Bhima Killed Hidimva! | Adi Parva - Section 156 | Mahabharata In Tamil
(ஹிடிம்ப வத பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த குந்தியும், பாண்டவர்களும்; ஹிடிம்ப பீம மற்போரைக் குறித்து ஹிடிம்பை மூலமாக அறிந்த கொண்ட பாண்டவர்கள்; பீமனைக் கேலி செய்த அர்ஜுனன்; ஹிடிம்பனைக் கொன்ற பீமன்; பீமனைக் கொண்டாடிய அர்ஜுனன்...
வைசம்பாயனர் சொன்னார், "தங்கள் தாயுடன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களான அந்த மனிதர்களில் புலிகள், ஹிடிம்பையின் இயல்புக்குமிக்க அழகைக் கண்டு வியந்தனர்.(1) குந்தி, அவளது அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவளிடம் இனிமையாகவும், உறுதியேற்படுத்தும் வகையிலும்(2) "ஓ தேவர்களின் மகளைப் போல இருப்பவளே, நீ யாருடையவள்? யார் நீ? ஓ அழகான நிறம் கொண்டவளே, என்ன காரியமாக நீ இங்கே வந்திருக்கிறாய்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?(3) நீ கானக தேவதையாகவோ, அப்சரஸாகவோ இருப்பின், உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வாயாக. நீ ஏன் இங்கிருக்கிறாய் என்பதையும் சொல்வாயாக" என்று கேட்டாள்.(4)


