யக்கூடாது. பலத்திலும் மூச்சிலும் பலவீனமான இந்த எனது குதிரைகள் எப்படி நம்மைச் சுமந்து செல்லும்? இவற்றின் உதவியைக் கொண்டு இந்த நெடும்பாதையில் எப்படிச் செல்ல முடியும்?" என்று கேட்டான். அதற்கு பாகுகன் {நளன்}, "இந்தக் குதிரைகள் ஒவ்வொன்றும் தனது நெற்றியில் ஒரு சுழியும், நெற்றிப்பொட்டில் இரண்டும், இரு பக்க உடலிலும் நான்கும், மார்பில் ஒன்றும், முதுகில் ஒன்றும் என சுழிகளைக் கொண்டிருக்கின்றன. சந்தேகமற, இந்தப் புரவிகளால் விதரப்ப்ப நாட்டிற்குச் செல்ல முடியும். ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் மற்றவைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவற்றைக் குறித்துக் காட்டும், அந்தப் புரவிகளை நான் உமக்காக விரட்டி ஓட்டுகிறேன்" என்றான். பிறகு விடைகொடுத்த ரிதுபர்ணன், "ஓ பாகுகா, நீ குதிரைகளைப் பற்றிய அறிவியலை அறிந்தவன். நீ அவற்றில் (அவற்றை வழிநடத்துவதிலும்) நிபுணனாக இருக்கிறாய். எவை தகுதியுடையவை என்று நீ நினைக்கிறாயோ அவற்றை விரைவாக விரட்டு" என்றான்.

அதன் பிறகு திறன் வாய்ந்த நளன் தேரில், அதிவேகமாகச் செல்லும் நான்கு அற்புதமான உயர்சாதிக் குதிரைகளைப் பூட்டினான். குதிரைகள் பூட்டப்பட்டதும், மன்னன் {ரிதுபர்ணன்} நேரத்தைக் கடத்தாமல் அந்தத் தேரில் ஏறினான். அப்போது அந்தச் சிறந்த குதிரைகள் முழங்கால் மடக்கி பூமியில் விழுந்தன. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் முதன்மையான மன்னன் நளன், சக்தியும் பலமும் கொண்ட அந்தக் குதிரைகளைத் தேற்றினான். பிறகு கடிவாளத்தை இழுத்து அவற்றை எழுப்பி, தேரோட்டியான வார்ஷ்ணேயனையும் தேரில் அமர்த்தி, மிகுந்த வேகத்தில் செல்ல ஆயத்தமானான். அந்த குதிரைகளில் சிறந்தவை, பாகுகனால் {நளன்தூண்டப்பட்டு, வாகனத்தில் இருப்பவர்க்ள ஆச்சரியம் அடையும் வகையில் வானத்தில் எழுந்தன.

காற்றின் வேகத்தைக் கொடையாகக் கொண்டு அந்த தேரை இழுத்துச் சென்ற அக்குதிரைகளைக் கண்டு, அருள்நிறைந்த அயோத்தியா மன்னன் {ரிதுபர்ணன்} மிகுந்த ஆச்சரியம் கொண்டான். தேர்ச்சக்கரங்களின் ஒலியையும், குதிரைகளின் நிர்வாகத்தையும் கண்ட வார்ஷ்ணேயன், குதிரைகளை வழிநடத்துவதில் பாகுகனின் {நளனின்} திறமையைக் குறித்துச் சிந்தித்தான். அவன் {வார்ஷ்ணேயன்} தனக்குள், "இவன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலியா? அதே அற்புதமான குறிகளை நான் இந்த வீரன் பாகுகனிடம் காண்கிறேன். அல்லது அழகான மனித உடலை அடைந்தவனும், புரவிகளின் அறிவியலை அறிந்தவனுமான சாலிஹோத்ரனோ {குதிரை சாஸ்திரம் என்கிற அஸ்வசாஸ்திரம் இயற்றிய முனிவரே சாலிஹோத்ரர் என்று அறிகிறோம்}. அல்லது எதிரிகளின் நகரத்தை அழிக்கும் மன்னன் நளர்தான் இங்கு வந்துவிட்டாரா? அல்லது அந்த நளர் அறிந்த அறிவியலை இந்த பாகுகனும் அறிந்திருக்கிறானா? நளருக்கு இணையான அறிவை இந்த பாகுகன் பெற்றிருப்பதை நான் காண்கிறேனே.

