Pandu joined his palms over his head to Kunti! | Adi Parva - Section 122 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 58)
பதிவின் சுருக்கம் : உத்தாலகர் மற்றும் அவரது மகன் ஸ்வேதகேதுவின் வரலாற்றைக் குந்திக்குச் சொன்ன பாண்டு; ஒருத்திக்கு ஒருவன் என்ற நடைமுறையை ஏற்படுத்திய ஸ்வேதகேது; குந்தி தன்னிடம் இருக்கும் மந்திரங்களைப் பற்றி பாண்டுவிடம் சொன்னது; குந்தியிடம் தர்மராஜனை அழைக்கச் சொன்ன பாண்டு...
வைசம்பாயனர் சொன்னார், "தனது அன்பான மனைவியால் {குந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் பாண்டு, ஒழுக்கவிதிகளை நன்கறிந்து, அறம் சார்ந்த வார்த்தைகளில்,(1) "ஓ குந்தி, நீ சொன்னது உண்மைதான். பழங்காலத்தின் வியுஷிதாஸ்வன் நீ சொன்னதைப் போலத்தான் செய்தான். அவன் நிச்சயமாகத் தேவர்களுக்குச் சமமானவனாக இருந்தான்.(2) ஆனால், நான் இப்போது ஒழுக்கம் சார்ந்த அனைத்து விதிகளையும் அறிந்த சிறப்பு மிகுந்த முனிவர்களால் சொல்லப்பட்ட சில நடைமுறைகளைச் சொல்கிறேன்.(3) ஓ அழகான முகமும், இனிய புன்னகையும் கொண்டவளே, முன்பெல்லாம் பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் கணவர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ நம்பி இருக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து, தாங்கள் விரும்பியவாறெல்லாம் இன்புற்றிருந்தனர்.(4) ஓ சிறந்த குணங்களைக் கொண்டவளே, அவர்கள் தங்கள் கணவர்களைப் பின்பற்றாமல் இருந்து, அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இல்லாதிருந்தனர். இருப்பினும், ஓ அழகானவளே, அது பாவம் என்று அப்போது கருதப்படவில்லை. அஃது அந்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையாகும்.(5)
