Supreme Knowledge! | Shanti-Parva-Section-319 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 146)
பதிவின் சுருக்கம் : சூரியனிடமிருந்து யஜுர் வேதத்தை அடைந்தது; கந்தர்வ மன்னன் விஸ்வாவசுவின் இருபத்தைந்து கேள்விகள்; அவற்றுக்குத் தாம் அளித்த விடைகள்; பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்புடைய மோக்ஷ அறிவியல்; ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! ஏகாதிபதி, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} வசிக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்வி ஆழ்ந்த புதிருடன் தொடர்புடையதாகும். ஓ! மன்னா, குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, முனிவர்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பணிவுள்ளவனாக என்னை ஒழுங்கு செய்து கொண்டு சூரியனிடமிருந்து நான் யஜுஸ்களை {யஜுர் வேதத்தைப்} பெற்றேன்.(2) முன்பு நான், வெப்பம் தரும் தேவனை {சூரியனைத்} துதித்தபடியே கடுந்தவத்தில் ஈடுபட்டேன். ஓ! பாவமற்றவனே, என்னிடம் நிறைவடைந்த பலமிக்கச் சூரியன், என்னிடம்,(3) "ஓ! மறுபிறப்பாள முனிவரே, எவ்வளவுதான் அடைவதற்கரிதாக இருந்தாலும் எதில் உமது இதயத்தை நிலைபெறச் செய்திருக்கிறீரோ, அந்த வரத்தைக் கேட்பீராக. உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் நான் அஃதை உமக்கு அருள்வேன். எனது அருளை அடைவது மிக அரிதானதாகும்" என்றான்.(4)