மேலும் பாகுகனுக்கும் நளருக்கும் ஒரே வயது தான் இருக்கும். மேலும், இவன் பெரும் பராக்கிரம் கொண்ட நளனாக இல்லாவிட்டாலும், அவருக்கு இணையான அறிவு கொண்டவனே. இருப்பினும், துரதிர்ஷ்ட காலத்தில் சிறப்புமிக்க மனிதர்கள்கூட சாத்திரங்களின் விதிகளுக்கு மாற்றுருவில் உலவுவார்கள். இந்த மனிதனின் பார்க்கச் சகியாத தோற்றத்தில் எனது எண்ணம் மாறத் தேவையில்லை; நளன் கூட தனது தனிப்பட்ட குணங்களை அழித்துக் கொண்டார். வயதைப் பொறுத்தவரை இவன் நளருக்குச் சமமாகவே இருக்கிறான். இருப்பினும் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது. பாகுகனும் {நளனும்} அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரனாக இருக்கிறான். அகையால், இவனை நளர் என்றே நினைக்கிறேன்" என்று நினைத்துக் கொண்டான்.

ஓ பலம் வாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இப்படி நீண்ட நேரம் தனது மனதில் சிந்தித்த, நீதிமானான நளனின் (முன்னாள்) தேரோட்டியான வார்ஷ்ணேயன், இப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான். மேலும், மன்னர்களில் முதன்மையான ரிதுபர்ணன், குதிரைச்சவாரி அறிவியலில் பாகுகனின் திறமையைக் கண்டு, தனது தேரோட்டியான வார்ஷ்ணேயனுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தான். மேலும் பாகுகனின் திறனையும், தீவிரத்தையும், கடிவாளத்தைப் பிடிக்கும் முறையையும் நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, January 10, 2014

நளனைத் தீண்டிய கார்க்கோடகன்! - வனபர்வம் பகுதி 66

Karkodaka bit Nala | Vana Parva - Section 66 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தியைக் கைவிட்டு வந்த நளன் ஒரு பெரும் காட்டுத் தீயைக் காண்பது; அந்தக் காட்டுத் தீயில் அகப்பட்ட கார்க்கோடகன் என்ற பாம்பை மீட்பது; அந்தப் பாம்பு கடித்ததால்  நளன் தனது சுய உருவத்தை இழந்தது;

பிருகதஸ்வர் {Vrihadaswa} சொன்னார், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, {தமயந்தியைக்} கைவிட்டு சென்ற நளன், அந்த அடர்ந்த காட்டில் பொங்கி எழும் காட்டுத்தீயைக் கண்டான். அந்தக் காட்டுத்தீக்கு மத்தியில் இருந்து ஏதோ ஒரு உயிரினம், "ஓ நீதிமானான நளனே, இங்கே வா" என்று திரும்பத் திரும்பக் கதறும் ஒலியைக் கேட்டான். அதற்கு மறுமொழியாக "அஞ்ச வேண்டாம்" என்று சொல்லி, அந்த நெருப்புக்கு மத்தியில் நுழைந்து ஒரு பெரும் நாகம் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டான். அந்த நாகமும் தனது கரங்களைக் கூப்பி, நடுங்கிக் கொண்டே நளனிடம், "ஓ மன்னா, நான் கார்க்கோடகன் என்ற பெயர் கொண்ட பாம்பு. நான் உயர்ந்த துறவுத்தகுதியைப் பெற்ற நாரதப் பெருமுனிவரை ஏமாற்றினேன். அதனால் அவர் என்னை கோபத்தால் சபித்துவிட்டார். ஓ மனிதர்களின் மன்னா {நளனே}, அவர் என்னை, "நளன் வந்து உன்னை எடுக்கும் வரை இங்கேயே அசையாதிருப்பாய். அவன் உன்னை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வான். அதன் பிறகு நீ இந்த சாபத்தில் இருந்து விடுபடுவாய்" என்றார். 


அதன்காரணமாகவே நான் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதவனாக இருக்கிறேன். உன் காரியமாக உனக்கு நன்மையானதைச் சொல்வேன். என்னைக் காப்பாற்றுவதே உனக்குத் தகும். நான் உனது நண்பனாக இருப்பேன். எனக்குச் சமமான எந்தப் பாம்பும் கிடையாது. நான் உனது கைகளில் பாரமில்லாதவாறு இருப்பேன். என்னை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து வேகமாகச் செல்" என்றான் {கார்க்கோடகன்}.

