Asita-Devala and Jaigishavya! | Shalya-Parva-Section-50 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : தேவலர் மற்றும் ஜைகிஷவ்யர் வரலாறு; இல்லறம் நோற்ற அசிததேவலர்; யாசகம் கேட்டு வந்த ஜைகிஷவ்யர்; ஐயமிட்டு நிறைவையடைந்த தேவலர்; ஜைகிஷவ்யர் அடைந்த தகுதிகளை எண்ணி பொறாமை கொண்ட தேவலர்; தேவலருக்கு யோகம் போதித்த ஜைகிஷவ்யர்; இருவரும் முக்தியை அடைந்தது; சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பழங்காலத்தில், அறஆன்மா கொண்டவரும், இல்லறம் சார்ந்த கடமைகளை நோற்பவரும், அசிததேவலர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர் அந்தத் தீர்த்தத்தில் {ஆதித்திய தீர்த்தத்தில்} வாழ்ந்து வந்தார்.(1) அவர், அறத்திற்குத் தம்மை அர்ப்பணித்து, சுயக்கட்டுப்பாடுடைய தூய்மையான வாழ்வை மேற்கொண்டார். பெரும் தவத் தகுதியை உடைய அவர் {அசிததேவலர்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவராகவும், எவருக்கும் தீங்கிழைக்காதவராகவும் இருந்தார். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களிடமும் அவர் {அசிததேவலர்} சமமாகவே நடந்து கொண்டார்.(2) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கோபமற்றிருந்த அவருக்கு, நிந்தனையும், புகழும் சமமாகவே இருந்தன. ஏற்புடையவை {இனியவை} மற்றும் ஏற்பில்லாதவையிடம் சமமான மனப்பாங்கைக் கொண்டிருந்த அவர், யமனைப் போலவே முற்றிலும் பாரபட்சமற்றவராக {நடுநிலைமை கொண்டவராக} இருந்தார்.(3) அந்தப் பெரும் தவசி, தங்கத்தையும், கூழாங்கற்களின் குவியலையும் சமமான கண்களுடனேயே கண்டார். அவர் தினமும், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் (தம்மிடம் வரும்) பிராமணர்கள் ஆகியோரை வழிபட்டார். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், எப்போதும் பிரம்மச்சரிய நோன்பையே நோற்றுவந்தார்.(4)