Naga Vali Offering! | Anusasana-Parva-Section-132 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 132)
பதிவின் சுருக்கம் : நாகபலி காணிக்கையளிக்கும் முறைகளை ரேணுகன் என்ற யானைக்குச் சொன்ன திக்கஜங்கள்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஆதி தாமரையில் உதித்தவனும், (இனிமையிலும், நறுமணத்திலும்) தாமரைக்கே ஒப்பானவனுமான பெரும்பாட்டன் பிரம்மன், சச்சியின் தலைவனான வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களிடம்,(1) "அதோ பாதாள லோகத்தில் வசிப்பவனான வலிமைமிக்க {யானையான} நாகன் அமர்ந்திருக்கிறான். பெரும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் கொண்ட அவனது பெயர் ரேணுகன் ஆகும். நிச்சயம் அவன் பெரியவன் ஆவான்.(2) பெரும் சக்தியும், பலமும் கொண்டவையும், மலைகள், நீர்நிலைகள் மற்றும் தடாகங்களுடன் கூடிய மொத்த பூமியையும் தாங்கிக் கொண்டிருப்பவையும் வலிமைமிக்க யானைகளை {திக்கஜங்களை} உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த ரேணுகன் பேட்டி காணட்டும். ரேணுகன் அவற்றிடம் சென்று அறம் அல்லது கடமையின் புதிர்களைக் குறித்து அவற்றிடம் கேட்கட்டும்" என்றான்.(3,4) பெரும்பாட்டனின் இச்சொற்களைக் கேட்ட தேவர்கள், தங்கள் மனங்களில் நிறைவடைந்தவர்களாக (யானையான) ரேணுகனை, அந்த உலகைத் தாங்கிப் பிடிப்பவையிடம் {திக் கஜங்களிடம்} அனுப்பினர்.(5)