இதைச் சொன்ன அந்தப் பாம்புகளின் இளவரசன் {கார்கோடன்}, கட்டைவிரல் அளவு சிறியதானான். அவனைத் தனது கைகளில் எடுத்துக் கொண்ட நளன், நெருப்பில்லாத இடத்திற்கு சென்றான். நெருப்பில்லாத திறந்த வெளிக்கு வந்ததும் நின்று அந்தப் பாம்பைக் கீழே விட எண்ணினான் நளன். அப்போது கார்க்கோடகன், "ஓ நிஷாதர்களின் மன்னா, உனது பாத எட்டுகளை எண்ணிக் கொண்டே இன்னும் முன்னேறு. அதே வேளையில் நான் உனக்கு ஒரு நல்லதைச் செய்கிறேன்" என்றான். நளன் தனது எட்டுகளை எண்ணினான், பத்தாவது எட்டு எடுத்து வைக்கும்போது அந்தப் பாம்பு அவனைக் {நளனைக்} கடித்தான். அப்படி கடிபட்டதும் அவனது {நளனின்} உருவம் விரைவாக மாற்றம் கண்டது.  தனது உருவம் மாறுவதைக் கண்ட நளன் ஆச்சரியம் அடைந்தான். அந்தப் பாம்பு சொந்த உருவத்தை அடைவதையும் அந்த மன்னன் {நளன்} கண்டான்.

அந்தக் கார்க்கோடகன் என்ற பாம்பு, நளனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், "மக்கள் உன்னை அடையாளம் காணாதவாறு, நான் உனது அழகை இழக்கச் செய்திருக்கிறேன். ஓ நளனே, யாரால் வஞ்சிக்கப்பட்டு இந்தத் துயரத்தை நீ அடைந்தாயோ, அவன் {கலி} எனது விஷத்தால் சித்திரவதை செய்யப்பட்டு உன்னுள் வசித்திருப்பான். ஓ ஏகாதிபதி {நளனே}, அவன் உன்னை விட்டுப் போகாத வரை, உனது உடலில் இருந்து, உனது அங்கங்கள் அனைத்திலும் இருக்கும் எனது விஷத்தால் வலியை உணர்வான். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {நளனே}, நீ அப்பாவியாக இருந்தும், தீமைக்குத் தகுதியில்லாதவனாக இருந்தும், உன் மேலுள்ள கோபத்தாலும், வெறுப்பாலும் உன்னை வஞ்சித்தவனிடம் {கலியிடம்} இருந்து நான் உன்னைக் காத்திருக்கிறேன். ஓ மனிதப் புலியே, ஒ மன்னா {நளனே}, எனது அருளால், இனி நீ எந்த மிருகங்களுக்கும், எதிரிகளின் கோரைப் பற்களுக்கும், வேதங்களை அறிந்த அந்தணர்களுக்கும் அஞ்சத்தேவையில்லை. ஓ ஏகாதிபதியே {நளனே}, எனது விஷத்தாலும் நீ வலியை உணர மாட்டாய்.

மேலும், ஓ மன்னர்களில் முதன்மையானவனே {நளனே}, நீ எப்போதும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூடுபவனாக இருப்பாய். ஓ இளவரசனே {நளனே}, நிஷாதர்களின் தலைவனே {நளனே}, இந்த நாளே நீ காண்பதற்கினிய நகரமான அயோத்தியாவுக்குச் சென்று, சூதில் நிபுணனான ரிதுபர்ணன் முன்பு நின்று, "நான் ஒரு தேரோட்டி. எனது பெயர் பாகுகன்" என்று சொல். குதிரைகளைக் குறித்த உனது ஞானத்திற்காக அந்த மன்னன் {ரிதுபர்ணன்} உனக்கு பகடையில் நிபுணத்துவம் கொடுப்பான். இக்ஷவாகு குலத்தில் பிறந்து செழிப்புடன் இருக்கும் அவன் உனக்கு நண்பனாவான். நீ பகடையில் நிபுணனான பிறகு, நீ செழிப்பை அடைவாய். நீ உனது மனைவியையும் குழந்தைகளையும், உனது நாட்டையும் அடைவாய். இதையெல்லாம் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஆகையால், உனது மனம் கவலை கொள்ளாதிருக்கட்டும். ஓ மனிதர்களின் தலைவா {நளனே}, நீ உனது சரியான உருவத்தைக் காண விரும்பும்போது, என்னை நினைவுகூர்ந்து இந்த ஆடையை அணிந்து கொள். இதை நீ அணிவதால் சுய உருவைத் திரும்பப் பெறுவாய்" என்று சொன்னான் {கார்க்கோடகன்}. இதைச் சொல்லிய அந்த நாகன் {கார்கோடன்} நளனிடம் இரண்டு தெய்வீக ஆடைகளைக் கொடுத்தான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி நளனிடம் சொல்லி அவனுக்கு ஆடையைக் கொடுத்த பாம்புகளின் மன்னன் {கார்க்கோடன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போதே அந்த இடத்திலேயே தன்னைத்தானே அரூபமாக்கிக் {கண்ணுக்குப் புலப்படாதவனாக்கிக்} கொண்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top